12.7 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை (1358)
1358 திருந்தியசீர்ச் செந்தா மரைத்தடத்துச் சென்றோர்
இருந்தண் இளமேதி பாயப் - பொருந்திய
புள்ளிரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்
கள்ளிரியச் செங்கழுநீர் கால்சிதையத் - துள்ளிக்
குருகிரியக் கூன்இறவம் பாயக் களிறு
முருகுவிரி பொய்கையின்கண் மூழ்க -வெருவுற்ற
கோட்டகத்துப் பாய்வாளைக் கண்டலவன் கூசிப்போய்த்
தோட்டகத்த செந்நெல் துறையடையச் - சேட்டகத்த
காவி முகமலரக் கார்நீலம் கண்படுப்ப
வாவிக்கண் நெய்தல் அலமர - மேவிய (5)
அன்னம் துயில்இழப்ப அஞ்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ்கிடங்கில் - மன்னிய
வள்ளை நகைகாட்ட வண்குமுதம் வாய்காட்டத்
தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட - மெள்ள
நிலவு மலரணையின் நின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள் ஈன - உலவிய
மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய
ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் - புல்லிய
பாசடைய செந்நெல் படரொளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கு செறுவுகளும் - மாசில்நீர் (10)
நித்திலத்தின் சாயும் நிகழ்மரக தத்தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய - மொய்த்த
பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கில் சேர்த்தித் - துவளாமைப்
பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் - விட்டொளிசேர்
கண்கள் அழல்சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின் நீழல் தறியணைந்து - கொண்ட
கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையு மரவடிவங் கொண்டாங் - கிலைநெருங்கு (15)
சூதத் திரளும் தொகுகனிக ளால்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் - போதுற்
றினமொருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பு
கனிநெருங்கு திண்கதலிக் காடும் - நனிவிளங்கு
நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலஞ்சிறப்ப
ஊற்று மடுத்த உயர்பலவும் -மாற்றமரும்
மஞ்சள் எழில்வளமும் மாதுளையின் வார்பொழிலும்
இஞ்சி இளங்காவின் ஈட்டமும் - எஞ்சாத
கூந்தற் கமுகும் குளிர்பாட லத்தெழிலும்
வாய்ந்தசீர் சண்பகத்தின் வண்காடும் - ஏந்தெழிலார் (20)
மாதவியும் புன்னையும் மண்ணும் மலர்க்குரவும்
கேதகையும் எங்கும் கெழீஇஇப் - போதின்
இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின் மாடே - கிளர்ந்தெங்கும்
ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் - ஆலும்
அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை ஒலிப்ப - வெறிகமழும்
நந்தா வனத்தியல்பும் நற்றவத்தோர் சார்விடமும்
அந்தமில் சீரார் அழகினால் - முந்திப் (25)
புகழ்வாருந் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே - திகழ
முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி - வளர
இரும்பதணஞ் சேர இருத்திஎழில் நாஞ்சில்
மருங்கனைய அட்டாலை யிட்டுப் - பொருந்தியசீர்த்
தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும் கைகலந்து - மீமருவும்
வெங்கதிரோன் தேர்விலங்க மிக்குயர்ந்த மேருப்போன்
றங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் - பொங்கொளிசேர் (30)
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் - வாளொளிய
நாடக சாலையும் நன்பொற் கபோதஞ்சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும் - கேடில்
உருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்கு
தெருவும் வகுத்தசெய் குன்றும் -மருவினிய
சித்திரக் காவும் செழும்பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் - எத்திசையும்
துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் - பொன்னும் (35)
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி
இரவலர்கட் கெப்போதும் ஈந்தும் - கரவாது
கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்குஞ் சாயாத - செப்பத்தால்
பொய்ம்மை கடிந்து புகழ்பரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் - உண்மை
மறைபயில்வார் மன்னு வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் - முறைமையால்
ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் - சோகமின்றி (40)
நீதி நிலைஉணர்வார் நீள்நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறுவார் - ஆதி
அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் - ஒருங்கிருந்து
காமநூல் கேட்பார் கலைஞானம் காதலிப்பார்
ஓமநூல் ஓதுவார் உத்தரிப்பார் - பூமன்னும்
நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாழும் தகைமைத்தாய் - நாமன்னும்
ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து - சீரணங்கு (45)
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்
பாணம் பயில்வார் பயன்உறுவார் - பேணியசீர்ப்
பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற்பயில்வார்
பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவார் - ஆய்எங்கும்
மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் - தங்கிய
வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்
கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் - மாதரார்
பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும் வியன்நகரம் - காவலர்கள் (50)
பம்பைத் துடிஒலியும் பௌவப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும் கைகலந்து - நம்பிய
கார்முழக்கும் மற்றைக் கடல்முழக்கும் போற்கலந்த
சீர்முழக்கம் எங்கும் செவிடுபடப் - பார்விளங்கு
செல்வம் நிறைந்தஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும்ஊர் - சொல்லினிய
ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்கள்ஊர்
வேலொத்த கண்ணார் விளங்கும்ஊர் - ஆலித்து
மன்னிருகால் வேலை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தவூர் - மன்னும் (55)
பிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி அம்பொற் - சிரபுரம்
பூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணி புரம்மறையோர் - ஏய்ந்த
புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற
மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்
ஒல்லைக் கழுவில் உலக்கவும் - எல்லையிலா
மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் - ஆதியாம் (60)
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும் - துன்றிய
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய
சிந்தனையாற் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன
வந்தங் கவதரித்த வள்ளலை - அந்தமில்சீர்
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறையவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்
தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை - முத்தமிழின் (65)
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வர்உயிர்
அஞ்சத் திகழ்ந்த அடல்உருமை - எஞ்சாமை
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் - தீதறுசீர்க்
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த - சீலத்
திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த
ஒருநாமத் தால் உயர்ந்த கோவை - வருபெருநீர்ப்
பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை - முன்னே (70)
நிலவு முருகர்க்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் - குலவிய
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
மாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய
கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக் - காதலால்
புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை
வண்கழுவில் தைத்த மறையோனை - ஒண்கெழுவு
ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து (75)
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்துமுன் - நேரெழுந்த
யாழை முரித்தும் இருங்கதவம் தான்அடைத்தும்
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் - தாழ்பொழில்சூழ்
கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில்
நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதற்கொண்டும் - அத்தகுசீர்
மாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொன் அதுகொண்டும் - மாய்வரிய (80)
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும் - பாண்பரிசில்
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டு தராதலத்துள் - எப்பொழுதும்
நீக்கரிய இன்பத் திராகம்இருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரிய
யாழ்முரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை ௭ விருப்போடு (85)
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணில் முனிவரர் ஈட்டத்துப் - பண்ணமரும்
ஓலக்கத் துள்ளிருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக் கும்பிட்டாங் - காலும்
புகலி வளநகருள் பூசுரர் புக்காங்
கிகலில் புகழ்பரவி யேத்திப் - புகலிசேர்
வீதி எழுந்தருள வேண்டுமென விண்ணப்பம்
ஆதரத்தாற் செய்ய அவர்க்கருளி - நீதியால்
கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில் (90)
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத்தாங் - கருகே
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து - முருகியலும்
புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன்அயலே முல்லை தலையெடுப்ப - மன்னிய
வண்செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர்படைப்பத்
தண்குருந்தம் மாடே தலையிறக்க - ஒண்கமலத்
தாதடுத்த கண்ணியால் தண்ணறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் - காதிற் (95)
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின்
இனமணியின் ஆரம் இலகப் - புனைகனகத்
தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண் டிகைபூண்டு - முத்தடுத்த
கேயூரம் தோள்மேற் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலந்திகழ - வேயும்
தமனியத்தின் தாழ்வடமும் தண்டரளக் கோப்பும்
சிமைய வரைமார்பிற் சேர்த்தி - அமைவுற்ற
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து - திண்ணோக்கிற் (100)
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து - சீற்றத்
தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத்தடக்கை கொண்டெறிந்து பொங்கி - மழை மதத்தாற்
பூத்த கடதடத்துக் போகம் மிகப்பொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் - கோத்த
கொடுநிகளம் போக்கிநிமிர் கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை யிட்டுக் கலித்து - முடுகி
நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகர்நீத்
திடிபெயரத் தாளந் திலுப்பி - அடுசினத்தால் (105)
கன்ற முகம்பருகிக் கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த் - தொன்றிய
கூடம் அரணழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகரழித் - தோடிப்
பணப்பா கரைப்பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பின் வீசி - அணைப்பரிய
ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக்கா ரர்கள்தாம்
மாடணையக் கொண்டு வருதலுமே - கூடி
நயந்து குரற்கொடுத்து நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம் தணிந்தாங் - குயர்ந்த (110)
உடற்றூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங்
கடற்கூடற் சந்தி யணுகி - அடுத்த
பயில்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்துத் தட்டி - உயர்வுதரு
தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்ச்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் - எண்டிசையும்
பல்சனமும் மாவும் படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல்கிளர - மல்லல்
பரித்தூரங் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ டிசைகவிஞர் பாட - விரித்த (115)
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்பக் - கடைபடு
வீதி அணுகுதலும் வெள்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்தெங்கும் - சோதிசேர்
ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்
சேடரங்கும் நீள்மறுகும் தெற்றியிலும் - பீடுடைய
பேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப்
பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண்மறுகில் (120)
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில் நிழற்கீழ்க் -காண்டலுமே
கைதொழுவார் நின்று கலைசரிவார் மால்கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய்வீழ்வார் - வெய்துயிர்த்துப்
பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்
காம்பனைய மென்தோள் கவின்கழிவார் - தாம்பயந்து
வென்றிவேற் சேயென்ன வேனில்வேட் கோவென்ன
அன்றென்ன ஆமென்ன ஐயுற்றுச் - சென்றணுகிக்
காழிக் குலமதலை என்றுதங் கைசோர்ந்து
வாழி வளைசரிய நின்றயர்வார் - பாழிமையால் (125)
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நடவென்று வேண்டுவார் - கள்ளலங்கல்
தாராமை அன்றியும் தையல்நல் லார் முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் - நேராக
என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது
நன்மை நமக்குண் டெனநயப்பார் - கைம்மையால்
ஒண்கலையும் நாணும் உடைதுகிலும் தோற்றவர்கள்
வண்கமலத் தார்வலிந்து கோடுமெனப் - பண்பின்
வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத்ததரந் தொண்டை துடிப்பப் - பொடித்தமுலைக் (130)
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார் - வாசச்
செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்
கழுமலர்த்தார் கோவே கழல்கள் - தொழுவார்கள்
அங்கோல் வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மை யோவென்று செப்புவார்-நங்கைமீர்
இன்றிவன் நல்குமேல் எண்பெருங் குன்றத்தில்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்ற
உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார் (135)
பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் - மற்றிவனே
பெண்ணிரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடுவிடத்தால் நாட்சென்று - விண்ணுற்ற
ஆருயிரை மீட்டன் றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த தெனஉரைப்பார் - பேரிடரால்
ஏசுவார் தாம்உற்ற ஏசறவைத் தோழியர்முன்
பேசுவார் நின்றுதம் பீடழிவார் - ஆசையால்
நைவார் நலன்அழிவார் நாணோடு பூண்இழப்பார்
மெய்வாடு வார்வெகுள்வார் வெய்துயிர்ப்பார் - தையலார் (140)
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் எனமெய்யில் தைவருவார் - வாய்ந்த
கிளியென்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலையென் றுடுப்பார் -அளிமேவு
பூங்குழலார் மையலாய்க் கைதொழுமுன் போதந்தான்
ஓங்கொலிசேர் வீதி யுலா.
திருச்சிற்றம்பலம்