MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  2.7. அமர் நீதி நாயனார் புராணம்


  திருச்சிற்றம்பலம்

  502 சீரில் நீடிய செம்பியர் பொன்னி நன்னாட்டுக்
  காரின் மேவிய களி அளி மலர்ப் பொழில் சூழ்ந்து
  தேரின் மேவிய செழு மணிவீதிகள் சிறந்து
  பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை 2.7.1
  503 மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்
  பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந்துகில் முதலா
  எந் நிலத்தினும் உள்ளன வரு வளத்து இயல்பால்
  அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார் 2.7.2
  504 சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
  அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக்
  கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி
  வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் 2.7.3
  505 முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நலூர்
  மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
  தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்
  தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர் 2.7.4
  506 மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர்த்
  திரு விழா அணி சேவித்துத் திரு மடத்து அடியார்
  பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி
  உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாள் இடை ஒருநாள் 2.7.5
  507 பிறைத் தளிர் சடைப் பெருந்தகைப் பெரும் திரு நல்லூர்க்
  கறைக் களத்து இறை கோவணப் பெருமை முன் காட்டி
  நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
  மறைக் குலத்தொரு பிரமசாரியின் வடிவு ஆகி 2.7.6
  508 செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும்
  சைவ வெண் திரு நீற்று முண்டகத்து ஒளித் தழைப்பும்
  மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும்
  கையில் மன்னிய பவித்திர மரகதக் கதிரும் 2.7.7
  509 முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
  தஞ்ச மா மறைக் கோவண ஆடையின் அசைவும்
  வஞ்ச வல் வினைக் கறுப்பறும் மனத்து அடியார்கள்
  நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீணிலம் பொலிய 2.7.8
  510 கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத்
  தொண்டர் அன்பு எனும் தூ நெறி வெளிப் படுப்பார் ஆய்த்
  தண்டின் மீது திரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
  கொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக 2.7.9
  511 வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து
  கடிது வந்து எதிர் வணங்கி இம் மடத்தினில் காணும்
  படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ
  அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர் 2.7.10
  512 பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு
  ஊணும் மேன்மையில் ஊட்டி நற் கந்தை கீள் உடைகள்
  யாணர் வெண் கிழிக் கோவணம் ஈதல் கேட்டு உம்மைக்
  காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன் 2.7.11
  513 என்று தம்பிரான் அருள் செய இத் திரு மடத்தே
  நன்று நான் மறை நற்றவர் அமுது செய்து அருளத்
  துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
  இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச 2.7.12
  514 வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே
  அணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான் வர மழை வரினும்
  உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண்
  குணங் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்துக் கொடுப்பார் 2.7.13
  515 ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கே
  ஈங்கு நான் சொல்ல வேண்டுவது இல்லை நீர் இதனை
  வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே
  ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் 2.7.14
  516 கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது இலா அன்பர்
  கடுப்பில் இங்கு எழுந்து அருளும் நீர் குளித்து எனக் கங்கை
  மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர்
  அடுத்த தெண்டிரைப் பொன்னி நீர் ஆட என்று அகன்றார் 2.7.15
  517 தந்த கோவணம் வாங்கிய தனிப் பெருந் தொண்டர்
  முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்
  கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்புச்
  சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்தின் வைத்தார் 2.7.16
  518 போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்
  பானலந்துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ
  தூநறுஞ் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ
  வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் 2.7.17
  519 கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில்
  முதிரும் அன்பு உடைத் தொண்டர் தாம் முறைமையின் முன்னே
  அதிக நன்மையின் அறு சுவைத் திருவமுது ஆக்கி
  எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர் 2.7.18
  520 தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி
  மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
  தண்டின் மேலதும் ஈரம் நான் தந்த கோவணத்தைக்
  கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவணக் கள்வர் 2.7.19
  521 ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி
  எய்தி நோக்குறக் கோவணம் இருந்த வேறு இடத்தில்
  மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன்
  செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார் 2.7.20
  522 பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல்
  சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில்
  எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார்
  அங்கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப் பட்டார் 2.7.21
  523 மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
  இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து
  நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார்
  புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார் 2.7.22
  524 அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை
  வைத்த இடத்து நான் கண்டிலேன் மற்றும் ஓர் இடத்தில்
  உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன்
  இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று 2.7.23
  525 வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்
  கீறு கோவணம் அன்று நெய்தமைத்தது கிளர் கொள்
  நீறு சாத்திய நெற்றியீர் மற்றுது களைந்து
  மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க 2.7.24
  526 நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை
  நன்று சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்
  இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு
  ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா 2.7.25
  527 நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்
  சொல்லும் விதத்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ
  ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று
  எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான் 2.7.26
  528 மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுளப்
  பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து
  சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர் அடியேன்
  அறிய வந்தது ஒன்று என அடி பணிந்து அயர்வார் 2.7.27
  529 செயத்தகும் பணி செய்வன் இக் கோவணம் அன்றி
  நயத் தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள்
  உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்காப்
  பயத்தொடுங்குலைந்து அடி மிசைப் பல முறை பணிந்தார் 2.7.28
  530 பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருளானார்
  தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த
  மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய
  அணியும் கோவணம் நேர் தர அமையும் என்றான் 2.7.29
  531 மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்
  அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்கு நேராக
  இலங்கு பூந் துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர்
  நலங் கொள் கோவணம் தரும் பரிசு யாதென நம்பர் 2.7.30
  532 உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்
  கொடுத்ததாக முன் சொல்லும் அக் கிழிந்த கோவணநேர்
  அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழாது
  எடுத்து மற்று இதன் எடையிடும் கோவணம் என்றார் 2.7.31
  533 நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்டக்
  குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்
  நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணத் தட்டு
  ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார் 2.7.32
  534 நாடும் அன்பொடு நாயன்மார்க் களிக்க முன் வைத்த
  நீடு கோவணம் அடைய நேராக ஒன்று ஒன்றாக்
  கோடு தட்டின் மீது இடக் கொண்டு எழுந்தது கண்டு
  ஆடு சேவடிக்கு அயரும் அற்புதம் எய்தி 2.7.33
  535 உலகில் இல்லதோர் மாயை இக் கோவணம் ஒன்றுக்கு
  அலகில் கோவணம் ஒத்தில என்று அதிசயத்துப்
  பலவும் மென் துகில் பட்டுடன் இட இட உயர
  இலகு பூந்துகிற் பொதிகளை எடுத்து மேல் இட்டார் 2.7.34
  536 முட்டில் அன்பர் தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
  மட்டு நின்ற தட்டு அருளொடு தாழ்வு உறும் வழக்கால்
  பட்டொடும் துகில் அநேக கோடிகளிடும் பத்தர்
  தட்டு மேற் படத் தாழ்ந்தது கோவணத் தட்டு 2.7.35
  537 ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்
  தூ நறுந் துகில் வர்க்க நூல் வர்க்கமே முதலா
  மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்
  ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச 2.7.36
  538 மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே
  இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல்
  அங்கு மற்று உங்கள் தனங்களினாகிலும் இடுவீர்
  எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார் 2.7.37
  539 நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணித் திரளும்
  பல் வகைத் திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும்
  எல்லை இல் பொருள் சுமந்து அவர் இட இடக் கொண்டே
  மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் 2.7.38
  540 தவம் நிறைந்த நான் மறைப் பொருள் நூல்களால் சமைந்த
  சிவன் விரும்பிய கோவணம் இடும் செழுந்தட்டுக்கு
  அவனி மேலமர் நீதியார் தனமெலாம் அன்றிப்
  புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ 2.7.39
  541 நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று
  உலைவில் பஃறனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்
  தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்
  துலையில் ஏறிடப் பெறுவது உன் அருள் எனத் தொழுதார் 2.7.40
  542 பொச்சமில்ல அடிமைத் திறம் புரிந்தவர் எதிர்நின்று
  அச்ச முன்புற உரைத்தலும் அங்கணர் அருளால்
  நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனுஞ் சலத்தால்
  இச் சழக்கினின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார் 2.7.41
  543 மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்
  புனை மலர்க் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
  தனை உடன் கொடு தனித் துலை வலம் கொண்டு தகவால்
  இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து 2.7.42
  544 இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
  பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று
  மழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித்
  தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில் 2.7.43
  545 மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற
  அண்டர் தம்பிரான் திரு அரைக் கோவணம் அதுவும்
  கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமைத்
  தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அத் துலைதான் 2.7.44
  546 மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர்
  துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர் தொழுதார்
  கதிர் விசும்பு இடை கரந்திட நிரந்த கற்பகத்தின்
  புதிய பூ மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார் 2.7.45
  547 அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
  முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்ப்
  பண்டு தாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங்
  கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சி முன் கொடுத்தார் 2.7.46
  548 தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும்
  வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
  முழுதும் இன்னருள் பெற்றுத் தம் முன் தொழுது இருக்கும்
  அழிவில் வான் பதங் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர் 2.7.47
  549 நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே
  மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக்
  கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த
  ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார் 2.7.48
  550 மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
  பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் அவணப் பழமை காட்டி
  உலகு உய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்
  தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் 2.7.49

  திருச்சிற்றம்பலம்
  தில்லைவாழ் அந்தணர் சருக்கம் முற்றிற்று.
  சருக்கம் இரண்டுக்குத் திருவிருத்தம் – 550

Goto Main book