MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  4.6 சண்டேசுர நாயனார் புராணம் (1211 - 1270)


  திருச்சிற்றம்பலம்

  1211 பூந்தண் பொன்னி எந் நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு
  வாய்ந்த மண்ணித் தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய
  ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும்
  சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞ்லூர் 4.6.1
  1212. செம்மை வெண்ணீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார்
  மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார்
  தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறுதொழிலின்
  மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது 4.6.2
  1213. கோதில் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழைக் குடுமி
  ஓதுகிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும்
  போதின் விளங்கும் தாரகையும் மதியும் போலப் புணர் மாடங்கள்
  மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன 4.6.3
  1214. யாகம் நிலவும் சாலை தொறும் மறையோர் ஈந்த அவியுணவின்
  பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறைப்புள்
  மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன்
  நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டமுள 4.6.4
  1215 தீம் பால் ஒழுகப் பொழுது தொறும் ஓம தேனுச் செல்வனவும்
  தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அனைவனவும்
  பூம் பாசடைநீர்த் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும்
  ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவுமுள 4.6.5
  1216 வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணித் திரைகள் வயல் வரம்பின்
  தாழ்வில் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாகத் தடம் சாலை
  சூழ் வைப்பு இடங்கள் நெருங்கியுள தொடங்கு சடங்கு முடித்து ஏறும்
  வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் 4.6.6
  1217 மடையில் கழுநீர் செழுநீர் சூழ்வயலில் சாலிக் கதிர்க்கற்றைப்
  புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம்பாளை
  அடையில் பயிலுந் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி
  நடையில் படர்மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினைக் காஞ்சி 4.6.7
  1218 சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திரு எல்லை
  பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும்
  மன்னர் பெருமான் அநபாயன் வருந் தொல் மரபின் முடி சூட்டும்
  தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அவ்வூர் 4.6.8
  1219 பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இண் சுவையும்
  கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனும் எழுத்து ஐந்தும்
  விண்ணின் பயனாம் பொழி மழையும் வேதப் பயனாம் சைவமும் போல்
  மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ 4.6.9
  1220 பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்முள் பெருமனை வாழ்
  தருமம் நிலவு காசிய கோத்திரத்துத் தலைமை சால் மரபில்
  அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல்
  இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்ச தத்தன் உளனானான் 4.6.10
  1221 மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள்
  சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத் தொழிலாள் உலகில் துணைப் புதல்வர்
  பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லைப் பயன் பெறுவாள்
  பற்றை எறியும் பற்றுவார் சார்பாய் உள்ள பவித்திரையாம் 4.6.11
  1222 . நன்றி புரியும் அவர் தம் பால் நன்மை மறையின் துறை விளங்க
  என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய
  மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர்
  வென்றிவிளங்க வந்து உதயம் செய்தார் விசார சருமனார் 4.6.12
  1223 ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த
  சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள்
  முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல்
  சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் 4.6.13
  1224 நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்தப்
  புகழும் பெருமை உப நயனப் பொருவில் சடங்கு முடித்து அறிவின்
  இகழு நெறிய அல்லாத எல்லாம் இயந்த எனினும் தம்
  திகழு மரபின் ஓது விக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார் 4.6.14
  1225 குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த
  நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார்
  அலகில் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே எனக் கொண்ட
  செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந் தகையார் 4.6.15
  1226 நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை
  உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின்
  கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின்
  திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒரு நாள் 4.6.16
  1227 ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க
  போது மற்று அங்கு ஒரு புனிற்றா போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச
  யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப
  மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து 4.6.17
  1228 பாவும் கலைகள் ஆகமநூல் பரப்பின் தொகுதிப் பான்மையினால்
  மேவும் பெருமை அரு மறைகள் மூலமாக விளங்கு உலகில்
  யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால்
  ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள் செய்வார் 4.6.18
  1229 தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத் தகைமையன
  பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன
  துங்க அமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத
  அங்கம் அனைத்தும் தாமுடைய அல்லவோ? நல் ஆனினங்கள் 4.6.19
  1230 ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும்
  நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண்டலைத் தொடையும்
  மேய வேணித் திரு முடிமேல் விரும்பி ஆடி அருளுதற்குத்
  தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமைச் சுரபிகள் தாம் 4.6.20
  1231 சீலமுடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமைத் தேவருடன்
  காலம் முழுதும் உலகனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும்
  நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்து நீறுதரும்
  மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ 4.6.21
  1232 உள்ளும் தகைமை இனிப் பிறவேறுளவே உழை மான் மறிக்கன்று
  துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்
  தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேரமிசைக்
  கொள்ளும் சின மால் விடைத் தேவர் குலம் அன்றோ? இச் சுரபி குலம் 4.6.22
  1233 என்றின்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்தக்
  கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே
  மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று
  நின்ற ஆயன் தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் 4.6.23
  1234 யானே இனி இந்நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை மகனும்
  தானேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால்
  ஆனே நெருங்கும் பேராயம் அளிப்பார் ஆகிப் பைங்கூழ்க்கு
  வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறைச் சிறுவர் 4.6.24
  1235 கோலும் கயிறும் கொண்டு குழைக் குடுமி அலையக் குலவு மான்
  தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரைக் கோவணம் சுடரப்
  பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்
  சாலும் புல்லின் அவை வேண்டுந் தனையும் மிசையும் தலைச் சென்று 4.6.25
  1236 பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி
  இதம் உண் துறையுள் நற்றண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி
  அதர் நல்லன முன் செல நீழல் அமர் வித்து அமுத மதுரப்பால்
  உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம் தொறும் உய்த்தார் 4.6.26
  1237 மண்ணிக் கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும்
  தண்ணித்தில நீர் மருதத் தண்தலை சூழ் குலையின் சார்பினிலும்
  எண்ணிற் பெருகு நிரை மேய்த்துச் சமிதை உடன் மேல் ஏரிகொண்டு
  நண்ணில் கங்குல் முன் புகுந்தும் நன்னாள் பலவாம் அந் நாளில் 4.6.27
  1238 ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிகப் பல்கி
  மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால்
  ஏய மனங்கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நண்பகலும்
  தூய தீம்பால் மடி பெருகிச் சொரிய முலைகள் சொரிந்தனவால் 4.6.28
  1239 பூணும் தொழில் வேள்விச் சடங்கு புரிய ஓம தேனுக்கள்
  காணும் பொலிவின் முன்னையினும் அனேக மடங்கு கறப்பனவாய்
  பேணுந் தகுதி அன்பால் இப் பிரம சாரி மேய்த்த அதற்பின்
  மாணுந் திறத்தவான என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் 4.6.29
  1240 அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி
  மனைக் கண் கன்று பிரிந்தாலும் மருவுஞ் சிறிய மறைக் கன்று
  தனைக் கண்டு அருகு சார்ந்து உருகித் தாயாந் தன்மை நிலைமையவாய்க்
  கணைத்துச் சுரந்து முலைக் கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால் 4.6.30
  1241 தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே பொழியக் கண்டு வந்து
  செம்மை நெறியே உறுமனத்தில் திரு மஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே
  எம்மையுடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில்
  மெய்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் 4.6.31
  1242 அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
  பொங்கும் அன்பால் மண்ணி மணற் புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச்
  செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவ ஆலயமும்
  துங்க நீடு கோபுரமும் சுற்றாலயமும் வகுத்து அமைத்தார் 4.6.32
  1243 ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா அருகு வளர் புறவில்
  பூத்த மலர்கள் தாந்தெரிந்து புனிதர் சடிலத் திரு முடிமேல்
  சாத்தல் ஆகும் திருப் பள்ளித் தாமம் பலவும் தாம் கொய்து
  கோத்த இலைப் பூங்கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் 4.6.33
  1244 நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக் கொண்டு நாணல் பூங்
  கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவுங் கோக்கள் உடன் கூட
  ஒல்லை அணைந்து பாலாக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர்
  செல்ல அவையும் கனைத்து முலை தீண்டச் செழும்பால் பொழிந்தனவால் 4.6.34
  1245 கொண்ட மடுத்த குட நிறையக் கொணர்ந்து விரும்பும் கொள்கையினால்
  அண்டர் பெருமான் வெண்மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து
  வண்டு மருவுந் திருப் பள்ளித் தாமம் கொண்டு வரன் முறையே
  பண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திரு மஞ்சனம் ஆட்டி 4.6.35
  1246 மீள மீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட ஆள் உடையார்
  தம்முடைய அன்பர் அன்பின்பால் உளதாய் மூள அமர்ந்த
  நயப் பாடு முதிர்ந்த பற்று முற்றச் சூழ்
  கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார் 4.6.36
  1247 பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் உள்ளத்தில்
  ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பான
  திரு மஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி
  வரும் அந் நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் 4.6.37
  1248 இறையோன் அடிக் கீழ் மறையவனார் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டும்
  நிறை பூசனைக்குக் குடங்கள் பால் நிரம்பச் சொரிந்து நிரைக் குலங்கள்
  குறைபாடு இன்றி மடி பெருகக் குவிந்த முலைப்பால் குறைவு இன்றி
  மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகுமால் 4.6.38
  1249 செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு
  முயல்வுற்று அதுவே திருவிளையாட்டாக முந்நூல் அணிமார்பர்
  இயல்பில் புரியும் மற்று இதனைக் கண்டித் திறத்தை அறியாத
  அயல் மற்று ஒருவன் அப் பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான் 4.6.39
  1250 அச் சொல் கேட்ட அருமறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின்
  இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள் தமைக் கறந்து
  பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதை
  எச்ச தத்தன் தனை அழைமின் என்றார் அவையில் இருந்தார்கள் 4.6.40
  1251 ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ் அந்தணன் தன் திருமனையின்
  பாங்கு சென்று மற்றவனை அழைத்துக் கொண்டு வரப் பரந்த
  ஓங்கு சபையோர் அவனைப் பார்த்து ஊர் ஆனிரை மேய்த்து உன் மகன் செய்
  தீங்கு தன்னைக் கேள் என்று புகுந்த பரிசு செப்புவார் 4.6.41
  1252 அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்களான எலாம்
  சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்பான் போல்
  கந்தம் மலிபூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து
  வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் 4.6.42
  1253 மறையோர் மொழியக் கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது
  இறையும் நான் முன் பறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை
  நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள்
  எனக் குறை கொண்டு இறைஞ்சி இனிப் புகுதில் குற்றம் எனதேயாம் என்றான் 4.6.43
  1254 அந்தணாளர் தமை விடை கொண்டு அந்தி தொழுது மனை புகுந்து
  வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார் தமக்கு வாய் நேரான்
  இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க
  மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன் 4.6.44
  1255 சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய்
  மன்றல் மருவும் புறவின் கண் மேய்ப்பார் மண்ணி மணற் குறையில்
  அன்று திரளக் கொடு சென்ற அதனை அறிந்து மறைந்தப் பால்
  நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான் 4.6.45
  1256 அன்பு புரியும் பிரம சாரிகளும் மூழ்கி அரனார்க்கு
  முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து
  பின்பு வரும் ஆன் முலை பொழிபால் பெருகும் குடங்கள் பேணும் இடம்
  தன்பால் கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டுவன சமைத்தார் 4.6.46
  1257 நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி
  ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடிமேல்
  மன்றல் விரவும் திருப் பள்ளித் தாமம் சாத்தி மஞ்சனமா
  நன்று நிறை தீம் பால் குடங்கள் எடுத்து நயப்பு உற்று ஆட்டுதலும் 4.6.47
  1258 பரவ மேல் மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும்
  விரவ மேதக்கவர் பால் மேவும் பெருமை வெளிப் படுப்பான்
  அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து
  குரவ மேவு முது மறையோன் கோப மேவும் படி கண்டான் 4.6.48
  1259 கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கைத் தண்டு
  கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்துக் கொடிதாம் மொழி கூறத்
  தொண்டு புரியும் சிறிய பெரும் தொன்றலார் தம் பெருமான் மேல்
  மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலரால் 4.6.49
  1260 மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோ ன் அடிக்க வேறு உணரார்
  பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு
  மாலா மறையோன் மிகச் செயிர்த்து வைத்த திருமஞ்சனக் குடப்பால்
  காலால் இடறிச் சிந்தினான் கையால் கடமைத் தலை நின்றான் 4.6.50
  1261 சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில் தீயோனைத்
  தந்தை எனவே அறிந்தவன் தன் தாள்கள் சிந்தும் தகுதியினால்
  முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமை யினால்
  வந்து மழுவாயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் 4.6.51
  1262 எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக
  மறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில்
  அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திடப்புகலும்
  செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி 4.6.52
  1263 பூத கணங்கள் புடை சூழப் புராண முனிவர் புத்தேளிர்
  வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம்
  காதல் கூர வெளிப் படலும் கண்டு தொழுது மனம் களித்துப்
  பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார் 4.6.53
  1264 தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத் தாள் நிழல் கீழ் விழுந்தவரை
  எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்
  அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள் செய்து அணைத்து அருளி
  மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள 4.6.54
  1265 செங்கண் விடையார் திரு மலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார்
  அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவின்று உயர்ந்த சிவமயமாய்
  பொங்கி எழுந்த திரு அருளின் மூழ்கிப் பூ மேல் அயன் முதலாம்
  துங்க அமரர் துதி செய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார் 4.6.55
  1266 அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்
  உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்
  சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத்
  துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார் 4.6.56
  1267 எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர் மாரிகள் பொழியப்
  பல்லாயிரவர் கண நாதர் படி ஆடிக் களி பயிலச்
  சொல்லார் மறைகள் துதி செய்யச் சூழ் பல்லியங்கள் எழச் சைவ
  நல்லாறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் 4.6.57
  1268 ஞாலம் அறியப் பிழை புரிந்து நம்பர் அருளால் நால் மறையின்
  சீலம் திகழும் சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் திருக்கையில்
  கோல மழுவால் ஏறுண்டு குற்றம் நீங்கிச் சுற்றம் உடன்
  மூல முதல்வர் சிவ லோகம் எய்தப் பெற்றான் முது மறையோன் 4.6.58
  1269 வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர்
  அந்த உடம்பு தன் உடனே அரனார் மகனார் ஆயினார்
  இந்த நிலைமை அறிந்தாரார்? ஈறிலாதார் தமக்கு அன்பு
  தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும் கால் 4.6.59

  1270 சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி
  நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணி கண்டத்து
  ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத்
  தேசம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பணித்த திருவாளன்
  வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் 4.6.60

  சருக்கம் 4-க்குத் திருவிருத்தம் - 1270
  திருச்சிற்றம்பலம்
  மும்மையால் உலகாண்ட சருக்கம் முற்றிற்று.

Goto Main book