சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் -முதற் காண்டம்
3. இலை மலிந்த சருக்கம்
3.1 எறி பத்த நாயனார் புராணம் (551-607) 3.2 ஏனாதிநாத நாயனார் புராணம் (608- 649) 3.3 கண்ணப்ப நாயனார் புராணம் (650 -835) 3.4 குங்குலியக் கலய நாயனார் புராணம் (836-870) 3.5 மானக்கஞ்சாற நாயனார் புராணம் (871-907 ) 3.6 அரிவாட்டாய நாயனார் புராணம் ( 908-930 ) 3.7 ஆனாய நாயனார் புராணம் (931 - 972) 3.1 எறி பத்த நாயனார் புராணம் (551-607)
திருச்சிற்றம்பலம்
551 மல்லல் நீர் ஞாலந் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார்
எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம் 3.1.1
552 பொன் மலைப் புலி வென்று ஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும்
அந் நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன்
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரமாகும்
தொன் நெடுங் கருவூர் என்னுஞ்சுடர் மணி வீதி மூதூர் 3.1.2
553 மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும்
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும்
தேமலர் அளகஞ் சூழும் சில மதி தெருவிற் சூழும்
தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ 3.1.3
554 கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும்
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும்
படரொளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும்
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் 3.1.4
555 மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க தொண்டர் தம் சிந்தை நீங்கா
அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில் 3.1.5
556 பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அக் கோயில்
மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழி படும் தொழிலர் ஆகி
இருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு
அருட் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் 3.1.6
557 மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க
அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது
முழையரி என்னத் தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும்
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப் பெற்றார் 3.1.7
558 அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்குத்
திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும்
புண்ணிய முனிவனார் தாம் பூப் பறித்து அலங்கல் சாத்தி
உண்ணிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல் 3.1.8
559 வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி
மெய்ம் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னிக்
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலைத்
தெய்வ நாயகருக்குச் சாத்தும் திருப் பள்ளித் தாமம் கொய்து 3.1.9
560 கோலப் பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசம் கொண்டு மலர்க் கையில் தண்டும் கொண்டு அங்கு
ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்துச் சாத்தும்
காலை வந்து உதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார் 3.1.10
561 மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள் குலப் புகழ்ச் சோழனார் தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு
பெற்ற வெங் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள் 3.1.11
562 மங்கல விழைவு கொண்டு வரு நதித் துறை நீராடிப்
பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார்
எங்கணும் இரியல் போக எதிர் பரிக் காரர் ஓடத்
துங்க மால் வரை போல் தோன்றித் துண்ணென அணைந்தது அன்றே 3.1.12
563 வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும் 1
சென்று ஒரு தெருவின் முட்டிச் சிவகாமியார் முன் செல்ல
வன் தனித் தண்டில் தூங்கும் மலர் கொள் பூக் கூடை தன்னைப்
பின் தொடர்ந்து ஓடிச் சென்று பிடித்து முன் பறித்துச் சிந்த 3.1.13
564 மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்டக்
கால் கொண்டு போவார் போலக் கடிது கொண்டு அகலப் போக
நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி
மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார் 3.1.14
565 அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்று போக 1
மெய்ப் பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று
செப்பு அரும் துயரம் நீடிச் செயிர்த்து முன் சிவதா என்பார் 3.1.15
566 களி யானையின் ஈர் உரியாய் சிவதா!
எளியார் வலியாம் இறைவா! சிவதா!
அளியார் அடியார் அறிவே! சிவதா!
தெளிவார் அமுதே! சிவதா! சிவதா! 3.1.16
567 ஆறும் மதியும் அணியும் சடை மேல்
ஏறும் மலரைக் கரி சிந்துவதே
வேறுள் நினைவார் புரம் வெந்து அவியச்
சீறும் சிலையாய்! சிவதா! சிவதா! 3.1.17
568 தஞ்சே சரணம் புகுதுந் தமியோர்
நெஞ்சேய் துயரம் கெட நேர் தொடரும்
மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள்
செஞ் சேவடியாய்! சிவதா! சிவதா! 3.1.18
569 நெடியோன் அறியா நெறியார் அறியும்
படியால் அடிமைப் பணி செய்து ஒழுகும்
அடியார்களில் யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய 3.1.19
570 என்று அவர் உரைத்த மாற்றம் எறி பத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி
மன்றவர் அடியார்க்கு என்றும் வழிப் பகை களிறே அன்றோ
கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் 3.1.20
571 வந்தவர் அழைத்த தொண்டர் தமைக் கண்டு வணங்கி உம்மை
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல்
சிந்தி முன் பிழைத்துப் போகா நின்றது இத் தெருவே என்றார் 3.1.21
572 இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப்
பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும்
செங்கண் வாள் அரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற மிக்கார் 3.1.22
573. கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அக் களிறே போலும்
அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசிக்
கொண்டு எழுந்து ஆர்த்துச் சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார் 3.1.23
574. பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக்
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேற் கதுவ அச்சம்
தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய் தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர் 3.1.24
575. கையினைத் துணித்த போது கடல் எனக் கதறி வீழ்ந்து
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த
வெய்ய கோல் பாகர் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக
ஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார் 3.1.25
576 வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி
பட்ட வர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் 3.1.26
577 மற்று அவர் மொழிந்த மாற்றம் மணிக் கடை காப்போர் கேளாக்
கொற்றவன் தன்பால் எய்திக் குரை கழல் பணிந்து போற்றிப்
பற்றலர் இலாதாய் நின் பொற் பட்டமால் யானை வீழச்
செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார் 3.1.27
578 வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்ற
கிளர் மணித் தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க
அளவில் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான்
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க 3.1.28
579 தந்திரத் தலைவர் தாமும் தலைவன் தன் நிலைமை கண்டு
வந்துறச் சேனை தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற
அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப
எந்திரத் தேரும் மாவும் இடை இடை களிறும் ஆகி 3.1.29
580 வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க
வல்லெழும் உசலம் நேமி மழுக் கழுக் கடை முன் ஆன
பல் படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்த வன் கண்
எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும் எங்கும் 3.1.30
581 சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 3.1.31
582 தூரியத் துவைப்பும் முட்டுஞ் சுடர்ப் படை ஒலியும் மாவின்
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும்
வீரர் தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக்
காருடன் கடைநாள் பொங்கும் கடல் எனக் கலித்த அன்றே 3.1.32
583 பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம்
மண்ணிடை இறு கால் மேல் மேல் வந்து எழுந்தது போல் தோன்ற
தண்ணளிக் கவிகை மன்னன் தானை பின் தொடரத் தானோர்
அண்ணலம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான் 3.1.33
584 கடு விசை முடுகிப் போகிக் களிற் றொடும் பாகர் வீழ்ந்த
படு களம் குறுகச் சென்றான் பகை புலத்து அவரைக் காணான்
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தடக் கைத்தாய
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான் 3.1.34
585 பொன் தவழ் அருவிக் குன்றம் எனப் புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான்
வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான் 3.1.35
586 அரசன் ஆங்கு அருளிச் செய்ய அருகு சென்று அணைந்து பாகர்
விரை செய்தார் மாலையோய் நின் விறற் களிற்று எதிரே நிற்கும்
திரை செய் நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்கு செய்தார்
பரசு முன் கொண்டு நின்ற இவர் எனப் பணிந்து சொன்னார் 3.1.36
587 குழையணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்
பிழை படின் அன்றிக் கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு
மழை மத யானைச் சேனை வரவினை மாற்றி மற்ற
உழை வயப் புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் 3.1.37
588 மைத் தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரே இந்த
மெய்த்தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட
அத் தவம் உடையேன் ஆனேன் அம்பல வாணர் அன்பர்
இத்தனை முனியக் கெட்டேன் என் கொலோ பிழை என்று அஞ்சி 3.1.38
589 செறிந்தவர் தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது
அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க
மறிந்த இக் களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள
எறிந்ததே போதுமோதான் அருள் செய்யும் என்று நின்றார் 3.1.39
590 மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர்
சென்னி இத் துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து
பன்னக ஆபரணர் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம்
தன்னை முன் பறித்துச் சிந்தத் தரை படத் துணித்து வீழ்த்தேன் 3.1.40
591 மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும்
மீதங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார்
ஈதங்கு நிகழ்ந்தது என்றார் எறி பத்தர் என்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன் 3.1.41
592 அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ் அபராதத்துக்கு
இங்கு இது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும்
மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று
செங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார் 3.1.42
593 வெந்தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்று
தந்த வாள் வாங்க மாட்டார் தன்னைத் தான் துறக்கும் என்று
சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார் 3.1.43
594 வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர் பால் என்றே
ஆங்கு அவர் உவப்பக் கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி 3.1.44
595 வன் பெருங் களிறு பாகர் மடியவும் உடை வாளைத் தந்து
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும்
அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்று கொண்டு
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி 3.1.45
596 புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி
அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவாறு என்? கெட்டேன்? என்று எதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும் 3.1.46
597 வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற
அளவு இலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக்
கள மணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக்
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப 3.1.47
598 தொழும் தகை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேற்காட்டச்
செழுந் திருமலரை இன்று சினக்கரி சிந்தத் திங்கள்
கொழுந்து அணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு
எழுந்தது பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே 3.1.48
599 ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும்
போர் வடி வாளைப் போக எறிந்து அவர் கழல்கள் போற்றிப்
பார்மிசை பணிந்தான் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார் 3.1.49
600 இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற
அருமறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்று அத்
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார் 3.1.50
601 மட்டவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர்
உட்டரு களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து
முட்ட வெங்கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கிப் பொங்கும்
பட்ட வர்த்தனத்தைக் கொண்டு பாகரும் அணைய வந்தார் 3.1.51
602 ஆன சீர்த் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த
மான வெங் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்து அருளும் என்ன
மேன்மையப் பணி மேற் கொண்டு வணங்கி வெண் குடையின் நீழல்
யானை மேற் கொண்டு சென்றார் இவுளிமேற் கொண்டு வந்தார் 3.1.52
603 அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான் 3.1.53
604 தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமியாரும் சார
எம்பிரான் அன்பரான எறிபத்தர் தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார் 3.1.54
605 மற்றவர் இனையவான வன்பெரும் தொண்டு மண்மேல்
உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும் நாளும்
நல்தவக் கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார் 3.1.55
606 ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்
நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி
நீளும் இத் தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்? 3.1.56
607 தேனாரும் தண் பூங் கொன்றைச் செஞ்சடையவர் பொற்றாளில்
ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி
வானாளும் தேவர் போற்றும் மன்றுளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த திருத் தொழில் இயம்பலுற்றேன் 3.1.57
திருச்சிற்றம்பலம்
3.2 ஏனாதிநாத நாயனார் புராணம் (608-649)
திருச்சிற்றம்பலம்
608 புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும்
தண்டரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில்
வண்டறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்து
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர் 3.2.1
609 வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய்
வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில்
ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார் 3.2.2
610 தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின்
நன்மைக் கண் நின்ற நலம் என்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றும்
தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார் 3.2.3
611 வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம்
நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கடப் பாட்டில்
தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந் தொண்டு
ஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார் 3.2.4
612 நள்ளர்களும் போற்றும் நன்மைத் துறையின் கண்
எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள்
தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின்
உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான் 3.2.5
613 மற்ற அவனும் கொற்ற வடிவாட் படைத் தொழில்கள்
கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும்
பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து
உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான் 3.2.6
614 தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின்
ஆனாத செய் தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம்
மேனாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான் 3.2.7
615 கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயுங்காலை
மதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்றப்
பதியோர் உடன் கூடப் பண்ணி அமர் மேல் சென்று
எதிர் போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்து எழுந்தான் 3.2.8
616 தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம்
கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று
வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என
மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான் 3.2.9
617 வெங்கட் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும்
பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டு
பொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே
அங்கட் கடை நின்று அழைத்தான் ஒலி கேளா 3.2.10
618 ஆர் கொல் பொர அழைத்தார்? என்றரி ஏற்றின் கிளர்ந்து
சேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடு
போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார் 3.2.11
619 புறப்பட்ட போதின் கட் போர்த் தொழில்கள் கற்கும்
விறல் பெருஞ் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார்
மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து
செறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள் 3.2.12
620 வந்தழைத்த மாற்றான் வயப் புலி போத்து அன்னார் முன்
நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால்
இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும்
சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென் 3.2.13
621 என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து
சென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக்
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார் 3.2.14
622 மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே கொடு
மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வன
வாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர்
காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர் 3.2.15
623 கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய
வாளொளி வட்ட முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர்
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர்
ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன 3.2.16
624 வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர்
செங்கண் விழிக் கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன 3.2.17
625 வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன
நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில் 3.2.18
626 குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின வீசியறு துடிகள் புரண்டன
இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை 3.2.19
627 நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர்
தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட
ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் 3.2.20
628 கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன்
நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர்
ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை
போரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர் 3.2.21
629 பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட
விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட
உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் 3.2.22
630 அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு
படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில்
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி
புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன 3.2.23
631 திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர்
புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர்
விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் 3.2.24
632 இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர்
வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்த
தம்முடைய பல் படைஞர் பின்னாகத் தாம் முன்பு
தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார் 3.2.25
633 வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்ப
நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண்
எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர்
தஞ்சிரமும் தோளுரமும் தாளுரமும் தாந்துணித்தார் 3.2.26
634 தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில்
கொலைப் பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார் 3.2.27
635 இந் நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால்
தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டு
மின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறு
அன்னவர் தம் முன் சென்று அதி சூரன் நேர் அடர்ந்தான் 3.2.28
636 மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காணச்
சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்து
பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்துப்
பொற்றடந் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான் 3.2.29
637 போன அதிசூரன் போரில் அவர்க் கழிந்த
மான மிக மீதூர மண் படுவான் கண் படான்
ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே
ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான் 3.2.30
638 கேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும்
நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து
வாட்டாயங் கொள் போர் மலைக்க வருக எனத்
தோட்டார் பூந்தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான் 3.2.31
639 இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்
அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து
கை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தில்
வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார் 3.2.32
640 சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள்
பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து
மற்றவன் முன் சொல்லி வரக்குறித்தே அக் களத்தே
பற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார் 3.2.33
641 தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு 1
தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் 2
ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப்
பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான் 3.2.34
642 வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி
உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு
வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு
புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான் 3.2.35
643 வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து
நின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி
சென்று கிடப்பளவுந் திண் பலகையான் மறைத்தே
முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான் 3.2.36
644 அடல் விடையேறு என்ன அடத்தவனைக் கொல்லும்
இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர்
புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்கக்
கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார் 3.2.37
645 கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத
வெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என்
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன் என்று 3.2.38
646 கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது
செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார் 3.2.39
647 அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்
முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்
இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார் 3.2.40
648 மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளைப்
பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப்
பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார் 3.2.41
649 தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்புடைய
எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி
உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும்
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம் 3.2.42
திருச்சிற்றம்பலம்
3.3. கண்ணப்ப நாயனார் புராணம் (650-835)
திருச்சிற்றம்பலம்
650 மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு 3.3.1
651 இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில்
நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்
மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் 3.3.2
652 குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த
வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் 3.3.3
653 வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும்
புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி
அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் 3.3.4
654 வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் 3.3.5
655 ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி
ஏறுடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும் 3.3.6
656 மைச் செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார்
பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் 3.3.7
657 பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான்
வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் 3.3.8
658 அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவு கோத்துப்
பெரும் புறம் அலையப் பூண்டான் பீலியும் குழையும் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வான் 3.3.9
659 பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர் பேறே
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே
முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று
பரவுதல் செய்து நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார் 3.3.10
660 வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை 3.3.11
661 பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு
எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன
மயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே 3.3.12
662 கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்
ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே
பான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது 3.3.13
663 கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும்
பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி
வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்
அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த 3.3.14
664 அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம்
பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலைக்
கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை
பொருவரைத் தோள்களாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான் 3.3.15
665 கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும்
இரும்புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி
அரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற 3.3.16
666 அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்
திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார்
புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக்
கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே 3.3.17
667 வரையுறை கடவுட் காப்பு மறகுடி மரபில் தங்கள்
புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த
அரை மணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் 3.3.18
668 வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம்
திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் 3.3.19
669 ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப்
பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த
நாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க 3.3.20
670 பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்க
காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித்
தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன
மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில் 3.3.21
671 தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில்
உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ் சொல்
வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார் 3.3.22
672 பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப்
பரிஉடைத் தந்தை கண்டு பைந்தழை கைக் கொண்டோ ச்ச
இரு சுடர்க் குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி 3.3.23
673 துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப்
பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல்
அடிச் சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும்
குடிச் செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து 3.3.24
674 அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின்
வனை தரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும்
சினை மலர்க் காவுகள் ஆடி செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனை மருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி 3.3.25
675 கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி
கொடு வரிக் குருளை செந்நாய் கொடுஞ் செவிச் சாபம் ஆன
முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து
இடு மரத் திரளில் கட்டி வளப்பன எண்ணிலாத 3.3.26
676 அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்
குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல்
புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச்
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் 3.3.27
677 தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால்
சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டி
முந்தை அத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான் 3.3.28
678 வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று
ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு
மாடுயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம் 3.3.29
679 மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச்
சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார் 3.3.30
680 . மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா எங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்து
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் 3.3.31
681 பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த
தேனலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும்
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் செய்தார் 3.3.32
682 சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த
நலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர்
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் 3.3.33
683 ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி
மெய் வரைத் தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும்
கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச்
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர் 3.3.34
684 செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு
அந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள் 3.3.35
685 அயல் வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார்
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார் 3.3.36
686 பாசிலைப் படலைச் சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக்
காசுடை வடத் தோல் கட்டி கவடி மெய்க் கலன்கள் பூண்டார்
மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி
ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார் 3.3.37
687 தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்
கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் 3.3.38
688 குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆட
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட
வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்
அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் 3.3.39
689 வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத்
தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள் 3.3.40
690 பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்த
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக்
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம் 3.3.41
691 வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்று
கண்ணகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல்
எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லாப்
புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர் அதன் பொலிவு போல்வார் 3.3.42
692 இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய
மை வண்ண வரை நெடுந் தோள் நாகன் தானும் மலை எங்கும்
வனம் எங்கும் வரம்பில் காலம்
கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கண
நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து
மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின்
பெரு முயற்சி மெலிவன் ஆனான் 3.3.43
693 அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும்
அடலேனம் புலி கரடி கடமை ஆமா
வெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள்
மிக நெருங்கி மீதூர் காலைத்
திங்கள் முறை வேட்டை வினை தாழ்தது என்று சிலை
வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல்
நாகன் பால் சார்ந்து சொன்னார் 3.3.44
694 சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து
வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல்
வேட்டையினில் முயல கில்லேன்
என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கைக்
கொண்மின் என்ற போதின்
அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி
இம் மாற்றம் அரைகின்றார்கள் 3.3.45
695 இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி இனிது
உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்
அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி
வேறு உளதோ அதுவே அன்றி
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே
பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை
ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் 3.3.46
696 சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை
முன் கொண்டுவரச் செப்பி விட்டு
மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போகக்
காடு பலி மகிழ்வு ஊட்ட
தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என
அங்குச் சார்ந்தோர் சென்று
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து
விருப்பினோடும் கடிது வந்தாள் 3.3.47
697 கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை
மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து
மனவு மணி வடமும் பூண்டு
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தாழைப்பீலி
மரவுரி மேல் சார எய்திப்
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர்
கோமானைப் போற்றி நின்றாள் 3.3.48
698 நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி
அன்னை நீ நிரப்பு நீங்கி
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன்
எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை
வளனும் வேண்டிற்று எல்லாம்
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி
என் என்றாள் அணங்கு சார்ந்தாள் 3.3.49
699 கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள்
குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு
பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை
புகுகின்றான் அவனுக்கு என்றும்
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு
புலங் கவர் வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி
ஊட்டு என்றான் கவலை இல்லான் 3.3.50
700 மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து
இங்கு அன்போடு வருகின்றேனுக்கு
எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன்
மைந்தன் திண்ணனான வெற்றி வரிச்
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான்
என்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன
குறைவின்றிக் கொண்டு போனாள் 3.3.51
701 தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார்
சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள்
மைவிரவு நறுங் குஞ்சி வாசக் கண்ணி மணி நீல
ஒன்று வந்தது என்னக்
கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி
தாதை கழல் வணங்கும் போதில்
செய்வரை போல் புயம் இரண்டும் செறியப் புல்லிச்
செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான் 3.3.52
702 முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன்
மூப்பு எனை வந்து அடைந்தலினால் முன்புபோல
என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி
எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய்
மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு மாறு
எறிந்து மா வேட்டை ஆடி என்றும்
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்றுடைய
தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே 3.3.53
703 தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு தங்கள்
குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட
குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை
உடை தோலும் வாங்கிக் கொண்டு
சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்குத் திருத்
தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் 3.3.54
704 நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு
பரித்து அதன் மேல் நலமே செய்து
தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட திண்
சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட
இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக என
விடை கொடுத்தான் இயல்பில் நின்றான் 3.3.55
705 செங்கண் வயக் கோளரியேறு அன்ன திண்மை
திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடை
கொண்டு புறம் போந்து வேடரோடும்
மங்கல நீர்ச் சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின்
புலர் காலை வரிவிற் சாலைப்
பொங்கு சிலை அடல் வேட்டைக் கோலம் கொள்ளப் புனை
தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் 3.3.56
706 நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறி கொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொளப் பின்பு செய்து 3.3.57
707 முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறாரச் சாத்தி
மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்
மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக 3.3.58
708 கண்டத்திடை வெண் கவடிக் கதிர் மாலை சேர
கொண்டக் கொடு பன் மணி கோத்திடை ஏனக் கோடு
துண்டப் பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க 3.3.59
709 மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலைத் தாழத்
தாரிற் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச்
சேர்விற் பொலி கங்கண மீது திகழ்த முன் கைக்
கார்விற் செறி நாண் எறி கைச் செறி கட்டி கட்டி 3.3.60
710 அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்து
திரையில் படு வெள்ளலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி
நிரையில் பொலி நீளுடை தோல்கரி கைப்புறம் சூழ்
விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி 3.3.61
711 வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப் பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன்
சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி 3.3.62
712 அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித்
துங்கப் பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப
வெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார் 3.3.63
713 பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி
வில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கு முன்றில்
சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் 3.3.64
714 மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில்
பானற்குல மாமலரில் படர் சோதியார் முன்
தேனற்றசை தேறல் சருப் பொரி மற்றும் உள்ள
கானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள் 3.3.65
715 நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி
உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள வல்ல
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் 3.3.66
716 அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச்
செப்பற்கு அரிதாய சிறப்பு எதிர் செய்து போக்கிக் கைப் பற்றிய
திண் சிலை கார் மழை மேகம் என்ன
மெய்ப் பொற்புடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் 3.3.67
717 தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர்
வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார்
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்ணிலார்
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே 3.3.68
718 வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன்
சென்று நீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய்
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம் 3.3.69
719 போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்பச்
சார் வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முன்னே
கார் வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள்
வார் வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் 3.3.70
720 நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்று நீடும் அத்
தண்ணிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமைக்
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன்
எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார் 3.3.71
721 கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம்
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்டகை விளிச் சிறந்த ஓசை செல்லவும்
காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே 3.3.72
722 நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு காடு கூட நேர்
வருங்கருஞ் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான்
பொருந் தடந் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெருங்
கருந்தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே 3.3.73
723 தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம்
பன்றி வெம் மரைக் கணங்கள் ஆதியான பல் குலம்
துன்றி நின்ற என்றடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே
வன் தடக்கை வார்கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார் 3.3.74
724 ஓடி எறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பு எலாம்
நெடிய திண் வலைத் தொடக்கு நீளிடைப் பிணித்து நேர்
கடி கொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின்
செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் 3.3.75
725 வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன்
மஞ்சலைக்கு மாமலை சரிப் புறத்து வந்த மா
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள்
செஞ்சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர் 3.3.76
726 வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர்
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்
மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக்
கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம் 3.3.77
727 ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலைக் குலம்
கான மேதி யானை வெம் புலிக் கணங்கள் கான் மரை
ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன்
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் 3.3.78
728 தாளறுவன் இடை துணிவன தலை துமிவன கலைமா
வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா
நீளுடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா
மீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே 3.3.79
729 வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்
செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனைப்
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள் 3.3.80
730 பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய்
முன் நடுமுக மிசை உருவிட முடுகிய விசையுடன் அக்
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத்
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் 3.3.81
731 கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர்
குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே
பொரு கரி யொடு சின அரியிடை புரையறவுடல் புகலால்
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே 3.3.82
732 நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான்
தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம்
வாள் விடுகதிர் மதி பிரிவுற வருமென விழும் உழையைக்
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே 3.3.83
733 கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்
அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால்
மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதி 3.3.84
734 பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மா
உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய்
நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர்
புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவுளவே 3.3.85
735 துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார்
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்
அடி தளர்வுறு கரு உடையன அணை உறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் 3.3.86
736 இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக்
கைவரைகலும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம்
பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி
மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில் 3.3.87
737 போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு
ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்
தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல்
ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் 3.3.88
738 நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் 3.3.89
739 குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இடக் குரல் நீள்
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடித்
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல்
சென்று அதனிடை நின்றது வலிது தெருமர நிரையில் 3.3.90
740 அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன்
கைத் தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி
மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் 3.3.91
741 வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் 3.3.92
742 மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து
வெற்றி கொள் வேட்டைக் காடு குருகுவோம் மெல்ல என்றார் 3.3.93
743 என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன்
நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் 3.3.94
744 பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார்
செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை 3.3.95
745 நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் 3.3.96
746 ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம் 3.3.97
747 உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும்
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார் 3.3.98
748 ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு
வாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணி
ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார் 3.3.99
749 அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம்
களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு
குளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார் 3.3.100
750 கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட
இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான் 3.3.101
751 முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன
அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும் 3.3.102
752 நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சாரா அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி நேர் படச் செல்லும் போதில் 3.3.103
753 திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே
அம் கண்ணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார் 3.3.104
754 மாகமார் திருக் காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள
ஏக நாயகரைக் கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின்
வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும்
மோகமாய் ஓடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார் 3.3.105
755 நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க மலர்க் கண்ணீர் அருவி பாய
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
படி இலாப் பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற 3.3.106
756 வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல்
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்
இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் 3.3.107
757 கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்தப்
பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான் 3.3.108
758 வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டிக்
குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி
ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன்பு அறைந்த தேர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் 3.3.109
759 உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை
எண்ணிய இவைகொலாம் என்று இது கடைப் பிடித்துக் கொண்டு அவ்
அண்ணலைப் பிரிய மாட்டா அளவில் ஆதரவு நீட 3.3.110
760 இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே
இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை
இவர் தமைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால
இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று 3.3.111
761 போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆப் போல்வர்
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் 3.3.112
762 ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன்
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று
சோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகி
வார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க் கையால் தொழுது போந்தார் 3.3.113
763 முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன்
பின்பு வந்து அணைய முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி
அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்
பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார் 3.3.114
764 காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்
மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன் 3.3.115
765 அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு என்ன நீங்கான்
இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான்
நம்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் 3.3.116
766 என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்
வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு 3.3.117
767 கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை
ஏலவே கோலிக் கூட அதன் மிசை இடுவார் ஆனார் 3.3.118
768 மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறு
தரும் பரிசு உணரான் மற்றைத் தசை புறத்து எறியா நின்றான் 3.3.119
769 தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்று இதனைத் தீர்க்கல்
ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டைக் கானில்
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணிப் போனார் 3.3.120
770 கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்
ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த
தூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார் 3.3.121
771 தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி
இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம் 3.3.122
772 இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின்
முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்
வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார் 3.3.123
773 தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி
மலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை
இலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து 3.3.124
774 கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு
அழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில்
பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார் 3.3.125
775 அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்
மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான் 3.3.126
776 அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கி
மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார் 3.3.127
777 சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் 3.3.128
778 கழை சொரி தரளக் குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்க
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத்
தழை கதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்
குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும் 3.3.129
779 விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி
பொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும்
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும் எங்கும் 3.3.130
780 செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும்
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும்
ஐந்தும் ஆறடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும்
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை 3.3.131
781 வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டுக்
கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர்
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி 3.3.132
782 ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும்
வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலே
ஊறுசெய் காலம் சிந்தித்து உருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையும் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார் 3.3.133
783 மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை
எய்காட்டின் மாவளைக்க இட்ட கரும் திரை எடுத்துக்
கை காட்டும் வான் போலக் கதிர் காட்டி எழும் போதில் 3.3.134
784 எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக்
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார் 3.3.135
785 வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் 3.3.136
786 மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்
தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து
போவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்
ஆவதோ எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார் 3.3.137
787 பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்
இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும்
செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின்
விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் 3.3.138
788 பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி
வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார் 3.3.139
789 பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர்த் திங்கள்
அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டு
தணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்திடை சார்ந்தார் 3.3.140
790 இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால்
மைவண்ணக் கருங் குஞ்சி வன வேடர் பெருமானார்
கைவண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனி ஆடிச்
செய்வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன 3.3.141
791 திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல்
பெருமலைகள் இடைச் சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கான் இடை நின்று
ஒரு வழிச் சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி 3.3.142
792 பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடுருவும்
அயில் முகவெங் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள்
துயில் இடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து
வெயில் படு வெங்கதிர் முதிரத் தனி வேட்டை வினை முடித்தார் 3.3.143
793 பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல்
இட்டு அருகு தீக் கடை கோல் இரும் சுரிகை தனை உருவி
வெட்டி நறுங் கோல் தேனும் மிக முறித்துத் தேக்கு இலையால்
வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் 3.3.144
794 இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில்
வெம் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள்
கொந்தி அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து 3.3.145
795 வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்
ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல் இலையில் இட்டு
காய நெடும் கோல் கோத்துக் கனலின் கண் உறக்காய்ச்சி
தூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார் 3.3.146
796 எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்
வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்தி
அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத்
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது 3.3.147
797 நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி
கல்லையினிற் படைத்துத் தேன் பிழிந்து கலந்து கொண்டு
வல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் உந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் 3.3.148
798 வந்து திருக் காளத்தி மலை ஏறி வனசரர்கள்
தந்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின்
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் 3.3.149
799 ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால்
ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில்
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்
தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார் 3.3.150
800 இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி
அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார் 3.3.151
801 மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர்
தாம் முயலும் பூசனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித்
தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால்
ஆமுறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுவாரால் 3.3.152
802 நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின்
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு
பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக்
காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார் 3.3.153
803 முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத்
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற
அன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ? 3.3.154
804 அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப
மன்னிய ஆகமப் படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு
என்னுடைய நாயகனே இது செய்தார் தமைக் காணேன்
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என 3.3.155
805 அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே
மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி
வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்
நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள் என்று 3.3.156
806 அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார் 3.3.157
807 பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல்
அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால்
விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்த
செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால். 3.3.158
808 உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும்
பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால்
ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப்
பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம். 3.3.159
809 இம்மலைவந் தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே
மெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால்
செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை
எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா 3.3.160
810 வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்
நையுமனத் தினிமையினால் நையமிக மென்றிடலால்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்
எய்யும்வரிச் சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய. 3.3.161
811 மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்
இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும்
முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ
அன்பில்நினைந் தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல. 3.3.162
812 உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்
எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்
மனக் கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து
புனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போனார் 3.3.163
813 கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப்
புனை தவத்து மாமுனிவர் புலர் அளவும் கண் துயிலார்
மனம் உறும் அற்புதமாகி வரும் பயமும் உடன் ஆகித்
துனை புரவித் தனித் தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற 3.3.164
814 முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப்
பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்து
மன்னு திருக் காளத்தி மலை ஏறி முன்பு போல்
பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார் 3.3.165
815 கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம்
வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை
அருமறை முனிவனார் வந்தணை வதன் முன்னம் போகித்
தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை ஆடி 3.3.166
816 மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார் 3.3.167
817 இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன்
மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்ய
இத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும்
அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் 3.3.168
818 அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு
திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் 3.3.169
819 வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக்
கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார் 3.3.170
820 விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது
ஒழிந்திடக் காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் 3.3.171
821 வாளியுந் தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா
மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ? விலங்கின் சாதி
ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ? அறியேன் என்று
நீளிருங் குன்றைச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார் 3.3.172
822 வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும்
நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார 3.3.173
823 பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ?
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ ?
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ?
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் 3.3.174
824 என் செய்தால் தீருமோதான்? எம்பிரான் திறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன் மொய் கழல் வேடர் என்றும்
மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப்
பொன்செய் தாழ் வரையிற் கொண்டு வருவன் நான் என்று போனார் 3.3.175
825 நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும்
இனத்திடை பிரிந்த செங்கணேறு என வெருக் கொண்டு எய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்த
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் 3.3.176
826 மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக்
கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழியக் கண்டும்
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச் செயல் என்று பார்ப்பார்
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார் 3.3.177
827 இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண்
முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப 3.3.178
828 நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார் 3.3.179
829 வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம்
நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் 3.3.180
830 கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று
புண்டரு குருதி நிற்க மற்றைக் கண் குருதி பொங்கி
மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்
உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று 3.3.181
831 கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு
எண்ணுவர் தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி
உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர் 3.3.182
832 செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாக
கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்ற 3.3.183
833 கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும்
ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப 3.3.184
834 பேறினி இதன் மேல் உண்டோ ? பிரான் திருக் கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவும் கையை
ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தில்
மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார் 3.3.185
835 மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேற் கொண்டே
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திருத் தொண்டு புகலல் உற்றேன் 3.3.186
திருச்சிற்றம்பலம்
3.4. குங்குலியக் கலய நாயனார் புராணம் (836 - 870)
திருச்சிற்றம்பலம்
836 வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயிற் பதி எறி நீர்க் கங்கை
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றைக்
காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும் 3.4.1
837 வயல் எலாம் விளை செஞ் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம்
அயல் எலாம் வேள்விச் சாலை அணை எலாம் கழுநீர்க் கற்றை
புயல் எலாம் கமுகின் காடு அப்புறமெலாம் அதன் சீர் போற்றல்
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழுந் திருக் கடவூர் என்றும் 3.4.2
838 குடங் கையின் அகன்ற உண் கண் கடைசியர் குழுமி ஆடும்
இடம் படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல்
வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கைச்
சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல் 3.4.3
839 துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி
செங்கயல் பாய்ந்து வாசக் கமலமும் தீம் பால் நாறும்
மங்குல் தோய் மாடச் சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும்
அங்கவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும் 3.4.4
840 மருவிய திருவின் மிக்க வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப் பிரான் கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார் 3.4.5
841 பாலனாம் மறையோன் பற்றப் பயங்கொடுத்து அருளும் ஆற்றால்
மாலும் நான் முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து
காலனார் உயிர் செற்றார்க்குக் கமழ்ந்த குங்குலியத் தூபம்
சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார் 3.4.6
842 கங்கை நீர் கலிக்கும் சென்னிக் கண்ணுதல் எம்பிரார்க்கு
பொங்கு குங்குலியத் தூபம் பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும்
தங்கள் நாயகர்க்குத் தாம் முன்செய் பணி தவாமை உய்த்தார் 3.4.7
843 இந்நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கள் மாளப் பயில் மனை வாழ்க்கை தன்னில்
மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள் 3.4.8
844 யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறிப்
பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி
காதல்செய் மனைவியார் தம் கணவனார் கலயனார் கைக்
கோதில் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் 3.4.9
845 அப்பொழுது அதனைக் கொண்டு நெல் கொள்வான் அவரும் போக
ஒப்பில் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான்
இப்பொதி என் கொல்? என்றார்க்கு உள்ளவாறு இயம்பக் கேட்டு
முப்புரி வெண்நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனைச் சொன்னார் 3.4.10
846 ஆறு செஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கான
நாறுகுங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல
பேறு மற்றிதன் மேல் உண்டோ பெறாப்பேறு பெற்று வைத்து
வேறினிக் கொள்வது என் என்று உரைத்தெழும் விருப்பின் மிக்கார் 3.4.11
847 பொன் தரத் தாரும் என்று புகன்றிட வணிகன் தானும்
என் தர இசைந்தது என்னத் தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழுகளிப்பினோடும் 3.4.12
848 விடையவர் வீரட் டானம் விரைந்து சென்று எய்தி என்னை
உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில்
அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்கச்
சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு இல்லார் 3.4.13
849 அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன்
தன் பெரு நிதியந் தூர்த்துத் தரணி மேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில் பல் வளனும் பொங்க
மல்பெருஞ் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட 3.4.14
850 மற்றவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி
அற்றை நாள் இரவு தன்னில் அயர்வுறத் துயிலும் போதில்
நல்தவக் கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் 3.4.15
851 கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும்
அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள
எம்பிரான் அருளாம் என்றே இருகரங் குவித்துப் போற்றித்
தம் பெரும் கணவனார்க்குத் திரு அமுது அமைக்கச் சார்ந்தார் 3.4.16
852 காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலயனாராம்
ஆலும் அன்புடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால்
சாலநீ பசித்தாய் உன் தன் தட நெடு மனையில் நண்ணிப்
பாலின் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார் 3.4.17
853 கலையனார் அதனைக் கேளாக் கை தொழுது இறைஞ்சிக் கங்கை
அலைபுனல் சென்னியார் தம் அருள் மறுத்து இருக்க அஞ்சித்
தலை மிசைப் பணிமேற் கொண்டு சங்கரன் கோயில் நின்று
மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையைச் சார்ந்தார் 3.4.18
854 இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று திரு மனையாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் 3.4.19
855 மின்னிடை மடவார் கூற மிக்க சீர் கலயனார் தாம்
மன்னிய பெரும் செல்வத்து வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம் என்று கைதலைமேல் கொண்டார் 3.4.20
856 பதும நற்திருவின் மிக்கார் பரிகலந் திருத்திக் கொண்டு
கது மெனக் கணவனாரைக் கண்ணுதற்கு அன்பரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அருமறைக் கலயனார் தாம் 3.4.21
857 ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில் 3.4.22
858 செங்கண் வெள் ஏற்றின் பாகன் திருப் பனந் தாளில் மேவும்
அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கித் தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமைக்
கங்குலும் பகலும் தீராக் கவலை உற்று அழுங்கிச் செல்ல 3.4.23
859 மன்னவன் வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்க
நன்னேறி கலயனார் தாம் நாதனை நேரே காணும்
அந்நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பித் தாமும்
மின்னெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார் 3.4.24
860 மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று
தொழுது போந்து அன்பினோடும் தொன்மறை நெறி வழாமை
முழுதுலகினையும் போற்ற மூன்று எரிபுரப் போர் வாழும்
செழு மலர்ச் சோலை வேலித் திருப் பனந் தாளில் சேர்ந்தார் 3.4.25
861 காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும்
தீதிலாச் சேனை செய்யும் திருப்பணி நேர் படாமை
மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி
மாதவக் கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி 3.4.26
862 சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி
யானும் இவ் இளைப் புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று
தேனலர் கொன்றையார் தம் திருமேனிப் பூங்கச் சேய்ந்த
மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார் 3.4.27
863 நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ? கலயனார் தம் ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார் 3.4.28
864 பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ மாரி
தேர்மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போலக் களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலைமேல் வைத்து 3.4.29
865 விண் பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரில் மேருத்
திண்சிலை குனிய நின்றார் செந்நிலைக் காணச் செய்தீர்
மண்பகிர்ந்தவனும் காணா மலரடி இரண்டும் யாரே
பண்புடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் 3.4.30
866 என்றுமெய்த் தொண்டர் தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து
நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை ஆடல் செய்யும் மலர்க் கழல் வாழ்த்தி வைகி 3.4.31
867 சிலபகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி
நிலவுதம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகரில் காழித்
தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகும்
அலர்புகழ் அரசுங்கூட அங்கு எழுந்து அருளக் கண்டு 3.4.32
868 மாறிலா மகிழ்ச்சி பொங்க எதிர் கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால்
ஆறு நற்சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி
நாறு பூங்கொன்றை வேணி நம்பர் தம் அருளும் பெற்றார் 3.4.33
869 கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவுஞ் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார் 3.4.34
870 தேனக்க கோதை மாதர் திருநெடுந் தாலி மாறிக்
கூனல்தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த
பான்மைத்திண் கலயனாரைப் பணிந்து அவர் அருளினாலே
மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்தல் உற்றேன் 3.4.35
திருச்சிற்றம்பலம்
3.5. மானக்கஞ்சாற நாயனார் புராணம் (871-902)
திருச்சிற்றம்பலம்
871 மேலாறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது
நூலாறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது
கோலாறு தேன் பொழியக் கொழுங் கனியின் சாறு ஒழுகும்
காலாறு வயல் கரும்பின் கழழ் சாறூர் கஞ்சாறூர் 3.5.1
872 கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்து ஒதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக் கண் உறைத்து மலர்க்கண் சிவக்கும்
தண்ணீர் மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலை வணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த வள வயல்கள் உள அயல்கள் 3.5.2
873 புயல் காட்டுங் கூந்தல் சிறு புறங்காட்டப் புன மயிலின்
இயல் காட்டி இடை ஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண்
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்டக் கண் மூரிக்
கல் காட்டுந் தடங்கள் பல கதிர்காட்டுந் தடம் பணைகள் 3.5.3
874 சேர் அணி தண் பழன வயல் செழுநெல்லின் கொழுங் கதிர் போய்
வேறருகு மிடை வேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலை வளைப்ப வண்டலை தண்டலை உழவர்
தாறிரியும் நெடுங்கொடுவாள் அனையயுள தனி இடங்கள் 3.5.4
875 பாங்கு மணிப்பல வெயிலும் சுலவெயிலும் உள மாடம்
ஞாங்கரணி துகிற் கொடியும் நகிற் கொடியும் உள அரங்கம்
ஓங்கு நிலைத் தோரணமும் பூரண கும்பமும் உளவால்
பூம் கணை வீதியில் அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு 3.5.5
876 மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும்
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றிப்
புனை சாயல் மயில் அனையார் நடம் புரியப் புகல் முழவம்
கனை சாறு மிடை வீதிக் கஞ்சாறு விளங்கியதால் 3.5.6
877 அப் பதியில் குலப் பதியாய் அரசர் சேனா பதியாம்
செப்பவருங் குடி விளங்க திரு அவதாரம் செய்தார்
மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை
வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார் 3.5.7
878 பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனி மதியின்
அணிவுடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற
தணிவில் பெரும் பேறுடையார் தம் பெருமான் கழல் சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார் 3.5.8
879 மாறில் பெருஞ்செல்வத்தின் வளம் பெருக மற்றதெலாம்
ஆறுலவுஞ் சடைக் கற்றை அந்தணர் தம் அடியாராம்
ஈறில் பெருந் திருவுடையார் உடையார் என்றியாவையுநேர்
கூறுவதன்முன் அவர் தங்குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார் 3.5.9
880 விரிகடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இத் தன்மையராம்
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளைப் பேறு இன்மையினால்
அரியறியா மலர்க் கழல்கள் அறியாமை அரியாதார்
வரு மகவு பெறல் பொருட்டு மனத்தருளால் வழுத்தினார் 3.5.10
881 குழைக் கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே
மழைக்கு உதவும் பெருங்கற்பின் மனைக் கிழத்தியார் தம்பால்
இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த இப் பிறவிக்கு கொடுஞ்சூழல்
பிழைக்கும் நெறி தமக்கு உதவப் பெண் கொடியைப் பெற்று எடுத்தார் 3.5.11
882 பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்பச்
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்கத் தேவர் பிரான்
அறந்தலை நின்று அவர்க்கெல்லாம் அளவில் வளத்து அருள் பெருக்கிப்
புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார் 3.5.12
883 காப்பணியும் இளங்குழவிப் பதநீக்கிக் கமழ் சுரும்பின்
பூப்பயிலுஞ் சுருள் குழலும் பொலங்குழையும் உடன் தாழ
யாப்புறு மென் சிறுமணிமேகலை அணி சிற்றாடையுடன்
கோப்புமை கிண்கிணி அசையக் குறுந்தளிர் மெல்லடி ஒதுங்கி 3.5.13
884 புனை மலர்மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண்
மனையகத்து மணிமூன்றில் மணல் சிற்றில் இழைத்து மணிக்
கனை குரல் நூபுரம் அலையக் கழன்முதலாய் பயின்று முலை
நனை முகஞ்செய் முதல் பருவம் நண்ணினள் அப்பெண் அமுதம் 3.5.14
885 உறுகவின் மெய்ப் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த
முறுவல் புற மலராத முகிண்முத்த நகை என்னும்
நறுமுகை மென் கொடி மருங்குல் நளிர்ச் சுருள் அந்தளிர் செங்கை
மறுவில் கொழுந்தினுக்கு மணப் பருவம் வந்தணைய 3.5.15
886 திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம் எனும்
ஒரு மகளை மண் உலகில் ஓங்கு குல மரபினராய்க்
கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர்
பெரு மகற்கு மகள் பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் 3.5.16
887 வந்த மூது அறிவோரை மானக்கஞ் சாறனார்
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மணத் திறம் கேட்டே
எந்தமது மரபினுக்குத் தரும் பரிசால் ஏயும் எனச்
சிந்தை மகிழ்வுற உரைத்து மணநேர்ந்து செலவிட்டார் 3.5.17
888 சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்பக்
குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிக விரும்பி
நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வாய
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார் 3.5.18
889 மங்கலமாஞ் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார்
தங்குல நீள் சுற்றம் எலாம் தயங்கு பெருங்களி சிறப்பப்
பொங்கிய வெண் முளைப் பெய்து பொலங் கலங்களிடை நெருங்கக்
கொங்கலர் தண் பொழில் மூதூர் வதுவை முகங் கோடித்தார் 3.5.19
890 கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப் பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ்ப் பெருமை ஏயர் குலப் பெருமானும்
தஞ்சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப
மஞ்சாலும் மலர்ச் சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய 3.5.20
891 வள்ளலார் மணம் அவ்வூர் மருங்கு அணையா முன் மலர்க்கண்
ஒள்ளிழையைப் பயந்தார் தந் திருமனையில் ஒரு வழியே
தெள்ளுதிரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்தம்
உள்ள நிலைப் பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார் 3.5.21
892 முண்டநிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில்
கொண்டசிகை முச்சியின் கண் கோத்தணிந்த எற்பு மணி
பண்டொருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த
வெண்டரளம் எனக் காதின் மிசை அசையும் குண்டலமும் 3.5.22
893 அவ்வென்பின் ஒளிமணி கோத்து அணிந்த திருத் தாழ்வடமும்
பைவன்பேர் அரவு ஒழியத் தோளில் இடும் பட்டிகையும்
மைவந்த நிறக் கேச வடப் பூண் நூலும் மனச்
செவ்வன்பர் பவமாற்றுந் திரு நீற்றுப் பொக்கணமும் 3.5.23
894 ஒரு முன் கைத்தனி மணிகோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும்
அருமறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திருவுடையும்
இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுதரிய திருவடியும்
திருவடியில் திருப் பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க 3.5.24
895 பொடி மூடு தழல் என்னத் திரு மேனி தனிற்பொலிந்த
படி நீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க்
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார் 3.5.25
896 வந்து அணைந்த மா விரத முனிவரைக் கண்டு எதிர் எழுந்து
சிந்தை களி கூர்ந்து மகிழ் சிறந்த பெருந் தொண்டனார்
எந்தை பிரான் புரி தவத்தோர் இவ் இடத்தே எழுந்து அருள
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார் 3.5.26
897 நற்றவராம் பெருமானார் நலமிகும் அன்பரை நோக்கி
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன்
பெற்றது ஒரு பெண்கொடி தன் வதுவை எனப் பெருந்தவம்
மற்று உமக்குச் சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார் 3.5.27
898 ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி
மானக்கம் சாறனார் மணக் கோலம் புனைந்து இருந்த
தேனக்க மலர்க் கூந்தல் திரு மகளைக் கொண்டு அணைந்து
பானற்கந் தர மறைத்து வரும் அவரைப் பணிவித்தார் 3.5.28
899 தம் சரணத்து இடைப் பணிந்து தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன்
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர்க் கூந்தல் புறம் நோக்கி
அஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து அணங்கு இவள் தன் மயிர் நமக்குப்
பஞ்ச வடிக்காம் என்றார் பரவ அடித் தலங்கொடுப்பார் 3.5.29
900 அருள் செய்த மொழி கேளா அடல் சுரிகைதனை உருவிப்
பொருள் செய்தாம் எனப் பெற்றேன் எனக் கொண்டு பூங்கொடி தன்
இருள் செய்த கருங்கூந்தல் அடியில் அரிந்து எதிர் நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர்க் கரத்தினிடை நீட்ட 3.5.30
901 வாங்குவார் போல் நின்ற மறைப் பொருளாம் அவர் மறைந்து
பாங்கின் மலை வல்லியுடன் பழைய மழவிடை யேறி
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்கத்
தூங்கிய பொன்மலர் மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார் 3.5.310
902 விழுந்து எழுந்து மெய்ம் மறந்த மெய் அன்பர் தமக்கு மதிக்
கொழுந்து அலைய விழுங் கங்கை குதித்த சடைக் கூத்தனார்
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசிந்தச்
செழும் புவனங்களில் ஏறச் செய்தோம் என்று அருள் செய்தார் 3.5.32
903 மருங்கு பெருங்கண நாதர் போற்றிசைப்ப வானவர்கள்
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர்தாம்
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்தையர்
பெருங் கருணைத் திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார் 3.5.33
904 தொண்டனார் தமக்கு அருளிச் சூழ்ந்து இமையோர் துதி செய்ய
இண்டை வார் சடை முடியார் எழுந்து அருளிப் போயினார்
வண்டுவார் குழற் கொடியைக் கைப் பிடிக்க மணக் கோலம்
கண்டவர்கள் கண் களிப்பக் கலிக் காமனார் புகுந்தார் 3.5.34
905 வந்தணைந்த ஏயர் குல மன்னவனார் மற்றந்தச்
சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர் பால் கேட்டருளிப்
புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றிச்
சிந்தை தளர்ந்து அருள் செய்த திருவாக்கின் திறம் கேட்டு 3.5.35
906 மனந்தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால்
புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புரிந்து
தனம் பொழிந்து பெருவதுவை உலகெலாம் தலை சிறப்ப
இனம்பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்றணைந்தார் 3.5.36
907 ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த
பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே
மருவிய கமரிற் புக்க மா வடு விடேல் என் ஓசை
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல் உற்றேன் 3.5.37
திருச்சிற்றம்பலம்
3.6. அரிவாட்டாய நாயனார் புராணம் (908-930)
திருச்சிற்றம்பலம்
908 வரும் புனற்பொன்னி நாட்டு ஒரு வாழ்பதி
கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென்கண் உடையவாய் விட்டு நீள்
கரும்பு தேன் பொழியும் கணமங்கலம் 3.6.1
909 செந்நெல்லார் வயல் காட்ட செந்தாமரை
முன்னர் நந்துமிழ் முத்தம் சொரிந்திடத்
துன்னு மள்ளர் கைம் மேற் கொண்டு தோன்றுவார்
மன்னு பங்கய மாநிதி போன்றுள்ளார் 3.6.2
910 வளத்தில் நீடும் பதியதன் கண்வரி
உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும்
களத்தின் மீதும் கயல்பாய் வயல் அயல்
குளத்தும் நீளும் குழையுடை நீலங்கள் 3.6.3
911 அக்குல பதி தன்னில் அறநெறித்
தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்
தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய
மிக்க செல்வத்து வேளாண் தலைமையார் 3.6.4
912 தாயனார் எனும் நாமம் தரித்துள்ளார்
சேய காலந் தொடர்ந்துந் தெளிவிலா
மாயனார் மண் கிளைத்து அறியாத அத்
தூய நாண் மலர்ப் பாதம் தொடர்ந்துளார் 3.6.5
913 மின்னும் செஞ்சடை வேதியர்க்காம் என்று
செந் நெல் இன்னமுதோடு செங்கீரையும்
மன்னு பைந்துணர் மாவடுவும் கொணர்ந்து
அன்ன என்றும் அமுது செய்விப்பாரால் 3.6.6
914 இந்த நன்னிலை இன்னல் வந்து எய்தினும்
சிந்தை நீங்காச் செயலின் உவந்திட
முந்தை வேத முதல்வர் அவர் வழி
வந்த செல்வம் அறியாமை மாற்றினார் 3.6.7
915 மேவு செல்வம் களிறு உண் விளங்கனி
ஆவதாகி அழியவும் அன்பினால்
பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அத்
தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார் 3.6.8
916 அல்லல் நல்குரவு ஆயிடக் கூலிக்கு
நெல் அறுத்து மெய்ந் நீடிய அன்பினால்
நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்கு
ஒல்லை இன்னமுதாக் கொண்டு ஒழுகுவார் 3.6.9
917 சாலி தேடி அறுத்தவை தாம் பெறும்
கூலி எல்லாம் திரு அமுதாக் கொண்டு
நீல நெல்லரி கூலி கொண்டு உண்ணும் நாள்
மால் அயற்கு அரியார் அது மாற்றுவார் 3.6.10
918 நண்ணிய வயல்கள் எல்லாம் நாள் தொறும் முன்னம் காண
வண்ணவார் கதிர்ச் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த
புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார் 3.6.11
919 வைகலும் உணவு இலாமை மனைப் படப்பையினிற் புக்கு
நைகரம் இல்லா அன்பின் நங்கை கைஅடகு கொய்து
பெய்கலத்து அமைத்து வைக்கப் பெருந்தகை அருந்தித் தங்கள்
செய்கடன் முட்டா வண்ணந் திருப்பணி செய்யும் நாளில் 3.6.12
920 மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும்
வினை செயல் முடித்துச் செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழியப் பெற்றேன் 3.6.13
921 முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும்
அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர் கூடையில் சுமந்து போகப்
பின்புபோம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்திச் சென்றார் 3.6.14
922 போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார் மட்கல மூடுகையால்
காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடைச் சிந்தக் கண்டு
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று 3.6.15
922 நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த
அல்லல் தீர்த்தாள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு
எல்லையில் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன் என்று
ஒல்லையில் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் 3.6.16
924 ஆட் கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர் கொல் என்னாப்
பூட்டிய அரிவாள் பற்றிப் புரையற விரவும் அன்பு
காட்டிய நெறியின் உள்ளந் தண்டு அறக் கழுத்தினோடே
ஊட்டியும் அரிய நின்றார் உறுபிறப் பரிவார் ஒத்தார் 3.6.17
925 மாசறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர்
வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என்
ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே 3.6.18
926 திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையைப் பிடித்த போது
வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கிப்
பெருக்கவே மகிழ்ச்சி நீடத் தம்பிரான் பேணித் தந்த
அருட் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று 3.6.19
927 அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டிப்
படி மிசைக் கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி
துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனிப் புரி சடைப் புராண போற்றி 3.6.20
928 என்றவர் போற்றி செய்ய இடப வாகனராய்த் தோன்றி
நன்று நீ புரிந்த செய்கை நன்னுதல் உடனே கூட
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்துச் சென்றார் 3.6.21
929 பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
வரிவடு விடேலெனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம் 3.6.22
930 முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது செய்யச்
செந்நெலின் அரிசி சிந்தச் செவியுற வடுவின் ஓசை
அந் நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி
மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல் உற்றேன் 3.6.23
திருச்சிற்றம்பலம்
3.7. ஆனாய நாயனார் புராணம் (931 -972)
திருச்சிற்றம்பலம்
931 மாடு விரைப் பொலி சோலையின் வான் மதிவந்து ஏறச்
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற
நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர் நாடு 3.7.1
932 நீவி நிதம்ப உழத்தியர் நெய்க் குழல் மைச் சூழல்
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரைக் கஞ்சப்
பூவில் உறங்குவ நீள் கயல் பூமலி தேமாவின்
காவின் நறுங் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி 3.7.2
933 வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவை
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்குறை தண் துறை வாவி அதன் பாலைக்
கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை 3.7.3
934 பொங்கிய மாநதி நீடலை உந்து புனற் சங்கம்
துங்க இலைக் கதலிப் புதல் மீது தொடங்கிப் போய்
தங்கிய பாசடை சூழ் கொடி யூடு தவழ்ந்தேறிப்
பைங்கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளையென 3.7.4
935 அல்லி மலர்ப் பழனத்து அயல் நாகிள ஆன் ஈனும்
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான் மறியோடு குதித்து ஓடும்
மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கோர்பால் 3.7.5
936 கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லைத்
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடஞ் சாலிப்
பண்ணை எழுங்கயல் பாய இருப்பன காயாவின்
வண்ண நறுஞ்சினை மேவிய வன் சிறை வண்டானம் 3.7.6
937 பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேல் ஓடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்
அங்கது மண்ணின் அருங்கலமாக அதற்கேயோர்
மங்கல மானது மங்கலம் ஆகிய வாழ் மூதூர் 3.7.7
938 ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர் 3.7.8
939 ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்
தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்
வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலில்
பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார் 3.7.9
940 ஆனிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறிக்
கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்து எங்கும்
தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூ நீறுண்டு
ஊனமில் ஆயம் உலப்பில பல்க அளித்து உள்ளார் 3.7.10
941 கன்றொடு பால் மறை நாகு கறப்பன பாலாவும்
புன்றலை மென்சிலை ஆனொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடைக் குலமோடும் இனந்தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழல் உடன் பல தோழங்கள் 3.7.11
942 ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்
காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின்
மேவு துளைக் கருவிக் குழல் வாசனை மேற்கொண்டார் 3.7.12
943 முந்தை மறை நூன்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய்
அந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறு தானம்
வந்ததுளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளை
அந்தமில் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து 3.7.13
944 எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து
அடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணை
அடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார் அங்கு ஒரு நாள் 3.7.14
945 வாச மலர்ப் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த
தேசுடைய சிகழிகையிற் செறி கண்ணித் தொடை செருகிப்
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறு விலி புனைந்து
காசுடை நாண் அதற்கயலே கருஞ்சுருளின் புறங்காட்டி 3.7.15
946 வெண் கோடல் இலைச் சுருளிற் பைந்தோட்டு விரைத் தோன்றித்
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்கத்
திண் கோல நெற்றியின் மேல் திரு நீற்றின் ஒளி கண்டோ ர்
கண் கோடல் நிறைந்தாராக் கவின் விளங்க மிசை அணிந்து 3.7.16
947 நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கிச்
செறிந்த புனை வடம் தாழத் திரள் தோளின் புடை அலங்கல்
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலி தானைப் பூம் பட்டுப் பொலிந்து அசைய 3.7.17
948 சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும்
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும்
காவல்புரி வல்லாயர் கன்றுடை ஆன் நிரை சூழப்
பூவலர் தார்க் கோவலனார் நிரை காக்கப் புறம் போந்தார் 3.7.18
949 நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக் கொடிப் புறவம் பாடக்
கோல வெண் முகையேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட
ஆலு மின்னிடைச் சூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள்
ஞால நீடு அரங்கில் ஆடக் கார் எனும் பருவ நல்லாள் 3.7.19
950 எம்மருங்கு நிரை பரப்ப எடுத்த கோலுடைப் பொதுவர்
தம்மருங்கு தொழுது அணையத் தண் புறவில் வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மதுவுண்டு
செம்மருந்தண் சுரும்பு சுழல் செழுங் கொன்றை மருங்கு அணைந்தார் 3.7.20
951 சென்றணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் என
மன்றல் மலர்த்துனர் தூக்கி மருங்குதாழ் சடையார் போல்
நின்ற நறுங் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர் பால் மடை திறந்தார் 3.7.21
952 அன்பூறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால்
வன்பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம்
முன்பூதி வரும் அளவின் முறைமையே எவ்வுயிரும்
என்பூடு கரைந்து உருக்கும் இன்னிசை வேய்ங் கருவிகளில் 3.7.22
953 ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத்
தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போலச்
சூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனித் துளையில்
வாழிய நந்தோன்றலார் மணி அதரம் வைத்தூத 3.7.23
954 முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து
வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி
ஒத்த நிலை உணர்ந்து அதற்பின் ஒன்று முதல்படி முறையாம்
அத்தகைமை ஆரோசை அமரோசைகளின் அமைத்தார் 3.7.24
955 மாறுமுதற் பண்ணின் பின் வளர் முல்லைப் பண்ணாக்கி
ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடுந்தானம்
ஆறுலவுஞ் சடை முடியார் அஞ்செழுத்தின் இசை பெருகக்
கூறிய பட்டடைக் குரலாங் கொடிப் பாலையினில் நிறுத்தி 3.7.25
956 ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து
மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையிற்
சேய வொளியிடை அலையத் திருவாளன் எழுத்தஞ்சும்
தூய இசைக் கிளை கொள்ளுந் துறையஞ்சின் முறை விளைத்தார் 3.7.26
957 மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால்
தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்தியக்கிச்
சுந்தரச் செங்கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண 3.7.27
958 எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும்
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில்
நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில்
பண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார் 3.7.28
959 வள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய் வேய்ங் குழலின்
உள்ளுறை அஞ்செழுத்தாக ஒழுகி மதுர ஒலி
வெள்ளநிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன்
தெள்ளமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க 3.7.29
960 ஆனிரைகள் அறுகருந்தி அசை விடாது அணைந்து அயரப்
பால் நுரை வாய்த் தாய் முலைப் பால் பற்றும் இளங்கன்று இனமும்
தான் உணவு மறந்து ஒழியத் தட மருப்பின் விடைக் குலமும்
மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய 3.7.30
961 ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி இசை நிறைந்த உள்ளம் ஒடு புள்ளினமும்
மாடுபடிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்
கூடியவண் கோவலரும் குறை வினையின் துறை நின்றார் 3.7.31
962 பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார்
மணிவரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்
தணிவில் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர்
அணிவிசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார் 3.7.32
963 சுரமகளிர் கற்பகப் பூஞ்சோலைகளின் மருங்கிருந்து
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன்
விரவு நறுங்குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறிப்
பரவிய ஏழிசை அமுதம் செவி மடுத்துப் பருகினார் 3.7.32
964 நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்திலினால்
மலிவாய்வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்
சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும்
புலி வாயின் மருங்கு அணையும் புல்வாய புல்வாயும் 3.7.34
965 மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர்ச் சினை சலியா
கருவரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழியப் புனல் சோரா
இரு விசும்பின் இடை முழங்கா எழுகடலும் இடை துளும்பா 3.7.35
966 இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய்
மெய் வாழும் புலன் கரண மேவிய ஒன்று ஆயினவால்
மொய்வாச நறுங்கொன்றை முடிச் சடையார் அடித் தொண்டர்
செவ்வாயின் மிசை வைத்த திருக்குழல் வாசனை உருக்க 3.7.36
967 மெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை
வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயமாக்கிப்
பொய் அன்புக்கு எட்டாத பொற் பொதுவில் நடம் புரியும்
ஐயன் தன் திருச் செவியின் அருகணைய பெருகியதால் 3.7.37
968 ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை
தானாய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன்
கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார் மதி நாறுஞ் சடை தாழ 3.7.38
969 திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி
மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே
அசைய எழுங்குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமைப் பரவும்
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார் 3.7.39
970 முன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப் பெரியோர் திருக் குழல் வாசனை கேட்க
இந்நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும்
அந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் 3.7.40
971 விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகமிசை விளங்க
எண்ணில் அருமுனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்
புண்ணியனார் எழுந்து அருளிப் பொற் பொதுவின் இடைப் புக்கார் 3.7.41
972 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
தீது கொள் வினைக்கு வாரோம் செஞ்சடைக் கூத்தர் தம்மைக்
காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்லத்
தூது கொள்பவராம் நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வார் 3.7.42
திருச்சிற்றம்பலம்
இலை மலிந்த சருக்கம் முற்றிற்று.
சருக்கம் 3-க்குத் திருவிருத்தம் – 972