MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    12.8 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
    ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் (1359 - 1407)
    1359 அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே
    நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி
    ஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய்
    ஓங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே.

    செஞ்சடைவெண் மதியணிந்த சிவன்எந்தை திருவருளால்
    வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை
    நற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப்
    பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே.

    தோடணிகா தினன்என்றும் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்
    தேடரிய பராபரனைச் செழுமறையின் அகன்பொருளை
    அந்திச்செம் மேனியனை அடையாளம் பலசொல்லி
    உந்தைக்குக் காணஅரன் உவனாமென் றுரைத்தனயே.

    (இவை மூன்றும் நான்கடித் தாழிசை)

    வளமலி தமிழிசை வடகலை மறைவல
    முளரிநன் மலரணி தருதிரு முடியினை.

    கடல்படு விடமடை கறைமணி மிடறுடை
    அடல்கரி உரியனை அறிவுடை அளவினை.

    (இவை இரண்டும் அராகம்)

    கரும்பினு மிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண்ணவன்அடிமேல்
    பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.

    பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்
    நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.

    (இவை இரண்டும் இரண்டடித் தாழிசை)

    அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ
    தணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ
    அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ
    தமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ

    (இவை நான்கும் நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்)

    மறையவர்க் கொருவன் நீ
    மருவலர்க் குருமு நீ
    நிறைகுணத் தொருவன் நீ
    நிகரில்உத் தமனும் நீ

    (இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போதரங்கம்)

    அரியை நீ. எளியை நீ.
    அறவன் நீ. துறவன் நீ.
    பெரியை ந.ீ உரியை நீ.
    பிள்ளை நீ. வள்ளல் நீ.

    (இவை எட்டும் இருசீர் ஓரடி அம்போதரங்கம்)

    எனவாங்கு (இது தனிச்சொல்)

    அருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய
    நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்
    உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்
    சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
    தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5)

    கற்றொகு புரிசைக் காழியர் நாத
    நற்றொகு கீர்த்தி ஞானசம் பந்த
    நின்பெருங் கருணையை நீதியின்
    அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே. 1
    (இது சுரிதகம்)
    1360 வெண்பா
    எனவே இடர்அகலும் இன்பமே எய்தும்
    நனவே அரன்அருளை நாடும் - புனல்மேய
    செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
    கொங்கமலத் தண்காழிக் கோ. 2
    1361 கட்டளைக் கலித்துறை
    கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தளவார்
    ஏலப் பொழிலணி சண்பையர் கோனை இருங்கடல்சூழ்
    ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தனை நற்றமிழே
    போலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே. 3
    1362 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    போற்று வார்இடர் பாற்றிய புனிதன்
    பொழில்சு லாவிய புகலியர் பெருமான்
    ஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன்
    எம்பி ரான்இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
    சேற்று வார்புனங் காவல் புரிந்தென்
    சிந்தை கொள்வதும் செய்தொழி லானால்
    மாற்றம் நீர்எமக் கின்றுரை செய்தால்
    வாசி யோகுற மாதுந லீரே. 4
    1363 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி
    பனிமதி அணைந்த பொழில்சூழ்
    பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு
    புனிதகுணன் எந்தம் இறைவன்
    பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு
    பரசமய வென்றி அரிதன்
    சலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது
    தகுவினைகள் பொன்றும் வகையே. 5
    1364 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    வகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்
    வலகலை வித்தகன் வானவில் மதியணை பொற்குவை மாளிகை
    திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ்புக லிக்கர சாகிய
    திருவளர் விப்ரசி காமணி செழுமல யத்தமிழ்க் கேசரி
    மிகமத வெற்றிகொள் வாரண மிடைவரு டைக்குலம் யாளிகள்
    விரவிரு ளிற்றனி நீணெறி வினைதுயர் மொய்த்துள வேமணி
    நகையெழி லிற்குற மாதுன தருமை நினைக்கிலள் நீயிவள்
    நசையின் முழுப்பழி யாதல்முன் நணுகலி னிக்கிரி வாணனே. 6
    1365 வாணில வும்புன லும்பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை
    மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்
    சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்
    திருவா ளனையெழி லருகா சனிதனை மருவா தவர்கிளைபோல்
    நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்
    நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்
    கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்
    கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேன் அறிகிலனே. 7
    1366 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த
    அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட
    செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை
    திருஞான சம்பந்தன் அணிநீடு திண்குன்றில்
    நெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டு
    நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க
    வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற
    வெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன்பண்டே. 8
    1367 பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்
    பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்
    கொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு மானருள் படைத்துக்
    கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகில் இன்பம்
    கண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு துங்கழுவில் ஏறக்
    கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது வன்றி
    விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட
    வேணுபுர நாதன்மிகு வேதியர்ச் சிகாமணி பிரானே. 9
    1368 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    பிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை மறையவர் பெருமானைக்
    குராம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்
    தராத லத்தினில் அவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக்
    கிராவி னைக்கொடு வந்ததிவ் வந்திமற் றினிவிடி வறியேனே. 10
    1369 பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    ஏனமு கத்தவ புத்தரை இந்திர சித்து மணம்புணர் வுற்றான்
    ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்
    தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
    சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவ மிப்பரி சுண்டே
    ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்
    ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேன்எளி யேனோ
    சோனக னுக்குமெ னக்கு மெனத்தரை அம்மனை சூலது கொண்டாள்
    தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகி றாரே. 11
    1370 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    ஆர்மலி புகலி நாதன் அருளென இரவில் வந்தென்
    வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன
    தேரதர் அழியல் உம்மைச் செய்பிழை எம்ம தில்லை
    கார்திரை புரள மோதிக் கரைபொருங் கடலி னீரே. 12
    1371 கலிவிருத்தம்
    கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
    தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்
    திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி
    மடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே. 13
    1372 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்
    உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்
    எழிலா ருங்கவு ணியர்தீபன்திகழ்
    இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்
    பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்
    புலமே துன்றின கலைமான் ஒன்றின
    பழிமேல் கொண்டது நுமர்தேர் அன்பொடும்
    அருகே வந்தது அதுகாண் மங்கையே. 14
    1373 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    மங்கை யிடத்தர னைக்கவி நீரெதிர் ஓட மதித்தருள்செய்
    தங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன்
    துங்க மதிற்பிர மாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென்
    கொங்கை யுடைக்கொடி ஏரிடை யாள்குடி கொண்டனள் எம்மனமே. 15
    1374 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு
    மணிநிறமும் இவள்செங்கை வளையுங் கொண்ட
    தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்திச்
    சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு
    நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே
    நன்னுதலாள் அயர்கின்றாள் நடுவே நின்றும்
    இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா
    என்செயநீர் அலர்தூற்றி எழுகின் றீரே. 16
    1375 சம்பிரதம்
    எழுகுல வெற்பிவை மிடறில் அடக்குவன்
    எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்
    முழுதும் ஒளித்திர வியையி நிலத்திடை
    முடுகுவன் இப்பொழு திவையல விச்சைகள்
    கழுமல நற்பதி அதிப தமிழ்க்கடல்
    கவுணிய நற்குல திலகன் இணைக்கழல்
    தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு
    துயர்வரு விப்பனி தரியதோர் விச்சையே. 17
    1376 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    சயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன்
    வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன்
    கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன்
    இயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே. 18
    1377 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத
    வேரிவண் டறைசோலை ஆலைதுன் றியகாழி
    நாதன்அந் தணர்கோனென் ஆனைவண் புகழாளி
    ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை
    நீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம்
    நீடுதென் றலும்வீணை ஓசையும் கரைசேர
    மோதுதெண் திரைசேவல் சேரும்அன் றிலும்வேயும்
    மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே. 19
    1378 வன்பகை யாமக் குண்டரை வென்றோய்
    மாமலர் வாளிப் பொருமத வேளைத்
    தன்பகை யாகச் சிந்தையுள் நையும்
    தையலை உய்யக் கொண்டருள் செய்யாய்
    நின்புகழ் பாடிக் கண்பனி சோரா
    நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்
    டன்பக லாமெய்ச் சிந்தையர் இன்பா
    அம்பொழில் மாடச் சண்பையர் கோவே. 20
    1379 மறம்
    கோவின்திரு முகமீதொடு வருதூதுவன் ஈர
    குளிர்பைம்பொழில் வளநாடெழில் நிதியம்பரி சம்மீ
    மாவீரியர் இவர்தங்கையென் மகுடன்திறம் அமண
    மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்
    பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்
    பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்
    தூவேரியை மடுமின்துடி யடிமின்படை யெழுமின்
    தொகுசேனையும் அவனும்பட மலையும்பரி சினியே. 21
    1380 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    இனியின் றொழிமினிவ் வெறியும் மறிபடு
    தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்
    நனிசிந் தையி னிவள் மிகவன் புறுவதொர்
    நசையுண் டதுநரை முதுபெண்டீர்
    புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்
    விரகன் புயமுறும் அரவிந்தம்
    பனிமென் குழலியை அணிமின் துயரொடு
    மயலுங் கெடுவது சரதம்மே. 22
    1381 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    சரத மணமலி பரிசம் வருவன
    தளர்வில் புகலியர் அதிபன் நதிதரு
    வரதன் அணிதிகழ் விரகன் மிகுபுகழ்
    மருவு சுருதிநன் மலையின் அமர்தரு
    விரத முடையைநின் இடையின் அவள்மனம்
    விரைசெய் குழலியை அணைவ தரிதென
    இரதம் அழிதர வருதல் முனம்இனி
    எளிய தொருவகை கருது மலையனே. 23
    1382 அயன்நெடிய மாலும்அவ ரறிவரிய தாணுவரன்
    அருளினொடு நீடவனி இடர்முழுது போயகல
    வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி
    மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக
    செயநிலவு மாடமதில் புடைதழுவு வாசமலி
    செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்
    பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்
    பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே. 24
    1383 அரியாருங் கிரிநெறிஎங் ஙனம்நீர் வந்தீர்
    அழகிதினிப் பயமில்லை அந்திக் கப்பால்
    தெரியாபுன் சிறுநெறிகள் எந்தம் வாழ்விச்
    சிறுகுடியின் றிரவிங்கே சிரமந் தீர்ந்திச்
    சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று
    தொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன்
    வரியாரும் பொழிலுமெழில் மதிலும் தோற்றும்
    வயற்புகலிப் பதியினிது மருவ லாமே. 25
    1384 ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை
    ஆமாண்பொன் கூட்டகத்த அஞ்சொலிளம் பைங்கிளியே
    பாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய்
    மாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம்
    கோமான்தன் புகழொருகால் இன்புறநீ கூறாயே
    கொச்சையர்கோன் தன்புகழ்யான் இன்புறநீ கூறாயே. 26
    1385 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    கூற தாகமெய் யடிமை தான்எனை உடைய கொச்சையர் அதிபதி
    வீற தார்தமிழ் விரகன் மேதகு புகழி னான்இவன் மிகுவனச்
    சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்
    தேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே. 27
    1386 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    சதுரன் புகலியர் அதிபன்கூர்
    தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
    முதல்வன் புகலியர் அதிபன்தாள்
    முறைவந் தடையலர் நகரம்போல்
    எதிர்வந்தனர்விறல் கெடவெம்போர்
    எரிவெங் கணைசொரி புரிமின்கார்
    அதிர்கின் றனஇது பருவஞ்சே
    ரலர்தம் பதிமதில் இடிமின்னே. 28
    1387 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி நாதன்
    துன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிகம் அன்னாள்
    பொன்னு மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள்
    இன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான் எங்ஙனேநான் எண்ணு மாறே. 29
    1388 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும்
    வம்பு பம்பு குழலும் துங்க கொங்கை இணையும்
    ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும்
    ஒத்து கித்து நடையும் சித்த பத்தி மிகையும்
    வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான்
    வென்றி துன்று கழலின் ஒன்றி நின்ற பணியும்
    தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்
    சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே. 30
    1389 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    கைதவத்தால் என்னிடைக்கு நீவந்த
    தறியேனோ கலதிப் பாணா
    மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவ
    சிகாமணியை வேணுக் கோனைச்
    செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார்
    அவனுடைய செம்பொன் திண்டோள்
    எய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்கு
    நீபலபொய் இசைக்கின் றாயே. 31
    1390 மதங்கியார்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
    இடுகர ணங்களின் இயல்பும் வளம்பொலி
    திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
    சிரிபுர மன்றகு தமிழ்விர கன்பல
    நசைமிகு வண்புகழ் பயிலு மதங்கிதன்
    நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்
    வசைதகு மென்குல மவைமுழு துங்கொள
    மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே. 32
    1391 வருகின் றனன்என் றனதுள் ளமும்நின்
    வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்
    தருகும் புனல்வெஞ் சுரம்யான் அமரும்
    மதுநீ இறையுன் னினையா தெனின்முன்
    கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்
    கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்
    பெருகுந் திருவார் அருள்பே ணலர்போற்
    பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே. 33
    1392 கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவு
    குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்
    அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்
    அணியான புகலிநகர் அணையான கனைகடலின்
    முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவன்நுமர்
    முறையேவு பணிபுரிவன் அணிதோணி புனைவனவை
    படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி
    பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே. 34
    1393 பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை
    பெருநெறி அளிப்பனபல் பிறவியை ஒழிச்சுவன
    உறுதுயர் அழிப்பனமுன் உமைதிரு வருட்பெருக
    உடையன நதிப்புனலின் எதிர்பஃறி உய்த்தனபுன்
    நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன
    நனிகத வடைத்தனது னருவிடம் அகற்றியன
    துறுபொழில் மதிற்புறவ முதுபதிமன் ஒப்பரிய
    தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே. 35
    1394 பன்னீருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    தொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார்
    தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருக் கியசீர்
    மிருகா ழிமன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார்
    விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம்
    மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய்
    வரலா றுபிழைப் பினினூ ழியிலக்........ கிதமா
    தகுவாழ் வுநிலைத் தெழில்சே ரறமா னபயிற் றுவர்மா
    சதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக் கடலே. 36
    1395 பாணாற்றுப்படை
    நேரிசை ஆசிரியப்பா
    கருமங் கேண்மதி கருமங் கேண்மதி
    துருமதிப் பாண கருமங் கேண்மதி
    நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
    அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்
    காந்திய உதரக் கனல்தழைத் தெழுதலின் (5)

    தேய்ந்துடல் வற்றிச் சின்னரம் பெழுந்தே
    இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை
    உறுசெறித் தனைய உருவுகொண் டுள்வளைஇ
    இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்
    மன்னிய வளநகர் மனைக்கடை தோறும் (10)

    சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது
    நின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந்
    தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன
    துள்ளத் துள்ள தாயின் மதுமலர்
    வண்டறை சோலை வளவயல் அகவ (15)

    ஒண்திறற் கோண்மீன் உலாவு குண்டகம்
    உயர்தரு வரையில் இயல்தரு பதணத்துக்
    கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்
    கனகப் பருமுரட் கணையக் கபாட
    விலையக் கோபுர விளங்கெழில் வாயில் (20)

    நெகிழ்ச்சியில் வகுத்துத் திகழ்ச்சியில் ஓங்கும்
    மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த
    செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய
    மாளிகை ஓளிச் சூளிகை வளாகத்
    தணிவுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய (25)

    நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர
    வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட
    மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்
    செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்
    கழுமல நாதன் கவுணியர் குலபதி (30)

    தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி
    பண்டிதர் இன்பன் பரசமய கோளரி
    என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் னுள்ளத்
    தன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ்
    குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி (35)

    நாப்பொலி நல்லிசை பாட
    மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே. 37
    1396 வஞ்சித் துறை
    நீதியின் நிறைபுகழ்
    மேதகு புகலிமன்
    மாதமிழ் விரகனை
    ஓதுவ துறுதியே. 38
    1397 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    உறுதி முலைதாழ எனையி கழுநீதி
    உனது மனமார முழுவ துமதாக
    அறுதி பெறுமாதர் பெயல்த ருதறானும்
    அழகி தினியானுன் அருள்பு னைவதாகப்
    பெறுதி இவைநீயென் அடிப ணிதல்மேவு
    பெருமை கெடநீடு படிறொ ழிபொன்மாட
    நறைக மழுவாச வளர்பொ ழில்சுலாவும்
    நனிபு கலிநாத தமிழ்வி ரகநீயே. 39
    1398 ஆசிரியத் துறை
    நீமதித் துன்னி நினையேல் மடநெஞ்சமே
    காமதிக் கார்பொழிற் காழி
    நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு
    பூமதிக் குங்கழல் போற்றே. 40
    1399 கட்டளைக் கலிப்பா
    போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே
    புந்தி யானுந்தம் பொற்கழல் பூண்டதே
    மாற்றி யிட்டது வல்விட வாதையே
    மன்னு குண்டரை வென்றது வாதையே
    ஆற்றெ திர்ப்புனல் உற்றதந் தோணியே
    ஆன தன்பதி யாவதந் தோணியே
    நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே
    நல்ல நாமமும் ஞானசம் பந்தனே. 41
    1400 கைக்கிளை மருட்பா
    அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
    வம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன்
    காமரு கழுமலம் அனையாள்
    ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே. 42
    1401 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    தனமுந் துகிலுஞ் சாலிக் குவையுங் கோலக் கனமாடச்
    சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன்
    கனவண் கொடைநீ டருகா சனிதன் கமலக் கழல்பாடிக்
    கண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதா தெம்பாண
    புனைதண் டமிழின் இசையார் புகலிக் கரசைப் புகழ்பாடிப்
    புலையச் சேரிக் காளை புகுந்தால் என்சொற் புதிதாக்கிச்
    சினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்
    சேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்வ தறியாரே. 43
    1402 இன்னிசை வெண்பா
    யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்
    தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
    கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி
    அடிமைசெயப் பெற்றேன் அறிந்து. 44
    1403 பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்மரன் கழல்மேல்
    அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்
    செறிதரு பைம்பொழில் மாளிகை கலவுந் திகழ்சீர்த்
    திருவளர் சண்பையில் மாடலை கடலொண் கழிசேர்
    எறிதிரை வந்தெழு மீனிரை நுகர்கின் றிலைபோய்
    இனமும் அடைந்திலை கூரிட ரோடிருந் தனையால்
    உறுதுயர் சிந்தையி னூடுத வினரெந் தமர்போல்
    உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே. 45
    1404 கலி விருத்தம்
    குருகணி மணிமுன்கைக் கொடியுநல் விறலவனும்
    அருகணை குவரப்பால் அரிதினி வழிமீண்மின்
    தருகெழு முகில்வண்கைத் தகுதமிழ் விரகன்தன்
    கருகெழு பொழில்மாடக் கழுமல வளநாடே. 46
    1405 நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்
    சேடே றுங்கொச்சை நேர்வளஞ் செய்துனை
    மாடே றுந்தையல் வாட மலர்ந்தனை
    கேடே றுங்கொடி யாய்கொல்லை முல்லையே. 47
    1406 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    முல்லை நகையுமைதன் மன்னு திருவருளை
    முந்தியுறுபெரிய செந்தண் முனிவன்மிகு
    நல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி
    நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
    வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு
    வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
    சொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர்
    தோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே. 48
    1407 வஞ்சித் துறை
    வழிதரு பிறவியின்உறு
    தொழில்அமர் துயர்கெடுமிகு
    பொழிலணி தருபுகலிமன்
    எழிலிணை அடிஇசைமினே. 49

    திருச்சிற்றம்பலம்