MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    1.3 திருநகரச் சிறப்பு


    திருச்சிற்றம்பலம்

    086 சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
    மன்னு மாமலராள் வழி பட்டது
    வன்னியாறு மதி பொதி செஞ் சடைச்
    சென்னியார் திருவாரூர்த் திருநகர். 1.3.1
    087 வேத ஓசையும் வீணையின் ஓசையும்
    சோதி வானவர் தோத்திர ஓசையும்
    மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும்
    கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே. 1.3.2
    088 பல்லியங்கள் பரந்த ஒலியுடன்
    செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
    மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
    எல்லை இன்றி எழுந்துள எங்கணும். 1.3.3
    089 மாட மாளிகை சூளிகை மண்டபம்
    கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்
    நீடு சாளர நீடரங்கு எங்கெணும்
    ஆடல் மாதர் அணி சிலம் பார்ப்பன . 1.3.4
    090 அங்குரைக்கென்ன அளவப் பதியிலார்
    தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்
    பங்கினாள் திருச் சேடி பரவையாம்
    மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை. 1.3.5
    091 படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான்
    இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
    தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூது போய்
    நடந்த செந்தாமரை அடி நாறுமால். 1.3.6
    092 செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங்
    குங்குமத்தின் குழம்பை அவர் குழல்
    பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்
    அங்கண் மேவி அளறு புலர்த்துமால். 1.3.7
    093 உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
    வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம்
    தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்
    கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள். 1.3.8
    094 விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
    துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்
    வளத் தொடும் பலவாறு மடுத்தலால்
    அளக்கர் போன்றன ஆவண வீதிகள். 1.3.9
    095 ஆரணங்களே அல்ல மறுகிடை
    வாரணங்களும் மாறி முழங்குமால்
    சீரணங்கிய தேவர்களே அலால்
    தோரணங்களில் தாமமும் சூழுமால். 1.3.10
    096 தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
    வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
    வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
    சூழ்ந்த பல்வேறு இடத்தத் தொல் நகர். 1.3.11
    097 நில மகட்கு அழகார் திரு நீள் நுதல்
    திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
    மலர் மகட்கு வண்தாமரை போல்மலர்ந்(து)
    அலகில் சீர்த்திருவாரூர் விளங்குமால். 1.3.12
    098 அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்
    துன்னு செங் கதிரோன் வழித் தோன்றினான்
    மன்னு சீர் அநபாயன் வழி முதல்
    மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே. 1.3.13
    099 மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்
    கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்
    விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
    எண்ணிலாதன் மாண இயற்றினான் . 1.3.14
    100 கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திடச்
    சுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திடச்
    செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனுப்
    பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான். 1.3.15
    101 பொங்கு மா மறைப் புற்றிடங் கொண்டவர்
    எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
    அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
    துங்க ஆகமம் சொன்ன முறைமையால். 1.3.16
    102 அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி
    மறங் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்
    சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்
    பிறந்தனன் உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான். 1.3.17
    103 தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்
    சிவ முயன்றடையுந் தெய்வக் கலை பல திருந்த ஓதிக்
    கவனவாம் புரவி யானை தேர்ப் படைத் தொழில்கள் கற்றுப்
    பவமுயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான். 1.3.18
    104 அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க
    உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
    இளவரசு என்னும் தன்மை எய்துதற்கணியன் ஆகி
    வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன். 1.3.19
    105 திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று
    மங்குல் தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக்
    கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான்
    பொங்கிய தானை சூழ்த் தேர்மிசைப் பொலிந்து போந்தான். 1.3.20
    106 பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்
    விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க
    முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி
    அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி. 1.3.21
    107 தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன்
    பனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன
    மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
    புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகினூடே. 1.3.22
    108 அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச்
    செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே
    உம்பரின் அடையக் கண்டங்கு உருகுதாய் அலமந்தோடி
    வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும். 1.3.23
    109 மற்றுது கண்டு மைந்தன் வந்ததிங்கு அபாயம் என்று
    சொற்றடுமாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து
    பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச்
    செற்ற, என் செய்கேன் என்று தேரினின் இன்று இழிந்து வீழ்ந்தான். 1.3.4
    110 அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்
    நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும்
    மலர் தலை உலகங் காக்கும் மனுவெனும் என் கோமானுக்(கு)
    உலகில் இப் பழி வந்து எய்தப் பிறந்தவா ஒருவன் என்பான். 1.3.5
    111 வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை
    அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்
    எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன்
    சிந்தை வெந் துயரம் தீர்ப்பான்திரு மறையவர் முன் சென்றான். 1.3.26
    112 தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி
    முன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
    மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில்
    பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே. 1.3.27
    113 பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
    வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்
    கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளாத்
    தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது. 1.3.28
    114 ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
    பூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி
    ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ! நின் கொற்ற வாயில்
    தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது என்று சொன்னார். 1.3.29
    115 மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி
    என் இதற்குற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க
    முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
    தொல் நெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான். 1.3.30
    116 வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
    அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
    இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக
    தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை என்றான். 1.3.31
    117 அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி
    வெவ்விடந் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்கிங்கு
    இவ் வினை விளைந்தவாறு என்று இடருறும் இரங்கும் ஏங்கும்
    செவ்விது என் செங்கோல்! என்னும் தெருமரும் தெளியும் தேறான். 1.3.32
    118 மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும்
    என்னெறி நன்றால் என்னும் என்செய்தால் தீரும் என்னும்
    தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்
    அந் நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால். 1.3.33
    119 மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கிச்
    சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்றால்
    கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை
    அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம் என்றார். 1.3.34
    120 வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு
    குழக்கன்றை இழந்தலறும் கோவுறு நோய் மருந்தாமோ?
    இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீருஞ் சொல்லிய இச்
    சழக்கு இன்று நான் இசைந்தால் தருமந் தான் சலியாதோ? 1.3.35
    121 மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
    தான தனக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
    ஊன மிகு பகைத் திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
    ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ? 1.3.36
    122 என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே
    அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால்
    தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை
    மன்னுலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு என்றான். 1.3.37
    123 என்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்
    நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்ததால்
    பொன்று வித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல்
    தொன்று தொடு நெறி யன்றோ? தொல் நிலங் காவல! என்றார். 1.3.38
    124 அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
    மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு வென்னும் விறல் வேந்தன்
    இவ் வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடைத் தோய்ந்த
    செவ் வண்ணக் கமலம் போல் முகம் புலந்து செயிர்த்துரைப்பான். 1.3.39
    125 அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின்
    செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்
    எவ் உலகில் எப் பெற்றம் இப்பெற்றித் தாம் இடரால்
    வெவ்வுயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது? விளம்பீர். 1.3.40
    126 போற்றிசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
    வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்
    தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான்
    ஆற்றவுமற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின். 1.3.41
    127 என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன்
    மனம் அழியுந் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
    தனதுறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என
    அனகன் அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார். 1.3.42
    128 மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை
    முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க என
    அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்பத்
    தன்னுடைய குலமகனைத் தான் கொண்டு மறுங்கணைந்தான். 1.3.43
    129 ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
    தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன்
    மருமம் தன் தேராழி உறஊர்ந்தான் மனு வேந்தன்
    அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ தான். 1.3.44
    130 தண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
    மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார்
    அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
    விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்கப் பெருமான். 1.3.45
    131 சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்குந் திருநுதலும்
    இடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூதகணம்
    புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப
    விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான். 1.3.46
    132 அந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன்
    மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும்
    இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
    முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? 1.3.47
    133 அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து
    நெடிது மகிழ்ந்து அருந் துயரம் நீங்கினான் நிலவேந்தன்
    மடி சுரந்து பொழிதீம் பால் வருங் கன்று மகிழ்ந்துண்டு
    படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே. 1.3.48
    134 பொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்
    வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்து
    சென்று அருளும் பெரும் கருணைத் திறம் கண்டு தன் அடியார்க்கு
    என்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்தேத்தும். 1.3.49
    135 இனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து
    முனைவர் அவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர் மேல்
    புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ?
    அனைய தனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில். 1.3.50

    திருச்சிற்றம்பலம்


Goto Main book