ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை
4 திருவொற்றியூர்த்தொகை .
உ
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
ஆசிரியப்பா.
இருநிலமடந்தை யியல்பினினுடுத்த
பொருகடன்மேகலை முகமெனப்பொலிந்த
ஒற்றிமாநக ருடையோயுருவின்
பெற்றியொன்றாப் பெற்றோர்யாரே
[2]மின்னியமின்னின் பிறக்கநின்சடையே
மன்னியவண்டநின் சென்னியின்வடிவே
பாவகன்பரிதி பனிமதிதன்னொடு
மூவகைச்சுடருநின் னுதனேர்நாட்டம்
தன்னொளியாரந் தாராகணமே
விண்ணவர்முதலா வேறோரிடமாக்
கொண்டுறைவிசும்பே கோலநின்னாகம்
எண்டிசைதிண்டோ ளிருங்கடலுடையே
அணியுடையல்குலு மவனிமண்டலமே
மணிமுடிப்பாந்தணின் றாளினைவழக்கே
ஒழியாதோடிய மாருதமுயிர்ப்பே
வழுவாவோசை முழுதுநின்வாய்மொழி
வானவர்முதலா மன்னுயிர்பரந்த
ஊனமின்ஞானத் தொகுதிநின்னுணர்வே.
நெருங்கியவுலகினி னீர்மையுநிற்றலும்
சுருங்கலும் விரிதலுந் தோற்றநின்றொழிலே
அமைத்தலுமழித்தலு மாங்கதன்முயற்சியும்
இமைத்தலுவிழித்தலு மாகுநின்னியல்பே
என்றிவைமுதலா வியல்புடைவடிவினோ
டொன்றியதுப்புரு விருவகையாகி
முத்திறக்குணத்து நால்வகைப்பிறவி
அத்திறத்தைம்பொறி யறுவகைச்சமயமோ
டேழுலகாகி யெண்வகைமூர்த்தியோ
டுழிதோறுழி யெண்ணிறந்தோங்கி
எவ்வகையளவினிற் கூடிநின்
றவ்வகைப்பொருளுநீ யாகியவிடத்தே.
[1] ஒருபா வொருபதெனவுங் கூறுவர்
[2] மின்னினியங்கு நின்சடை எனவும் பாடம்.
1
இடத்துறைமாதரோ டீறுடம்பென்றும்
நடத்தினைநள்ளிரு ணவிற்றினையென்றும்
புலியதளென்பொடு புனைந்தோயென்றும்
பலிதிரிவாழ்க்கை பயின்றோயென்றும்
திருவமர்மாலொடு திசைமுகனென்றும்
அருவமுமுருவமு மானாயென்றும்
உளனேயென்று மிலனேயென்றும்
தளரானென்றுந் தளர்வோனென்றிம்
ஆதியென்று மசோகினனென்றும்
போதியிற்பொலிந்த புராணனென்றும்
இன்னவைமுதலாத் தாமறியளவையின்
மன்னியநூலுடன் பன்மையுண்மயங்கிப்
பிணங்குமாந்தர் பெற்றிமைநோக்கி
அணங்கியவவ்வவர்க்கவ் வவையாகியடை
பற்றிய பளிங்குப்போலும்
ஒற்றிமாநகருடை யோயுருவே.
2
உருவாமுலகுக் கொருவனாகிய
பெரியோய்வடிவின் பிறிதிங்கின்மையின்
எப்பொருளாயினு மீங்குளதாமெனின்
அப்பொருளுனக்கே யவயவமாதலின்
முன்னியமூவெயின் முழங்கெரியூட்டித்
தொன்னீர்வையகந் துயர்கெடச்சூழ்ந்ததும்
வேள்விமூர்த்திதன் றலையினைவிடுத்ததும்
நீள்விசும்பாளிதன் றோளினை நெரித்ததும்
ஓங்கியமறையோர் கொருமுகமொழித்ததும்
பூங்கணைவேளைப் பொடிபடவிழித்ததும்
திறல்கெடவரக்கனைத் திருவிரலுறுத்ததும்
குறைபடக்கூற்றினைக் குறிப்பினிலடர்த்ததும்
என்றிவைமுதலா வாள்வினையெல்லாம்
நின்றுழிச்செறிந்தவை நின்செயலாதலின்
உலவாத்தொல்புக ழொற்றியூர
பகர்வோர்நினக்கு வேறின்மைகண்டவர்
நிகழ்ச்சியினிகழி னல்லது
புகழ்ச்சியிற்படுப்பரோ பொருளுணர்ந்தோரே.
3
பொருளுணர்ந்தோங்கிய பூமகன்முதலா
இருடுணையாக்கையி லியங்குமன்னுயிர்
உருவினுமுணர்வினு முயர்வினும்பணியினும்
திருவினுந்திறலினுஞ் செய்தொழில்வகையினும்
வெவ்வேறாகி வினையொடும்பிரியா
தொவ்வாப்பன்மையுண் மற்றவரொழுக்கம்
மன்னியவேலையுள் வான்றிரைபோல
நின்னிடையெழுந்து நின்னிடையாகியும்
பெருகியுஞ்சுருங்கியும் பெயர்ந்துந்தோன்றியும்
விரவியும்வேறாய் நின்றனைவிளக்கம்
ஒவாத்தொல்புக ழொற்றியுர
மூவாமேனி மூதல்வநின்னருள்
பெற்றவரறியி னல்லது
மற்றவரறிவரோ நின்னிடைமயக்கே.
4
மயக்கமில்சொன்னீ யாயினுமற்றவை
துயக்கநின்றிற மறியாச்சூழலும்
உறையிடமுள்ள மாயினுமற்றது
கறைபடவாங்கே கரந்தகள்ளமும்
செய்வினையுலகினிற் செய்வோயெனினும்
அவ்வினைப்பயனீ யணுகாவணிமையும்
இனத்திடையின்பம் வேண்டினிற்பணிவோர்
மனத்திடைவாரி யாகி வனப்பும்
அன்பினடைந்தவர்க் கணிமையுமல்லவர்ச்
சேய்மையு நாடொறும்
என்பினையுருக்கு மியற்கையவாதலில்
கண்டவர்தமக்கே யுனுடல்கழிதல்
உண்டெனவுணர்ந்தென மொற்றியூர
மன்னியபெரும்புகழ் மாதவ
துன்னியசெஞ்சடைத் தூமதியோயே.
5
தூமதிசடைமிசைச் சூடுதறூநெறி
ஆமதியானென வமைத்தவாறே
அறனுருவாகிய வானேறேறுதல்
இறைவன்யானென வியற்றுமாறே
அதுவவளவனென நின்றமையார்க்கும்
பொதுநிலையானென வுணர்த்தியபொருளே
முக்கணனென்பது முத்தீவேள்வியில்
தொக்கதென்னிடை யென்பதோர்சுருக்கே
வேதமான்மறி யேந்துதன்மற்றதன்
நாதனானென நவிற்றுமாறே
மூவிலையொருதாட் சூலமேந்துதன்
மூவரும்யானென மொழிந்தவாறே
எண்வகைமூர்த்தி யென்பதிவ்வுலகினில்
உண்மையானென வுணர்த்தியவாறே
நிலநீர்தீவளி யகல்வானென்ரும்
உலவாத்தொல்புக ழுடையோயென்றும்
பொருளுநற்பூதப் படையோயென்றும்
தெருளநின்ருலகினிற் றெருட்டுமாறே
ஈங்கிவைமுதலா வண்ணமும்வடிவும்
ஓங்குநின்பெருமை யுணர்த்தவுமுணராத்
தற்கொலிமாந்தர் தம்மிடைப்பிறந்த
சொற்பொருள்வண்மையிற் சுழலுமாந்தர்க்
காதியாகிய வறுதொழிலாளர்
ஓதலோவா வொற்றியூர
சிறுவர்தஞ்செய்கையிற் படுத்து
முறுவலித்திருத்திநீ முகப்படுமளவே.
6
அளவினிலிறந்த பெருமையையாயினும்
எனதுளமகலா வொடுங்கிரிநின்றுளையே
மெய்யினையிறந்த மெய்யினையாயினும்
வையகமுழுதுநின் வடிவெனப்படுமே
கைவலத்திலைநீ யெனினுங்காதல்
செய்வோர்வேண்டுஞ் சிறப்பொழியாயே
சொல்லியவகையாற் றுணையலையாயினும்
நல்லுயிர்கூட்ட நாயகனீயே
எங்குமுள்ளோ யெனினும்வஞ்சனை
தங்கியவரைச் சார்விலைநீயே
அஃதான்று
பிறவாப்பிறவியை பெருகாப்பெருமையை
துறவாத்துறவியை தொடராத்தொடர்ச்சியை
நுகராநுகர்ச்சியை நுணுகாநுணுக்கினை
அகலாவகற்சியை யணுகாவணிமையை
செய்யாச்செய்கையை சிறவாச்சிறப்பினை
வெய்யைதணியை விழுமியைநொய்யை
செய்யைபசியை வெளியைகரியை
ஆக்குதியழித்தி யானபல்பொருள்
நீக்குதிதொகுத்தி நீங்குதியடைதி
ஏனையவாகிய வெண்ணில்பல்குணம்
நினைதொறுமயக்கு நீர்மையவாதலின்
ஒங்குகடலுடுத்த வொற்றியூர
ஈங்கிதுமொழிவார் தம்
சொன்னிலைசுருங்கினல்லது
நின்னியலறிவோர் யாரிருநிலத்தே.
7
நிலத்திடைப்பொறையா யவாவினினீண்டு
சொலத்தகுபெருமைத் தூராவாக்கை
மெய்வளியையொடு பித்தொன்றாக
ஐவகைனெடுங்காற் றாங்குடனடிப்ப
நரையெனுநுரையே நாடொறும்வெளுப்பத்
திரையுடைத்தோலே செழுந்திரையாகக்
கூடியகுருதி நீரினுணிறைந்து
மூடியவிரும லோசையின்முழங்கிச்
சுடுபசிவெகுளிச் சுறலினமெறியக்
குடரெனு[3] மாலாக் கூட்டம்வந்தொலிப்ப
ஊன்றடியெலும்பி னுட்டிடலடைந்து
தோன்றியபல்பிணிப் பின்னகஞ்சுழலக்
கால்கையினரம்பே கண்டமாக
மேதகுநிணமே மெய்ச்சாலாக
முழக்குடைத்துளையே முகங்களாக
வழுக்குடைமூக்கா றோதம்வந்தொலிப்ப
இப்பரிசியற்றிய வுடலிருங்கடலுட்
டுப்புரவென்னுஞ் சுழித்தலைப்பட்டிங்
காவாவென்னுநின் னருளினைப்பெற்றவர்
நாவாயாகிய நாதநின்பாத
முந்திச்சென்று முறைமையின்வணங்கிச்
சிந்தைக்கூம்பினைச் செவ்வியலிருத்தி
உருகிய்வார்வப் பாய்பூரித்துப்
பெருகியநிறையெனுங் கயிற்றிடைப்பிணித்துத்
துன்னியசுற்றச் சுடர்க்கயிறறுத்து
மன்னியவொருமைப்f பொறியினைமுறுக்கிக்
காமப்பாரெனுங் கடுவெளியற்ற
தூம்ச்சோதிச் சுடர்க்குற நிறுத்திச்
சுருங்காவுணர்ச்சித் துடுப்பினைத்துழாவி
நெருங்காவளவி னீள்கரையேற்ற
வாங்கயாத்திரை போக்குதிபோலும்
ஓங்குகடலுடுத்த வொற்றியூரோயே.
[3] ஆலா - ஓர்வகை நீர்ப்பறவை.
8
ஒற்றியூர வுலவாநின்குணம்
பற்றியாரப் பரவுதல்பொருட்டா
என்னிடைப்பிறந்த வின்னாப்புன்மொழி
நின்னிடையணுகா நீர்மையவாதலின்
ஆவலித்தழுதலி லகன்றதம்மனைக்
கேவலஞ்சேய்மையிற் கேளாளாயினும்
பிறித்தற்கரிய பெற்றியதாகிக்
குறைவினிலார்த்துங் குழவியதியல்வினை
யறியாதெண்ணி லூழிப்பிறவியின்
மயங்கிக்கண்ணிலர் கண்பெற்றாங்கே
தாய்தலைப்படநின் றாளிணைவணக்கம்
வாய்தலையறியா மயக்குறும்வினையேன்
மல்கியவின்பத் தோடுடன்கூடிய
வெல்லையிலவாவினி லியற்றியவாகக்
கட்டியநீயே யவிழ்க்கினல்ல
தெட்டனையாயினும் யானிதற்கறியேன்
றுன்னிடையிருளெனுந் தூற்றிடையொதுங்கி
வெள்ளிடைகாண விருப்புறுவினையேன்
றந்தையுந்தாயுஞ் சாதியுமறிவுநஞ்
சிந்தையுந்திருவுஞ் செல்கதித்திறனுந்
துன்பமுந்துறவுந் தூய்மையுமறிவு
மின்பமும்புகழு மிவைபலபிறவுஞ்
சுவையொளியூரோசை நாற்றந்தோற்ற
மென்றிவைமுதலா விளங்குவவெல்லா
மொன்றநின்னடிக்கே யொருங்குடன்வைத்து
நின்றனன்றனியே நின்னடியல்லது
சார்வுமற்றின்மையிற் றளர்ந்தோர்காட்சிச்
சேர்விடமதனைத் திறப்படநாடி
யெய்துதற்கரியோ யானினிச்
செய்வதுமறிவனோ தெரியுங்காலே
9
காலற்சீறிய கழலோய்போற்றி
மூலத்தொகுதி முதல்வ போற்றி
ஒற்றிமாநக ருடையோய்போற்றி
முற்றுமாகிய முதல்வபோற்றி
யணைதொறுஞ்சிறக்கு மமிர்தேபோற்றி
யிணைபிறிதில்லா வீசபோற்றி
யார்வஞ்செய்பவர்க் கணியோய்போற்றி
தீர்விலின்சுவைத் தேனேபோற்றி
வஞ்சனைமாந்தரை மறந்தோய்போற்றி
நஞ்சினையமிர்தா நயந்தோய்போற்றி
விரிகடல்வையக வித்தேபோற்றி
புரிவுடைவனமாப் புணர்ந்தோய்போற்றி
காணமுன்பொருள் கருத்துறைசெம்மைக்
காணியாகிய வரனேபோற்றி
வெம்மைதண்மையென் றிவைகுணமுடைமையிற்
பெண்ணோடாணெனும் பெயரோய்போற்றி
மேவியவவர்தமை வீட்டினிற்படுக்குந்
தீபமாகிய சிவனே போற்றி.
மாலோய்போற்றி மறையோய்போற்றி
மேலாய்போற்றி வேதியபோற்றி
சந்திரபோற்றி தழலோய்போற்றி
யிந்திரபோற்றி யிறைவபோற்றி
யமராபோற்றி யழகாபோற்றி
குமராபோற்றி கூத்தாபோற்றி
பொருளேபோற்றி போற்றியென்றுனை
நாத்தழும்பிருக்க நவிற்றினல்ல
தேற்றுதற்குரியோர் யாரிருநிலத்தே. 10
திருச்சிற்றம்பலம்.
திருவொற்றியூர்த்தொகை முற்றிற்று