MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
    1. காப்புப் பருவம்
    2. செங்கீரைப்பருவம்
    3. தாலப்பருவம்
    4. சப்பாணிப் பருவம்
    5. முத்தப் பருவம்
    6. வருகைப் பருவம்
    7. அம்புலிப் பருவம்
    8. சிற்றிற் பருவம்
    9. சிறுபறைப் பருவம்
    10. சிறுதேர்ப் பருவம்

    விநாயகக் கடவுள் துதி
    ஆசிரிய விருத்தம்

    பொன்பூத்த குடுமிப் பொலங்குவட் டிமவான் பொருப்பிற் பிறந்துதவளப்
    பொழிநிலவு தவழுமுழு வெள்ளிவே தண்டத்தொர் போர்க்களிற் றைப்புணர்ந்து
    தென்பூத்த பாட்டளி துதைந்தபைங் கூந்தற் செழும்பிடி பயந்தளித்த
    சிறுகட் பெருஞ்செவிக் குஞ்சரக் கன்றினிரு செஞ்சரணை யஞ்சலிப்பாம்
    மின்பூத்த சிற்றிடைப் பேரமர்க் கட்கடவுள் வேழங் கடம்படுபடா
    வெம்முலைக் கோடுகொண் டுழுதுழு துழக்கமுகை விண்டுதண் டேன்றுளிக்கும்
    கொன்பூத்த தெரியற் கடம்பணி தடம்புயக் குருசிலைப் பொருசிலைக்கைக்
    குமரனைக் கந்தபுரி முருகனைப் பரவுமென் கொழிதமிழ்க் கவிதழையவே. 1

    1. காப்புப் பருவம்


    திருமால்

    பூமேவு கற்பகப் பொங்கரிற் செங்கட் புலோமசை வளர்த்தகும்பப்
    புணர்முலைக் களியானை விளையாடு பன்னிரு பொருப்பனை விருப்பனைத்தும்
    கோமேவு சாரற் குறச்சிறுமி மேல்வைத்த குழகனைக் கழகந்தொறும்
    கொத்துமுத் தமிழ்மொய்த்த கந்தபுரி முத்துக் குமாரனைத் தனிபுரக்க
    தேமேவு கடவுட் பொலங்கிரி திசைக்கிரிகள் திகிரிகிரி குலகிரியொடும்
    திரியத் திரித்துமத் தெறியத் தடங்கடற் றெண்டிரை முகட்டுதித்த
    பாமேவு மதுரம் பழுத்தமுத மொழுகும் பசுங்குதலை மழலையஞ்சொற்
    பங்கயற் செல்வியிரு கொங்கைக் குவட்டுவளர் பச்சைப் பசுங்கொண்டலே. 1.1

    வைத்தியநாதர்
    சந்த விருத்தம்

    ஒருபு றத்துமர கதமி மைப்பவொளிர்
    மாமேரு மற்றொரு மேருவைச் சாய்த்தென
    உலக ளக்கநிமிர் வடபொ ருப்பையொரு
    தோளால்வ ளைத்தபி னாகியைத் தீக்கனல்

    உமிழு முக்குடுமி யயிறி ரித்துவரு
    வாய்வாண்ம ழுப்படை வீரனைப் பார்த்தனொ
    டுடலு மற்றொழிலி னறவி ளைத்துமெதிர்
    ஓடாது டற்றுகி ராதனைக் கூக்குரல்

    விரிக டற்புடவி முழுது ணச்சமையும்
    ஓர்காளை கட்டுப்ர தாபனைக் கார்க்கடு
    விடமெ டுத்தரிய திருமி டற்றிலிடு
    காமாரி யைக்கவு மாரியைப் போற்றிரு
    விழிமு னிற்கும்வடி வழகு டைக்கடவுண்
    மாமோகி னிக்கும ணாளனைச் சூக்கும
    வௌியி னிற்பரம நடந விற்றுதிறல்
    வேளூர்வ யித்திய நாதனைப் போற்றுதும்

    குரவு செச்சையொடு நறவு யிர்ப்பவிரி
    தேனாறு வட்டெழு மார்பனைப் பேய்த்திரள்
    குரவை யிட்டவுணர் தடிசு வைத்திடவொர்
    கூர்வேல்வி டுத்தகு மாரனைப் பார்ப்பதி

    குமர னைச்சமரி லுருமு கக்குளிறு
    காலாயு தக்கொடி யாளனைக் கோட்டிய
    குறுந கைக்குமன முருக வெற்பவர்த
    மானோடு மற்பொரு தொளனைத் தாக்கிய

    திரண்ம ருப்பினமர் பொருத னிக்கடவுண்
    மால்யானை யைப்புணர் காளையைச் சாற்றிய
    செழும றைப்பொருளி னுரைவி ரித்துமெனும்
    வேதாமு டித்தலை மோதுகைக் காய்ப்பொடு

    திருவ டித்துணையென் முடிப தித்தவடு
    ஆறாத மெய்ப்புக ழாளியைப் பூட்டிய
    சிறைவி டுத்தமரர் குறைமு டித்துதவு
    சேனாப திப்பெரு மாடானைக் காக்கவே. 1.2

    தையனாயகியம்மை
    வேறு

    குழைய டர்ந்துவடி கணைது ரந்துசெறி
    குமிழ்ம றிந்தவிழி நவ்வியைக் கோட்டொடு
    குவடெ றிந்தமுத கலசம் வென்றதட
    முலைசு மந்தமலை வல்லியைச் சேற்றொளிர்
    குமுதம் விண்டசுவை யமுத முண்டினிய
    கொழுநர் கொஞ்சுசிறு கிள்ளையைத் தாட்டுணை
    குறுகு தொண்டர்பிழை யறம றந்துபிறர்
    குணமி கழ்ந்ததக வில்லியைச் சேட்செலும்

    எழுபெ ரும்புவன முழுதொ ருங்குதவும்
    இறைவி யென்றுமறை கையெடுத் தார்க்கவும்
    இடைநு டங்குமட நடையி ளங்குமரி
    எனவி ருந்தகன கள்வியைப் பூத்தவென்
    இதய புண்டரிக மலரி லெந்தையொடும்
    இனித மர்ந்தவொரு செல்வியைப் பாற்றொகும்
    இருவர் கண்கள்கது வரிய செஞ்சுடரின்
    இடம ருங்குடைய தையலைப் போற்றுதும்

    முழுது ணர்ந்துமுணர் வரிய தொன்றையொரு
    மொழியின் விண்டசிறு பிள்ளையைச் சூர்ப்பெயர்
    முதுப ழம்பகையை யறவெ றிந்தவுணர்
    முதற டிந்ததனி வில்லியைப் பாட்டளி
    முரல விண்டதரு நிழறொ ழும்புகுடி
    புகவ ழங்குகொடை வள்ளலைப் போற்றடி
    முடியு மின்றிவெறு வௌிக டந்துமறை
    முடிவி னின்றுநிறை செல்வனைக் காத்தொறும்

    மழலை வண்டுதட மலர்கு டைந்துபுது
    மதுவ ருந்திநறு மல்லிகைச் சேக்கையின்
    வடிப சுந்தமிழி னிசைப யின்றபெடை
    யொடுது யின்றினிய செவ்வழிப் பாட்டினை
    வருவி பஞ்சிபயி றரும தங்கர்தெரு
    மரமு ரன்றுநெடு வைகறைப் போய்ச்செழு
    மலரி லஞ்சிதொறு முலவு கந்தபுரி
    மருவு கந்தனையெ மையனைக் காக்கவே. 1.3

    கற்பக விநாயகக் கடவுள்
    வேறு

    கடாமுமிழ் கைக்கதக் கிம்புரிக் கோட்டொரு
    கராசல மிட்டமெய்க் கஞ்சுகிக் கேற்பவொர்
    படாமணி மத்தகத் தந்தியைத் தீர்த்தர்கள்
    பராவரு கற்பகக் கன்றினை போற்றுதும்
    வடாதுபொ ருப்பினிற் றுன்றுபுத் தேட்கெதிர்
    மனோலய முற்றமெய்ப் பண்பினைக் காட்டிய
    சடானன னைத்தலைச் சங்கம்வைத் தாற்றிய
    சடாயுபு ரத்தருட் கந்தனைக் காக்கவே. 1.4

    பிரம தேவர்
    ஆசிரிய விருத்தம்

    பைங்காற் கமுகு செம்பழுக்காய்ப் பவள முதிர்ப்பக் கதிர்ச்செந்நெல்
    பனிமுத் துகுக்குஞ் சோணாட்டின் பரிசு பாடி ஞிமிறிரைப்பக்
    கொங்கார்த் திறைக்கு நறைக்காந்தள் குறிஞ்சி மலரோ டணிந்தநறுங்
    குஞ்சிப் பெருமாள் வேதபுரிக் குமரப் பெருமா டனைக்காக்க
    செங்காற் கருங்கட் பைந்தொடியார் சிற்றாய்ப் பாடிப் பெருங்குடியில்
    தீம்பா றிருடிக் கட்டுண்டு திரியா வண்ணந் திருத்தாதைக்
    கங்காப் படங்கப் பாறயிர்நெய் அருந்தேன் கடலோ டிருந்துண்ண
    அகிலம் படைத்துத் தனக்கேற அன்னம் படைத்த பெருமாளே. 1.5

    தேவேந்திரன்
    வேறு

    கானாறு கற்பகக் காவுமூ வுலகுமக் காவென நிழற்றுமொற்றைக்
    கவிகையுங் குணதிசைக் காவலும் பிறவுமுள காணியுங் காணியாக
    வானாறு கோட்டிமய மலைவயிறு வாய்த்ததலை மகளுக்கு மணமகற்கும்
    மருமகளை யுரியதன் திருமக ளெனப்பெற்ற மாமடிக ளைத்துதிப்பாம்
    பானாறு செந்நெற் பசுங்கதிர் கறித்துமென் பைங்குவளை வாய்குதட்டும்
    பணைமருப் பெருமைமடு மடிமடை திறந்ததீம் பாலாறு பங்கயச்செந்
    தேனாறு டன்கடவுள் வானா றெனப்பெருகு சித்தாமிர் தஞ்சிவபிரான்
    சீர்த்திப்ர தாபநிகர் தினகர புரித்தேவ தேவனைக் காக்க வென்றே. 1.6

    த்ிருமகள்

    மானிறக் கடவுடிரு மறுமார்பி னறவிரி வனத்துழாய்க் காடுமூடி
    மாயிருள் வழங்குதன் றிருமாளி கைக்கந்தண் மணிவிளக் கிட்டுமுட்டாட்
    கானிறைக் குங்கமல வீட்டுக்கு நெட்டிதழ்க் கதவந் திறந்தளித்தும்
    காதன்மை காட்டுங் கவுத்துவத் துடன்வந்த கன்னிகையை யஞ்சலிப்பாம்
    மீனிறப் புணரியை விழுங்குங் கடற்றானை வெள்ளமொடு கள்ளமனமும்
    மெய்யுமிரு ளத்திரளு மவுணக் கருங்கங்குல் விடியக் கடுங்குரல்விடும்
    தீநிறக் குடுமிவெண் சேவலை யுயர்த்துவண் சிறைமயிற் பரிநடாத்தும்
    சேவகப் பெருமாளை வேதபுரி வருமிளஞ் சேயைப் புரக்கவென்றே. 1.7

    கலைமகள்

    துறைபட்ட மறையவன் செந்நாப் படிந்துதன் சுதைநிறஞ் சிதைவுறாமே
    தொன்றுமறை கனிந்தூறு மண்பனீ ரூறலிற் றூத்துகி னனைப்புறாமே
    நறைபட்ட வெண்டோட்டு நளினப் பொகுட்டெமது நன்னெஞ் செனக்குடிபுகும்
    ஞானப் பிராட்டியைச் சொற்கடற் றெள்ளமுதை நாத்தழும் பத்துதிப்பாம்
    சிறைபட்ட தண்டுறைச் சித்தாமிர் தப்பெருந் தீர்த்தந் திளைத்தாடிய
    செஞ்சுடர்க் கடவுளும் வெண்சுடர்க் கடவுளிற் றெள்ளமுத மயமாகலான்
    உறைபட்ட சுதைநிலவொ டிளவெயிலு மளவளாய் உண்ணச் சகோரம்வெஃகும்
    ஓங்கெயிற் பருதிபுரி முருகனைச் சண்முகத் தொருவனைக் காக்கவென்றே. 1.8

    சத்தமாதர்கள்
    சந்த விருத்தம்

    பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள் பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள்
    பனிவரை பகநெடு வேலைப் பணித்தவள் படுகடல் புகையெழ வார்விற் குனித்தவள்
    எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள் எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள்
    இடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள் எனுமிவ ரெழுவர்க டாளைப் பழிச்சுதும்
    கயறிரி சரவண வாவிக் கரைக்குரை கழலொடு பரிபுர மோலிட் டிடக்கட
    களிறொடு களிறெதிர் மோதத் திசைத்திசை கடுநடை யுளதக ரேறச் சமர்த்தனை
    முயறரு கறையொடு தேய்வுற் றிளைத்தொரு முழுமதி குறைமதி யாகத் துகிற்கொடி
    முகிறொடு தடமதில் வேதப் பதித்தனி முதல்வனை யறுமுக வேளைப் புரக்கவே. 1.9

    முப்பத்துமுக்கோடி தேவர்கள்
    வேறு

    முறுக்குடை நறைச்சத தளத்திரு மலர்த்தவிசு சொர்க்கத் தலத்தோடு சேடசய னத்தையும்
    முடித்தலை யடித்தலை பதித்தெதிர் துதித்தவர்த மக்குக் கொடுத்தானை மாதிரமொ ரெட்டையும்
    இறைப்பொழு தினிற்பொடி படுத்தருள் கொடுக்கவல சத்திக் கரத்தானை யூதியமெ னத்தனை
    இருப்பினு நடப்பினு நினைப்பவ ரிருக்கவெமர் சித்தத் திருப்பானை யாறிருபு யத்தனை
    வெறுப்பொடு விருப்பினை யறுத்தவ ருளத்துமலர் பத்மப் பதத்தானை வேதபுரி யிற்சின
    விடைக்கொடி வலத்தினு மடக்கொடி யிடத்துமுள முக்கட் டிருத்தாதை யார்பணிகு ருக்களை
    மறைக்கிழ வனைத்தலை புடைத்துல கனைத்தினையும் ஒக்கப் படைத்தானை மூவிருமு கத்தனை
    மருத்துவர் வசுக்கதி ருருத்திர ரெனப்பொலியு முப்பத் துமுக்கோடி தேவர்கள்பு ரக்கவே. 1.10

    2. செங்கீரைப்பருவம்


    ஆசிரிய விருத்தம்

    இருக்கோ லிடும்பரி புரக்கோல முந்நுதலில் இட்டபொட் டுஞ்சுட்டியும்
    எரிமணிப் பட்டமுங் கட்டுபொன் னரைஞாணும் இளஞாயி றுதயஞ்செயும்
    உருக்கோல முஞ்சுழி யக்கொண்டை யும்முச்சி உச்சியும் வாளிமுத்தும்
    ஒள்ளொளி ததும்புங் குதம்பையுங் கண்டுகண் டோடரிக் கண்களிக்கும்
    மருக்கோல நீலக் குழற்றைய லாட்கரு மருந்தா யிருந்ததெய்வ
    மகக்கோல மேமுதிர் கிழக்கோல மாய்க்குற மடந்தைமு னடந்துமற்றத்
    திருக்கோல முடனொரு மணக்கோல மானவன் செங்கீரை யாடியருளே
    செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள செங்கீரை யாடியருளே. 2.1

    கும்பாதி காரிய மெனத்தமை நிமித்தமாகக் கொண்டவகி லாண்டங்களின்
    குழுவுக்கு மற்றுத்த மிருவர்குறி யுந்தலைக் கூடினுந் தான்றனக்கச்
    சொம்பாதி யன்மைக் கனைத்துந்தன் மயமெனும் சுருதிகரி யாவைத்துமச்
    சுருதிக்கு மெரிசுடர்ப் பருதிக்கு மிரவிகுல தோன்றற்கு மிளவலுக்கும்
    சம்பாதி யொடுநற் சடாயுவுக் கும்பெருந் தவமுனிவ ரெழுவருக்கும்
    தண்ணளி சுரந்திட்ட தீராத வினைதீர்த்த தம்பிரான் றிருமேனியிற்
    செம்பாதி யுங்கொண்ட தையனா யகிகுமர செங்கீரை யாடியருளே
    செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள செங்கீரை யாடியருளே. 2.2

    கைக்கெட்டு மெட்டுக் களிற்றைப் பிடித்தக் களிற்றொடு முட்டவிட்டுக்
    ககனவட் டத்தினொடு பருதிவட் டத்தைவளை திகிரிவட் டத்திலிட்டு
    முக்கட் டிருத்தாதை கோதண்ட மெனவைத்த வேதண்ட மாதண்டமா
    மூதண்ட கூடந்த்ரி கூடத் தொடுஞ்சாடி மூரிக் கடாசலமவன்
    மெய்க்கிட்ட சட்டைக்கு நேரிட் டிடப்பட்ட மேகபட லத்துமொண்டு
    மேல்கட லினைப்பெருங் கீழ்கடல் புகப்பெய்து விளையாட்டு வீரர்களொடும்
    திக்கெட்டும் விளையாடு சேனா பதிக்கடவுள் செங்கீரை யாடியருளே
    செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள செங்கீரை யாடியருளே. 2.3

    மைவிழி செங்கமல வல்லிக்கு நேமியான் மணிமார்பு வாணிக்குநான்
    மறைமுதலி செந்நாத் தடந்தைய லாளொடும் வயித்தியக் கடவுளார்க்கு
    மெய்விரிக் குந்தொண்ட ருள்ளத் தடத்தினொடு வேதச் சிரங்கடுப்ப
    வேதபுரி கந்தபுரி புள்ளு ரெனப்பொலியும் வேளூர திசைதிசைதொறும்
    கைவகுத் தரமகளிர் குரவையாட் டயர்பெருங் கயிலைத் தடஞ்சாரலும்
    கனகாச லத்தும்வள ரிமயா சலத்துமுயர் கந்தமா தனவெற்பெனத்
    தெய்வதப் பிடியொடும் விளையாடு மழகளிறு செங்கீரை யாடியருளே
    செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணாவாள செங்கீரை யாடியருளே. 2.4

    மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி வில்லியா ரிளவலொடும்
    விதிமுறை வணங்கச் சடாயுபுரி யிற்கருணை வெள்ளமென வீற்றிருக்கும்
    ஆனே ருயர்த்திட்ட வையற்கு மம்மைக்கும் அருமருந் தாகிநின்ற
    ஆதிப் பிரானென்று மும்முதற் கடவுளும் அடித்தொழும் பாற்றமற்றக்
    கூனேறு மதிநுதற் றெய்வக் குறப்பெண் குறிப்பறிந் தருகணைந்துன்
    குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக் குறையிரந் தவடொண்டைவாய்த்
    தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன் செங்கீரை யாடியருளே
    செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள செங்கீரை யாடியருளே. 2.5

    வேறு

    செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாடத்
    திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்
    பைம்பொ னநசும்பிய தொந்தியொ டுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
    பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
    கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
    கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
    அம்பவ ழத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
    ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை 2.6

    குழையொடு குழையெதிர் மோதிக் காதணி குண்டலம் வெயில்வீசக்
    குமுத விதழ்க்கனி வாயமு தூறிய குறுநகை நிலவூர
    முழுவயி ரப்புய வலயமு முன்கை முதாரியு மொளிகால
    முத்த மரும்பி யெனக்குறு வேர்வு முகத்தி லரும்பியிடப்
    புழுதி யளைந்த பசுந்திரு மேனிப் பொங்கொளி பொங்கியெழப்
    புண்டரி கங்கண் மலர்ந்த விழிக்கடை பொழியருள் கரைபுரள
    அழகு கனிந்து முதிர்ந்த விளங்கனி ஆடுக செங்கீரை
    ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை. 2.7

    விரல்சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ் புலராமே
    விம்மிப் பொருமி விழுந்தழு தலறியுன் மென்குரல் கம்மாமே
    கரைவுறு மஞ்சன நுண்டுளி சிந்திக் கண்மலர் சிவவாமே
    கலுழ்கலு ழிப்புன லருவி படிந்துடல் கருவடி வுண்ணாமே
    உருவ மணிச்சிறு தொட்டி லுதைந்துநி னொண்பத நோவாமே
    ஒருதா ளுந்தி யெழுந்திரு கையும் ஒருங்கு பதித்துநிமிர்ந்
    தருள்பொழி திருமுக மசைய வசைந்தினி தாடுக செங்கீரை
    ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை. 2.8

    சந்த விருத்தம்

    கும்பம தக்களி யானையி ரண்டே யொன்றேமைக்
    கொண்டல்லி ழிக்கயன் மீனுமி ரண்டே கொண்டேகிச்
    சம்பர னைப்பொரு சேவகன் வந்தான் வந்தான்முற்
    சண்டைகொ ளற்கென நேர்வரு பெண்பா லன்பாயே
    அம்பவ ளக்கொடி யேவளர் கோம்பே யென்றேநீ
    அன்றுபு னத்துயிர் சோர்வது கண்டே முன்போதும்
    கம்பம தத்தர்ச கோதர செங்கோ செங்கீரை
    கந்தபு ரிக்கரு ணாநிதி செங்கோ செங்கீரை. 2.9

    திங்கணு தற்றிரு மாதொடு நின்றே மன்றாடும்
    செங்கண்வி டைக்கொடி யோனருள் கன்றே யொன்றேயாய்
    எங்களு ளத்தமு தூறுக ரும்பே யன்பாளர்க்
    கின்பம ளிக்குமெய்ஞ் ஞானம ருந்தே யெந்தாயின்
    கொங்கலர் மைக்குழல் வாழ்பொறி வண்டே வண்டூதும்
    கொந்தள கக்குற மான்வளர் குன்றே யென்றோதும்
    கங்கைம கட்கொரு கான்முளை செங்கோ செங்கீரை
    கந்தபு ரிக்கரு ணாநிதி செங்கோ செங்கீரை. 2.10

    3. தாலப்பருவம்



    ஆசிரிய விருத்தம்

    பில்கும் பசுந்தே னசும்பிருந்த பின்றா ழளகத் தரமகளிர்
    பேதைக் குறும்பு விளையாடும் பேரா யத்துச் சிறுமருங்குற்
    கொல்குங் கொடிபோய் நுடங்கியிட ஓங்கும் பளிக்கு நிலாமுற்றத்
    துயர்சூ ளிகையின் மரகதத்தின் ஒளிகால் வீசத் தௌிவிசும்பிற்
    பல்குஞ் சுரபி தரங்கநெடும் பாகீ ரதியின் கரைக்கிளைத்த
    பசும்புல் லெனச்செந் நாவளைக்கும் பைம்பொற் றலங்கள் பலகோடி
    மல்குஞ் செல்வக் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ
    மலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ. 3.1

    தொடுக்குந் தொடைவெண் டுகிற்கொடிகள் தொடிநீர்ப் பரவை முகம்புழுங்கத்
    தோன்றும் பருதி மணித்திண்டேர் தூண்டுங் கலின வாம்பரியை
    முடுக்குஞ் சுடர்ப்பொற் றலத்திழைத்த முழுநீ லத்தி னொழுகொளியின்
    முழுகுங் கடவுண் மால்யானை முகிலிற் றோன்ற வகலிடநின்
    றடுக்குங் களிறென் றரமகளிர் ஐயுற் றிடத்தன் வௌிறுமுடம்
    பளறு படிந்த தெனக்கங்கை யாற்றுப் பசும்பொ னசும்புபுனல்
    மடுக்குஞ் செல்வக் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ
    மலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ. 3.2

    தீற்றுஞ் சுதைவெண் ணிலவெறிப்பத் திரண்மா மணிகள் வெயில்விரிக்கும்
    செம்பொற் றலத்துப் பேரமர்க்கட் சிறியார் நறிய வகிற்புகையிட்
    டாற்றுங் குழற்காட் டினைப்புயலென் றாட மயில்கண் டம்பவளத்
    தரும்பு நகையைச் சகோரப்புள் அருந்த விரிந்த முழுநகைவிண்
    டூற்று நிலவுக் கிந்துசிலை ஒளிர்மா ளிகையுஞ் சுளிகையும்
    உருகிப் பெருகுங் கலுழிவெள்ளம் உவரோ டுவரிக் கடற்புலவு
    மாற்றுங் கடவுட் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ
    மலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ. 3.3

    கிளைக்குஞ் சகரர் தொட்டபெருங் கிடங்கென் றிடங்கர் மாவியங்கும்
    கீழ்நீ ரழுவக் குண்டகழிக் கெழுமு புனற்றெண் டிரைமேய்ந்து
    திளைக்குங் கமஞ்சூ னெடும்புயலைச் சிறுகட் பெருங்கைப் பகடென்றோர்
    செங்கட் களிறு பிளிறநிமிர் திகிரி கிரியென் றிவர்ந்துடலம்
    இளைக்கும் படிவிண் டொடநிவந்த எழிற்பொற் புரிசை விண்டுபதத்
    தேறு மேணி பொற்றருவுக் கிடுவே லியுமா யேழுலகும்
    வளைக்குங் கடவுட் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ
    மலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ. 3.4

    சோலைப் புறமுப் புடைக்கனிகள் தூக்கு முடத்தெங் கிமையவர்தம்
    தோன்ற றிருவோ லக்கத்துத் தோகை மயிலி னடங்குயிற்றும்
    ஏலக் கருங்கொந் தளவளகத் திளமா தருக்கு முதிர்வேனில்
    இளைப்பாற் றுதற்குத் தாற்றொடுஞ்செவ் விளநீர் கொடுப்ப வீற்றுளைந்த
    காலப் புயலின் முகந்துடைக்கும் கமுகு பழுக்காய்ப் பவழமுடன்
    கதர்முத் திட்டுச் செழும்பாளைக் கற்றைக் கவரி புடையிரட்டும்
    மாலைப் பழனப் பருதிபுரி வாழ்வே தாலோ தாலேலோ
    மலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ. 3.5

    வேறு
    மாலி மயத்து மடப்பிடி பெற்று வளர்த்த விளங்களிறே
    மழவிடை யேதிரு மாமடி கட்கென வைத்த கவுத்துவமே
    மூல மெனக்குல நான்மறை யோலிடு முழுமுத லேமூவா
    முக்கட் கனிகனி யுஞ்சுவை யேதனி முத்திக் கொருவித்தே
    காலை யிளங்கதி ருக்கெதிர் முதிரும் கதிர்செம் பவளமுடன்
    கதிர்முத் திட்டுவ ணங்கக் கன்னல்கொல் கமுகுகொ லெனவளரும்
    சாலி வயற்றமிழ் வேளூ ரடிகேள் தாலோ தலேலோ
    சங்கத் தமிழின் றலைமைப் புலவா தாலோ தாலேலோ. 3.6

    கருமுகி லுக்கரி தாமடி வாரம் கண்டிரு பறவைகடம்
    கண்களி பொங்கவொர் பறவை முடித்தலை காணா துட்குவரப்
    பொருபுன லருவித் தலையின் மிசைத்தவழ் புதுமதி நிலவொழுகப்
    புள்ளூ ரிற்பொலி வெள்ளி மலைக்கட் பொன்மலை யைக்குவவு
    குருமணி வயிரப் புயமெனு மெட்டுக் குவடுஞ் சுவடுபடக்
    குத்திப் பொருமிரு கோடு படைத்ததொர் கூந்தற் பிடிபெற்றுத்
    தருமொரு தொந்தித் தந்திக் கிளையாய் தாலோ தலேலோ
    சங்கத் தமிழின் றலைமைப் புலவா தாலோ தாலேலோ. 3.7

    உண்ணெகிழ் தொண்ட ருளத்திருள் சிந்திட ஒளிவிடு முழுமணியே
    உயர்மறை நூல்கலை முடிவின் முடிந்திடும் ஒழுகொளி மரகதமே
    விண்ணொடு மண்ணை விழுங்கி யருட்கதிர் விரியு மிளஞ்சுடரே
    மெய்ப்புலன் மேய்ந்து சமைந்ததொர் வீட்டை விளக்கும் விளக்கொளியே
    புண்ணிய நாறுமொர் பெண்கனி கனியும் புனித நறுங்கனியே
    புள்ளூ ரெனவெம துள்ளத் தடநிறை புத்தமு தக்கடலே
    தண்ணொளி பொங்கிய கருணா நிதியே தாலோ தாலேலோ
    சங்கத் தமிழின் றலைமைப் புலவா தாலோ தாலேலோ. 3.8

    சந்த விருத்தம்

    தோலாத முத்தமிழ் நாவா மூவா மாவாமச்
    சூர்வே ரறத்தொடு வேலா நூலா நூலோதும்
    சீலாம லைக்கொடி பாலா கீலா மேலாகும்
    தேவாதி பற்கொரு தேவா வோவா தேகூவும்
    காலாயு தக்கொடி வீறா வேறா வேறேறும்
    காபாலி பெற்றகு மாரா வீரா பேராளா
    சேலார்வ யற்குரு கூரா தாலோ தாலேலோ
    சேனாப திப்பெரு மாளே தாலோ தாலேலோ 3.9

    ஊனாயு யிர்க்குயி ரானாய் தாலோ தாலேலோ
    ஓதாது ணர்த்திடு போதா தாலோ தாலேலோ
    ஆனாவ ருட்கனு பானா தாலோ தாலேலோ
    ஆயாத சொற்சொலு பாயா தாலோ தாலேலோ
    நானாயெ னக்கரி தானாய் தாலோ தாலேலோ
    நாதாதி கட்கனு பூதா தாலோ தாலேலோ
    தேனார்பொ ழிற்குரு கூரா தாலோ தாலேலோ
    சேனாப திப்பெரு மாளே தாலோ தாலேலோ 3.10

    4. சப்பாணிப் பருவம்



    முடங்குந் திரைப்பரவை வயிறுளைந் தீன்றநறு முளரிப் பிராட்டிவைத்து
    முத்தாடு பச்சைப் பசுங்கிள்ளை யெனமழலை முதிருமென் குதலைகற்பத்
    தொடங்குங் குறப்பாவை கற்றைக் குழற்ககிற் றூமமொடு தாமமிட்டுச்
    கடிகைநுதல் வெயர்வுந் துடைத்தொழுகு கத்தூரி தூரியங் கொண்டு தீட்டிக்
    குடங்கைக் கடங்கா நெடுங்கட் கடைக்கழகு கூரவஞ் சனமெழுதிமென்
    கொங்கைத் தடத்துப் பசுங்களப மப்பியவள் குற்றேவன் முற்றுமாற்றித்
    தடங்குங் குமப்புயங் கொட்டிநட மிட்டவன் சப்பாணி கொட்டியருளே
    தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை சப்பாணி கொட்டியருளே. 4.1

    மழைக்கொந் தளக்கலப மயிலிளஞ் சாயனெடு மதரரிக் கெண்டையுண்கண்
    மான்கன்றை யமருலகு வாழப் பிறந்திடு மடப்பிடியை வானவில்லைக்
    குழைக்குந் தடக்கைத் திருத்தாதை நீரொடு கொடுப்பக் குடங்கையேற்றுக்
    கொழுமலர் மணங்கமழ் மணப்பந்தர் நிற்பவக் கொம்புமின் கொடியினொல்கி
    இழைக்கும் பசும்பொற் றசும்பென வசும்புபொன் னிளமுலை முகங்கோட்டிநின்
    றெய்யாமை நோக்கும் படைக்கட் கடைக்கணோக் கின்னமுத மூற்றவின்பம்
    தழைக்கும் பெருங்காதல் வெள்ளந் திளைத்தவன் சப்பாணி கொட்டியருளே
    தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை சப்பாணி கொட்டியருளே. 4.2

    உண்ணிலா வுவகைத் தடங்கடல் படிந்திட்ட உம்பருஞ் செங்களம்பட்
    டொண்பருதி யுடல்கிழித் தோடுங் கடற்றானை ஒளிறுவா ளவுணர்குழுவும்
    தெண்ணிலா மதிநுதற் றெய்வப் பிணாக்கள்வாய்த் தேனமுது மமுதவாரித்
    தெள்ளமுது முடனிருந் துண்ணப் பணித்திட்ட செங்கைவேல் பைம்புனத்துப்
    பண்ணுலா மழலைப் பசுங்கிளவி யெயினர்பொற் பாவைவிழி வேலொடொப்புப்
    பார்க்குந் தொறுந்தலை கவிழ்த்துநின் றவடிருப் பவளத்து முத்தரும்பும்
    தண்ணிலா வுக்கொண் சகோரமென நின்றவன் சப்பாணி கொட்டியருளே
    தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை சப்பாணி கொட்டியருளே. 4.3

    மடநடைத் தெய்வக் குறப்பாவை திருவுருவின் மயிலிளஞ் சாயலுநிலா
    மணிவட மறப்புடைத் திறுமாந்த கனதன வனப்புங் குறித்துநோக்கி
    இடுகிடைப் பாவிக் கினிப்பிழைப் பில்லைகொல் எனத்திரு வுளங்குழைந்தாங்
    கேந்திளங் கொங்கையை யிணைப்புயத் தேந்திநின் றெல்லா வுறுப்புநிற்கக்
    குடமுலைக் கேயிவள் குடிப்பிறப் புக்கியை குணங்கிடைத் ததுகொலென்றக்
    கோதைநெடு நாணெய்த வவயவங் கட்குள குணாகுணந் தனிதெரிக்கும்
    தடமலர்க் கைத்தலஞ் சேந்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
    தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை சப்பாணி கொட்டியருளே. 4.4

    விண்ணென் கடற்புவன முடவுப் படத்தேந்து வேந்துபொலி பாந்தள் வைப்பும்
    விரிநீர் வரைப்புமெழில் விஞ்சைய ரிருப்புமுகை விண்டுநறை விரிமுண்டகக்
    கண்ணன் றிருப்பதமு நான்முகக் கடவுள்பூங் கஞ்சமுங் குலிசப்பிரான்
    கற்பகக் காவுநின் றொண்டர்க டொழும்புக்கொர் காணியா வைத்துமற்றத்
    திண்ணென் றடக்கைவெஞ் சிலைவேடர் குடிகொண்ட சீறூரு மூரூர்தொறும்
    செந்தினைப் புனமூடு தண்சாரல் பிறவுமாம் சீதனக் காணிபெற்றத்
    தண்ணென் குறிஞ்சித் தலந்தலை யளிப்பவன் சப்பாணி கொட்டியருளே
    தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை சப்பாணி கொட்டியருளே. 4.5

    கடலைச் சுவற வடித்து மிடித்துக் கனவரை துகள்கண்டும்
    கடிதிற் றிரிய வகுப்பதை யொப்பக் காரவு ணக்கடலின்
    உடலிற் பெருகிய குருதிக் கடல்பிண வோங்கலொ டோங்கவமைத்
    தொட்டிய வொட்டல ரிற்பிற கிட்டவர் ஒழியப் பிறரையெலாம்
    தடவுத் தாழியின் மத்தெறி தயிரிற் றத்துதி ரப்புனலிற்
    றசைகுடர் நிணமொடு மூளை குழம்பச் சமர்விளை யாடல்செயும்
    குடுமிச் சுடர்வடி வேலைத் தொட்டவ கொட்டுக சப்பாணி
    கொழிதமிழ் வேத புரிக்கும ரேசன் கொட்டுக சப்பாணி. 4.6

    சமரிற் பட்டவர் வெட்டிய பூதத் தலைவர்க ணிற்பமுதற்
    றாமரை நாயகன் வயிறு கிழித்துத் தந்தொழி றலைநின்றாங்
    கமரிற் குரிய மடக்கொடி யாரை அலைத்தனர் பற்றியெயிற்
    றவுண ரெனத்தமை யுணரார் கணவர்கள் ஆர்ப்பில் வெடித்தபெருங்
    கமரிற் குருதி பிலத்தை நிரப்பிடு களமெதிர் கண்டினியக்
    காரவு ணக்கடல் சூரொடு மாளக் கடிதிற் றடிதியடற்
    குமரக் கடவு ளெனப்பணி வேலவ கொட்டுக சப்பாணி
    கொழிதமிழ் வேத புரிக்கும ரேசன் கொட்டுக சப்பாணி. 4.7

    அற்ற வுடற்குறை யிற்ற முடித்தலை அங்கைத் தலம்வைத்திட்
    டாடு பறந்தலை யோடுதி ரப்புனல் ஆறு கடத்துகெனும்
    சிற்றல கைக்கொரு பேரல கைப்பெண் தேரழி யக்கழியும்
    திகிரிப் பரிசில் விடப்படு சுழியிற் றெருமரல் மட்பகைஞன்
    பற்றிய திரிகை திரித்து விடத்திரி பரிசென வுஞ்சுழலும்
    பம்பர மெனவும் வரும்படி யவுணர் படக்கள வேள்விசெயாக்
    கொற்ற மகட்புண ருஞ்சுடர் வேலவ கொட்டுக சப்பாணி
    கொழிதமிழ் வேத புரிக்கும ரேசன் கொட்டுக சப்பாணி. 4.8

    சந்த விருத்தம்

    வளரிள வனமுலை மலைமக ளுக்கொர் தவப்பேறே
    மறிதிரை பொரநிமிர் கருணை கொழித்த பெருக்காறே
    அளியுமி னமுதெழு வௌியினில் வைத்த சுவைத்தேனே
    அறமுது தவமொடு வளர வளர்த்திடு நற்றாயே
    களிமயில் கடவிவி ணடைய முடுக்கிய புத்தேளே
    கலைமறை யெனுமுரல் வரியளி மொய்த்த மலர்க்காவே
    தௌிதமிழ் பழகிய மதவலி கொட்டுக சப்பாணி
    தினகர புரிவரு தனிமுதல் கொட்டுக சப்பாணி. 4.9

    கனியொடு சுவையமு தொழுகிய சொற்பயி றத்தாய்வேள்
    கணையொடு பிணையென வுலவு கடைக்கண் மடப்பாவாய்
    நனைமலர் பொதுளிய வெழிலி தழைத்த குழற்கோதாய்
    நளிர்புன மிசைவளர் கலபம் விரித்த மயிற்பேடே
    எனவொரு குறமக ளடிமுடி வைத்தனை முத்தேவாம்
    இறைவரு முறைமுறை பணியவிருக்கு முதற்றேவே
    சினவிடை யவரருண் மழவிடை கொட்டுக சப்பாணி
    தினகர புரிவரு தனிமுதல் கொட்டுக சப்பாணி. 4.10

    5. முத்தப் பருவம்



    குருகு நாறு செந்தளிர்க்கைக் கொடிநுண் ணுசுப்பிற் கோட்டிமயக்
    குலப்பூங் கொம்பு நறவூழ்த்த கொழுந்தா மரையோ டவிழ்ந்ததுழாய்ச்
    சருகு நாறு முடைத்தலையின் தாம நாறு திரடிண்டோட்
    டாதையாருங் கண்டுகண்டு தடங்கண் களிப்பக் குரவுவிரிந்
    தருகு நாறு திருமேனி அந்தீங் குதலை மழலைகனிந்
    தமுத மூறு பசுந்தேறல் அசும்பு நாறத் தெய்வமண
    முருகு நாறுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
    மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே. 5.1

    நறவு விரிந்த விரைத்தோட்டு நளினத் தொட்டிற் றடமுலைப்பால்
    நல்கி வளர்த்த கைத்தாயர் நகைவாண் முகத்து மார்பகத்தும்
    குறுமெ னடைய சிறுபசுங்காற் குருதி ததும்ப வுதைந்துசில
    குறும்பு செயத்தா ணோமெனமென் கோல்கொண் டோச்சப் பெரும்புவனம்
    நிறுவு மொருநின் பெருந்தன்மை நினைந்தாய் போலக் கனிந்தமுது
    நெக்குப் பசுந்தே னசும்பூற நெடுவெண் ணிலவு விரிந்தகுறு
    முறுவ லரும்புஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
    மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே. 5.2

    பொழியுங் கருணைப் பெருவெள்ளப் புணரி பெருகி யலையெறியப்
    பொங்கி யெழுந்த பெருங்காதற் புளகம் போர்ப்பப் போதுசெயும்
    விழியு மனமுங் குளிர்தூங்க விரிநீர்ச் சடிலத் தொருவனிரு
    வீணைக் குதவுந் திருச்செவிகள் விருந்தாட் டயர விரைகொழித்து
    வழியுங் கொழுந்தேன் பிழிந்திட்டு மதுர வமுது குழைத்தூற்றும்
    மழலை ததும்பப் பழமறையை வடித்துத் தௌித்த வார்த்தையொன்று
    மொழியும் பவளச் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
    மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே. 5.3

    கலைப்பா னிறைந்த முதுக்குறைவிற் கல்விச் செல்வர் கேள்விநலம்
    கனியக் கனிய வமுதூறும் கடவுண் மறையு முதற்சங்கத்
    தலைப்பா வலர்தீஞ் சுவைக்கனியும் தண்டே னறையும் வடித்தெடுத்த
    சாரங் கனிந்தூற் றிருந்தபசுந் தமிழு நாறத் தடங்கரைகொல்
    அலைப்பாய் புனற்றெண் கடல்வைப்பும் அகிலாண் டமும்பன் முறையீன்றும்
    அழகு முதிர முதிராவென் அம்மை யமுது சூற்கொண்ட
    முலைப்பா னாறுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
    மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே. 5.4

    புயலுண் டிருண்ட கொந்தளமும் பொன்னங் குழையு மின்னகையும்
    புளகம் பொதிந்த விளமுலையும் புருவச் சிலையும் போர்த்தடங்கட்
    கயலுங் கலப மயிலியலும் கன்னிப் புனத்தோர் பெண்ணமுதின்
    காமர் நலனும் பன்னிரண்டு கண்ணான் முகந்துண் டின்னமுதின்
    இயலுஞ் சுவைநல் லவியொடுநீத் தேக்கற் றிருந்தத் தாக்கணங்கின்
    இழுமென் குதலை கனிந்தூறும் இதழ்த்தேன் சுவைகண் டேமாப்பான்
    முயலுங் குமுதக் கனிவாயால் முத்தந் தருக முத்தமே
    மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே. 5.5

    வேறு

    கோடுபடு கொங்கைக் குவட்டுக் கிளைத்திட்ட கொடியிடைக் கடைசியர்குழாம்
    குரவையிடு துழனியிற் கொண்டறிரை யத்தாவு குழவுப் பகட்டுவாளை
    சேடுபடு புத்தே ணிலத்துப் புனிற்றிளஞ் சேதா வயுற்றுமுட்டச்
    சேங்கன் றெனத்தடவு மடிமடை திறந்தூற்று தீம்பால் சினைக்கற்பகத்
    தேடுபடு தடமலர்த் தேனருவி யொடுசொரிந் தேரியொடு கானிரம்ப
    இழுதுபடு கழனியுந் தெய்வமண நாறவேன் றின்சுவை முதிர்ந்துவிளையும்
    காடுபடு செந்நெல்பைங் கன்னனிகர் புள்ளூர கனிவாயின் முத்த மருளே
    கங்கைக்கு நெடியவன் றங்கைக்கு மொருமகன் கனிவாயின் முத்தமருளே. 5.6

    துளிதூங்கு மழைமுகிற் படலங் கிழிக்கும் துகிற்கொடிகள் சோலைசெய்யத்
    தோரண முகப்பிற் றவழ்ந்தேறு கலைமதித் தோற்றத்தை யறுகான்மடுத்
    தளிதூங்கு தேனிறா லிதுதம்முன் வம்மினென் றழிநறா வார்ந்துநிற்கும்
    அந்நலார் கைகூப்ப வாடவர் பிழிந்தூற்று மளவிலப ராதமிதெனா
    ஒளிதூங்கு முகமதிக் கொப்பென்கி லேன்விடுதிர் உயிரொன்று மெனவிடலுமவ்
    வுடுபதிக் கடவுணற வுண்டமற் றவரினும் உய்ந்தோ மொழிந்தோமெனாக்
    களிதூங்கு மாடமலி கந்தபுரி வருமுருக கனிவாயின் முத்த மருளே
    கங்கைக்கு நெடியவன் றங்கைக்கு மொருமகன் கனிவாயின் முத்தமருளே. 5.7

    பூமரு வுயிர்க்குங் கருங்கொந் தளத்துவிரி பூந்துகட் படலமுமணம்
    பொங்கிய நறும்புகைப் படலமுங் காலமழை பொழிமுகிற் படலஞ்செயத்
    தாமரை முகச்சோதி யெழவெழுஞ் சிறுமுறுவல் தண்ணிலவு செயவெயில்செயத்
    தழன்மணிக் கலனக னிதம்பமொடு வெம்முலை தடங்கடலு மலையுஞ்செயத்
    தேமரு குழற்கோதை மயிலனீர் கோசிகச் செம்மலென வேறுபுவனம்
    செயவும்வல் லீரென மணந்திடை தணந்தவர்சொல் செஞ்சொற் பசுங்குளிசொலக்
    காமரு மணங்குழையு மாதர்பயில் வேளூர கனிவாயின் முத்த மருளே
    கங்கைக்கு நெடியவன் றங்கைக்கு மொருமகன் கனிவாயின் முத்தமருளே. 5.8

    சந்த விருத்தம்

    மதியு நதியு மரவும் விரவு மவுலி யொருவன் முக்கணும்
    வனச முகமு மகமு மலர மழலை யொழுகு சொற்சொலும்
    புதல்வ விமய முதல்வி யருள்செய் புனித வமரர் கொற்றவன்
    புதல்வி தழுவு கொழுந குறவர் சிறுமி குடிகொள் பொற்புய
    கதிரு மதியு மொளிர வொளிரும் ஒளிய வளிய கற்பகக்
    கனியி னினிய வுருவ பருவ மழையி னுதவு கைத்தல
    முதிரு மறிவி லறிஞ ருணரு முதல்வ தருக முத்தமே
    முனிவர் பரவு பருதி புரியின் முருக தருக முத்தமே. 5.9

    வடிவி னழகு மெழுத வரிய புயமு நறிய செச்சையும்
    மருமம் விரவு குரவு மரையின் மணியு மணிகொள் கச்சையும்
    கடவு மயிலு மயிலு மொழுகு கருணை வதன பற்பமும்
    கமல விழியும் விழியு மனமும் எழுதி யெழுதி நித்தலும்
    அடிக ளெனவு னடிகள் பணியும் அடிய ரலது மற்றும்வே
    றமரர் குழுவு மகில மறையும் அரியு மயனு முற்றுநின்
    முடியு மடியு முணர வரிய முதல்வ தருக முத்தமே
    முனிவர் பரவு பருதி புரியின் முருக தருக முத்தமே. 5.10

    6. வருகைப் பருவம்



    செம்பொற் கருங்கழ லரிக்குரற் கிண்கிணி சிலம்பொடு கலின்கலினெனத்
    திருவரையி லரைமணி கிணின்கிணி னெனப்பொலந் திண்டோளின் வளைகலிப்ப
    அம்பொற் பகட்டுமார் பிற்சன்ன வீரமும் ஆரமுந் திருவில்வீச
    அணிமகர குண்டலம் பருதிமண் டலமென்ன அலர்கதிர்க் கற்றைசுற்றப்
    பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன் பட்டமொளி விட்டெறிப்பப்
    பங்கய மலர்ந்ததிரு முகமண் டலந்தொறும் பனிமுறுவ னிலவரும்பக்
    கும்பப் படாமுலை மலைப்புதல்வி செல்வக் குமாரநா யகன்வருகவே
    குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே. 6.1

    மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில் மடித்தல நனைப்பவம்மை
    மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி யெம்பிரான் மார்பினிற் குரவையாடி
    முழுவுமுதிர் துடியினிற் சிறுபறை முழக்கியனல் மோலிநீர் பெய்தவித்து
    முளைமதியை நௌியரவின் வாய்மடுத் திளமானின் முதுபசிக் கறுகருத்தி
    விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு தூளெழ மிகப்புழுதி யாட்டயர்ந்து
    லிரிசடைக் காட்டினின் றிருவிழிகள் சேப்பமுழு வெள்ளநீர்த் துளையமாடிக்
    குழவுமுதிர் செல்விப் பெருங்களி வரச்சிறு குறும்புசெய் தவன்வருகவே
    குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே. 6.2

    இருளற விமைக்குநின் றிருவுருவி னலர்சோதி இளஞாயி றெனமுகையவிழ்ந்
    தேடுவிரி தாமரைக் காடுமுகிழ் நகைநில வெறிப்பவலர் குமுதவனமும்
    கரைபுரள வலைமோது கடலைக் கலக்குமழ களிறென் வுழக்கியொருநின்
    கண்மலர்கள் செம்மலர்க ளாகமோ கப்பெருங் கலவியங் கடலின்மூழ்கும்
    வெருளின்மட நோக்கினீ ரரமகளி ருடனாடும் விளையாட் டெனத்திரைபொரும்
    வெள்ளநீர்ச் சரவணப் பொய்கையந் துறையினீள் வீரர்க ளெனுங்கோளரிக்
    குருளைக ளொடும்புனல் குடைந்துவிளை யாடிய குமாரநா யகன்வருகவே
    குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே. 6.3

    கட்டுண்ட படர்சடைக் காட்டெம்பி ரான்வைத்த கலைமதியொ டையநீயக்
    கவுரிதிரு முடியினித் திலமிட் டிழைத்திட்ட கதிரிளம் பிறையிணைப்பத்
    தெட்டுண்ட போன்முழுத் திங்களென் றேக்கறுஞ் செழுமணிச் சூட்டுமோட்டுச்
    செம்பாம்பு பைவிரித் தாடுதலு மோடிநின் சிறுநறுங் குஞ்சிக்கிடும்
    மட்டுண்ட பைங்குலைக் காந்தளென் றணையவம் மாசுணம் வெருண்டோடலும்
    மணிமுடியி னகுதலையை மற்றெமை நகைத்தியால் மலரவன் றலைநீமுனம்
    குட்டுண்ட தறியாய்கொ லெனவித ழதுக்கும் குமாரநா யகன்வருகவே.
    குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே. 6.4

    அங்கைத் தலத்தம்மை செங்கண் புதைத்தற் கடங்காமை யாலெம்பிரான்
    அலர்விழிகள் பொத்தலு மிருட்படல மூடவுள் ளஞ்சிநின் றேங்கவேங்கிச்
    செங்கைத் தலங்கொண் டெடுத்தணைப் பாட்கும் திருத்தாதை யார்க்குமுத்தம்
    திருமுகமொ ராறுங் கொடுப்பக் கதுப்பிற் றெறித்துமுத் தந்தருகெனும்
    கங்கைகு நல்கா தெழுந்தலறி யோடலும் கண்ணீர் துடைத்தெடுத்துக்
    கான்மலரு நீவித்தன் மார்புற வணைக்குமக் கவுமாரி யருண்மாரியிற்
    கொங்கை குடங்கொட்டு பாலருவி யாடும் குமாரநா யகன்வருகவே.
    குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே. 6.5

    வேறு

    பைந்தண் கமல வட்டவணைப் பாவை யனையார் பூவிரியும்
    பசுமென் குழற்கூட் டகிற்புகையின் படல மூட முடைநறவின்
    கந்தம் பொதிந்த செந்துவர்வாய்க் கடைசி மகளிர் செந்நெலைப்பைங்
    கன்ன லெனவுங் கன்னலைப்பூங் கமுக மெனவுங் கடைக்கூடாத்
    தந்தங் கருத்துக் கமைந்தபடி சாற்றிச் தாற்றி முழுமாயச்
    சலதி மூழ்கித் தடுமாறும் சமயத் தவர்போற் றலைமயங்கும்
    அந்தண் பழனக் கந்தபுரிக் கரசே வருக வருகவே
    அருளா னந்தக் கடற்பிறந்த அமுதே வருக வருகவே. 6.6

    வள்ளைக் குழையிற் றாவடிபோம் மடமா னோக்கிற் கடைசியர்கண்
    மாலைக் குழல்வண் டோலமிட மடுவில் வெடிபோம் வரிவாளை
    பள்ளத் திருடூங் கழுவநீர்ப் பரப்பென் றகல்வான் மிசைத்தாவப்
    பாகீ ரதித்தீம் புனல்கிடைத்த பரிசு வீட்டின் பயன்றுய்க்கும்
    உள்ளக் கருத்தாற் பிறிதொன்றை உண்மைப் பொருளென் றுள்ளவுந்தம்
    உணர்விற் றெய்வங் கடைக்கூட்ட உறுதி கிடைத்த படிபோலும்
    அள்ளற் பழனப் புள்ளூருக் கரசே வருக வருகவே
    அருளா னந்தக் கடற்பிறந்த அமுதே வருக வருகவே. 6.7

    நஞ்சிற் றோய்த்துக் கொலைதீற்றும் நயன வேலுங் கரும்புருவ
    நாமச் சிலையு மகலல்குல் நகுபொற் றேரு மிகல்கடந்து
    வஞ்சிக் கொடிநுண் ணிடைசாய்த்து மதர்த்துக் களித்த மால்களிறும்
    மற்றும் படைகள் பற்பலவும் வகுத்துக் கொண்டு மடலவிழ்ந்த
    கஞ்சத் தவிசிற் றிருவன்னார் கடலந் தானைக் கைநிமிரக்
    காமன் படைவீ டெனப்பொலியும் காட்சி யானு மப்பெயரிட்
    டஞ்சொற் றமிழோர் புகழ்வேளூர்க் கரசே வருக வருகவே
    அருளா னந்தக் கடற்பிறந்த அமுதே வருக வருகவே. 6.8

    சந்தவிருத்தம்

    உலகு குளிர வெமது மதியி லொழுகு மமுத கிரணமே
    உருகு மடிய ரிதய நெகிழ வுணர்வி லெழுந லுதயமே
    கலையு நிறையு மறிவு முதிர முதிரு மதுர நறவமே
    கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே
    அலகில் புவன முடியும் வௌியி லளியு மொளியி னிலயமே
    அறிவு ளறிவை யறியு மவரு மறிய வரிய பிரமமே
    மலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே
    வளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே. 6.9

    இழுமெ னருவி சொரியு மிமய முதல்வி புதல்வன் வருகவே
    இயலு நடையும் வடிவு மழகு மெழுத வரியன் வருகவே
    ஒழுகு கருணை முழுகு கமல வதனன் வருக வருகவே
    ஒருவ னிருவ ரொடுகை தொழுந லுபய சரணன் வருகவே
    விழுது விடுவெ ணிலவு பொழியு நகையன் வருக வருகவே
    விளரி பயிலு மளியு ஞிமிறும் விரவு குரவன் வருக வருகவே
    மழலை முதிர முதிரு மதுர வசனன் வருக வருகவே
    வளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே. 6.10

    7. அம்புலிப் பருவம்



    ஆசிரிய விருத்தம்

    மண்டலம் போற்றுருவ மமுதமய மாய்முழு மதிக்கடவு ளெனவருதலால்
    வானாறு தலைமடுக் கப்பொங்கு மானந்த மாக்கட லிடைத்தோன்றலால்
    தண்டலில் கொடிச்சிவாய்க் குமுதம்விள் ளக்கரத் தாமரை முகிழ்த்திடுதலாற்
    சகலபுவ னத்திலு முயிர்ப்பயிர் தழைப்பநற் றண்ணிளி சுரந்திடுதலால்
    துண்டமதி நதியொடு பொதிந்தவே ணிப்பரஞ் சோதிகட் பொறியாதலால்
    தோன்றலிவ னின்னையொத் துளனா னினக்குமொரு துணையிவன் போலில்லைகாண்
    அண்டரண் டத்தொடகி லாண்டம் படைத்தவனொ டம்புலீ யாடவாவே
    அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே. 7.1

    சொற்றரு பெரும்புலவர் கலையமுது கொளவிருந் தோகைமேல் கொண்டருளினாய்
    தோற்றிமுன் பொங்கிமலை போலவலை மோதுமச் சோதிவே லையுமுகந்தாய்
    குற்றமில் குணத்தைக் குறித்தவிர வலர்முகம் கோடா தளித்தல்செய்தாய்
    கோகனக நாயகன் வரக்கூ விடுங்குக் குடங்கொடிய தாகவைத்தாய்
    உற்றிடு மிதழ்க்குமுதம் விண்டுதண் டேனொழுக ஒளிநிலா நகைமுகிழ்த்தாய்
    உன்செய்கை யெம்பிரான் றன்செய்கை போலுமால் உனையுமிவ னொவ்வாதிரான்
    அற்பொதி களத்தவ னளித்தகும ரேசனுடன் அம்புலீ யாடவாவே
    அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே. 7.2

    கங்கைமுடி யடிகட்கொர் கண்ணா யிருத்தியக் கண்ணினுண் மணியிவன்காண்
    கலைகள்சில நிறைதிபின் குறைதியிவ னென்றுமொண் கலைமுழுது நிறையநின்றான்
    எங்குமிர வோனெனத் திரிதியிவ னடியவர் எவர்க்குமிர வினையொழித்தான்
    இருநிலத் தங்குரிக் கும்பயிர் வளர்த்தியிவன் எவ்வுயிரும் வாழச்செய்தான்
    பொங்கமுத மமுதா சனர்க்குதவி னாயிவன் புத்திமுத் தியுமளித்தான்
    புவனம் படைத்தவிவ னின்னின்மிக் கானெனப் புகல்வதோர் பொருளன்றுகாண்
    அங்கண்மறை யோலிட் டரற்றநின் றவனுடன் அம்புலீ யாடவாவே
    அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே. 7.3

    பாயிருட் போதத் திருட்டன்றி யகவிருட் படலங் கிழிப்பதுணராய்
    பனிவிசும் பிற்பொலிவ தொன்றலாற் புவனப் பரப்பெலாம் பொலிவதோராய்
    சேயிதழ்க் குமுதந் திறப்பதல் லாதுளத் திருமலர் திறக்கவறியாய்
    சிறைவிரி சகோரப்பு ளன்றியெவ் வுயிரும் திளைத்தின்ப மாரச்செயாய்
    நீயிவற் கொப்பன்மை செப்புவதெ னிப்பரிசில் நின்பெருந் தவமென்சொல்கேன்
    நெடியவன் முதற்றேவர் குறுகிநிற் பவுமுனை நினைத்தழைத் தருளினன்காண்
    ஆயிர மறைக்குமொரு பொருளா யிருப்பவனோ டம்புலீ யாடவாவே
    அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே. 7.4

    தருமன்னு பொன்னுலகு மண்ணுலகு மொக்கத் தலைத்தலை மயங்கத்தொகும்
    சன்னிதி யடைந்தவர்கள் பையுணோய் முற்றும் தவிர்ந்தக மகிழ்ந்துதவிராக்
    கருமன்னு மூழிப் பெரும்பிணியு மாற்றிடுதல் கண்டனை யிருத்தியானின்
    கயரோக முடன்முயற் கறையுந் துடைத்திடக் கருதிடுதி யேலெம்பிரான்
    திருமுன்ன ரள்ளியிடு வெண்சாந்து மற்றைத் திருச்சாந்து நிற்கவற்றாச்
    சித்தாமிர் தத்தடத் தீர்த்தத் துறைக்குறுந் திவலையொன் றேயமையுமால்
    அருவென்ன வுருவென்ன வன்றென்ன நின்றவனொ டம்புலீ யாடவாவே
    அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே. 7.5

    ஒழியாத புவனத் துயிர்க்குயிர தாய்நிற்ப தொருதெய்வ முண்டெனவெடுத்
    துரையாலுணர்த்துவதை யொழியவெவ ரெவர்கட்கும் ஊன்கண் ணுளக்கண்ணதாம்
    விழியாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள் வேண்டிய வரங்கொடுப்பான்
    மெய்கண்ட தெய்வமித் தெய்வமல் லாற்புவியில் வேறில்லை யென்றுணர்தியாற்
    பொழியாத புயறங்கு புவனமுந் திசைமுகப் புத்தேள் பெரும்புவனமும்
    பொன்னுலகு மண்ணுலகு மெவ்வுலகு வேண்டினும் பொருளன் றிவற்குமற்ற
    அழியாத வீடுந் தரக்கடவ னிவனுடன் அம்புலீ யாடவாவே
    அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே. 7.6

    நெட்டுடற் பைங்கட் கரும்பேய்கள் செம்மயிர் நிரைத்தூணம் வீக்கியார்த்து
    நிற்குங் குறட்பூத மொன்றினை விடுத்துடலின் நெடியபழு வென்புநெரியக்
    கட்டெனப் பிடியெனக் கொடிறுடைத் தடியெனக் கணநாதர் கடுகமுடுகிக்
    கடல்வாய் திறந்தெனப் பிலவாய் திறந்தலறு காட்சிநீ காணாயலை
    மட்டுடைத் தூறுந் தடங்கமலன் முதலியோர் வாய்புதைத் தஞ்சிநிற்ப
    வருகென் றழைத்திடவும் வாரா திருத்தியால் மற்றிவன் முனிந்தாலுனக்
    கட்டதிக் கினிலுமொரு திக்கிலையெ மையனுடன் அம்புலீ யாடவாவே
    அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே. 7.7

    குன்றைத் திறந்திட்ட குடுமிவேல் சூருயிர் குடித்திட விடுத்துநின்றான்
    குண்டிகைக் கள்வனைக் குடுமித் தலைப்பசுங் குருதிபொங் கப்புடைத்தான்
    இன்றைக் குழந்தையென் றெண்ணாது குலிசன்முதல் எண்மரும் பிறருமொருஞான்
    றெதிர்நின் றுடற்றியவர் பட்டபா டறியா திருத்தியலை யதுகிடக்க
    முன்றக்கன் வேள்விக் களங்கொலைக் களமென்ன முடியமரர் மொத்துண்டநாள்
    முழுமதிக் கடவுணீ யவமதிப் புண்டது மொழிந்திடக் கடவதன்றால்
    அன்றைக் கணக்கின்றும் வந்திருக் கின்றதினி அம்புலீ யாடவாவே
    அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே. 7.8

    தள்ளும் பவக்கட லுழக்குமெனை முத்தித் தடங்கரை விடிப்பவனுனைத்
    தலையளிப் பான்வர வழைப்பவும் வராவிடிற் றண்ணளி சுரந்துகருணை
    வெள்ளங் கொழிக்குங் கடைக்கண் சிவப்பவிவன் வெகுளாது விடினுமழுது
    விழிசிவப் பக்காணி னிரவிபகை சாய்த்தவிள வீரன் பொறுப்பானலன்
    கள்ளம் பழுத்தகட் கடைசியர் சிறார்திரைக் காவிரித் தண்டுறைதொறும்
    கதிர்நித் திலங்குவி மணற்குன்ற மேறியக் கலைமதிக் கலசவமுதை
    அள்ளுந் தடம்பணைச் சோணாட னிவனுடன் அம்புலீ யாடவாவே
    அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே. 7.9

    தன்னொத்த தெய்வச் சிறாருமிள வீரரும் தாணிழற் கீழ்நிற்பவிச்
    சகதண்ட மண்டல மடுக்கழியு நாளமரர் தமையழக் காண்பவனிவன்
    நின்னைப் பொருட்படுத் தொருவிரற் றலைசுட்டி நீள்கழற் றாளுதைந்து
    நெடுமலர்க் கண்பிசைந் தழுதழு தழைத்தனன் நினக்கிதில் வியப்பில்லைகாண்
    பின்னற் றிரைச்சுர நதித்தண் டுறைத்தேவர் பேதைக் குழாங்களென்னப்
    பெருகுந் தடம்புனற் காவிரிப் பூவிரி பெருந்தண் டுறைச்சிறைவிரித்
    தன்னக் குழாந்திளைத் தாடுசோ ணாடனுடன் அம்புலீ யாடவாவே
    அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே. 7.10

    8. சிற்றிற் பருவம்



    குறுமென் னடையு நெடுவெணிலாக் கோட்டு நகையும் வாட்டடங்கண்
    குளிர முகந்துண் டொளிர்சுட்டிக் குஞ்சி திருத்தி நறுங்குதலை
    முறுகு நறைத்தேன் கனிபவள முத்துண் டுச்சி மோந்துகொண்டுன்
    முகமுந் துடைத்து விளையாட முன்றிற் புறத்துப் பொன்றதும்பி
    இறுகும் புளகக் கும்பமுலை எம்பி ராட்டி விடுத்ததுமற்
    றிளையார் மறுக மறுகுதொறும் இடுக்கண் செயற்கோ வெந்தாய்நின்
    சிறுகிண் கிணிச்செஞ் சீறடியாற் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.1

    கொழுநாண் மலர்க்கற் பகமுநறைக் குரவு நாறு நறுங்குஞ்சிக்
    கோமான் மகனே நங்கள்குலக் கொழுந்தே யென்று குறையிரந்து
    தொழுவா னவர்த முடிசூட்டும் சோதி முடியிற் றுகளெழநின்
    துணைத்தாள் வண்டற் றுறைப்புழுதித் தூளி படினும் படுகசுடர்க்
    கழுவா மணியு நிலவுவிரி கதிர்நித் திலமு முமையம்மை
    கண்ணி லுறுத்த வடிகேணின் காலி லுறுத்தல் கடனன்றாற்
    செழுநான் மறையின் பெருஞ்செல்வச் செருக்கே சிற்றில் சிதையேலே
    செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.2

    வழிக்குப் புறம்பா யாமிழைத்த வண்டண் மனையவ் வசுரேசன்
    வான்கூட் டுண்பா னடுக்கடலில் வகுத்த நகரன் றிகழாமே
    கொழிக்குஞ் சிறுமுற் றிலில்வாரிக் கொடுவந் தடியே மனைமுன்றிற்
    குவியா நின்ற மணிக்குவையக் குருகு பெயர்க்குன் றமுமன்றாற்
    கழிக்குண் டகழி வாய்மடுப்பச் சுடர்வால் வளைத்தெண் டிரைக்கரத்தாற்
    சுரபி செரிபான் மடையடைத்த சோற்றி னோடுங் கலந்தூட்டிச்
    செழிக்குந் தடங்கா விரிநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.3

    மூரிக் களிறோ மழவிடையோ முடுகிற் றெனப்பார்த் துழியுனது
    முகத்தி னழகெம் வடிக்கண்ணால் மொண்டுண் டனம்யா மெனவுமிகப்
    பாரித் தோங்கிப் பூரித்த பைம்பொற் புயத்தைக் கண்ணேறு
    பட்டே மெனவு மடிகள்பகை பாராட் டுவதோர் பண்பன்றால்
    வேரிக் கொழுந்தாற் றிளம்பாளை விரிபூங் கமுகும் பால்பாயும்
    வேழக்கரும்பு மிருட்பிழம்பை விழுங்கிக் கக்குஞ் சுடர்ப்பருதித்
    தேருக் கெழில்செய் சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.4

    பொன்னங் கொடிபோ னுடங்குமிடைப் புத்தேண் மகளிர் விளையாடப்
    புனைமா ளிகையுஞ் சூளிகையும் புதுக்கிக் கொடுத்தாய் பொதுஞானம்
    மெய்ந்நின் றவருள் விழிப்பாவை விளையாட் டயர வழியாத
    வீடுங் கொடுத்தா யெம்மனையும் விடுத்துச் சென்றான் மிகையுண்டோ
    பின்னுந் திரைத்தீம் புனற்கங்கைப் பேராற் றூற்று நறைக்கோட்டுப்
    பெருங்கற் பகத்தின் கழுத்தொடியப் பிறழும் வாளைப் பகடுதைத்த
    தென்னம் பழம்வீழ் சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.5

    கானக் குறப்பெண் குடியுருந்த கன்னிப் புனத்துத் தினைமாவும்
    கமழ்தேன் றௌிவு முண்டுசுவை கண்டா யென்றே மதுவல்லால்
    மீனத் தடங்க ணவண் மிச்சில் மிசைந்திட் டதுவு நசைமிக்கு
    விரைத்தீங் குமுதத் தமுதடிகள் விருந்தா டியதும் விண்டோமோ
    கூனற் பிறையின் கோடுரிஞ்சும் கொடிமா டத்து வெயில்விரிக்கும்
    குருமா மணியாற் சுரநதியிற் கொழுந்தா மரைகண் முறுக்குடைந்து
    தேனக் கலருஞ் சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
    செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.6

    பிள்ளை மதிச்செஞ் சடைச்செருகும் பெருமா னார்க்கு முலகேழும்
    பெற்ற தாய்க்கு நீயருமைப் பிள்ளை யெனினெம் பேராய
    வெள்ள மமைத்த சிறுசோறு வேண்டி னிடுகே மலதௌியேம்
    விளையா டிடத்துச் சிறுகுறும்பு விளைத்தாற் பொறுக்க விதியுண்டோ
    கள்ள விழிச்சூ ரரமகளிர் காமன் கொடியேற் றெனவியப்பக்
    கற்ப தருவிற் படர்ந்தேறு காமர் கொடெச்செங் கயல்பாயும்
    தெள்ளு புனற்கா விரிநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
    செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.7

    மடல்வா யவிழ்ந்த குழற்பேதை ஒருத்தி திருத்தும் பகிரண்ட
    மணற்சிற் றிலையோர் கணத்தின்கண் மட்டித் தாடு மைந்தனருள்
    விடலாய் தமியேஞ் சிற்றின்முற்றும் விளையாட் டாக வொருநீயும்
    வீட்டா நிற்பத் தொடங்கினையால் வித்து முளையும் வேறன்றே
    கடமா மருப்புஞ் சுடர்மணியும் கதிர்நித் திலமு மகளிர்முலைக்
    களபத் தொடுகுங் குமச்சேறும் கரைத்து விடுத்தக் கடற்குட்டம்
    திடராச் செயுங்கா விரிநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
    செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.8

    வாமாண் கலைப்பே ரகலல்குல் மடமா ணோக்கி னரமகளிர்
    மகிழ்பூத் திருப்பப் புத்தேட்கு வந்த விடுக்கண் மாற்றினையால்
    கோமா னினக்கப் பெருந்தேவர் குலமே யன்றி யடியேமும்
    குற்றே வலுக்கா மகம்படிமைக் குடியாக் கொண்டாற் குறையுண்டோ
    காய்மாண் குலைச்செவ் விளநீரைக் கடவுட் சாதி மடநல்லார்
    கதிர்ப்பூண் முலையென் றேக்கறப்பைங் கமுகு நகைவாண் முத்தரும்பும்
    தேமாம் பொழிற்றீம் புனனாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
    செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.9

    கருவீற் றிருந்த பெருங்கருணை கடைக்கண் பொழிய வீற்றிருக்கும்
    கடவு ணீயே பகிரண்டம் கண்டா யெனின்வண் டடைகிடப்ப
    மருவீற் றிருந்த குழன்மகளிர் வண்டற் றுறைக்கு மணற்சிற்றில்
    மனைகோ லுவது மற்றடிகேள் வகுக்குந் தொழிற்கு மாறன்றே
    குருவீற் றிருந்த மணிமாடக் கொடிமா நகரந் தொறுமலர்ந்த
    கொழுந்தா மரைப்பூங் கோயிலிற்பல் கோடி யுருவங் கொண்டுசெழுந்
    திருவீற் றிருந்த சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
    செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.10

    9. சிறுபறைப் பருவம்



    ஊற்றும் பசுந்தே னுவட்டநெட் டிதழ்விரியும் ஒண்காந்தண் முச்சியுச்சி
    ஒருவனீ மும்முதற் கடவுளு மிளைப்பாற உலகெலாந் தலையளித்துப்
    போற்றுந் திறத்தினப் பழமறைக் கிழவன் புரிந்தபகி ரண்டங்கடாம்
    புதுக்குவ கடுப்பநெடு வௌிமுகட் டுக்குவிரி புதுநிலாக் கற்றையிட்டுத்
    தூற்றும் பெயர்க்கரு முகிற்படாத் தையும்வெண் டுகிற்படா மாக்கிவீக்கித்
    தொடுகடற் புவனப் பெருந்தட்டொ டண்டச் சுவர்த்தலத் துக்கும்வெள்ளை
    தீற்றுஞ் சுதைத்தவள மாடமலி வேளூர சிறுபறை முழக்கியருளே
    தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ சிறுபறை முழக்கியருளே. 9.1

    விளைக்கும் பெரும்புவன மொக்கக் கரைத்தகடை வெள்ளஞ் சுருங்கவீங்கி
    வேதண்ட மெட்டினொடு மூதண்ட கூடத்தும் விலையாடி யுலகமேழும்
    வளைக்குங் கருங்கடல் பெரும்புறக் கடலோடும் வாய்மடுத் தெதிரெடுப்ப
    வருபுனற் காவேரி வளநாட நாடொறு மதிக்கடவு ளேறியேறி
    இளைக்கும் புளிக்கறை முயற்கறை யறக்காலும் இளநிலா வெள்ளமூழ்கி
    எறிதிரைப் பாகீ ரதிப்புனல் குடைந்திடும் இடைக்கொடி நகிற்கொடியெனத்
    திளைக்குந் துகிற்கொடி முகிற்கொடிசெய் வேளூர சிறுபறை முழக்கியருளே
    தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ சிறுபறை முழக்கியருளே. 9.2

    இருளுந் தரங்கக் கருங்கடன் முகட்டெழும் இளம்பிறை முயற்குழந்தைக்
    கேறவிடு மோடமென வான்மீன் றடந்திரை எடுத்தெறியு நெடுமீனெனத்
    தரளம் பதிந்திட்ட மணிமுறுவ லவரோடு தருநிழற் செல்வருய்க்கும்
    தமனிய விமானமும் வெயிற்கதிர்ப் போர்வையான் தனியாழி திசையுருட்ட
    உருளுங் கொடித்தேரும் வீற்றுவீற் றெழில்புனைந் தோட்டுபொற் றெப்பமென்ன
    உலகேழு மலையெட்டு மொழுகுகதிர் விழுதுவிடும் ஒண்ணிலாப் புணரிகோப்பத்
    திரளும் பளிக்குமா டங்கள்பொலி வேளுர சிறுபறை முழக்கியருளே
    தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ சிறுபறை முழக்கியருளே. 9.3

    மொய்ம்பிற் பெரும்புவன மொக்கச் சுமக்கின்ற மோட்டாமை முதுகுளுக்க
    முடவுப் படங்கிழிந் தரவரசி னாயிர முடித்தலையு மூளைபொங்கக்
    கம்பக் கடாயானை யெட்டும் பிடர்த்தலை கழுத்தொடு முரிந்துகவிழக்
    கதிர்மணிச் சூட்டுநெட் டரவெட்டும் வடவைக் கடுங்கனற் கண்பிதுங்க
    அம்பொற் றடம்புரிசை யெழுபெருந் தட்டுருவி அண்டகூ டத்தளவலால்
    அவரவர் வழங்குதற் கிடுதலைக் கடையென அடுக்கேழு நிலையேழுமாம்
    செம்பொற் றிருக்கோ புரங்கள்பொலி வேளூர சிறுபறை முழக்கியருளே
    தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ சிறுபறை முழக்கியருளே. 9.4

    தரிக்குஞ் சுடர்ப்பருத் முழுமதிக் கடவுளொடு தடமதில் கடந்தகநகர்
    சாரவரி தாற்புவன கோடிகட் கொளிசெயக் சதுமுகன் கற்பந்தொறும்
    விரிக்கின்ற விருசுடரு மொருவழித் தொக்கென வியன்கதிர்ப் படலமூடி
    வீங்கிருள் விழுங்குசெம் மணிமாட நிரையுமொளி விளைபசுங் கதிர்வெண்புரி
    புரிக்குஞ் செழுந்தரள மாடமும் வெயிலினொடு பொழிநிலாப் போர்ப்பமுற்றும்
    போதுதெரி யாமையிற் குமுதமொடு சதவிதழ்ப் போதுமே யிருபோதையும்
    தெரிக்குந் தடம்பணை யுடுத்ததமிழ் வேளூர சிறுபறை முழக்கியருளே
    தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ சிறுபறை முழக்கியருளே. 9.5

    வேறு

    மழைமுகில் பிளிறு முழக்கென விரிசிறை மடமயி லினமகவ
    மால்கட லோலிடு மொலியென விரக மடந்தையர் மனநெகிழப்
    பழமறை யார்ப்பென வாகுதி வேட்டெழு பண்ணவ ருண்மகிழப்
    பரநா தத்தொலி யெனவனு பூதி பலித்தவர் நெக்குருக
    அழலவிர் சோதியெ மைய னடஞ்செய ஆயிர மங்கையினோர்
    அண்ண றுவைத்திடு குடமுழ வொடுசுடர் ஆழி யவன்கொட்டு
    முழவென வமரரு முனிவரு மார்ப்ப முழக்குக சிறுபறையே
    முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன் முழக்குக சிறுபறையே. 9.6

    பெருவௌி முகடு திறந்திட் டண்டப் பித்திகை வெடியாமே
    பேரண் டத்துள வேதண் டங்கள் பிதிர்ந்துதி ராகாமே
    குருமணி சிதறிய வென்ன வுடுத்திரள் கொட்டுண் டுதிராமே
    குவடு படுந்திசை செவிடு படச்சிலர் குடர்கள் குழம்பாமே
    திருவிர லொடுநக கண்களி னுஞ்செங் குருதி ததும்பாமே
    சேயொளி நின்று துளும்பிட நின்சிறு செங்கை வருந்தாமே
    முருகலர் தாரவ னொருமுறை மெல்ல முழக்குக சிறுபறையே
    முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன் முழக்குக சிறுபறையே. 9.7

    வம்மி னெனப்புல வோரை யழைத்திடு வண்கொடை முரசமென
    வடகலை தென்கலை யொடுபயி லுங்கவி வாணர்க ளோடிவர
    அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்றவ ணங்கை மணம்புணரும்
    அணிகிளர் மணமுர சென்னவெ மையனொ டம்மை மனங்குளிரத்
    தெம்முனை சாயச் சமர்விளை யாடிச் செங்கள வேள்விசெயும்
    திறன்முர செனவிமை யவர்விழ வயரச் செழுநகர் வீதிதொறு
    மும்முர சமுமதிர் காவிரி நாடன் முழக்குக சிறுபறையே
    முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன் முழக்குக சிறுபறையே. 9.8

    சந்த விருத்தம்

    பெருகுசுவைத்தௌி நறவொழுகக்கனி கனியமுதே
    பிடிந்டைகற்றிட வடிகள்பெயர்த்திடு மடவனமே
    கருவரைநெக்குட னுருகமிழற்றுமொர் கிளியரசே
    கருணைசெயத்தகு மளியனிடத்தெனு மொழிபுகலா
    அருளில்புனத்தவர் மகளிருபொற்பதம் வருடல்செயா
    அவண்முனெடுத்துநின் முடியின்முடித்திடு கரமலராற்
    பருவயிரப்பய சயிலன்முழக்குக சிறுபறையே
    பருதிபுரிச்சிறு குமரன்முழக்குக சிறுபறையே. 9.9

    இழுமென்மொழித்தௌி தமிழின்வடித்திடு நவரசமே
    இதயவிருட்டற வுணர்விலுதித்திடு சுடரொளியே
    கழுவுமணிக்கல னடுவிலிழைத்திடு குலமணியே
    கனிதருமிக்கனி யொடுவடிகட்டிய சுவையமுதே
    ஒழுகுநறைச்செழு மலர்விரியக்கமழ் புதுமணமே
    உருகுமுளத்தருள் பெருகியவட்டெழு சலநிதியே
    பழமறைகட்கொரு முதல்வன்முழக்குக சிறுபறையே
    பருதிபுரிச்சிறு குமரன்முழக்குக சிறுபறையே. 9.10

    10. சிறுதேர்ப் பருவம்



    போரோடு படைதுறந் துடறிறந் தொடுசெம் புனலோட வோடிநிமிரும்
    புணரிப் பெருந்தானை யவுணப் படைத்தலைவர் பூதப் படைத்தலைவர்முன்
    தாரோ டவிழ்ந்திட்ட குஞ்சிக் கிமைத்திட்ட தழல்விழிக் கெதிர்செலாத
    தாளுக்கு வாள்சோர் தடக்கைக்கு நாமநும் தாலிக்கு வேலிகொலெனாப்
    பீரோடு கொங்கைக்க ணீரோடு வெள்ளருவி பெருகக் கடைக்கணிற்கும்
    பெய்வளை யவர்க்கோத வவர்விழிக டொறுமிளம் பேதையர்கள் கண்டொறுமெனத்
    தேரோடு மொருபெருஞ் சிலையோடு நின்றவன் சிறுதே ருருட்டியருளே
    திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. 10.1

    கம்பக் களிற்றுக் கடற்றானை வீரர்கட் கடையிற் கடைக்கனலெழக்
    கண்டொட் டுணுஞ்சில மருட்பேய் கரிந்தெழு கடுங்குருதி வெள்ளமூழ்கித்
    தும்பைத் தலைச்செம் மயிர்ச்சிகை யினைச்சுடு கனற்சிகை யெனப்பதைப்பச்
    சூட்டிறைச் சிக்குச் சிணுங்குங் குறட்பேய்க்கொர் சூர்ப்பேய் கொழுந்தசைகள்கோத்
    தம்பிற் சுடத்தான் கவந்தமொடு தொந்தமிட் டாடும் பறந்தலைநிலத்
    தானைப் பிணக்குன்று மவுணப் பிணக்காடும் அளறுபட் டொழியநின்றோர்
    செம்பொற் றடந்தே ருருட்டிவரு சேவகன் சிறுதே ருருட்டியருளே
    திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. 10.2

    வண்டேறு செந்நிறப் பங்கித் தலைக்கமல வனமூடு குருதியாற்று
    மால்யானை கையெடுத் தார்த்துநீந் தப்புணரி மகரமீ னெனநினைந்து
    கொண்டேகு சிறுகுடர்ப் பெருவலை யெடுத்தெறி குறட்பேய் நெடுஞ்சினமுறக்
    குறுநரி பிடித்தீர்ப்ப வலறுவதும் வீரர்தொடு கொலைநேமி யவுணருயிரை
    உண்டேகு வதுமொருவன் விடவோ லிடுங்கரிக் குதவவரு திகிரியேய்க்கும்
    ஒல்லென் பறந்தலை மறந்தலைக் கொண்டசூர் உய்த்திட்ட விந்த்ரஞாலத்
    திண்டேரை யுருளாது நிற்கப் பணித்தவன் சிறுதே ருருட்டியருளே
    திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. 10.3

    பைங்கட் சிறைக்கால் கடைக்கால் செயக்கிரிகள் விரிசிறை படைத்தெழுவபோற்
    படருந்தன் வேகத்தி னொக்கப் பறக்கப் பறந்தலைச் செந்தலையறும்
    வெங்கட் டயித்திய ருடற்குறை தலைக்குறை விரைந்துயி ரினைத்தொடர்ந்து
    மீச்செல்லு மாச்செல் லெனச்செலப் பூமாரி விண்டூர்ப்ப தெனவுடுவுகப்
    பொங்கற் கடற்குட்ட மட்டதிக் குந்தமிற் போர்செயப் பார்கவிழவெம்
    பொறியுடற் சேடன் படந்தூக்கி யார்க்கும் புகைப்படல வடவாமுகச்
    செங்கட் பசுந்தோகை வாம்பரி யுகைத்தவன் சிறுதே ருருட்டியருளே
    திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. 10.4

    நெய்வைத்த கூந்தற் பிடிக்குதவ நாற்கோட்டு நிகளத் தடங்குன்றுவான்
    நிமிருங் கதிர்க்குலைச் செந்நெலைப் பாகுபடு நெட்டிலைக் கன்னல்கொலெனாக்
    கைவைத் திடப்பரி முகஞ்செய்து வெய்யோன் கடும்பரியை நட்புக்கொளும்
    கழனிவிரி காவிரித் திருநாட கற்பகக் காட்டிற் பிறந்துபிரியா
    மெய்வைத்த காதன்மை யரமகளிர் பேராய வெள்ளந் திளைத்தாடியோர்
    மென்னடைக் கேக்கற்ற பிடிபின் பிடிக்கமுலை வேழங்க ளுடனுலாவும்
    தெய்வப் பிடிக்குக் கிடைத்ததொரு மழகளிறு சிறுதே ருருட்டியருளே
    திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. 10.5

    பற்றுவிற் காமன் கொடிப்படைக் கூரெலாம் படைவீடு கயல்கடாவும்
    பழனங்க ளோவத்ர சாலைபூஞ் சோலைப் பரப்பெலாங் காற்றேரொடும்
    கொற்றவங் கங்குற் கடாயானை யுங்கட்டு கூடமே யெனினுமருதக்
    கோமகன் குடிகொண்ட சோணாட சேணாடு குங்குமங் கொட்டுதிண்டோட்
    பொற்றடங் குன்றினிரு கொங்கைப் பொருப்புமொரு பூங்குழற் காடும்வெயில்கால்
    புனைமணிக் கலையல்குன் மாக்கடலு மேந்தியொர் புனத்தின்கண் மிகநுடங்கும்
    சிற்றிடைக் கொல்குமென் கொடிபடர நின்றவன் சிறுதே ருருட்டியருளே
    திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. 10.6

    கோல்பாய் பசும்புண் ணசும்புகும் பத்தடங் குன்றுகவுண் மடைதிறந்து
    கொட்டுநெட் டருவியொடு தேனருவி யுந்திரை கொழித்துடன் கோப்பமேதிப்
    பால்பாய் பெருக்கா றுவட்டெழுத றன்றுணைப் பாவைய ரொடுங்குறுகுமப்
    பாகீ ரதிக்குநிகர் தண்டுறை தொறுந்திசைப் பாலர்மேற் படையெடுத்து
    வேல்பாய் நெடுங்கட் கடற்றானை யொடுமொருவன் மேற்செல்ல நாற்றிசையிலும்
    வெற்றிக் கயற்கொடி யெடுத்தென வெடுத்தெறியும் வெண்டிரை குழித்துவெடிபோம்
    சேல்பாய் தடம்பணை யுடுத்தகா விரிநாட சிறுதே ருருட்டியருளே
    திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. 10.7

    மீத்தந்த மாகத்து மேகத்தி னோடுமுடு மீனியரியல் போகவுகளும்
    வெடிவாளை மதியக டுடைத்தூற்று தெள்ளமுத வெள்ளருவி யாற்பசுந்தண்
    காத்தந்த சண்பகப் பூவேரி மாரிசெய் காவேரி யாயிரமுகக்
    கங்கையா கச்செய்து மீட்டுநாற் கோட்டுவெங் களிறுபிளி றத்தாவிவான்
    பூத்தந்த கற்பகக் காட்டினை யுழக்கிவிரி பொற்றா தெழுப்பிமற்றப்
    பூந்துகட் படலத்தி னாற்றெய்வ நதியையும் பொன்னிநதி யாகச்செய்யும்
    தேத்தந்த தண்பணையு டுத்ததீம் புனனாட சிறுதே ருருட்டியருளே
    திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. 10.8

    கள்ளவிழ் நறுங்கொடிகள் கமுகிற் படர்ந்துபூங் கற்பகத் தும்படர்தலாற்
    காமன் பெருஞ்செல்வ மன்னவர்கள் குழுமியக் கமுகின் கழுத்தில்யாத்த
    ஒள்ளொளிய செம்மணிப் பொன்னூசல் பன்முறை உதைந்தாட வாடுந்தொறும்
    ஒண்கமு கொடுந்துணர்ப் பைங்கற் பகக்காடும் ஒக்கவசை யத்தலையசைத்
    தள்ளிலை யலங்கல்வே லெம்பிரா னைப்பாடி ஆடுகின் றாரெனத்தாம்
    அலர்மாரி பொழிவபோ லங்கற் பகத்தெய்வம் அம்பொன்மலர் மாரிதூர்க்கும்
    தெள்ளுதமிழ் விரிபுனற் காவிரித் திருநாட சிறுதே ருருட்டியருளே
    திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. 10.9

    வாராட்டு தடமுலைப் பாலொழுகி வழிவதென மணிமுறுவ னிலவுகாலும்
    மழலைவாய் முத்துண்டு முச்சிமோந் துந்திரு மடித்தலத் தினிலிருத்திப்
    பாராட்டி யுந்தமது கண்மணிப் பாவைநின் படிவமா கக்காட்டியிப்
    பாலரொடும் விளையா டெனப்பணித் துந்தங்கள் பார்வைகளி யாடச்செயும்
    தாராட்டு மதிமுடித் தீராத வினைதீர்த்த தம்பிரா னுந்தம்பிரான்
    தழலுருவி லொருபாதி குளிரவொரு புறநின்ற தையனா யகியும்வைத்துச்
    சீராட்டி விளையாடு சேனா பதிக்கடவுள் சிறுதே ருருட்டியருளே
    திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. 10.10

    முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முற்றிற்று.