MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    சித்தர் பாடல்கள்:
    ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை
    1. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை.

    இணைக்குறளாசிரியப்பா.

    தெய்வத் தாமரைச் செவ்விதின் மலர்ந்து
    வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
    சிலம்புங் கழலு மலம்பப் புனைந்து
    கூற்றி னாற்றன் மாற்றிப் போற்றாது
    வலம்புரி நெடுமா லேனமாய் நிலம்புக்
    காற்றலி னகழத் தோற்றாது நிமிர்ந்து
    பத்தி யடியவர் பச்சிலை யிடினு
    முத்தி கொடுத்து முன்னின் றருளித்
    திகழ்ந்துள தொருபாற் றிருவடி யகஞ்சேந்து
    மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
    நெய்யிற் றோய்த்த செவ்வித் தாகி
    நூபுரங் கிடப்பினு நொந்து தேவர்
    மடவரன் மகளிர் வணங்குபு வீழ்த்த
    சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
    பஞ்சியு மனிச்சமு மெஞ்ச வெஞ்சாத்
    திருவொடும் பொலியு மொருபாற் றிருவடி
    நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
    தோலின் கலிங்க மேல்விரித் தசைத்து
    நச்செயிற் றரவக் கச்சையாப் புறுத்துப்
    பொலிந்துள தொருபாற் றிருவிடை யிலங்கொளி
    யரத்த வாடை விரித்து மீதுறீஇ
    யிரங்குமணி மேகலை யொருங்குடன் சாத்திய
    மருங்கிற் றாகு மொருபாற் றிருவிடை
    செங்க ணரவும் பைங்க ணாமையுங்
    கேழற் கோடும் வீழ்திர ளக்கு
    நுடங்கு நூலு மிடங்கொண்டு புனைந்து
    தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன
    வொளியுடன் றிகழு மொருபா லாகம்
    வாரும் வடமு மேர்பெறப் புனைந்து
    செஞ்சாந் தணிந்து குங்கும மெழுதிப்
    பொற்றா மரையின் முற்றா முகிழென
    வுலகே ழீன்று நிலையிற் றளரா
    முலையுடன் பொலியு மொருபா லாக
    மயில்வா யரவம் வயின்வயி னணிந்து
    மூவிலை வேலும் பூவாய் மழுவுந்
    தமருகப் பறையு [1] மமர் தரத் தாங்கிச்
    சிறந்துள தொருபாற் றிருக்கரஞ் செறிந்த
    சூடகம் விளங்கிய வாடகக் கழங்குட
    னொம்மென் பந்து மம்மென் கிள்ளையுந்
    தரித்தே திகழு மொருபாற் றிருக்கர
    மிரவியு மெரியும் விரவிய வெம்மையி
    னொருபால் விளங்குந் திருநெடு நாட்ட
    நவ்வி மானின் செவ்வித் தாகிப்
    பாலிற் கிடந்த நீலம் போன்று
    குண்டுநீர்க் குவளையிற் குளிர்ந்து நிறம்பயின்
    றெம்மனோர்க் கடுத்த [2]மம்மர்க் கிரங்கி
    யுலகேழ் புரக்கு மொருபா னாட்ட
    நொச்சிப் பூவும் பச்சை மத்தமுங்
    கொன்றைப் போது மென்றுணர்த் தும்பையுங்
    கங்கையாறும் பைங்கட் டலையு
    மரவு மதியமும் விரவித் [3] தொடுத்துச்
    சூட மாலை சூடிப்f பீடுகெழு
    நெருப்பிற் றிரித்தனைய வுருக்கிளர் சடில்மொடு
    நான்முகங் சுரந்த பானிற வன்னங்
    காணா வண்ணங் கருத்தையுங் கடந்து
    சேணிகந் துளதே யொருபாற் றிருமுடி
    பேணிய
    கடவுட் கற்பின் மடவரன் மகளிற்
    கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
    கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை
    நீலக் குழன்மிசை வளைஇ மேனிவந்து
    வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்
    திருவுடன் பொலியு மொருபாற் றிருமுடி
    யினைய வண்ணத்து நினைவருங் காட்சி
    யிருவயி னுருவு மொருவயிற் றாகி
    வலப்பா னாட்ட மிடப்பா னோக்க
    வாணுதல் பாக நாணுதல் செய்ய
    வலப்பாற் றிருக்கர மிடப்பால் வனமுலை
    தைவந்து வருட மெய்ம்மயிர் பொத்தாங்
    குலக மேழும் பன்முறை யீன்று
    மருதிடங் கொண்ட வொருதனிக் கடவுணின்
    றிருவடி பரவுதும் யாமே நெடுநா
    ளிறந்தும் பிறந்து மிளைத்தன மறந்துஞ்
    சிறைக் கருப் பாசயஞ் சேரா
    மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
    -----
    [1] இனையனதாங்கி எனவும் பாடம்.
    [2] வெம்மைநோய்க்கிரங்கி எனவும் பாடம்.
    [3] தொடுத்த என்றும் பாடம். 1

    நேரிசைவெண்பா

    பொருளுங் குலனும் புகழுந் திறனு
    மருளு மறிவு மனைத்து - மொருவர்
    கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை
    மருதாவென் பார்க்கு வரும். 2

    கட்டளைக்கலித்துறை

    வருந்தே னிறந்தும் பிறந்து மயக்கும் புலன்வழிபோய்ப்
    பொருந்தே னாகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற்
    பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றி லாசையின்றி
    யிருந்தே னினிச்சென் றிரவே னொருவரை யாதொன்றுமே. 3

    நேரிசையாசிரியப்பா

    ஒன்றினோ டொன்று சென்றுமுகி றடவி
    யாடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
    தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
    வோவநூற் செம்மைப் பூவியல் வீதி
    குயிலென மொழியு மயிலியற் சாயன்
    மான்மாற விழிக்கு மானார் செல்வத்
    திடைமரு திடங்கொண் டிருந்த வெந்தை
    சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றா
    லாரணந் தொடராப் பூரண புராண
    நாரண னறியாக் காரணக் கடவுள்
    சோதிச் சுடரொளீ யாதித் தனிப்பொரு
    ளேக நாயக யோக நாயக
    யானொன் றுணர்த்துவ துளதே யான்முன்
    னனந்தலை யுலகத் தனந்த யோனியிற்
    பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழீஇத்
    தோற்றும் பொழுதி னீற்றூத் துன்பத்
    தியாயுறு துயரமு மியானுறு துயரமு
    மிறக்கும் பொழுதி னறப்பெறுந் துன்பமு
    நீயல தறிகுநர் யாரே யதனால்
    யானினிப் பிறத்த லாற்றே னஃதான்
    றுற்பவந் துடைத்த னிற்பிடித் தல்லது
    பிறிதொரு நெறியி னில்லையந் நெறிக்கு
    வேண்டலும் வெறுத்தலு மாண்டொன்றிற் படரா
    வுள்ளமொன் றுடைமை வேண்டு மஃதன்றி
    யைம்புல னேவ லாணைவழி நின்று
    தானல தொன்றைத் தானென நினையு
    மிதுவென துள்ள மாதலி னிதுகொடு
    நின்னை நினைப்ப தெங்ஙன முன்னங்
    கற்புணை யாகக் கடனீர் நீந்தின
    ரெற்பிற ருளரோ விறைவ கற்பங்
    கடத்தல் யான்பெறவும் வேண்டுங் கடத்தற்கு
    நினைத்தல் யான்பெறவும் வேண்டு் நினைத்தற்கு
    நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டு நஞ்சுபொதி
    யுறை யெயிற் றுரகம் பூண்ட
    கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே. 4

    நேரிசைவெண்பா.

    கண்ணென்று நந்தமக்கோர் காப்பென்றுங் கற்றிருக்கு
    மெண்ணென்று மூல வெழுத்தென்று - மொண்ணை
    மருதவப்பா வென்றுமுனை வாழ்த்தாரேன் மற்றுங்
    கருதவப்பா லுண்டோ கதி. 5

    கட்டளைக்கலித்துறை.

    கதியாவது பிறி தியாதொன்று மில்லை களேபரத்தின்
    பொதியாவது சுமந்தால் விழப் போமிது போனபின்னர்
    விதியா மெனச்சிலர் நோவதல்லா லிதை வேண்டுநர்யார்
    மதியாவது மருதன் கழலே சென்று வாழ்த்துவதே. 6

    இணைக்குறளாசிரியப்பா.

    வாழ்ந்தன மென்று தாழ்ந்தவர்க் குதவாது
    தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா
    துண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி
    யவியடு நர்க்குச் சுவைபல பகர்ந்தே
    யாரே வுண்டி யயின்றன ராகித்
    தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
    விழுப்பமுங் குலனு மொழுக்கமுங் கல்வியுந்
    தன்னிற் சிறந்த நன்மூ தாளாரைக்
    கூஉய்முன் னின்றுதன் னேவல் கேட்குஞ்
    சிறாஅர்த் தொகுதியி னுறாஅப் பேசியும்
    பொய்யோடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்று
    மெய்யு மானமு மேன்மையு மொரீஇத்
    தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
    நன்மனைக் கிழத்தி யாகிய வந்நிலைச்
    [4] சாவுழிச் சாஅந் தகைய ளாயினு
    மேவுழி மேவல் செல்லாது காவலொடு
    கொண்டோ ளொருத்தி யுண்டி வேட்டிருப்ப
    வெள்ளுக் கெண்ணை போலத் தள்ளாது
    பொருளி னளவைக்குப் [5] போகம்விற் றுண்ணு
    மருளின் மடந்தைய ராகந் தோய்ந்து
    மாற்றல் செல்லாது வேற்றோர் மனைவயிற்
    கற்புடை மடந்தையர் பொற்பு நனிகேட்டுப்
    பிழைவழி பாராது நுழைவழி நோக்கியு
    நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
    விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியி
    னகமலர்ந் தீவார் போல முகமலர்ந்
    தினிது மொழிந்தாங் குதவுத லின்றி
    நாளு நாளு [6] நாள்பல கழித்தவர்
    தாளி னாற்றலுந் தவிர்த்துக் கேளிகழ்ந்
    திகமும் பரமு மில்லை யென்று
    பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி
    மின்னி னனையதன் செல்வத்தை விரும்பித்
    தன்னையு மொருவ ராக வுன்னு
    மேனையோர் வாழ்வும் வாழ்க்கையு நனைமலர்ந்
    தியோசனை கமழு முற்பல வாவியிற்
    பாசடைப் பரப்பிற் பானிற வன்னம்
    பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
    போர்த்தொழில் புரியும் பொருகா விரியு
    மருதமுஞ் சூழ்ந்த மருத வாண
    சுருதியுந் தொடராச் சுருதி நாயக
    பத்தருக் கெய்ப்பில் வைப்பென வுதவு
    முத்தித் தாள மூவா முதல்வநின்
    றிருவடி பிடித்து வெருவரல் விட்டு
    மக்களு மனைவியு மொக்கலுந் திருவும்
    பொருளென நினையா துன்னருளினை நினைந்
    திந்திரச் செல்வமு மெட்டுச் சித்தியும்
    வந்துழி வந்துழி மறுத்தன ரொதுங்கிச்
    சின்னச் சீரை துன்னற் கோவண
    மறுதற் கீளொடு பெறுவது புனைந்து
    [7] சிதவ லோடொன் றுதவுழி யெடுத்தாங்
    கிடுவோ ருளரெனி னிலையினின் றயின்று
    படுதரைப் பாயலிற் பள்ளி மேவி
    யோவாத் தகவெனு மரிவையைத் தழீஇ
    மகவெனப் பல்லுயி ரனைத்தையு மொக்கப்
    பார்க்குநின்
    செல்வக் கடவுட் டொண்டர் வாழ்வும்
    பற்றிப் பார்க்கி னுற்ற நாயேற்குக்
    குளப்படி நீரு மளப்பருந் தன்மைப்
    பிரளயச் சலதியு [8] மிருவகைப் பொருளு
    மொப்பினு மொவ்வாத் துப்பிற் றாதலி
    னின்சீ ரடியார் தஞ்சீ ரடியார்க்
    கடிமை பூண்டு நெடுநாட் பழகி
    முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர்
    காற்றலை யேவ லென்னாய்த்தலை யேற்றுக்
    கண்டது காணி னல்ல தொன்
    றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே. ----
    [5] போகம்விற் றெழுகு மென்றும் பாடம். [6] நாள்பல குறித்தவர் என்றும் பாடம்.
    [7] சிதவல் - பழுதுபட்ட
    [8] மிருவயிற்பேதமும் எனவும் பாடம். 7

    நேரிசைவெண்பா

    பிறிந்தே னரகம் பிறவாத வண்ண
    மறிந்தே னனங்கவே ளம்பிற் - செறிந்த
    பொருதவட்ட விற்பிழைத்துப் போந்தேன் புராணன்
    மருதவட்டந் தன்னுளே வந்து. 8

    கட்டளைக்கலித்துறை

    வந்திக்கண்டா யடியாரைக் கண்டான் மறவாது நெஞ்சே
    சிந்திக்கண்டா யரன் செம்பொற் [9] கழற்றிரு மாமருதைச்
    சந்திக்கண்டா யில்லையாயி னமன்றமர் தாங் கொடுபோ
    யுந்திக்கண்டாய் நிரையத் துன்னை வீழ்த்தி யுழக்குவரே. 9

    இணைக்குறளாசிரியப்பா.

    உழப்பின் வாரா வுறுதிக ளுளவோ
    கழப்பின் வாராக் கையற வுளவோ
    அதனால்
    நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
    வேரற வகழ்ந்து போக்கித் தூர்வைசெய்
    தன்பென் பாத்தி கோலி முன்புற
    மெய்யெனு மெருவை விரிந்தாங் கையமில்
    பத்தித் தனிவித் திட்டு நித்தலு
    மார்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று
    தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்
    பட்டி யஞ்சினுக் கஞ்சி யுட்சென்று
    சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
    ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
    கருணை யிளந்தளிர் காட்ட வருகாக்
    காமக் குரோதக் களையறக் களைந்து
    சேமப் படுத்துழிச் செம்மையி னோங்கி
    மெய்ம்மயிர் புளக முகிழ்த்திட் தம்மெனக்
    கண்ணீ ரரும்பிக் கடிமலர் மலர்ந்து
    புண்ணிய
    வஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி
    காள கண்டமுங் கண்ணொரு மூன்றுந்
    [10] தோ ளிருநான்குஞ் சுடர்முக மைந்தும்
    பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
    யறுசுவை யதனினு முறுசுவை யுடைத்தாய்க்
    காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதருஞ்
    சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
    பையப் பையப் பழுத்துக் கைவர
    வெம் மனோர்க ளினிதினி தருந்திச்
    செம்மாந் திருப்பச் சிலரிதின் வராது
    மனமெனும் புனத்தை வறும் பாழாக்கிக்
    காமக் காடு மூடித் தீமைசெய்
    யைம்புல வேட ராறலைத் தொழுக
    வின்பப் பேய்த்தே ரெட்டா தோடக்
    கல்லா வுணர்வெனும் புல்வா யலமா
    விச்சைவித் துதிர்த்துழி யானெனப் பெயரிய
    நச்சு மாமர நனிமிக முளைத்துப்
    பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும்
    பாவப் பஃறழை பரப்பிப் பூவெனக்
    கொடுமை யரும்பிக் கடுமை மலர்ந்து
    துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு
    மரணம் பழுத்து நாகிடை வீழ்ந்து
    தமக்கும் பிறர்க்கு முதவா
    திமைப்பிற் கழியு மியற்கையோ ருடைத்தே.
    ---
    [9] கழறிரு என்றும் பாடம்.
    [10] தோளொருநான்கு மென்றும் பாடம். 10

    நேரிசைவெண்பா.

    உடைமணியி லோசைக் கொதுங்கி யரவம்
    படமொடுங்கப் பையவே சென்றங் - கிடைமருத
    ரையம் புகுவ தணியிழையார்மே லனங்கன்
    கையம்புக வேண்டிக் காண். 11

    கட்டளைக்கலித்துறை.

    காணீர் கதியொன்றுங் கல்லீ ரெழுத்தஞ்சும் வல்லவண்ணம்
    பேணீர் திருப்பணி பேசீ ரவன்புக ழாசைப்பட்டுப்
    பூணீ ருருத்திர சாதன நீறெங்கும் பூசுகிலீர்
    வீணீ ரெளிதோ மருதப் பிரான்கழன் மேவுதற்கே. 12

    இணைக்குறளாசிரியப்பா.

    மேவிய புன்மயிர்த் தொகையோ வம்மயிர்
    பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
    புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
    யூறு முதிரப் புனலோ கூறுசெய்
    திடையிடை நிற்கு மெலும்போ வெலும்பிடை
    முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்
    துள்ளிடை யொழுகும் வழும்போ மெள்ளநின்
    றூரும் புழுவு னொழுங்கோ நீரிடை
    வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
    கட்டிய நரம்பின் கயிறோ வுடம்பிற்குட்
    பிரியா தொறுக்கும் பிணியோ [11] தெரிதரல்
    இன்ன தியானென் றறியே னென்னை
    யேதினுந் தேடினன் யாதினுங் காணேன்
    முன்னம்
    வரைத்தனி வில்லாற் புரத்தை யழலூட்டிக்
    கண்படை யாகக் காமனை யொருநா
    ணுண்பொடி யாக நோக்கி யண்டத்து
    வீயா வமரர் வீயவந் தெழுந்த
    தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
    யிருவர் தேடி வெருவா நிமிர்ந்து
    பாலனுக் காகக் காலனைக் காய்ந்து
    சந்தன [12] சரள சண்பக வகுள
    நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
    நவமணி முகிழ்த்த புதுவெயி லெறிப்ப
    வெண்ணருங் கோடி யிருடி கணங் கட்குப்
    புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
    திருவிடை மருத பொருவிடைப் பாக
    மங்கை பங்க கங்கைநாயக நின்
    றெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
    மாயப் படலங் கீறித் தூய
    ஞான நாட்டம் பெற்றனன் பெற்றபின்
    னின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலு
    மென்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டே
    னின்னிலை யனைத்தினுங் கண்டே னென்னை
    நின்னைக் காணா மாந்தர்
    தன்னையுங் காணாத் தன்மை யோரே.
    ---
    [11] தெரியாதின்ன என்றும் பாடம்.
    [12] சரளம் என்றது ஒழுங்கு ஓர்மரமென்பாருமுளர். 13

    நேரிசைவெண்பா

    ஓராதே யஞ்செழுத்து முன்னாதே பச்சிலையு
    நேராதே நீரு நிரப்பாதே - யாராயோ
    வெண்ணுவா ருள்ளத் திடைமருதர் பொற்பாத
    நண்ணுவா மென்னு மதுநாம். 14

    கட்டளைக்கலித்துறை.

    நாமே யிடையுள்ள வாறறிவாமினி நாங்கள் சொல்ல
    லாமே மருதன் மருதவனத் தன்ன மன்னவரைப்
    பூமேலணிந்து பிழைக்கச்செய் தாரொரு பொட்டு மிட்டார்
    தாமே தளர்பவரைப் பாரமேற்றுத றக்க தன்றே. 15

    நேரிசையாசிரியப்பா.

    அன்றினர் புரங்க ளழலிடை யவியக்
    குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றவ
    நுண்பொடி யணிந்த வெண்டோட் செல்வ
    கயிலைநடந் தனைய வுயர்நிலை நோன்றாட்
    பிறைசெறித் தன்ன விருகோட் டொருதிமிற்
    பானிறச் செங்கண் மாலவிடைப் பாக
    [13] சிமயச் செங்கோட் டிமயச் செல்வன்
    மணியெனப் பெற்ற வணியிய லன்னம்
    வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
    குயிலெனப் பேசு மயிலிளம் பேடை
    கதிரொளி நீலங் கமலத்து மலர்ந்தன
    மதரரி நெடுங்கண் மானின் கன்று
    [14] வருமுலை தாங்குந் திருமார்பு வல்லி
    வைய மேழும் பன்முறை யீன்ற
    வைய திருவயிற் றம்மை பிராட்டி
    மறப்பருஞ் செய்கை யறப்பெருஞ் செல்வி
    யெமையா ளுடைய வுமையா ணங்கை
    கடவுட் கற்பின் மடவால் கொழுந
    பவள மால்வரைப் பனைக்கைபோந் தனைய
    தழைசெவி யெண்டோட் டலைவன் றந்தை
    பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
    மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வே
    லமரர்த் தாங்குங் குமரன் றாதை
    பொருதிடங் கொண்ட மருத வாண
    நின்னது குற்ற முளதோ நின்னினைந்
    தெண்ணருங் கோடி யிடர்ப்பகை களைந்து
    கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
    விறப்பையும் பிறப்பையு மிகழ்ந்து சிறப்பொடு
    தேவ ராவின் கன்றெனத் திரியாப்
    பாவிக டமதே பாவம் யாதெனின்
    முறியாப் புழுக்கன் முப்பழங் கலந்த
    வறுசுவை யடிசி லட்டினி திருப்பப்
    புசியா தொருவன் பசியால் வருந்துத
    லயினியின் குற்ற மன்று வெயிலின்வைத்
    தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
    மடாஅ வொருவன் விடாஅ வேட்கை
    தெண்ணீர்க் குற்ற மன்று கண்ணகன்று
    தேன்றுளி சிதறிப் பூந்துணர் துறுமி
    வாலுகங் கிடந்த சோலை கிடப்ப
    வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
    வடி பெயர்த் திடுவா னொருவ
    னெடிது வருந்துத னிழற்றீங் கன்றே.
    ---
    [13] சிமையச்செங்கோட்டிமையச்செல்வன் - என்றும் பாடம்.
    [14] வரிமுலை-என்றும் பாடம். 16

    நேரிசைவெண்பா

    அன்றென்று மாமென்று மாறு சமயங்க
    ளொன்றொன்றோ டொவ்வா துரைத்தாலு - மென்று
    மொருதனையே நோக்குவா ருள்ளத் திருக்கு
    மருதனையே நோக்கி வரும். 17

    கட்டளைக்கலித்துறை.

    நோக்கிற்றுக் காம னுடல் பொடியாக நுதிவிரலாற்
    றாக்கிற் றரக்கன் றலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவா
    ளோக்கிற்றுத் தக்கன் றலையுருண் டோடச் சலந்தரனைப்
    போக்கிற் றுயிர் பொன்னிசூழ் மருதாளுடைப் புண்ணியமே. 18

    நேரிசையாசிரியப்பா.

    புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
    கண்ணி வேய்ந்த கைலை நாயக
    காள கண்ட கந்தனைப் பயந்த
    வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
    பூத நாத பொருவிடைப் பாக
    வேத கீத விண்ணோர் தலைவ
    முத்தி நாயக மூவா முதல்வ
    பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு
    நொச்சி யாயினுங் கரந்தை யாயினும்
    பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர்
    கருவிடைப் புகாமற் காத்தருள் புரியுந்
    திருவிடை மருத திரி புராந்தக
    மலர்தலை யுலகத்துப் பலபல மாக்கண்
    மக்களை மனைவியை யொக்கலை யொரீஇ
    மனையும் பிறவுந் துறந்து நினைவருங்
    காடு மலையும் புக்குக் கோடையிற்
    கைம்மே னிமிர்த்துக் காலொன்று முடக்கி
    யைவகை நெருப்பி னழுவத்து நின்று
    மாரி நாளிலும் வார்பனி நாளிலு
    நீரிடை மூழ்கி நெடிது கிடந்துஞ்
    சடையைப் புனைந்துந் தலையைப் பறித்து
    முடையைத் துறந்து முண்ணா துழன்றுங்
    காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும்
    வாயுவு நீரும் வந்தன வருந்தியுங்
    களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டுந்
    தளர்வுறு மியாக்கையைத் தளர்வித் தாங்கவ
    ரம்மை முத்தி யடைவதற் காகத்
    தம்மைத் தாமே சாலவு மொறுப்ப
    ரீங்கிளை செய்யா தியாங்க ளெல்லாம்
    பழுதின் றுயர்ந்த வெழுநிலை மாடத்துஞ்
    செந்தா துதிர்ந்த நந்தா வனத்துந்
    தென்ற லியங்கு முன்றி லகத்துந்
    தாண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
    பூவிரி தாங்க வாவிக் கரையிலு
    மயிற் பெடையாலக் குயிற்றிய குன்றிலும்
    வேண்டுழி வேண்டுழி யாண்டாண் டிட்ட
    மருப்பி னியன்ற வாளரி சுமந்த
    விருப்புறு கட்டின் மீமிசைப் படுத்த
    வைவகை யமளி யணைமேற் பொங்கத்
    தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
    பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சி
    னெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
    [15] பாயன் மீது பரிபுர மிழற்றச்
    சாயலன் னத்தின் றளர்நடை பயிற்றிப்
    பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென
    வம்மென் குறங்கி னொம்மென் கலிங்கங்
    கண்ணு மனமுங் கவற்றிப் பண்வர
    [16] விரங்குமணி மேகலை யொருங்குடன் கிடந்த
    வாடர வல்கு லரும்பெற னுசுப்பு
    வாட வீங்கிய வனமுலை கதிப்ப
    வணியியல் கமுகை யலங்கரித் ததுபோன்
    மணியிய லாரங் கதிர்விரித் தொளிர்தர
    மணிவளை தாங்கு மணிகெழு மென்றோள்
    வரித்த சாந்தின் மிசைவிரித் திட்ட
    வுத்தரி யப்பட் டொருபா லொளிதர
    வள்ளை வாட்டிய வொள்ளிரு காதொடு
    பவளத் தருகாத் தரள நிரைத்தாங்
    கொழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
    காலன் வேலுங் காம பாணமு
    மால காலமு மனைத்துமிட் டமைத்த
    விரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்த
    மதியென மாசறு வதனம் விளங்கப்
    புதுவிரை யலங்கல் குழன்மிசைப் பொலிய
    மஞ்சொன் மடந்தைய ராகந் தோய்ந்துஞ்
    சின்னம் பரப்பிய பொன்னின் கலத்து
    மறுசுவை யடிசில் வறிதிருந் தருந்தா
    தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
    வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
    பூசுவன பூசியும் புனைவன புனைந்துந்
    தூசி னல்லன தொடையிற் சேர்த்தியு
    மைந்து புலன்களு மார வார்ந்து
    மைந்தரு மொக்கலு மனமகிழ்ந் தோங்கி
    யிவ்வகை யிருந்தோ மாயினு மவ்வகை
    மந்திரவெழுத் தைந்தும் வாயிடை மறவாது
    சிந்தை நின்வழி செலுத்தலி னந்த
    முத்தியு மிழந்தில முதல்வ வத்திற
    நின்னது பெருமை யன்றோ வென்னின்
    வல்லா னொருவன் கைம்முயன் றெறியினு
    மாட்டா வொருவன் வாளா வெறியினு
    நிலத்தின் வழாஅக் கல்லே போ
    னலத்தின் வழார் நின் னாமநவின்றோரே
    ---
    [15] பாயன்மீமிசைப் பரிபுரமிழற்ற என்றும் பாடம்.
    [16] விரங்குமணி மேகலை மருங்கிற்கிடப்ப என்றும் பாடம். 19

    நேரிசைவெண்பா.

    நாமநவிற்றாய் மனனே நாரியர்க டோடோய்ந்து
    காம நவிற்றிக் கழிந்தொழிய - லாமோ
    பொருதவனத் தானையுரி போர்த்தருளு மெங்கண்
    மருத வனத்தானை வளைந்து. 20

    கட்டளைக்கலித்துறை.

    வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனனம்புக்
    கிளையார் தனங்கண் டிரங்கி நில்லா ரிப்பிறப்பினில்வந்
    தளையார் நரகினுக் கென்கடவார் பொன்னலர்ந்த கொன்றைத்
    தளையா னிடைமருதன் னடியா ரடி சார்ந்தவரே. 21

    நேரிசையாசிரியப்பா.

    அடிசார்ந் தவர்க்கு முடியா வின்ப
    நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வ
    மூலமு நடுவு முடிவு மின்றிக்
    கால மூன்றுங் கடந்த கடவு
    ளுளக்கணுக் கல்லா தூன் கணுக்கொளித்துத்
    துளக்கற நிமிர்ந்த [17] சோதிச் சுடரொளி
    யெறுப்புத் துளையி னிருசெவிக் கெட்டா
    துறுப்பினின் றெழுதரு முள்ளத் தோசை
    வைத்த நாவின் வழிமறித் தகத்தே
    தித்தித் தூறுந் தெய்வத் தேற
    றுண்டத் துளையிற் பண்டைவழி யன்றி
    யறிவி னாறு நறிய நாற்ற
    மேனைய தன்மையு மெய்தா தெவற்றையுந்
    தானே யாகி நின்ற [18] தற்பர
    தோற்றுவ தெல்லாந் தன்னிடைத் தோற்றித்
    தோற்றம் பிறிதிற் றோற்றாச் சுடர்முளை
    விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினு
    மிருள்விரி கண்டத் தேக நாயக
    சுருதியு மிருவருந் தொடர்ந்து நின்றலமர
    மருதிடங் கொண்ட மருத மாணிக்க
    வுமையாள் கொழுந வொருமூன் றாகிய
    விமையா நாட்டத் தென்றனி நாயக
    வடியே னுறுகுறை முனியாது கேண்மதி
    நின்னடி பணியாக் கன்மனக் கயவரொடு
    நெடுநாட் பழகிய கொடுவினை யீர்ப்பக்
    கருப்பா சயமெனு மிருட்சிறை யறையிற்
    குடரென் சங்கிலி பூண்டு தொடர்ப்பட்டுக்
    கூட்டுச் சிறைப்புழுவி னீட்டுமலத் தழுந்தி
    யுடனே வருந்தி நெடுநாட் கிடந்து
    பல்பிணிப் பெயற்பெற் றல்லற் படுத்துந்
    தண்டனாளர் மிண்டி வந் தலைப்ப
    வுதரநெருப்பிற் பதை பதை பதைத்தும்
    வாதமத் திகையின் மோத மொத்துண்டுங்
    கிடத்த னிற்ற னடத்தல் செல்லா
    திடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழிப்
    பாவப் பகுதியி லிட்டுக் காவற்
    கொடியோ ரைவரை யேவி நெடிய
    வாசைத் தளையி லென்னையு முடலையும்
    பாசப் படுத்திப் பையென விட்டபின்
    யானும் போந்து தீதினுக் குழன்றும்
    பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும்
    [19] பரியா தொழிந்தும் பல்லுயிர் செகுத்தும்
    வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
    பொய்பல கூறியும் புல்லினம் புல்லியு
    மைவருங் கடுப்ப வவாவது கூட்டி
    யீண்டின கொண்டு மீண்டு வந்துழி
    யிட்டுழி யிடாது பட்டுழிப் படாஅ
    திந்நா ளிடுக்க ணெய்திப் பன்னாள்
    வாடுபு கிடப்பேன் வீடு நெறிகாணே
    னின்னை யடைந்த வடியா ரடியார்க்
    கென்னையு மடிமை யாகக் கொண்டே
    யிட்ட பச்சிலைகொண் டொட்டி யறிவித்
    திச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமற்
    காத்தருள் செய்ய வேண்டுந்
    தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே.
    ---
    [17] சோதிதனிச்சுடர் என்றும் பாடம்.
    [18] தத்துவ என்றும் பாடம்.
    [19] பசியாலுழன்றும் என்றும் பாடம். 22

    நேரிசைவெண்பா.

    சடைமே லொருத்தி சமைந்திருப்ப மேனிப்
    புடைமே லொருத்தி பொலிய - [20] விடையேபோய்
    சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப
    தெங்கே யிருக்க விவிவள்.
    ----
    [20] இடைப்புகு என்றும் பாடம். 23

    கட்டளைக்கலித்துறை.

    இருக்கு மருதினுக் குள் ளிமையோர்களு நான்மறையு
    நெருக்கு நெருக்கத்து [21] நீளகத்திற் சென்று மீளவொட்டாத்
    திருக்குமறுத் தைவர் தீமையுந் தீர்த்துச் செவ்வேமனத்தை
    யொருக்கு மொருக்கத்தி னுள்ளே முளைக்கின்ற வொண்சுடரே.
    ----
    [21] நீளகத்துச்சென்று என்றும் பாடம். 24

    நேரிசையாசிரியப்பா.

    சுடர்விடு [22] சூல மேந்தினை யென்றும்
    விடையுகந் தேறிய விமல வென்று
    முண்ணா நஞ்ச முண்டனை யென்றுங்
    கண்ணாற் காமனைக் காய்ந்தனை யென்றுந்
    திரிபுர மெரித்த சேவக வென்றுங்
    கரியுரி போர்த்த கடவு ளென்று
    முரகம் பூண்ட வுரவோ யென்றுஞ்
    சிரகஞ் செந்தழ லேந்தினை யென்றும்
    வலந்தரு காலனை வதைத்தனை யென்றுஞ்
    சலந்தர னுடலந் தடிந்தனை யென்றும்
    வியந்தவா ளரக்கனை மிதித்தனை யென்றும்
    தக்கன் வேள்வி தகர்த்தனை யென்று
    முக்கிரப் புலியுரி யுடுத்தனை யென்று
    மேனமு மன்னமு மெட்டா தலமர
    வானங் கீழ்ப்பட வளர்ந்தனை யென்றுஞ்
    செழுநீர் ஞாலஞ் செகுத்துயி ருண்ணு
    மழல்விழிக் குறளை யமுக்கினை யென்று
    மினையன லினையன வெண்ணில் கோடி
    நினைவருங் கீர்த்தி நின்வயிற் புகழ்த
    றுளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலி
    னளப்பரும் பெருமைநின் னளவல தாயினு
    [23]மொன்றி னேயாப் புன்மொழி கொண்டு
    நின்னை நோக்குவ னாதலி னென்னை
    யிடுக்கண் களையா வல்லற் படுத்தா
    தெழுநிலை மாடத்துச் செழுமுகி லுறங்க
    வடித்துத் தட்டி யெழுப்புவ போல
    நுண்டுகிற் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்
    துயிலி னீங்கிப் பயிலும் வீதித்
    திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுட
    ரருள்சுரந் தளிக்கு மற்புதக் கூத்த
    கல்லா னெறிந்த பொல்லாப் புத்த
    னின் னினைந் தெறிந்த வதனா
    லன்னவன் றனக்கு மருள்பிழைத் தின்றே
    ---
    [22] சூலப் படையனே யென்று பாடம்.
    [23] என்றன்வாயிற் புன்மொழி என்றும் பாடம். 25

    நேரிசைவெண்பா

    இன்றிருந்து நாளை யிறக்குந் தொழிலுடைய
    புன்றலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு
    வாளுடையான் றெய்வ மருதுடையா னாயேனை
    யாளுடையான் செம்பொ னடி. 26

    கட்டளைக்கலித்துறை

    அடியாயிரந் தொழிலாயிர வாயிர மாயிரம் [24]பேர்
    முடியாயிரங் கண்கண் மூவாயிர முற்று நீறணிந்த
    தொடியாயிரங் கொண்ட தோளிரண்டாயிர மென்று நெஞ்சே
    படியா யிராப்பகற் றென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே.
    --
    [24] பேர் என்றது பெயரென்றும் பாடம். 27

    இணைக்குறளாசிரியப்பா.

    கொண்டலி னிருண்ட கண்டத் தெண்டோட்
    செவ்வா னுருவிற் பையர வார்த்துச்
    சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை
    மூவா முதல்வ முக்கட் செல்வ
    தேவ தேவ திருவிடை மருத
    மாசறு சிறப்பின் வானவ ராடும்
    பூசத்தீர்த்தம் புரக்கும் பொன்னி
    யயிரா வணத்துறையாடு மப்ப
    கைலாய வாண கௌரி நாயக
    [25] நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து
    பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோ
    ரிமையா நெடுங்க ணுமையா ணங்கையு
    மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையு
    மமரர்த் தாங்குங் குமர வேளுஞ்
    சுரிசங் கேந்திய திருநெடு மாலும்
    வரன்முறை படைத்த நான்முகத் தொருவனுந்
    தாருகற் செற்ற வீரக் கன்னியும்
    நாவின் கிழத்தியு பூவின் மடந்தையும்
    பீடுயர் தோற்றத்துக் கோடி யுருத்திரரு
    மானாப் பெருந்திறல் வானோர் தலைவனுஞ்
    செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும்
    வாம்பரி யருக்கர் தாம்பன் னிருவருஞ்
    சந்திர னொருவனுஞ் செந்தீக் கடவுளு
    நிருதியுஞ் சமனுஞ் சுருதிக ணான்கும்
    வருணனும் வாயுவு மிருநிதிக் கிழவனு
    மெட்டு நரகமு மட்ட வசுக்களு
    மூன்று கோடி யான்ற முனிவரும்
    வசிட்டனுங் கபிலனு மகத்தியன் றானுந்
    தும்புரு நாரத ரென்றிரு திறத்தரும்
    வித்தகப் பாடன் முத்திறத் தடியருந்
    திருந்திய வன்பிற் பெருந்துறைப் பிள்ளையு
    மத்தகு செல்வத் தவமதித் தருளிய
    சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
    வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
    கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்து
    மோடும் பன்னரி யூளைகேட் டரனைப்
    பாடின வென்று படாம்பல வளித்துங்
    குவளைப் புனலிற் றவளைய ரற்ற
    வீசன் றன்னை யேத்தின வென்று
    காசும் பொன்னுங் கலந்து தூவியும்
    வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய
    செழுவிதை யெள்ளைத் தின்னக் கண்டு
    பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்ன
    விடித்துக் கொண்டவ னெச்சிலை நுகர்ந்து
    மருத வட்டத் தொருதனிக் கிடந்த
    தலையைக் கண்டு தலையுற வணங்கி
    யும்மைப் போல வெம்மித் தலையுங்
    கிடக்க வேண்டுமென் றடுத்தடுத் திரந்துங்
    கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப
    வாய்த்த தென்று நாய்க்கட்ட மெடுத்துங்
    காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு
    வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும்
    விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
    புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த
    பெரிய வன்பின் வரகுண தேவரு
    மினைய தன்மைய [26] ரெண்ணிறந் தோர்க
    ளனைவரு நிற்க யானு மொருவன்
    பத்தி யென்பதோர் பாடு மின்றிச்
    சுத்த னாயினுந் தோன்றாக் கடையே
    னின்னை
    யிறைஞ்சில னாயினு மேத்தில னாயினும்
    வருந்தில னாயினும் வாழ்த்தில னாயினுங்
    கருதி யிருப்பன் கண்டாய் பெரும
    நின்னுல கனைத்து நன்மை தீமை
    யானவை நின்செய லாதலி
    னானே யமையு நலமில் வழிக்கே.
    ---
    [25] நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து எனவும் பாடம்.
    [26] எண்ணிறந் தோரே - யனையோர் நிற்க என்றும் பாடம். 28

    நேரிசைவெண்பா.

    வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
    பழிபிழைத்த பாவங்க ளெல்லாம் - பொழில்சூழ்
    மருதிடத்தா னென்றொருகால் வாய்கூப்ப வேண்டா
    கருதிடத்தா நில்லா கரந்து. 29

    கட்டளைக்கலித் துறை.

    கரத்தினன் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல
    வரத்தினை யீயு மருதவப்பா மதியொன்று மில்லேன்
    சிரத்திலுமா யென்றன் சிந்தையுளாகி வெண் காடனென்னு
    தரத்திலு மாயது நின்னடியாந் தெய்வத் தாமரையே. 30

    திருச்சிற்றம்பலம்.

    திருவிடைமருதூர் மும்மணிக்கோவை முற்றுப்பெற்றது.