MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
    என்ற பெரிய புராணம் /இரண்டாம் காண்டம்

    13. வெள்ளானைச் சருக்கம் (4229 - 4281)
    திருச்சிற்றம்பலம்
    4229 மூலம் ஆன திருத்தொண்டத் தொகைக்கு முதல்வராய் இந்த
    ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தம்பிரான் தோழர்
    காலை மலர்ச் செங்கமலக்கண் கழற்று அறிவார் உடன் கூட
    ஆலம் உண்டார் திருக் கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம் 13.1.1
    4230 படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி
    வடிவு நம்பி ஆரூரர் செம் பொன் மேனி வனப்பாகக்
    கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி
    முடிவு இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்ததால் 13.1.2
    4231 ஆரம் உரகம் அணிந்தபிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர்
    ஈர மதுவார் மலர்ச்சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள்
    சேரர் பெருமாள் தனை நினைந்து தெய்வப் பெருமாள் கழல் வணங்கிச்
    சாரல் மலைநாடு அணைவதற்குத் தவிரா விருப்பின் உடன் போந்தார் 13.1.3
    4232 நன்ன்ணர்ப் பொன்னித் திரு நாட்டு நாதர் மகிழும் திருப்பதிகள்
    முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லைப் படப்பைக்கு ஒல்லைமான்
    துன்னி உகைக்கும் குடக் கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர்
    சென்னி மிசை வைத்தவர் செல்வத் திருப்புக்கு ஒளியூர் சென்று அடைந்தார் 13.1.4
    4233 மறையோர் வாழும் அப்பதியின் மாட வீதி மருங்கு அணைவார்
    நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள்
    அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றினில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு
    உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார் 13.1.5
    4234 அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு
    வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை
    முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம்
    இந்த மனை மற்று அந்தமனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் 13.1.6
    4235 இத்தன்மையினைக் கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம்
    மொய்த்த முகைத்தார் வன்தொண்டர் தம்மை முன்னே கண்டு இறைஞ்ச
    வைத்த சிந்தை மறையோனும் மனைவிதானும் மகிழ் இழந்த
    சித்த சோகம் தெரியாமே வந்து இருந்தாள் இறைஞ்சினார் 13.1.7
    4236 துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார் தம்மை முகம் நோக்கி
    இன்ப மைந்தன் தனை இழந்தீர் நீரோ என்ன எதிர் வணங்கி
    முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல் கின்றோம்
    அன்பு பழுது ஆகாமல் எழுந்து அருளப் பெற்றேம் எனத் தொழுதார் 13.1.8
    4237 மைந்தன் தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே
    சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி தானும் சிறுவனையான்
    அந்த முதலையின் வாய் நின்றும் அழைத்துக் கொடுத்த அவிநாசி
    எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார் 13.1.9
    4238 இவ்வாறு அருளிச் செய்து அருளி இவர்கள் புதல்வன் தனைக் கொடிய
    வெவ்வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவிக் கேட்டு
    அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர்
    வைவாள் எயிற்று முதலை கொடு வருதற்கு எடுத்தார் திருப்பதிகம் 13.1.10
    4239 உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்த
    வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து
    திரைப்பாய் புனலின் முதலைவாயில் உடலில்சென்ற ஆண்டுகளும்
    தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான் 13.1.11
    4240 பெருவாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனை
    உருகா நின்ற தாய் ஓடி எடுத்துக் கொடுவந்து உயிர் அளித்த
    திருவாளன் தன் சேவடிக்கீழ் மறையோன் ஒடு வீழ்ந்தாள்
    மருவார் தருவின் மலர் மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள் 13.1.12
    4241 மண்ணினுள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம்
    விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது
    அண்ணலாரும் அவிநாசி அரனார் தம்மை அருமறையோன்
    கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினிமேல் 13.1.13
    4242 பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு
    விரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி அண்ணலார்
    முரசம் இயம்பக் கலியாணம் முடித்து முடிச் சேரலர் தம்பால்
    குரவ மலர்ப் பூந்தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் 13.1.14
    4243 சென்ற சென்ற குட புலத்துச் சிவனார் அடியார் பதிகள் தொறும்
    நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும்
    துன்று மணிநீர்க் கான் ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி
    குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம்புகுந்தார் 13.1.15
    4244 முன்னாள் முதலை வாய்புக்க மைந்தன் முன்போல் வரமீட்டுத்
    தென்னாரூரர் எழுந்து அருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு
    அந்நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்பப்
    பொன்னார் கிழியும் மணிப்பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார் 13.1.16
    4245 செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களி கூர்ந்து
    என் ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில்
    சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம்
    உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்று வித்தார் 13.1.17
    4246 பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோர் எழுந்து அருளப்
    பொருவில் நகரம் அலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறப்படுவித்து
    அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும்
    தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார் 13.1.18
    4247 மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில்
    சிலை நாட்டிய வெல் கொடித்தானைச் சேரர் பெருமான் எதிர் சென்று
    தலை நாள் கமலப் போது அனைய சரணம் பணியத் தாவில் பல
    கலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனர் ஆல் 13.1.19
    4248 சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள்
    தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய்
    முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர்
    எந்தை பெருமான் திருவாரூர்ச் செல்வம் வினவி இன்புற்றார் 13.1.20
    4249 ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல்
    இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும்
    பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை
    வருகை வரையின் மிசை ஏற்றித் தாம் பின் மதிவெண் குடை கவித்தார் 13.1.21
    4250 உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப
    கதிர் வெண் திரு நீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப
    எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளித் துகள் ஆர்ப்ப
    மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணிவாயிலை அணைந்தார் 13.1.22
    4251 ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர்
    வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின
    பூரண கலசம் மலிந்தன பூ மழை மகளிர் பொழிந்திடும்
    தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம் 13.1.23
    4252 அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய
    பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன
    சுரிவனை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி
    விரிதரு பவன நெடும் கடை விறல் மத கரியின் இழிந்தனர் 13.1.24
    4253 தூ நறு மலர் தரளம் பொரிதூவி முன் இரு புடையின் கணும்
    நான் மறை முனிவர்கள் மங்கல நாம நன்மொழிகள் விளம்பிட
    மேல் நிறை நிழல் செய வெண் குடை வீசிய கவரி மருங்கு உற
    வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர் 13.1.25
    4254 அரியணை அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை
    வரிமலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின்
    உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவில என முன் செய்து
    பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர் 13.1.26
    4255 இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்தாம் இடர் கெட முனைப்பாடி
    மன்னர் தம் உடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடுஎங்கும்
    பன்னகம் புனை பரமர் தம் திருப்பதி பல உடன் பணிந்து ஏத்திப்
    பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன்தொண்டர் 13.1.27
    4256 ஆய செய்கையில் நாள் பல கழிந்தபின் அரசர்கள் முதல் சேரர்
    தூய மஞ்சனத் தொழில் இனின் தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்
    பாய கங்கை சூழ் நெடும் சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்து எய்தும்
    சேய நல்நெறி குறுகிடக் குறுகினார் திருவஞ்சைக் களம் தன்னில் 13.1.28
    4257 கரிய கண்டர் தம் கோயிலை வலம் கொண்டு காதலால் பெருகு அன்பு
    புரியும் உள்ளத்தர் உள்ளணைந்து இறைவர் தம் பூம் கழல் இணை போற்றி
    அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை
    சரியவே தலைக்குத் தலை மாலை என்று எடுத்தனர் தமிழ் மாலை 13.1.29
    4258 எடுத்த அத்திருப் பதிகத்தின் உள் குறிப்பு இவ்வுலகினில் பாசம்
    அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாடக்
    கடுத்த தும்பிய கண்டர் தம் கயிலையில் கணத்தவருடன் கூடத்
    தடுத்த செய்கைதான் முடிந்திடத் தங்கு அழல் சார்பு தந்து அளிக்கின்றார் 13.1.30
    4259 மன்றலந் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை வல்லியுடன் கூட
    வென்றி வெள்விடைப் பாகர் தாம் வீற்று இருந்து அருளிய பொழுதின் கண்
    ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றிச்
    சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர் கட்கு அருள் செய்தார் 13.1.31
    4260 வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடை கொண்டு
    தூ நலம் திகழ் சோதி வெள்ளானையும் கொண்டு வன் தொண்டர்க்குத்
    தேன் அலம்பு தண் சோலை சூழ் மாகோதையில் திருவஞ்சைக் களம் சேரக்
    கானிலங் கொள வலம் கொண்டு மேவினார் கடிமதில் திருவாயில் 13.1.32
    4261 தேவர் தங்குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவல் ஊரர்தம்
    காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்று இருக்கின்ற
    பூவலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இப் பாடு என போற்றி
    ஏவல் என்றபின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிரேற்றார் 13.1.33
    4262 ஏற்ற தொண்டரை அண்டர் வெள்ளானையின் எதிர் வலம் கொண்டு ஏற்ற
    நாற்றடங் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்பப்
    போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிர் எல்லாம்
    சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார் 13.1.34
    4263 சேரர் தம்பிரான் தோழர் தஞ்செயல் அறிந்து அப்போதே
    சார நின்றதோர் பரியினை மிசைக் கொண்டு திருவஞ்சைக் களம்சார்வார்
    வீர வெண் களிறுகைத்து விண்மேல் செலும் மெய்த்தொண்டர் தமைக் கண்டார்
    பாரில் நின்றிலர் சென்றதம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார் 13.1.35
    4264 விட்ட வெம்பரிச் செவியினில் புவி முதல் வேந்தர் தாம் விதியாலே
    இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழப் பாய்ந்து
    மட்டலர்ந்த பைந் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை
    முட்ட எய்தி வலம் கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக 13.1.36
    4265 உதியர் மன்னவர் தம் பெரும் சேனையின் உடன் சென்ற படைவீரர்
    கதிகொள் வாசியில் செல்பவர் தம்மைத்தங்கட்புலப்படும் எல்லை
    எதிர் விசும்பினில் கண்டு மின் கண்டிலர் ஆதலின் எல்லாரும்
    முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறை முறை உடல் வீழ்ந்தார் 13.1.37
    4266 வீரயாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானைச்
    சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனித் தொண்டர்மேல் கொண்ட
    வாரும் மும் மதத்து அருவி வெள்ளானைக்கு வயப் பரி முன் வைத்துச்
    சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலைத் திசை நோக்கி 13.1.38
    4267 யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும்
    தானை முன் செலத் தானெனை முன் படைத்தான் எனும் தமிழ் மாலை
    மானவன் தொண்டர் பாடி முன் அணைந்தனரர் மதி நதி பொதி வேணித்
    தேன் அலம்பு தண் கொன்றையார் திருமலைத் தென்திசைத் திருவாயில் 13.1.39
    4268 மாசில் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை
    ஆசில் அன்பர் தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணிவாயில்
    தேசுதங்கிய யானையும் புரவியும் இழிந்து சேண் இடைச் செல்வார்
    ஈசர் வெள்ளி மா மலைத் தடம் பல கடந்து எய்தினார் மணிவாயில் 13.1.40
    4269 அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர்
    தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே
    பொங்கு மா மதம் பொழிந்த வெள்ளானையின் உம்பர் போற்றிடப் போந்த
    நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு 13.1.41
    4270 சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேண் இடை விட்டு
    அகன்று கோவினைக் கண்டு அணைந்தது எனக் காதலின் விரைந்து எய்தி
    நின்று போற்றிய தனிப் பெரும் தொண்டரை நேர் இழை வலப் பாகத்து
    ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகுய்ய 13.1.42
    4271 அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்ட தொடக்கினை நீக்கி
    முடிவிலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர்
    படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த
    வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர் 13.1.43
    4272 நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர்க் கழல் சாரச்
    சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் எனச் செப்ப
    குன்ற வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி
    வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி 13.1.44
    4273 மங்கை பாகர் தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்திப்
    பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிடப் புதுமதி அலைகின்ற
    கங்கைவார் சடைக் கயிலை நாயகர் திருமுறுவலின் கதிர் காட்டி
    இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள் செய்தார் 13.1.45
    4274 அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றிப்
    புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணைத் தொண்டு
    இரை செய் வெள்ளமுன் கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப் பெற்றேன்
    விரைசெய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று 13.1.46
    4275 பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு அரும் பெருமையாய் உனை அன்பால்
    திருஉலாப் புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெற வேண்டும்
    மருவு பாசத்தை அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன
    அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார் 13.1.47
    4276 சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருஉலாப் புறம் கொண்டு
    நாரி பாகரும் நலம் மிகு திரு அருள் நயப்புடன் அருள் செய்வார்
    ஊரன் ஆகிய ஆலால சுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும்
    சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள் செய்தார் 13.1.48
    4277 அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு
    மன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தரர் ஆகித் தாம் வழுவாத
    முன்னை நல்வினைத் தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும்
    நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் 13.1.49
    4278 தலத்து வந்துமுன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும்
    நலத்தின் மிகக் கவர் வல்வினைத் தொடக்கற நாயகி அருளாலே
    அலத்த மெல்லடிக் கமலினியாருடன் அனிந்தை யாராக்஢
    மலைத் தனிப் பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழிநின்றார் 13.1.50
    4279 வாழி மாதவர் ஆலால சுந்தரர் வழி இடை அருள் செய்த
    ஏழிசைத் திருப்பதிகம் இவ்வுலகினில் ஏற்றிட எறி முன்நீர்
    ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அவ் அருள் சூடி
    ஊழியில் தனி ஒருவர் தம் திருவஞ்சைக் களத்தில் உய்த்து உணர்வித்தான் 13.1.51
    4280 சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் திருஉலாப் புறம் அன்று
    சாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்தப்
    பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
    நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே 13.1.52
    4281 என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
    ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
    மன்றுளார் அடியார் அவர் வான் புகழ்
    நின்றது எங்கும் நிலவி உலகெலாம் 13.1.53
    திருச்சிற்றம்பலம்
    வெள்ளானைச் சருக்கம் முற்றிற்று.
    இரண்டாம் காண்டம் முற்றிற்று.
    பெரிய புராணம் முற்றிற்று.