MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  12.4 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
  ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி (1216 - 1316)
  1216 பார்மண் டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற
  நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த
  கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற
  தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே. 1
  1217 பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த
  மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்தஎங்கள்
  நிதியைப் பிரமா புரநகர் மன்னனை என்னுடைய
  கதியைக் கருதவல் லோர்அம ராவதி காப்பவரே. 2
  1218 காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா
  மாப்பழி வாரா வகைஇருப் பேன்என்ன மாரன்என்னே
  பூப்பயில் வாளிகள் அஞ்சும்என் நெஞ்சரங் கப்புகுந்த
  ஏப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் ஈண்டிரவே. 3
  1219 இரவும் பகலும்நின் பாதத் தலர்என் வழிமுழுதும்
  பரவும் பரிசே அருளுகண் டாய்இந்தப் பாரகத்தே
  விரவும் பரமத கோளரி யேகுட வெள்வளைகள்
  தரளம் சொரியும் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே. 4
  1220. மன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப்
  பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய
  பொன்னியல் பாடகக் கிங்கிணிப் பாதநிழல் புகுவோர்
  துன்னிய காவமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே. 5
  1221 தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர
  வண்டினம் சூழ வருமிவன் போலும் மயில்உகுத்த
  கண்டினம் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாஉடலம்
  விண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே. 6
  1222 வித்தகம் பேசிநம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து
  முத்தகங் காட்டு முறுவல்நல் லார்தம் மனம்அணைய
  உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு
  புத்தகம் போலும் முதுபுலைப் பாணன் புணர்க்கின்றதே. 7
  1223 புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியிற் சிறகொதுக்கி
  உணர்ந்தனர் போல இருந்தனை யால்உல கம்பரசும்
  குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதிற் கொச்சையின்வாய்
  மணந்தவர் போயின ரோசொல்லு வாழி| மடக்குருகே. 8
  1224 குருந்தலர் முல்லையங் கோவலர் ஏற்றின் கொலைமருப்பால்
  அருந்திறல் ஆகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன்
  பெருந்திற மாமதிற் சண்பை நகரன்ன பேரமைத்தோள்
  திருந்திழை ஆர்வம் ...... ....... முரசே. 9
  1225 முரசங் கரையமுன் தோரணம் நீட முழுநிதியின்
  பரிசங் கொணர்வான் அமைகின் றனர்பலர் பார்த்தினிநீ
  அரிசங் கணைதலென் னாமுன் கருதரு காசனிதன்
  சுரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே. 10
  1226 மொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்
  தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந்
  தெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோ
  மொழிவது சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே. 11
  1227 வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரைஅன்று வான்கொடுத்த
  கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன் கடல்உடுத்த
  ஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிரு
  மலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே. 12
  1228 வாட்டுவர் தத்தம் துயரைவன் கேழலின் பின்புசென்ற
  வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால்
  தோட்டியல் காதன் இவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற்
  காட்டிய கன்றின் கழற்றிற மானவை கற்றவரே. 13
  1229 அவர்சென் றணுகுவர் மீள்வதிங் கன்னை அருகர்தம்மைத்
  தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பைஎன்னப்
  பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக்
  கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றும் கடிநகரே. 14
  1230 நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள்
  பகர்அம் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம்
  மகரம் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்த
  நிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீள்நிலத்தே. 15
  1231 நிலமே றியமருப் பின்திரு மாலும் நிலம்படைத்த
  குலமே றியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்கும்
  சலமே றியமுடி தாள்கண் டிலர்தந்தை காணஅன்று
  நலமே றியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே. 16
  1232 நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே
  போதின் மலிவய லாக்கிய கோன்அமர் பொற்புகலி
  ஓத நெடுங்கடல் வாருங் கயலோ விலைக்குளது
  காதின் அளவும் மிளிர்கய லோசொல்லு காரிகையே. 17
  1233 கைம்மையி னால்நின் கழல்பர வாதுகண் டார்க்கிவனோர்
  வன்மைய னேஎன்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோ
  டிம்மையில் யான்எய்தும் இன்பம் கருதித் திரிதருமத்
  தன்மையி னேற்கும் அருளுதி யோசொல்லு சம்பந்தனே. 18
  1234 பந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க்
  கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர்
  நந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுதும்முன்னும்
  சந்தா ரகலத் தருகா சனிதன் தடவரையே. 19
  1235 வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்
  நிரைகொண்டு வானோர் கடைந்ததில் நஞ்ச நிகழக்கொலாம்
  நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளம் சுழலநொந்தோர் இரவும்
  திரைகொண் டலமரும் இவ்வகன் ஞாலம் செறிகடலே. 20
  1236 கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத்
  திடநமன் ஏவுதற் கெவ்விடத் தான்இருஞ் செந்தமிழால்
  திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன் செந் தாமரையின்
  வடமன்னு நீண்முடி யான்அடிப் போதவை வாழ்த்தினமே. 21
  1237 வாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர்
  ஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியே
  ஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க்
  காத்திகழ் கேதகம் போதகம் ஈனும் கழுமலமே. 22
  1238 மலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி நீண்முடி வண்கமலப்
  பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர்என்னத்
  தலைபயில் பூம்புனங் கொய்திடு மேகணி யார்புலம்ப
  அலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே. 23
  1239 அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை அரன்நெறியே
  விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம் பொய்க்கமைந்த
  இரும்பன உள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால்
  கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே. 24
  1240 அடியால் அலர்மிதித் தாலரத் தம்பிற் கமிர்தமின்றிக்
  கொடியா னொடும்பின் நடந்ததெவ்வா றலர்கோகனதக்
  கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்சேர்
  வெடியா விடுவெம் பரற்சுறு நாறு வியன்சுரத்தே. 25
  1241 சுரபுரத் தார்தந் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள்
  பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும்
  அரபுரத் தான்அடி எய்துவன் என்ப தவனடிசேர்
  சிரபுரத் தான்அடி யார்அடி யேன்என்னும் திண்ணனவே. 26
  1242 திண்ணன வார்சென்ற நாட்டிடை இல்லைகொல் தீந்தமிழோர்
  கண்ணென ஓங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து
  விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீனமற் றியாம்மெலிய
  எண்ணின நாள்வழு வாதிறைத் தோடி எழுமுகிலே. 27
  1243 எழுவாள் மதியால் வெதுப்புண் டலமந் தெழுந்துவிம்மித்
  தொழுவாள் தனக்கின் றருளுங் கொலாந்தொழு நீரவைகைக்
  குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்
  கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே. 28
  1244 கற்பா நறவ மணிகொழுத் துந்து மலைச்சிலம்பா
  நற்பா மொழிஎழில் ஞானசம் பந்தன் புறவமன்ன
  விற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட்
  டிற்பா விடும்வண்ணம் எண்ணுகின் றாள்அம்ம எம்அனையே. 29
  1245 எம்அனை யாய்எந்தை யாய்என்னை ஆண்டென் துயர்தவிர்த்த
  செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்
  வெம்முனை வேல்என்ன என்ன மிளிர்ந்து வெளுத்தரிபோன்
  றும்மன வோஅல்ல வோவந்தென் உள்ளத்தொளிர்வனவே. 30
  1246 ஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பருள்ளும்
  வௌிறு படச்சில நிற்பதுண் டேமிண்டி மீன்உகளும்
  அளறு வயற்சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும்
  களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே. 31
  1247 கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம்
  செவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரளம்
  நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும்
  குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே. 32
  1248 கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால்பரப்பிட்
  டழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன் றாயிழைக்காச்
  சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய்
  உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனியின் றுறுகின்றதே. 33
  1249 உறுகின்ற அன்பினோ டொத்திய தாளமும் உள்ளுருகிப்
  பெறுகின்ற இன்பும் பிறைநுதல் முண்டமும் கண்டவரைத்
  தெறுகின்ற வாறென்ன செய்தவ மோவந்தென் சிந்தையுள்ளே
  துறுகின்ற பாதன் கழுமலம் போலும் துடியிடைக்கே. 34
  1250 இடையும் எழுதா தொழியலு மாம்இன வண்டுகளின்
  புடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும்அப் பொன்னனையாள்
  நடையும் நகையும் தமிழா கரன்தன் புகலிநற்றேன்
  அடையும் மொழியும் எழுதிடில் சால அதிசயமே. 35
  1251 மேனாட் டமரர் தொழஇருப் பாரும் வினைப்பயன்கள்
  தானாட் டருநர கிற்றளர் வாரும் தமிழர்தங்கள்
  கோனாட் டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப்
  பூநாட் டடிபணிந் தாரும்அல் லாத புலையருமே. 36
  1252 புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண்
  மலைமடப் பாவைக்கு மாநட மாடு மணியைஎன்றன்
  தலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னா
  முலையிடைப் பொன்கொண்டு சங்கிழந் தாள்என்றன் மொய்குழலே. 37
  1253 குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல்
  கழலியல் பாதம் பணிந்தேன் உனையும் கதிரவனே
  தழலியல் வெம்மை தணித்தருள் நீதணி யாதவெம்மை
  அழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற ஆரணங்கே. 38
  1254 அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கிஅமண்
  கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப்
  பிணங்கலை நீர்எதிர் ஓடஞ் செலுத்தின வெண்பிறையோ
  டிணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே. 39
  1255 இருந்தண் புகலிகோ லக்கா எழில்ஆ வடுதுறைசீர்
  பொருந்தும் அரத்துறை போனகம் தாளம்நன்பொன்சிவிகை
  அருந்திட வொத்தமுத் தீச்செய ஏறஅரன் அளித்த
  பெருந்தகை சீரினை எம்பர மோநின்று பேசுவதே. 40
  1256 பேசுந் தகையதன் றேஇன்றும் அன்றும் தமிழ்விரகன்
  தேசம் முழுதும் மழைமறந் தூண்கெடச் செந்தழற்கை
  ஈசன் திருவரு ளால்எழில் வீழி மிழலையின்வாய்க்
  காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே. 41
  1257 பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து
  மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால்
  வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடைஎடுத்த
  பொறியுறு பொற்கொடி எம்பெரு மான்அமர் பொன்னுலகே. 42
  1258 பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை அருகர்தங்கள்
  தென்னாட் டரண்அட்ட சிங்கத் தினைஎஞ் சிவன்இவனென்
  றந்நாள் சூதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்த
  என்னானை யைப்பணி வார்க்கில்லை காண்க யமாலயமே. 43
  1259 மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று மணிகுறுக்கி
  வேலையைப் பாடணைந் தாங்கெழில் மன்மதன் வில்குனித்த
  கோலைஎப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ்
  சோலையைக் காழித் தலைவன் மலர்இன்று சூடிடினே. 44
  1260 சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள்
  கூடுதற் கேசற்ற கொம்பினை நீயும் கொடும்பகைநின்
  றாடுதற் கேஅத்த னைக்குனை யேநின்னை ஆடரவம்
  வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே. 45
  1261 மதிக்கக் தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித்
  துதிக்கத் தகுசண்பை நாதன் சுருதி கடந்துழவோர்
  மிதிக்கக் கமலம் முகிழ்த்ததண் தேனுண்டு மிண்டிவரால்
  குதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே. 46
  1262 குறுமனம் முள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன
  நறுமலர் மென்குழ லாய்அஞ்சல் எம்மூர் நகுமதிசென்
  றுறுமனை ஒண்சுவர் ஓவியக் கிள்ளைக்கு நும்பதியிற்
  சிறுமிகள் சென்றிருந் தங்கையை நீட்டுவர் சேயிழையே. 47
  1263 இழைவளர் ஆகத்து ஞானசம் பந்தன் இருஞ்சுருதிக்
  கழைவளர் குன்று கடத்தலும் காண்பீர் கடைசியர்நீள்
  முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும்
  மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே. 48
  1264 வயலார் மருகல் பதிதன்னில் வாளர வாற்கடியுண்
  டயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்த
  கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப்
  புயலார் தருகையி னான் என்னத் தோன்றிடும் புண்ணியமே. 49
  1265 புண்ணிய நாடு புகுவதற் காகப் புலன்அடக்கி
  எண்ணிய செய்தொழில் நிற்பதெல் லாருமின் றியானெனக்கு
  நண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க்
  கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே. 50
  1266 கருதத் தவஅருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை
  இரதக் கிளிமொழி மாதே கலங்கல் இவர்உடலம்
  பொருதக் கழுநிரை யாக்குவன் நுந்தமர் போர்ப்படையேல்
  மருதச் சினையில் பொதும்பருள் ஏறி மறைகுவனே. 51
  1267 மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர்
  பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல்
  துறைமுழங் குங்கரி சீறி மடங்கல் சுடர்ப்பளிங்கின்
  அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே. 52
  1268 பழிக்கே தகுகின்ற தின்றிப் பிறைபல் கதிர்விழுந்த
  வழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும்
  மொழிக்கே விரும்பி முளரிக் கலமரும் ஓவியர்தம்
  கிழிக்கே தரும்உரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே. 53
  1269 கீளரிக் குன்றத் தரவம் உமிழ்ந்த கிளர்மணியின்
  வாளரிக் கும்வைகை மாண்டனர் என்பர் வயற்புகலித்
  தாளரிக் கும்மரி யான்அருள் பெற்ற பரசமய
  கோளரிக் குந்நிக ராத்தமிழ் நாட்டுள்ள குண்டர்களே. 54
  1270 குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்தன் குன்றகஞ்சேர்
  வண்டக மென்மலர் வில்லியன் னீர்வரி விற்புருவக்
  கண்டக வாளி படப்புடை வீழ்செங் கலங்கலொடும்
  புண்டகக் கேழல் புகுந்ததுண் டோநுங்கள் பூம்புனத்தே. 55
  1271 புனத்தெழு கைமதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய்
  வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்வந்து வந்தடியேன்
  மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொச்சையன்னாள்
  கனத்தெழு கொங்கைக ளாய்அல்கு லாய்த்திவர் கட்டுரையே. 56
  1272 கட்டது வேகொண்டு கள்ளுண்டு நுங்கைக ளாற்சுணங்கை
  இட்டது வேயன்றி எட்டனைத் தான்இவள் உள்ளுறுநோய்
  விட்டது வேயன்றி வெங்குரு நாதன்தன் பங்கயத்தின்
  மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின் பேதை மகிழ்வுறவே. 57
  1273 உறவும் பொருளும்ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்ற
  துறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்தபுனல்
  புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்பும்வண்டின்
  நறவும் பொழில்எழிற் காழியர் கோன்திரு நாமங்களே. 58
  1274 நாம்உகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல்
  ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி இடிபடுக்கத்
  தீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவ முகைஅரும்பக்
  காமுகம் பூமுகம் காட்டிநின் றார்த்தன காரினமே. 59
  1275 காரங் கணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச்
  சீரங் கணைநற் பெருமணந் தன்னிற்சிவபுரத்து
  வாரங் கணைகொங்கை மாதொடும் புக்குறும் போதுவந்தார்
  ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லால்அவ் வரும்பதமே. 60
  1276 அரும்பதம் ஆக்கும் அடியரொ டஞ்சலித் தார்க்கரிய
  பெரும்பதம் எய்தலுற் றீர்வந் திறைஞ்சுமின் பேரரவம்
  வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத்
  தரும்பத ஞானசம் பந்தன்என் னானைதன் தாளிணையே. 61
  1277 தாளின் சரணம் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல்
  கீளின் மலங்க விலங்கே புகுந்திடுங் கெண்டைகளும்
  வாளுந் தொலைய மதர்த்திரு காதின் அளவும்வந்து
  மீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே. 62
  1278 நகுகின்ற முல்லைநண் ணார்எரி கண்டத் தவர்கவர்ந்த
  மிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை விரவலர்ஊர்
  புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றிப் புறமவன்கைத்
  தகுகின்ற கோடல்கள் அன்பரின் றெய்துவர் கார்மயிலே. 63
  1279 மயிலேந் தியவள்ளல் தன்னை அளிப்ப மதிபுணர்ந்த
  எயிலேந் தியசண்பை நாதன் உலகத் தெதிர்பவர்யார்
  குயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பின் அம்புதழீஇ
  அயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே. 64
  1280 அண்ணல் மணிவளைத் தோள்அரு காசனி சண்பையன்ன
  பெண்ணின் அமிர்தநல் லாள்குழல் நாற்றம் பெடையொடும்பூஞ்
  சுண்ணம் துதைந்தவண் டேகண்ட துண்டுகொல் தூங்கொலிநீர்த்
  தண்ணம் பொழில்எழிற் காசினி பூத்தமென் தாதுகளே. 65
  1281 தாதுகல் தோய்த்தநஞ் சன்னாசி யார்சட லம்படுத்துத்
  தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர்
  போதியிற் புத்தர்கள் வம்மின் புகலியர் கோனன்னநாட்
  காதியிட் டேற்றுங் கழுத்திறம் பாடிக் களித்திடவே. 66
  1282 களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல்
  வௌியுறு ஞாலம் பகல்இழந் தால்விரை யார்கமலத்
  தளியுறு மென்மலர்த் தாதளைந் தாழி அமைப்பவரும்
  துளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே. 67
  1283 தேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள்
  ஊறும் அமிர்தைப் பருகிட் டெழுவதோர் உட்களிப்புக்
  கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன் கொழுந்தேன்
  நாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே. 68
  1284 நிதியுறு வார்அறன் இன்பம்வீ டெய்துவர் என்னவேதம்
  துதியுறு நீள்வயற் காழியர் கோனைத் தொழாரின்நைய
  நதியுறு நீர்தௌித் தஞ்சல் எனஅண்ணல் அன்றோஎனா
  மதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே. 69
  1285 மன்னங் கனைசெந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர்
  அன்னங்கள் அஞ்சன்மின் என்றடர் வேழத் திடைவிலங்கிப்
  பொன்னங் கலைசா வகைஎடுத் தாற்கிவள் பூண்அழுந்தி
  இன்னந் தழும்புள வாம்பெரும் பாலும்அவ் ஏந்தலுக்கே. 70
  1286 ஏந்தும் உலகுறு வீர்எழில் நீலநக் கற்கும்இன்பப்
  பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக்
  காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய்
  வேந்தின் துயர்தவிர்த் தானைஎப் போதும் விரும்புமினே. 71
  1287 விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய இன்னமிர்தம்
  அரும்பும் புனற்சடை யாய்உண் டருள் என் றடிபணிந்த
  இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை ஏத்துதிரேல்
  சுரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதத் தொடர்வௌிதே. 72
  1288 எளிவந்த வாஎழிற் பூவரை ஞாண்மணித் தார்தழங்கத்
  துளிவந்த கண்பிசைந் தேங்கலும் எங்கள் அரன்துணையாம்
  கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தின் ஞான அமிர்தளித்த
  அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்தன் ஆரருளே. 73
  1289 அருளும் தமிழா கரன்நின் அலங்கல்தந் தென்பெயரச்
  சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்
  துருளும் களிற்றினொ டோட்டரு வானை அருளியன்றே
  மருளின் மொழிமட வாள்பெயர் என்கண் வருவிப்பதே. 74
  1290 வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும்
  திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிக்காள்
  தருவான் தமிழா கரன்கரம் போற்சலம் வீசக்கண்டு
  வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே. 75
  1291 மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய்
  தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காண்இறையே
  மன்னார் பரிசனத் தார்மேற் புகலும் எவர்க்கும்மிக்க
  நன்னா வலர்பெரு மான்அரு காசனி நல்கிடவே. 76
  1292 நல்கென் றடியின் இணைபணி யார்சண்பை நம்பெருமான்
  பல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட்
  டொல்கும் உடம்பின ராய்வழி தேடிட் டிடறிமுட்டிப்
  பில்கும் இடம்அறி யார்கெடு வார்உறு பேய்த்தனமே. 77
  1293 தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்அருள்போல்
  மனமே புகுந்த மடக்கொடி யேமலர் மேல்இருந்த
  அனமே அமிர்தக் குமுதச் செவ்வாய்உங்கள் ஆயமென்னும்
  இனமே பொலியவண் டாடெழிற் சோலையுள் எய்துகவே. 78
  1294 உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலைஉரிஞ்ச
  அகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத்
  தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால்
  பகட்டில் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே. 79
  1295 பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
  நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான்
  நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக்
  கூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக் குவலயமே. 80
  1296 வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி மனைப்புறத்து
  நிலைஎத் தனைபொழு தோகண்ட தூரனை நீதிகெட்டார்
  குலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்ன
  சிலையொத்த வாள்நுதல் முன்போல் மலர்க திருக்கண்களே. 81
  1297 கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால்
  பண்ணார் தரப்பாடு சண்பையர் கோண்பாணி நொந்திடுமென்
  றெண்ணா எழுத்தஞ்சும் இட்டபொன் தாளங்கள் ஈயக்கண்டும்
  மண்ணார் சிலர்சண்பை நாதனை ஏத்தார் வருந்துவதே. 82
  1298 வருந்துங் கொலாங்கழல் மண்மிசை ஏகிடின் என்றுமென்றார்த்
  திருந்தும் புகழ்ச்ண்பை ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள்
  பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண்புண ரித்திகழ்நஞ்
  சருந்தும் பிரான்நம் அரத்துறை மேய அரும்பொருளே. 83
  1299 பொருளென என்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங்
  கருளிய சீர்த்திரு ஞானசம் பந்தன் அருளிலர்போல்
  வெருளின மானின்மென் நோக்கியை விட்டு விழுநிதியின்
  திரளினை ஆதரித் தானன்று சாலஎன் சிந்தனைக்கே. 84
  1300 சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும்
  எந்தையைப் பாடல் இசைத்துத் தொலையா நிதியம்எய்தித்
  தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்சரண் சார்விலரேல்
  நிந்தையைப் பெற்றொழி யாதிரந் தேகரம் நீட்டுவரே. 85
  1301 நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித்
  தோட்டுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரில்
  வேட்டுவர் வேட்டதண் ணீரினுக் குண்ணீர் உணக்குழித்த
  காட்டுவர் ஊறல் பருகுங் கொலாம்எம் கணங்குழையே. 86
  1302 குழைக்கின்ற கொன்றைபொன் போல மலரநுங் கூட்டமெல்லாம்
  அழைக்கின்ற கொண்டல் இயம்புன் னிலையகன் றார்வரவு
  பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத்
  திழைக்கின்ற கூடல் முடியஎண் ணாத இளங்கொடிக்கே. 87
  1303 கொடித்தேர் அவுணர் குழாம்அனல் ஊட்டிய குன்றவில்லி
  அடித்தேர்கருத்தின் அருகா சனியை அணியிழையார்
  முடித்தேர் கமலம் கவர்வான் முரிபுரு வச்சிலையால்
  வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே. 88
  1304 வளைபடு தண்கடல் கொச்சை வயவன் மலர்க்கழற்கே
  வளைபடு நீண்முடி வார்புன லூரன்தன் நீரிலங்கு
  வளைபடு கண்ணியர் தம்பொதுத் தம்பலம் நாறும்இந்த
  வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் வாயின் மணிமுத்தமே. 98
  1305 முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி முறைவழுவா
  தெத்தனை காலம்நின் றேத்தும் அவரினும் என்பணிந்த
  பித்தனை எங்கள் பிரானை அணைவ தௌிதுகண்டீர்
  அத்தனை ஞானசம பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே. 90
  1306 அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினையன்
  றுடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை உரகவிடம்
  துடைத்தது தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய்
  படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே. 91
  1307 பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதம்என்று
  தணிபடும் இன்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழல்உமிழ்கான்
  மணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல்
  துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே. 92
  1308 தோன்றல்தன் னோடுடன் ஏகிய சுந்தரப் பூண்முலையை
  ஈன்றவ ரேஇந்த ஏந்திழை யாரவர் இவ்வளவில்
  வான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையே
  போன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே. 93
  1309 பொருந்திடு ஞானத் தமிழா கரன்பதி பொற்புரிசை
  திருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால்
  கருந்தடம் நீரெழு காலையில் காகூ கழுமலமென்
  றிருந்திட வாம்என்று வானவ ராகி இயங்கியதே. 94
  1310 இயலா தனபல சிந்தைய ராய்இய லுங்கொல்என்று
  முயலா தனவே முயன்றுவன் மோகச் சுழிஅழுந்திச்
  செயலார் வரைமதில் காழியர் கோன்திரு நாமங்களுக்
  கயலார் எனப்பல காலங்கள் போக்குவர் ஆதர்களே. 95
  1311 ஆதர வும்பயப் பும்இவள் எய்தினள் என்றயலார்
  மாதர் அவஞ்சொல்லி என்னை நகுவது மாமறையின்
  ஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றே
  தீதர வம்பட அன்னைஎன் னோபல செப்புவதே. 96
  1312 செப்பிய என்ன தவம்முயன் றேன்நல்ல செந்தமிழால்
  ஒப்புடை மாலைத் தமிழா கரனை உணர்வுடையோர்
  கற்புடை வாய்மொழி ஏத்தும் படிகத றிட்டிவர
  மற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே. 97
  1313 மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்அமணைப்
  பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினைஅறுக்கும்
  கண்ணைக் கதியைத் தமிழா கரனைஎங் கற்பகத்தைத்
  திண்ணற் றொடையல் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே. 98
  1314 சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யான்உரைத்த
  பேருந் தமிழ்ப்பா இவைவல் லவர்பெற்ற இன்புலகம்
  காருந் திருமிடற் றாய்அரு ளாய்என்று கைதொழுவர்
  நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே. 99
  1315 பிரமா புரம்வெங் குருசண்பை தோணி புகலிகொச்சை
  சிரமார் புரம்நற் புறவந் தராய்காழி வேணுபுரம்
  வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க
  பரமார் கழுமலம் பன்னிரு நாமம்இப் பாரகத்தே. 100
  1316 பாரகலத் துன்பம் கடந்தமர ராற்பணியும்
  ஏரகலம் பெற்றாலும் இன்னாதால் - காரகிலின்
  தூமம் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
  நாமஞ் செவிக்கிசையா நாள். 101

  திருச்சிற்றம்பலம்