1.2 திருநாட்டுச் சிறப்பு
திருச்சிற்றம்பலம்
051 பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்
கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
சூட்டிய வளர் புலிச் சோழர் காவிரி
நாட்டியல்பதனை யான் நவிலல் உற்றனன். 1.2.1
052 ஆதி மாதவமுனி அகத்தியன் தரு
பூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால். 1.2.2
053 சையமால் வரை பயில் தலைமை சான்றது
செய்ய பூ மகட்கு நற் செவிலி போன்றது
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித் தூட்டும் நீரது. 1.2.3
054 மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்
சால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால்
கோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால்
போலும் நான்முகனையும் பொன்னி மாநதி. 1.2.41
055 திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்
பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்
எங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழி
கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே. 1.2.5
056 வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்
எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது. 1.2.6
057 வம்புலா மலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கன்பரும் ஒக்குமால். 1.2.7
058 வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்
பூசும் குங்குமமும் புனை சாந்தமும்
வீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர்
தேசுடைத் தெனினும் தெளிவில்லதே. 1.2.8
059 மாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரை தரு
பூ விரித்த புதுமதுப் பொங்கிட
வாவியிற் பொலி நாடு வளம்தரக்
காவிரிப் புனல் கால்பரந்து ஓங்குமால். 1.2.9
060 ஒண் துறைத் தலை மாமத கூடு போய்
மண்டு நீர்வயலுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரைத் தகை ஓசைபோய்
அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால். 1.2.10
061 மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஒதையார் செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே. 1.2.11
062 உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு
இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம். 1.2.12
063 மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார். 1.2.13
064 செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை
அங்கை மலர்களைக் கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார்
திங்கள்நுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப்
பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார். 1.2.14
065 கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்
கரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம். 1.2.15
066 கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி
வியல்வாய் வெள்வளைத் தரள மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம். 1.2.16
067 காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம். 1.2.17
068 ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால். 1.2.18
069 அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்
துன்னும் மேதிபடியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின் மேற்பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால். 1.2.19
070 காவினிற் பயிலுங்களி வண்டினம்
வாவியிற் படிந்து உண்ணும் மலர் மது
மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்
தாவி அப்பொழிலிற் கனி சாடுமால் 1.2.20
071 சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தவாகிச்
சூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானுக் கன்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம். 1.2.21
072 பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்
தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம். 1.2.22
073 அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப் பெரும் பொருப்பு யாப்பர்
விரிமலர் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார். 1.2.23
074 சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே. 1.2.24
075 வைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்
செய்ய பொற் குன்றும் வேறு நவமனிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்
மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு. 1.2.25
076 அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணிப்
பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம்நீடி மல்ர்ந்துள பதிகள் எங்கும். 1.2.26
077 கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்
பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்
வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும். 1.2.27
078 நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளி சாலந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும். 1.2.28
079 சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும்
சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும். 1.2.29
080 மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்
பொங்கொளிக் கலன்கள் எங்கும் புது மலர்ப் பந்தர் எங்கும்
செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும். 1.2.30
081 மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்
யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்
யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும். 1.2.31
082 பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும். 1.2.32
083 மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்
பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும். 1.2.33
084 வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத் தாம் அஞ்சும் 1.2.34
085 நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்
பொற் தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும்
கொற்றவன் அநபாயன் பொற் குடை நிழல் குளிர்வதென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ. 1.2.35
திருச்சிற்றம்பலம்