12.6 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை (1328 -1357)
1328 திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் செம்பொன் இருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப் பாளன் ..(5)
முத்தீ வேள்வி நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை எண்டிசை அறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
காழி நாடன் கவுணியர் தலைவன் ..(10)
மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துயர் உட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே. 1
1329 அரியோடு நான்முகத்தோன் ஆதிசுரர்க் கெல்லாம்
தெரியாமை செந்தழலாய் நின்ற - ஒருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க என்று. 2
1330 என்றும் அடியவர் உள்ளத் திருப்பன இவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன ஒண்கலியைப்
பொன்றும் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே. 3
1331 அடுசினக் கடகரி அதுபட உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவருள் அதனால் பிறந்தது
கழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்தது
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது ..(5)
குழகனைப் பாடிக் கோலக் காப்புக்
கழகுடைச் செம்பொற் றாளம் அவையே தீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே அடைத்தது
அரைசோ டிசையா அணிமறைக் காட்டுக் ..(10)
குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே ஏறிற்று
அத்தியும் மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாள் பெற்றே பாடிற்று
அருமறை ஓத்தூர் ஆண்பனை அதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனை யாவே கொண்டது ..(15)
பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையில் பொன்னா யிரமே கண்டது
உறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பல்கழு மிசையே நீத்தது
அவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் ..(20)
தமிழ்ச்சுவை அறியாத் தம்பங் களையே நினைந்தது
அள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர்
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தன்இஞ் ஞாலத் திடையே. ..(25) 4
1332 நிலத்துக்கு மேல்ஆறு நீடுலகத் துச்சித்
தலத்துக்கு மேலேதான் என்பர் - சொலத்தக்க
சுத்தர்கள்சேர் காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி. 5
1333 பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்
கதிகம் அணுக்கன் அமணர்க்குக் காலன் அவதரித்த
மதியம் தவழ்மாட மாளிகைக் காழிஎன் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவர்அந் தோசில ஊமர்களே. 6
1334 கவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்து
உம்பர்ப் பதணத் தம்புதம் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள்சம் பந்தன் ..(5)
கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துக்
கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து ..(10)
முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கலது
சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே. 7
1335 பழிஒன்றும் ஓராதே பாய்இடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை - அழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரந்தரம்போய் நெஞ்சே நினை. 8
1336 நினைஆ தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள்
தனைஆவ என்றின் றருளுதி யேதடஞ் சாலிவயற்
கனையா வருமேதி கன்றுக் கிரங்கித்தன் கால்வழிபால்
நனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே. 9
1337 தனமலி கமலத் திருவெனும் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா இன்பத்து
ஆடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
பொற்பமர் தோள நற்றமிழ் விரக ..(5)
மலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீறு
ஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே. ..(10) 10
1338 பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனும் தோற்றோணி கண்டீர் -நிறைஉலகிற்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ். 11
1339 ஞானந் திரளையி லேஉண் டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே. 12
1340 அவனிதலம் நெரிய எதிர்எதிர் மலைஇச்
சொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்
பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே இடையிடைச் ..(5)
செறியிருள் உருவச் சேண்விசும் பதனிற்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையால் உந்திய கலுழிக்
கரையால் உழல்வன கரடியின் கணனே நிரையார்
பொருகடல் உதைந்த சுரிமுகச் சங்கு ..(10)
செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்
பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையில் அமணரை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற் ..(15)
சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே. 13
1341 மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து
முலைத்டங்கள் நீத்தாலும் மூப்பர் - கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தம் தீராதார் தாம். 14
1342 தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து
நாமரு மாதவர் போல்அழ கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத்தெங்ஙன் ஏகும்என் நேரிழையே. 15
1343 இழைகெழு மென்முலை இதழிமென் மலர்கொயத்
தழைவர ஒசித்த தடம்பொழில் இதுவே காமர்
சுனைகுடைந் தேறித் துகிலது புனையநின்று
எனையுங் கண்டு வெள்கிடம் இதுவே தினைதொறும்
பாய்கிளி இரியப் பைவந் தேறி ..(5)
ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொல் அவைபல இயற்றி
அன்புசெய் தென்னை ஆட்கொளும் இடமே பொன்புரை
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப் ..(10)
புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த முத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப் ..(15)
பூம்புனம் அதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தபடி நோவப் போய்எனை
வஞ்சித் திருந்த மணியறை இதுவே. 16
1344 வேழங்கள் எய்பவர்க்கு வில்லாவ திக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் - நீள்வயல்சூழ்
வாய்ந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான். 17
1345 தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்ஞைக் கலர்ந்தன கோடல்அம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் எண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே. 18
1346 வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதேன் உண்டு வேணுவின் துணியாற்
பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை
உந்தி எழுப்பும் அந்தண் சிலம்ப அஃதிங்கு
என்னையர் இங்கு வருவர் பலரே ..(5)
அன்னை காணில் அலர்தூற் றும்மே பொன்னார்
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குரல் இயற்றி
அமுதுண் செவ்வாய் அருவி தூங்கத்
தாளம் பிரியாத் தடக்கை அசைத்துச் ..(10)
சிறுகூத் தியற்றிச் சிவன்அருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்
கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே. .(15) 19
1347 தேம்புனமே உன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் - தேம்பி
அழுதகன்றாள் என்னா தணிமலையர் வந்தால்
தொழதகன்றாள் என்றுநீ சொல்லு. 20
1348 சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்அமணர்
பற்செறி யாவண்ணம் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடும் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை வாழி இரும்புனமே. 21
1349 புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சரம் உரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்
தாடும் அரவின் அகடு தீயப்
பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக் ..(5)
கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே உறவலை காண்நீ நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்
பையர வசைத்த தெய்வ நாயகன்
தன்அருள் பெற்ற பொன்னணிக் குன்றம் ..(10)
மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையேன் இருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்குல் அஞ்சொற் கிள்ளை
ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை .(15)
ஆதலின் புறவே உறவலை நீயே. 22
1350 அலைகடலின் மீதோடி அந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் - அலர்கடலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தான் ஊர். 23
1351 ஊரும் பசும்புர வித்தேர் ஒளித்த தொளிவிசும்பில்
கூரும் இருளொடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற்
காரும் உணர்ந்திலர் ஞானசம் பந்தன்அந் தாமரையின்
தாரும் தருகிலன் எங்ஙனம் யான்சங்கு தாங்குவதே. 24
1352 தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி இளவெயிற் காயும்
கவடிச் சிறுகாற் கர்க்கட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
துன்னி எழுந்து செந்நெல் மோதும் ..(5)
காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்டகு செவ்விக் களிறுகள் உகுத்த
முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே ..(10)
வாடை அடிப்ப வைகறைப் போதிற்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரணம் உரையாய்
இங்குத் தணந்தெய்தி நுமரும் ..(15)
இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே. 25
1353 குருகும் பணிலமும் கூன்நந்தும் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை - அருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமு மால்இன்னம்
புன்கலங்கல் வைகைப் புனல். 26
1354 புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா
இனமான் விழிஒக்கும் என்றுவிட் டேகா இருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடமலைவாய்த்
தினைமா திவள்காக்க எங்கே விளையும் செழுங்கதிரே. 27
1355 கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழி நாட்டுறை அணங்கோ மொய்த்தெழு
தாமரை அல்லித் தவிசிடை வளர்ந்த ..(5)
காமரு செல்வக் கனங்குழை அவளோ மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை உருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணி யத்துள் அருந்தெய்வ மதுவோ ..(10)
வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்கும் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையும் காந்தளங் கையும்
ஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான்துகி லிகையால் ..(15)
இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே. 28
1356 வடிக்கண்ணி யாளைஇவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் - வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை அமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு. 29
1357 குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்கா
வருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தே
திருந்தும் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே. 30
திருச்சிற்றம்பலம்