MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  2.2. திருநீலகண்ட நாயனார் புராணம்


  திருச்சிற்றம்பலம்

  360 வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார்
  மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
  ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
  நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார் 2.2.1
  361 பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்
  மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார்
  வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்
  சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரு நீரார் 2.2.2
  362 அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி
  வளரிளம் திங்கள் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும்
  உள மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
  இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார் 2.2.3
  363 அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார்
  புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்
  தவ நின்று அடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று
  சிவன் எந்தை கண்டம் தன்னைத் திரு நீல கண்டம் என்பார் 2.2.4
  364 ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண
  மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
  ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்
  தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார் 2.2.5
  365 மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
  பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
  வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
  தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார் 2.2.6
  366 ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
  பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
  ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
  மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார் 2.2.7
  367 கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
  பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
  இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி
  அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார் 2.2.8
  368 இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற
  அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல
  வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து
  தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார் 2.2.9
  369 இந் நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்ட
  மின்னொளிர் சடையோன் தானுந் தொண்டரை விளக்கங் காண
  நன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்
  அந் நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி 2.2.10
  370 கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலா
  வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மெல்
  தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்
  நீளொளி வளர் திரு முண்ட நெற்றியும் 2.2.11
  371 நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
  விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
  இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்
  நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் 2.2.12
  372 நண்ணிய தவச் சிவ யோக நாதரைக்
  கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம்
  புண்ணியத் தொண்டராம் என்று போற்றி செய்து
  எண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார் 2.2.13
  373 பிறை வளர் சடை முடிப் பிரானைத் தொண்டர் என்று
  உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட
  முறைமையின் வழி பட மொழிந்த பூசைகள்
  நிறை பெரு விருப்பொடு செய்து நின்ற பின் 2.2.14
  374 எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர்
  வம்புலா மலர்ச் சடை வள்ளல் தொண்டனார்
  உம்பர் நாயகனும் இவ்வோடு நின்பால் வைத்து
  நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று 2.2.15
  375 தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்
  துன்னிய யாவையும் தூய்மை செய்வது
  பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
  இன்ன தன்மையது இது வாங்கு நீ என 2.2.16
  376 தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய
  மல்கு சீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டு
  ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும்
  எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார் 2.2.17
  377 வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்
  நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
  உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர்
  அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் 2.2.18
  378 சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த
  கோலமார் ஓடு தன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச்
  சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்
  வாலி தாம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார் 2.2.19
  379 வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
  சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
  முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
  தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் 2.2.20
  380 என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு
  சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி
  நின்றவர் தம்மைக் கேட்டார் தேடியும் காணார் மாயை
  ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார் 2.2.21
  381 மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும்
  உறை உளில் புக்கு நின்ற ஒரு பெருந் தொண்டர் கேட்ட
  இறையில் இங்கு எய்தப் புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து
  கறை மறை மிடற்றினானைக் கை தொழுது உரைக்கல் உற்றார் 2.2.22
  380 இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன
  விழை தகும் ஓடு வைத்த வேறு இடம் தேடிக் காணேன்
  பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இப்
  பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார் 2.2.23
  383 சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி
  என்னிது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றிப்
  பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினுங் கொள்ளேன் போற்ற
  முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் 2.2.24
  384 கேடு இலாப் பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலே
  நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால
  நீடு செல்வது தான் ஒன்று தருகிறேன் எனவும் கொள்ளாது
  ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன 2.2.25
  385 ஆவதென் உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப்
  பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்
  யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றிப்
  போவதும் செய்யேன் என்றான் புண்ணியப் பொருளாய் நின்றான் 2.2.26
  386 வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை
  உளத்தினும் களவிலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன
  களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப் பற்றிக்
  குளத்தினில் மூழ்கிப் போ என்று அருளினான் கொடுமை இல்லான் 2.2.27
  387 ஐயர் நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப்
  பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன
  மையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றி
  மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் 2.2.28
  388 கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற
  வெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்
  எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை
  பொங்கு புனல் யான்மூழ்கித் தருகின்றேன் போதும் என 2.2.29
  389 தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி
  அந் தளிர்ச் செங் கைப்பற்றி அலை புனலில் மூழ்காதே
  சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள்
  வந்து இருந்த பேர் அவையில் மன்னுவன் யான் எனச் சென்றார் 2.2.30
  390 நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார்
  தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்தவையில்
  எல்லை இலான் முன் செல்ல இருந்தொண்டர் அவர் தாமும்
  மல்கு பெரும் காதலினால் வழக்கு மேலிட்டு அணைந்தார் 2.2.31
  391 அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான்
  இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தைத்
  தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி
  வந்து மூழ்கியும் தாரான் வலி செய்கின்றான் என்றார் 2.2.32
  392 நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் முக் கண்ணும்
  கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும்
  மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரை செய்வார்
  நிறையுடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என 2.2.33
  393 நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு
  பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்
  பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று
  சேணிடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார் 2.2.34
  394 திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்
  உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினைக் கொடுத்தீர் ஆனால்
  தருமிவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தார் ஆகில்
  மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார் 2.2.35
  395 அருந் தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத்
  திருந்திய மனைவியாரைத் தீண்டாமை செப்ப மாட்டார்
  பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன் போதும் என்று
  பெருந் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையைச் சார்ந்தார் 2.2.36
  396 மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ யோகியார் முன்
  சினவிடைப் பாகர் மேவும் திருப்புலீச் சுரத்து முன்னர்
  நனை மலர்ச் சோலை வாவி நண்ணித் தம் உண்மை காப்பார்
  புனை மணி வேணுத் தண்டின் இரு தலை பிடித்துப் புக்கார் 2.2.37
  397 தண்டிரு தலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கி
  வெண் திரு நீற்று முண்ட வேதியர் மாதைத் தீண்டிக்
  கொண்டு உடன் மூழ்கீர் என்னக் கூடாமை பாரோர் கேட்கப்
  பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் 2.2.38
  398 வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும்
  மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத்
  தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப்
  பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற 2.2.39
  399 அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம்
  முன்நிலை நின்ற வேத முதல் வரைக் கண்டார் இல்லை
  இந்நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார்
  துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கொண்டார் 2.2.40
  400 கண்டனர் கைகளாரத் தொழுதனர் கலந்த காதல்
  அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் பெருமை நோக்கி
  விண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மைத்
  தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார் 2.2.41
  401 மன்றுளே திருக் கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும்
  சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்
  வென்ற ஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால்
  என்றும் இவ் இளமை நீங்காது என்று எழுந்து அருளினாரே 2.2.42
  402 விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென் தோள்
  அறல் இயல் கூந்தல் ஆளாம் மனைவியும் அருளின் ஆர்ந்த
  திறலுடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப்
  பெறல் அரும் இளமை பெற்றுப் பேர் இன்பம் உற்றார் அன்றே 2.2.43
  403 அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த
  மயலில் சீர்த் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்திப்
  புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில்
  செயல் இயற் பகையார் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன். 2.2.44

  திருச்சிற்றம்பலம்


Goto Main book