MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  5.1 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் (1271 - 1699)


  திருச்சிற்றம்பலம்

  1271 திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ
  வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ்
  பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில்
  ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 5.1.1
  1272 தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா
  நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச்
  சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள்
  மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு 5.1.2
  1273 புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின்
  கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர்
  இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும்
  வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் 5.1.3
  1274 காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன்
  பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு
  சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர்
  மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை 5.1.4
  1275 கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு
  இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன்
  புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப
  உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும் 5.1.5
  1276 கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட
  மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப்
  பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க
  நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம் 5.1.6
  1277 நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல்
  பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித்
  துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை
  நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால் 5.1.7
  1278 மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும்
  உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல்
  வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும்
  கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி 5.1.8
  1279 மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச்
  செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப
  மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை
  வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை 5.1.9
  1280 எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்
  பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும்
  வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி
  மயில் குலமும் முகல் குலமும் மாறாட மருங்கு ஆடும் 5.1.10
  1281 மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி
  அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும்
  பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில்
  சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு 5.1.11
  1282 இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும்
  மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள்
  சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால்
  தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர் 5.1.12
  1283 ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை
  ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி
  ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம்
  நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் 5.1.13
  1284 மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும்
  அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும்
  புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும்
  கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள் 5.1.14
  1285 தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித
  நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண்
  விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க ந்஢லைவேளாண்
  குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் 5.1.15
  1286 அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார்
  மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார்
  ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார்
  திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் 5.1.16
  1287 புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண்
  மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
  நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில்
  திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார் 5.1.17
  1288 திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின்
  அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ
  உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின்
  மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் 5.1.18
  1289 மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார்
  காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள்
  மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன்
  ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார் 5.1.19
  1290 மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும்
  தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின்
  பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த
  சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார் 5.1.20
  1291 தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால்
  சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம்
  முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை
  மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார் 5.1.21
  1292 அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்
  முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர்
  மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார்
  பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார் 5.1.22
  1293 ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார்
  காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார்
  பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள
  வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார் 5.1.23
  1294 அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு
  மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக்
  குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்
  பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார் 5.1.24
  1295 கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார்
  முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன்
  மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல்
  அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார் 5.1.25
  1296 வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு
  போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில்
  காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை
  நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார் 5.1.26
  1297 ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த
  தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை
  மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத்
  தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் 5.1.27
  1298 மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்
  சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப்
  பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்
  கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் 5.1.28
  1299 தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின்
  மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த
  காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால்
  பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் 5.1.29
  1300 ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து
  பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார்
  மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார்
  பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார் 5.1.30
  1301 வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய்
  அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத்
  தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச்
  செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் 5.1.31
  1302 எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள்
  அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்
  இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய
  வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார் 5.1.32
  1303 அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற
  பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன்
  என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
  முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் 5.1.33
  1304 தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா
  உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி
  அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி
  இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் 5.1.34
  1305 மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித்
  தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க்
  காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால்
  ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார் 5.1.35
  1306 கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்
  மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும்
  நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்
  யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார் 5.1.36
  1307 நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
  அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின்
  நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால்
  கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் 5.1.37
  1308 பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி
  மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு
  வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்
  கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் 5.1.38
  1309 அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்
  பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத்
  துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத்
  தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார் 5.1.39
  1310 அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில்
  சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண்
  உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய
  வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார் 5.1.40
  1311 அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச்
  செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும்
  தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ
  நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் 5.1.41
  1312 பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால்
  ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார்
  நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும்
  சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் 5.1.42
  1313 சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக்
  குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம்
  அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால்
  துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார் 5.1.43
  1314 புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற
  நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு
  மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப்
  பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் 5.1.44
  1315 நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில்
  கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார்
  கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு
  மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து 5.1.45
  1316 தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை
  ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை
  ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள
  வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் 5.1.46
  1317 தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும்
  அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச்
  சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப்
  பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் 5.1.47
  1318 மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார்
  உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான்
  முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்
  அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி 5.1.48
  1319 பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும்
  தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக்
  கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய
  மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால் 5.1.49
  1320 அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது
  வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம்
  கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப்
  படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார் 5.1.50
  1321 அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும்
  விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி
  உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம்
  நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார் 5.1.51
  1322 அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக்
  கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை
  இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார்
  தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார் 5.1.52
  1323 புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
  குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை
  கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும்
  பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார் 5.1.53
  1324 தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி
  ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய்
  ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப்
  போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று 5.1.54
  1325 குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு
  மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப்
  பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக்
  கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த 5.1.55
  1326 ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார்
  பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி
  ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத்
  தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் 5.1.56
  1327 கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை
  எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த
  நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு
  அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் 5.1.57
  1328 என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து
  நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம்
  சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய
  அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் 5.1.58
  1329 அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்
  எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
  ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச்
  செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என 5.1.59
  1330 எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி
  அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு
  உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத்
  தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார் 5.1.60
  1331 பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து
  மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து
  கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண்
  செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் 5.1.61
  1332 சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக்
  குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று
  இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில்
  திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார் 5.1.62
  1333 வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி
  நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர்
  இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது
  உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து 5.1.63
  1334 தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி
  ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது
  கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது
  மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார் 5.1.64
  1335 மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும்
  உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர்
  கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர்
  பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார் 5.1.65
  1336 என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச
  நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து
  சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக்
  குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார் 5.1.66
  1337 திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப
  பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு
  உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி
  தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் 5.1.67
  1338 நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும்
  மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய்
  சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு
  ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார் 5.1.68
  1339 திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக
  வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்
  தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால்
  உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் 5.1.69
  1340 நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன்
  நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக
  மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும்
  பிணி மாயை அறுத்திடுவான்
  கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என
  நீடிய கோதில் திருப்பதிகம்
  போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்
  போமாறு எதிர் நின்று புகன்றனரால் 5.1.70
  1341 மன்னும் பதிகம் அது பாடியபின்
  வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான்
  அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும்
  அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச்
  செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம்
  திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர்
  முன் நின்ற தெருட்சி மருட்சியினால்
  முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே 5.1.71
  1342 அங்கங்கள் அடங்க உரோமம்
  எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப்
  பொங்கும் புனல் கண்கள் பொழிந்து
  இழியப் புவி மீது விழுந்து புரண்டு அயர்வார்
  இங்கு என் செயல் உற்ற பிழைப்பு
  அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின்
  தங்கும் கருணைப் பெரு வெள்ளம்
  இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார் 5.1.72
  1343 பொய் வாய்மை பெருக்கிய
  புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம்
  அவ்வாழ் குழியின் கண் விழுந்து
  எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
  மை வாச நறும் குழல் மா மலையாள்
  மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்
  இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு
  எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார் 5.1.73
  1344 மேவுற்ற இவ் வேலையில்
  நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
  பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப்
  பதிகத் தொடைபாடிய பான்மையினால்
  நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும்
  நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று
  யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான்
  இடையே ஒருவாய்மை எழுந்ததுவே 5.1.74
  1345 இத் தன்மை நிகழ்ந்துழி
  நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள்
  சித்தம் திகழ் தீவினையேன் அடையும்
  திருவோ இது என்று தெருண்டு அறியா
  அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு
  அருளும் கருணைத் திறமான அதன்
  மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே
  மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே 5.1.75
  1346 பரசும் கருணைப் பெரியோன்
  அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
  அரசு இங்கு அருள் பெற்று உலகு
  உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்
  முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ்
  முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
  நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால்
  நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 5.1.76
  1347 மையல் துறை ஏறி மகிழ்ந்து
  அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
  மெய் உற்ற திருப்பணி செய்பவராய்
  விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
  எய்துற்ற தியானம் அறா உணர்வும்
  ஈறு இன்றி எழும் திருவாசகமும்
  கையில் திகழும் உழவாரமுடன் கைக்
  கொண்டு கலந்து கசிந்தனரே 5.1.77
  1348 மெய்ம்மைப் பணி செய்த
  விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில்
  தம் இச்சை நிரம்ப வரம் பெறும்
  அத் தன்மைப் பதி மேவியதா பதியார்
  பொய்மைச் சமயப் பிணி விட்டவர்
  முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா
  எம்மைப் பணிகொள் கருணைத் திறம்
  இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே 5.1.78
  1349 இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி
  மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம்
  பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில்
  புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய் 5.1.79
  1350 தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை
  ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப்
  பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்
  மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் 5.1.80
  1351 மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால்
  நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக்
  கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர்
  தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் 5.1.81
  1352 இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி
  மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு
  சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம்
  செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் 5.1.82
  1353 தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம்
  பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு
  எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும்
  தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார் 5.1.83
  1354 சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர்
  முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே
  இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல
  மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் 5.1.84
  1355 உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர்
  கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள்
  அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன
  இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் 5.1.85
  1356 அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து
  கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற
  வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால்
  கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான் 5.1.86
  1357 கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால்
  நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு
  உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச்
  சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் 5.1.87
  1358 விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து
  புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு
  உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே
  கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான் 5.1.88
  1359 தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய
  நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை
  அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார்
  கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் 5.1.89
  1360 அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று
  மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித்
  தெருள் கொண்டோ ர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
  பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான் 5.1.90
  1361 அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே
  முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து
  விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி
  பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார் 5.1.91
  1362 சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து
  மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை
  இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என
  நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் 5.1.92
  1363 நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின்
  கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத்
  தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி
  ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார் 5.1.93
  1364 ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி
  வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர்
  ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார்
  மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் 5.1.94
  1365 பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை
  வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச்
  சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத
  புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார் 5.1.95
  1366 அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப்
  பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை
  உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித்
  திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார் 5.1.96
  1367 ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத்
  தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே
  ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று
  மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் 5.1.97
  1368 வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம்
  தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று
  மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
  ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே 5.1.98
  1369 மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப்
  பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை
  ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை
  ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் 5.1.99
  1370 ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப்
  பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும்
  கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர்
  தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள் 5.1.100
  1371 ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர்
  தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி
  ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே
  ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் 5.1.101
  1372 அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால்
  இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து
  மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று
  முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் 5.1.102
  1373 ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன்
  ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத்
  தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப்
  பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார் 5.1.103
  1374 நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று
  வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே
  செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்
  வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் 5.1.104
  1375 பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள்
  முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால்
  படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய
  அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ 5.1.105
  1376 அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப
  வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே
  இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத்
  தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார் 5.1.106
  1377 நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர்
  தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான்
  எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும்
  துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் 5.1.107
  1378 மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும்
  செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப
  உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின்
  கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார் 5.1.108
  1379 மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம்
  கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப்
  பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல்
  கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான் 5.1.109
  1380 கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு
  மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித்
  தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின்
  வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் 5.1.110
  1377 பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா
  மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா
  ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா
  வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால் 5.1.111
  1378 . இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில்
  படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில்
  கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின்
  முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே 5.1.112
  1379 மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக்
  கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச்
  சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று
  ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே 5.1.113
  1380 பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர்
  நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல்
  ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார்
  சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர் 5.1.114
  1381 அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு
  விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச்
  சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை
  மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் 5.1.115
  1382 வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச்
  செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்
  வெம்ஞ்சுடர் மூவிலைச் சுல வீரட்டர் தம் அடியோம் நாம்
  அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார் 5.1.116
  1383 தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக்
  கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத்
  தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்
  எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் 5.1.117
  1384 ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத்
  தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரிந்து
  மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி
  ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே 5.1.118
  1385 ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து
  நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக
  நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல
  ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே 5.1.119
  1386 யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம்
  மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித்
  தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப
  மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான் 5.1.120
  1387 நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால்
  எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர்
  பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப்
  பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் 5.1.121
  1388 அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான்
  தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச்
  சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
  கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார் 5.1.122
  1389 ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித்
  தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப்
  பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில்
  வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான் 5.1.123
  1390 அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த
  வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர்
  செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார்
  பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர் 5.1.124
  1391 அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்
  ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்
  எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று
  செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார் 5.1.125
  1392 சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி
  நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று
  அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு
  பற்றி உணர்வினால் பதிகம் பாடினார் 5.1.126
  1393 பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
  அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு
  அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக்
  கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே 5.1.127
  1394 அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத்
  தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும்
  தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர்
  மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார் 5.1.128
  1395 இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
  வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட
  அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்
  ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ 5.1.129
  1396 அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக்
  கருணை நாவரசினைத் திரைக் கரங்களால்
  தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட
  வருணனும் செய்தனன் முன்பு மா தவம் 5.1.130
  1397 வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
  சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
  ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன்
  பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில் 5.1.131
  1398 அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை
  மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ
  எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல்
  தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே 5.1.132
  1399 தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன்
  செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண்
  கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற
  விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார் 5.1.133
  1400 ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத்
  தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று
  வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும்
  சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே 5.1.134
  1401 மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி
  வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால்
  உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள்
  செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார் 5.1.135
  1402 தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும்
  மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப்
  பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின்
  காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார் 5.1.136
  1403 வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம்
  எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள
  மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம்
  தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் 5.1.137
  1404 மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி
  இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும்
  தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி
  அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் 5.1.138
  1405 மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார்
  இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப்
  பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்
  தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே 5.1.139
  1406 தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும்
  நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப்
  பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல்
  மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே 5.1.140
  1407 கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால்
  மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம்
  உண்டாய்஢ன வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும்
  தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே 5.1.141
  1408 இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த
  மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல
  அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச்
  செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே 5.1.142
  1409 உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி
  நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே
  எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று
  தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் 5.1.143
  1410 அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை
  விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத்
  தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம்
  பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள் 5.1.144
  1411 புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
  பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய
  அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து
  வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான் 5.1.145
  1412 வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த
  காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப்
  பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
  கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் 5.1.146
  1413 இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு
  மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல்
  பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச்
  சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் 5.1.147
  1414 திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும்
  அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா
  மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப்
  பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார் 5.1.148
  1415 கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும்
  சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி
  வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப்
  பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார் 5.1.149
  1416 புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன்
  தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு
  என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
  பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார் 5.1.150
  1417 . பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து
  முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத்
  தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை
  நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும் 5.1.151
  1418 நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற
  ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம்
  மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோலில்
  சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த 5.1.152
  1419 ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத்
  தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து
  தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால்
  ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் 5.1.153
  1420 தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப்
  பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள்
  பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும்
  தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து 5.1.154
  1421 வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள
  தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம்
  கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல்
  புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார் 5.1.155
  1422 ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
  வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி
  ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து
  தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார் 5.1.156
  1423 நாவுக் கரசரும் இருவர்க்கு
  அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால்
  மேவித் தலம் உற மெய்யில் தொழுத
  பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும்
  காவில் களி மயில் மகிழ் உற்று எதிர்
  எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ்
  வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
  மருதத் தண்பணை வழி வந்தார் 5.1.157
  1424 முருகில் செறி இதழ் முளரிப்
  படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும்
  அருகில் செறிவனம் என மிக்குயர்
  கழை அளவில் பெருகிட வளர் இக்குப்
  பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன
  பெரியோர் அவர் திருவடிக் கண்டு
  உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன
  என முன்புள வயல் எங்கும் 5.1.158
  1425 அறிவில் பெரியவர் அயல்
  நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்
  பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை
  பெருகித் தொடர்பிணி உறுபாசம்
  பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை
  பயில் சூழ் சினை மிசை குயில் கூவும்
  செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு
  திரு நந்தன வனம் எதிர் கண்டார் 5.1.159
  1426 அவர் முன் பணிவொடு தொழுது
  அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்
  தவம் முன் புரிதலில் வரு தொண்டு
  எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம்
  இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம்
  என வந்து எதிர் அரகர என்றே
  சிவ முன் பயில் மொழி பகர் கின்றன
  வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை 5.1.160
  1427 அஞ்சொல் திருமறை அவர்
  முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும்
  நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும்
  நிறை அன்பொடும் உரை தடுமாறச்
  செஞ்சொல் திருமறை மொழி அந்தணர்
  பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில்
  பொலி நெடு மதில் சூழ் குடதிசை
  மணி வாயில் புறம் வந்துற்றார் 5.1.161
  1428 அல்லல் பவம் அற அருளும்
  தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும்
  மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின்
  வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார்
  கல்வித் துறை பல வரு மா மறை முதல்
  கரை கண்டு உடையவர் கழல் பேணும்
  செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை
  வளர் சிவமே நிலவிய திருவீதி 5.1.162
  1429 நவ மின் சுடர் மணி நெடு
  மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப்
  புவனங்களின் முதல் இமையோர்
  தடமுடி பொருந்திய மணி போகட்டிப்
  பவனன் பணி செய வருணன் புனல்
  கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று
  எவரும் தொழுது எழும் அடியார் திரு
  அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள் 5.1.163
  1430 மேலம் பரதலம் நிறையும்
  கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும்
  கோலம் பெருகிய திருவீதியை முறை
  குலவும் பெருமையர் பணிவுற்றே
  ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு
  ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும்
  ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம்
  உறமெய் கொடு தொழுதுள்புக்கார் 5.1.164
  1431 வளர் பொன் கனக மணி
  திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா
  அளவில் பெருகிய ஆர்வத்து இடை
  எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும்
  புளகச் செறி நிரை விரவத் திருமலி
  பொன் கோபுரம் அது புகுவார் முன்
  களனில் பொலிவிடம் உடையார் நடநவில்
  கனகப் பொது எதிர் கண்ணுற்றார் 5.1.165
  1432 நீடும் திருவுடன் நிகழும்
  பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே
  கூடும் படி வரும் அன்பால் இன்புறு
  குணம் முன் பெறவரு நிலை கூடத்
  தேடும் பிரமனும் மாலும் தேவரும்
  முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா
  ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம்
  ஆரா வகை தொழுது ஆர்கின்றார் 5.1.166
  1433 கையும் தலை மிசை புனை
  அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே
  பெய்யும் தகையன கரணங்களும்
  உடன் உருகும் பரிவின
  பேறு எய்தும் மெய்யும் தரைமிசை
  விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு
  ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர்
  ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் 5.1.167
  1434 இத் தன்மையர் பல முறையும்
  தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும்
  அத்தன் திரு அருள் பொழியும்
  கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்
  மெய்த் தன்மை யினில் விருத்தத்
  திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும்
  சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
  திரு நேரிசை மொழி பகர்கின்றார் 5.1.168
  1435 பத்தனாய்ப் பாட
  மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால்
  அத்தா உன் ஆடல் காண்பான்
  அடியனேன் வந்தவாறு என்று
  இத்திறம் போற்றி நின்றே
  இன் தமிழ் மாலைப் பாடி
  கைத் திருத் தொண்டு செய்யும்
  காதலில் பணிந்து போந்தார் 5.1.169
  1436 நீடிய மணியின்
  சோதி நிறை திரு முன்றின் மாடும்
  ஆடு உயர் கொடி சூழ் பொன்
  தேர் அணி திரு வீதி உள்ளும்
  கூடிய பணிகள் செய்து
  கும்பிடும் தொழிலர் ஆகிப்
  பாடிய புனித வாக்கின்
  பணிகளும் பயிலச் செய்வார் 5.1.170
  1437 அருள் பெரு மகிழ்ச்சி
  பொங்க அன்னம் பாலிக்கும் என்னும்
  திருக் குறுந் தொகைகள் பாடித்
  திரு உழவாரங் கொண்டு
  பெருத்து எழு காதலோடும் பெரும்
  திருத் தொண்டு செய்து
  விருப்புறு மேனி கண்ணீர்
  வெண்ணீற்று வண்டலாட 5.1.171
  1438 மேவிய பணிகள் செய்து
  விளங்குநாள் வேட்களத்துச்
  சேவுயர் கொடியார் தம்மைச்
  சென்று முன் வணங்கிப் பாடிக்
  காவியம் கண்டார் மன்னும்
  திருக்கழிப் பாலை தன்னில்
  நாவினுக்கு அரசர் சென்று
  நண்ணினார் மண்ணோர் வாழ 5.1.172
  1439 சின விடை யேறுகைத்
  தோறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
  வன பவள வாய்திறந்து வானவர்க்கும்
  தான் அவனே என்கின்றாள் என்று
  அனைய திருப்பதிகம் உடன்
  அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி
  நினைவரியார் தமைப் போற்றி நீடு
  திருப்புலியூரை நினைந்து மீள்வார் 5.1.173
  1440 மனைப் படப்பில் கடல்
  கொழுந்து வளை சொரியும் கழிப் பாலை மழுங்கு நீங்கி
  நனைச்சினை மென் குளிஞாழல்
  பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில்
  நினைப்பவர் தம் மனம் கோயில்
  கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத்
  தினைத்தனையாம் பொழுது மறந்து
  உய்வேனோ எனப் பாடி தில்லை சார்ந்தார் 5.1.174
  1441 அரியானை என்று எடுத்தே
  அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை
  பிரியாத பெரிய திருத் தாண்டகச்
  செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி
  விரியா நின்று எவ் உலகும் விளங்கிய
  பொன் அம்பலத்து மேலி ஆடல்
  புரியா நின்றவர் தம்மைப் பணிந்து
  தமிழால் பின்னும் போற்றல் செய்வார் 5.1.175
  1442 செஞ்சடைக் கற்றை
  முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை
  அருஞ்சொல் வளத் தமிழ் மாலை
  அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த
  நெஞ்சு உருகப் பொழி புனல்வார்
  கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்
  தம் செயலின் ஒழியாத திருப்பணியும்
  மாறாது சாரும் நாளில் 5.1.176
  1443 கடையுகத்தில் ஆழியின்
  மேல் மிதந்த கழு மலத்தின் இருந்த செம்கண்
  விடை உகைத்தார் திரு அருளால்
  வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும்
  அடைய நிறை சிவம் பெருக வளர்
  ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த
  உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை
  அடியார்கள் உரைப்பக் கேட்டார் 5.1.177
  1444 ஆழிவிடம் உண்ட வரை
  அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதே
  ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன்
  எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல
  காழி வரும் பெரும் தகை சீர்
  கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர
  வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு
  மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த 5.1.178
  1445 அப்பொழுதே அம்பலத்துள்
  ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப்
  பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி
  புரண்டு வலம் கொண்டு போந்தே
  எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின்
  எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
  செப்பரிய பெருமையினார் திரு நாரையூர்
  பணிந்து பாடிச் செல்வார் 5.1.179
  1446 தொண்டர் குழாம் புடை சூழத்
  தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம்
  கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து
  உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத்
  தெண் திரைவாய்க் கல் மிதப்பில்
  உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்
  வண் தமிழால் எழுது மறை மொழிந்த
  பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் 5.1.180
  1447 நீண்ட வரை வில்லியார்
  வெஞ்சூலை மடுத்து அருளி நேரே முன்னாள்
  ஆண்ட அரசு எழுந்து அருளக்
  கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும்
  காண்டகைய பெரு விருப்புக் கைம்
  மிக்க திரு உள்ளக் கருத்தினோடு
  மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ
  எழுந்து அருளி முன்னே வந்தார் 5.1.181
  1448 தொழுது அணை உற்று ஆண்ட
  அரசு அன்பு உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று
  பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப்
  பணிந்தவர்தம் கரங்கள் பற்றி
  எழுதரிய மலக்கையால் எடுத்து
  இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை
  அழுது அழைத்துக் கொண்டவர்தாம்
  அப்பரே என அவரும் அடியேன் என்றார் 5.1.182
  1449 அம்பிகை செம் பொன்
  கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த
  செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு
  அரசர் எனச் சிறந்த சீர்த்தி
  எம் பெரு மக்களும் இயைந்த
  கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி
  உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம்
  பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம் 5.1.183
  1450 பிள்ளையார் கழல் வணங்கப்
  பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான
  வள்ளலார் வாகீசர் தமை வணங்கப்
  பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
  உள்ளம் நிறை காதலினால் ஒருவர்
  ஒருவரில் கலந்த உண்மை யோடும்
  வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார்
  கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் 5.1.184
  1451 அருள் பெருகு தனிக் கடலும்
  உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்
  பொருள் சமய முதல் சைவ நெறி தான்
  பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய
  இருள் கடு உண்டவர் அருளும் உலகம்
  எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்
  தெருள் கலை ஞானக் கன்றும் அரசும்
  சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே 5.1.185
  1452 பண் பயில் வண்டு அறை
  சோலை சூழும் காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு
  விண் பணிய ஓங்கு பெரு விமானம்
  தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச்
  சண்பை வரு பிள்ளையார் அப்பர்
  உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக்
  கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை
  கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி 5.1.186
  1453 பெரிய பெருமாட்டியுடன் தோணி
  மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று
  பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும்
  பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி
  அரிய வகை புறம் போந்து பிள்ளையார்
  திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து
  மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள்
  போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் 5.1.187
  1454 அத்தன்மையினில் அரசும்
  பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத
  சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில்
  திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில்
  மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி
  மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற
  மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு
  விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் 5.1.188
  1455 ஆண்ட அரசு எழுந்து அருளக்
  கோலக் காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு
  மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு
  இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
  நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடு
  திருக் குறுக்கை திரு நின்றி யூரும்
  காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
  கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் 5.1.189
  1456 மேவு புனல் பொன்னி இரு
  கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக்
  காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்
  கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி
  பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப்
  பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே
  ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து
  பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார் 5.1.190
  1457 ஆவடு தண் துறையாரை அடைந்து
  உய்ந்தேன் என்ற அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து
  மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும்
  சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு 1456-2
  பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித்
  தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும்
  பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு
  கைத் தொண்டு போற்றிச் செய்வார் 5.1.191
  1458 எறி புனல் பொன் மணி சிதறும்
  திரை நீர்ப் பொன்னி இடை மருதைச் சென்று எய்திஅன்பினோடு
  மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண்
  தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்
  பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப்
  போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து
  செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு
  எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார் 5.1.192
  1459 சென்று சேர்ந்து திருச்
  சத்தி முற்றத்து இருந்த சிவக் கொழுந்தை
  குன்ற மகள் தன் மனக் காதல் குலவும்
  பூசை கொண்டு அருளும்
  என்றும் இனிய பெருமானை இறைஞ்சி
  இயல்பில் திருப்பணிகள்
  முன்றில் அணைந்து செய்து தமிழ்
  மொழி மாலைகளும் சாத்துவார் 5.1.193
  1460 கோவாய் முடுகி என்று
  எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன்
  பூவார் அடிகள் என்று அலைமேல்
  பொறித்து வைப்பாய் எனப் புகன்று
  நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில்
  வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் 5.1.194
  1461 நன்மை பெருகஅருள்
  நெறியே வந்து அணைந்து நல்லூரின்
  மன்னு திருத் தொண்டனார் வணங்கி
  மகிழ்ந்து எழும் பொழுதில்
  உன்னுடைய நினைப்பதனை
  முடிகின்றோம் என்று அவர்தம்
  சென்னி மிசைப் பாத மலர்
  சூட்டினான் சிவபெருமான் 5.1.195
  1462 நனைந்தனைய
  திருவடி என்தலைமேல் வைத்தார் என்று
  புனையும் திருத்தாண்டகத்தால்
  போற்றி இசைத்துப் புனிதர் அருள்
  நினைந்து உருகி விழுந்து எழுந்து
  நிறைந்து மலர்ந்து ஒழியாத
  தனம் பெரிதும் பெற்று வந்த
  வறியோன் போல் மனம் தழைத்தார் 5.1.196
  1463 நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால்
  மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து
  பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித்
  தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள் 5.1.197
  1464 கருகாவூர் முதலாகக்
  கண்ணுதலோன் அமர்ந்து அருளும்
  திருவாவூர் திருப் பாலைத்துறை
  பிறவும் சென்று இறைஞ்சிப்
  பெருகு ஆர்வத் திருத் தொண்டு
  செய்து பெருந்திரு நல்லூர்
  ஒரு காலும் பிரியாதே உள்
  உருகிப் பணிகின்றார் 5.1.198
  1465 ஆளுடைய நாயகன்
  தன் அருள் பெற்று அங்கு அகன்று போய்
  வாளை பாய் புனல் பழனத்
  திருப் பழனம் மருங்கு அணைந்து
  காளவிடம் உண்டு இருண்ட
  கண்டர் பணிக் கலன் பூண்டு
  நீள் இரவில் ஆடுவார் கழல்
  வணங்க நேர் பெற்றார் 5.1.199
  1466 அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்
  ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார்
  மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்
  செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர் 5.1.200
  1467 அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்
  தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப்
  பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை
  வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண 5.1.201
  1468 மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்
  சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக்
  கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப்
  பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார் 5.1.202
  1469 காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார்
  பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும்
  வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்
  ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து 5.1.203
  1470 திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம்
  பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு
  தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக்
  குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் 5.1.204
  1471 ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே
  பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம்
  தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள
  ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் 5.1.205
  1472 தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத்
  தாயகரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம்
  மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம்
  தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார் 5.1.206
  1473 தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி
  எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச
  உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்
  நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் 5.1.207
  1474 அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க்
  கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே
  ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப்
  பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் 5.1.208
  1475 அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது
  இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க
  வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர்
  விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் 5.1.209
  1476 திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப்
  பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து
  தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து
  பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார் 5.1.210
  1477 புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ்
  அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை
  நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின்
  தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார் 5.1.211
  1478 எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும்
  தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத்
  தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச்
  செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார் 5.1.212
  1479 சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த
  ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து
  சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று
  கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார் 5.1.213
  1480 அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது
  பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள்
  தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு
  செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார் 5.1.214
  1481 நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை
  பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து
  சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி
  அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக் குடமூக்கு அணைந்து இறைஞ்சி 5.1.215
  1482 நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர்
  பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி
  மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக்
  சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார் 5.1.216
  1483 பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி
  முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும்
  திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர்
  மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் 5.1.217
  1484 ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம்
  நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார்
  காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும்
  சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார் 5.1.218
  1485 வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில்
  கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால்
  எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது
  சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார் 5.1.219
  1486 பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால்
  உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே
  புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று
  அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார் 5.1.220
  1487 சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி
  வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி
  ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து
  நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் 5.1.221
  1488 கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம்
  கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள்
  தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப்
  புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து 5.1.222
  1489 காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம்
  தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி
  ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு
  பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார் 5.1.223
  1490 செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து
  கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரைக்
  கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று
  எய்து அரிய கை யறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே 5.1.224
  1491 மார் பாரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில்
  சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே
  சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்
  பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார் 5.1.225
  1492 நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப் புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக்
  கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
  பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி
  நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் 5.1.226
  1493 நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை
  பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்ததுள் வைத்துப் பாடி
  தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை
  ஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில் 5.1.227
  1494 நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று
  வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக்
  கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி
  ஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே 5.1.228
  1495 மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமாள் பவனி தன்னில்
  தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
  மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றி
  நாவினுக்குத் தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திரு அருளினாலே 5.1.229
  1496 திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
  விருப்புடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர
  ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப்
  பொருப்பரையன் மடப் பாவை இடப் பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் 5.1.230
  1497 அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும்
  பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார்
  புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி
  மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை 5.1.231
  1498 ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும்
  நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி
  மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
  ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார் 5.1.232
  1499 கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு
  வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்
  திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில்
  இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்த போல் இசைந்த அன்றே 5.1.233
  1500 திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை
  பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர் வணங்கி அப்பரே நீர்
  வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற
  அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார் 5.1.234
  1501 சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும்
  மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
  இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார்
  முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை 5.1.235
  1502 அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை
  மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்
  கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே
  உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் 5.1.236
  1503 மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந்
  தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக
  நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார்
  பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் 5.1.237
  1504 அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம்
  சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
  மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப்
  பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார் 5.1.238
  1505 தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப்
  பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு
  மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே
  ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார் 5.1.239
  1506 சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு
  ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி
  வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல்
  ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார் 5.1.240
  1507 அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும்
  துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால்
  மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள்
  பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில் 5.1.241
  1508 பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர்
  உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண்
  வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள
  எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார் 5.1.242
  1509 ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம்
  ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப்
  பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை
  நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் 5.1.243
  1510 திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப்
  பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில்
  விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு
  ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் 5.1.244
  1511 அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற
  மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும்
  முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப்
  பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார் 5.1.245
  1512 திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
  பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக
  ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும்
  வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார் 5.1.246
  1513 செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப்
  பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக்
  குங்குலியக் கலயனார் திருமத்தில் குறை அறுப்ப
  அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள் 5.1.247
  1514 சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி
  ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து
  கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று
  தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார் 5.1.248
  1515 சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக்
  கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து
  வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன்
  சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை 5.1.249
  1516 வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும்
  காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால்
  ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன்
  வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார் 5.1.250
  1517 மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு
  நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப்
  பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்
  கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் 5.1.251
  1518 சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக்
  குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு
  முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி
  வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் 5.1.252
  1519 கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருக
  மெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலை
  செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று
  உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க 5.1.253
  1520 முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத
  பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப்
  பல் நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய்
  அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள் 5.1.254
  1521 சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின்
  மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும்
  நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம்
  பாரின் மலிந்த இலம் பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் 5.1.255
  1522 வையம் எங்கும் வற்கடம் ஆய்ச் செல்ல உலகோர் வருத்தமுற
  நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும்
  கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச்
  செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார் 5.1.256
  1523 கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும்
  ஏல உம்மை வழி படுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று
  கோலம் காண எழுந்து அருளிக் குலவும் பெருமை இருவர்க்கும்
  ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார் 5.1.257
  1524 விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில்
  அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
  நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில்
  எண்ணில் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் 5.1.258
  1525 அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு
  பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள்
  எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச்
  சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் 5.1.259
  1526 ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப் பால்
  தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினால்
  காசு வாசியுடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால்
  வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர் 5.1.260
  1527 ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக் காசால்
  ஈறு இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள்
  சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதே
  ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அந் நாளில் 5.1.261
  1528 காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து
  ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப
  மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி
  நீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் 5.1.262
  1529 வாய்ந்த மிழலை மா மணியை வணங்கிப் பிரியா விடை கொண்டு
  பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
  ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய்ச்
  சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார் 5.1.263
  1530 மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின்
  முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக்
  குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டு
  சென்று சேர்ந்தார் தென் புகலிக் கோவும் அரசும் திரு முன்பு 5.1.264
  1531 பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில்
  அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து
  உரவக் கதவம் திருக் காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள்
  வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் 5.1.265
  1532 தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த வாயில் தொடர் அகற்ற
  வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி
  அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு
  எல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார் 5.1.266
  1533 ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி ஆழித் தோணி புரத்து அரசர்
  ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத்
  தேம்கா திருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு
  நீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர் 5.1.267
  1534 உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே
  பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்
  தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு
  எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் 5.1.268
  1535 வேத வளத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும் மணிக் கதவம்
  காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்கு
  நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள்
  ஓத ஒலியின் மிக்கு எழுந்த தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் 5.1.269
  1536 அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும்
  இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான்
  முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடி
  என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் 5.1.270
  1537 புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம்
  திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திருமுலையில்
  கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலிக் கவுணியரை
  நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என 5.1.271
  1538 சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர்
  பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்
  கண் பொற்பமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனே
  திண் பொன் கதவம் திருக் காப்புச் செய்து எடுத்த திருப் பாட்டில் 5.1.272
  1539 அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து
  இது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
  பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார்
  எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல் 5.1.273
  1540 அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்துப்
  பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய
  எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார்
  நங்கள் புகலிப் பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் 5.1.274
  1541 அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை
  கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று
  பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து
  மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் 5.1.275
  1542 மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண்
  உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம்
  பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும்
  துன்னி அவர்க்கு வாய் மூரில் இருப்போம் தொடர வா என்றார் 5.1.276
  1543 போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி
  ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து
  வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே
  ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள 5.1.277
  1544 சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர்
  ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தா வாறே போல்
  நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர்
  பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலரால் 5.1.278
  1545 அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல்
  பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத்
  துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்த படி
  மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் 5.1.279
  1546 அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து
  பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால்
  உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த
  தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என 5.1.280
  1547 மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்
  நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள
  ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும்
  பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார் 5.1.281
  1548 பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள
  நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து
  சூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து
  நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார் 5.1.282
  1549 ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து
  பூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் போற்றி
  மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவர் ஒடு
  மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் 5.1.283
  1550 ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள்
  சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம்
  கோதில் குணத்துப் பாண்டி மா தேவியார் முன் குலச்சிறையார்
  போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண 5.1.284
  1551 வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி
  அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்க
  சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வனவத் தீங்கும் உளவாமோ
  இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் 5.1.285
  1552 சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும்
  பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம் எனக் கேட்டே
  அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத்
  தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பைத் திரு மறையோர் 5.1.286
  1553 ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக்
  காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய்
  மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த
  தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் 5.1.287
  1554 என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும்
  சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரி அமணர்
  நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறி பாரித்து அன்றி
  ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார் 5.1.288
  1555 போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர்
  தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்ன
  ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத்
  தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார் 5.1.289
  1556 வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர்
  பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப்
  பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர்
  தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார் 5.1.290
  1557 சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய்
  வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் என
  ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் பிறவும் தாம் பணிந்து
  சாலு மொழி வண் தமிழ்ப் பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார் 5.1.291
  1558 வீழி மிழலை தனிப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப
  ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த
  வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றிசைத்துத்
  தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார் 5.1.292
  1559 பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த
  ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
  நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும்
  பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார் 5.1.293
  1560 செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில்
  மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக்
  கைகள் கூப்பித் தொழுது அருளக் கண்டவாற்றால் அமணர்கள் தம்
  பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப் புழுங்கி 5.1.294
  1561 அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக்
  கந்தம் மலரும் கடிக் கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி
  மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
  பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் 5.1.295
  1562 வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்று
  எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே
  அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத்
  திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார் 5.1.296
  1563 அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக்
  குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான்
  நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரிய
  செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி 5.1.297
  1564 கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி
  அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு
  குண்டர் செய்த வஞ்சணையைக் குறித்து வேந்தன் குலவு பெரும்
  தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான் 5.1.298
  1565 ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்தற் பின்
  மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின்
  ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச
  ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் 5.1.299
  1566 தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் சாதி அமணர் மறைத்தாலும்
  நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும்
  விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே
  இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் 5.1.300
  1571 பொங்கு புனலார் பொன்னியில் இரண்டு கரையும் பொருவிடையார்
  தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் தமிழ் மாலைகளும் சாத்திப் போய்
  எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறில் தொண்டர் எதிர் கொள்ளச்
  செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்று அணைந்தார் 5.1.301
  1572 சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடி
  இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடியபின்
  சோதித் திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும்
  நலம் கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் நண்ணினார் 5.1.302
  1573 மற்றப் பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கை தொழுது
  பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி
  உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரியச்
  செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்கின்றார் 5.1.303
  1574 வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையொடும்
  அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே
  மொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி
  விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் 5.1.304
  1575 காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழி போம் கருத்தினால்
  மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு
  நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல்
  தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு அரியவர் தாம் 5.1.305
  1576 அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட அரசும் எழுந்து அருள
  வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர்
  இங்கு என் பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இப்
  பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார் 5.1.306
  1577 நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல்
  உண்ணும் என்று திருமறையோர் உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே
  எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய
  தண்ணீர் அமுது செய்து அருளித் தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் 5.1.307
  1578 எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார்
  அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே
  செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப் போவ என்று உரைப்ப
  ஒப்பு இலாரும் யான் அங்குப் போகின்றேன் என்று உடன் போந்தார் 5.1.308
  1579 கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட
  வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம்
  ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப்
  பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார் 5.1.309
  1580 பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி
  மைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து
  மெய்ஞ் ஞீலிர் மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக்
  கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் 5.1.310
  1581 நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும்
  காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி
  மாதோர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர்
  ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார் 5.1.311
  1582 செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம் கொண்டு
  துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும்
  அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர்
  தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் 5.1.312
  1583 அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம்
  கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்த
  உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன்
  பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார் 5.1.313
  1584 பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி செயும் நாள்
  மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும்
  தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார்
  அணியார் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் 5.1.314
  1585 காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும்
  சூதமலி தண் பணைப் பதிகன் பலவும் கடந்து சொல்லிக்கு
  நாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆகச்
  சீத மலர் மென் சோலை சூழ் திரு ஒத்தூரில் சென்று அடைந்தார் 5.1.315
  1586 செக்கர் சடையார் திரு ஒத்துத்தூர் தேவர் பிரானார் தம் கோயில்
  புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல் பொழிய
  முக் கண் பிரானை விரும்பும் மொழித் திருத் தாண்டகங்கள் முதலாகத்
  தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்து ஒழுகுவார் 5.1.316
  1587 செய்ய ஐயர் திரு ஒத்தூர் ஏத்திப் போந்து செழும் புவனம்
  உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கித்
  தையல் தழுவக் குழைந்த பிரான் தங்கும் தெய்வப் பதி என்று
  வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் 5.1.317
  1588 ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால்
  சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று
  காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம்
  சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார் 5.1.318
  1589 மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள்
  நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம்
  தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்
  ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிந்ணள் காஞ்சி அலங்கரித்தார் 5.1.319
  1590 தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால்
  கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும்
  அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி
  இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார் 5.1.320
  1591 எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி
  மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதி
  குதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம் பொன் கோயில் குறுகினார்
  அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் 5.1.321
  1592 திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து
  கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து
  வருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப்
  பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார் 5.1.322
  1593 வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம்
  ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்பச்
  சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமை
  நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் 5.1.323
  1594 கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப்
  பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின்
  விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்
  அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார் 5.1.324
  1595 கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும்
  செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி
  மையார்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு
  மெய்யார்வம் உறத் தொழுது விருப்பினோடு மேவு நாள் 5.1.325
  1596 சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேல் தளி முதலாம்
  நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள்
  ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால்
  சார்வுறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்திருந்தார் 5.1.326
  1597 அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண்
  மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச்
  சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித்
  துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால் 5.1.327
  1598 ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப்
  பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை
  நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின்
  ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் 5.1.328
  1599 திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார்
  நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார்
  வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடை போய்ப்
  பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக் குன்றின் பாங்கு அணைந்தார் 5.1.329
  1600 நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப்
  பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்
  சூடும் இனம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய்
  மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் 5.1.330
  1601 திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த அன்பினொடும்
  பெரு வாய்மைத் தமிழ்பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்துத்
  தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர்
  மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் 5.1.331
  1602 வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும்
  தரை வளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி
  உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி
  திரை வளர் வேலைக் கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார் 5.1.332
  1603 ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி
  நற்கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப்
  பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து
  மற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர் 5.1.333
  1604 திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த
  பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு
  ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார்
  கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார் 5.1.334
  1605 எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத்
  தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம்
  முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
  விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார் 5.1.335
  1606 வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப்
  பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார்
  விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்
  கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார் 5.1.336
  1607 விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே
  உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந் தொகைகள்
  களங்கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுது
  வளங்கொள் திருப் பதியம் தனில் பல நாள்கள் வைகினார் 5.1.337
  1608 அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள்
  எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால்
  பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள்
  பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம் பதி அணைந்தார் 5.1.338
  1609 திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும்
  விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய
  இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப்
  பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார் 5.1.339
  1610 முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச்
  சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும்
  சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி
  எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர் 5.1.340
  1611 அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின்
  மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி
  மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச்
  செம்மையினால் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார் 5.1.341
  1612 திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின்
  ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப்
  பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும்
  மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார் 5.1.342
  1613 பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார்
  செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரிக் கரை பணிந்து
  தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம்
  மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார் 5.1.343
  1614 பொன் முகலித் திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில்
  முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில்
  சென்னி உறப் பணிந்து எழுந்து செம் கண் விடைத் தனிப்பாகர்
  மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார் 5.1.344
  1611 காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை
  வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்
  காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய்
  நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் 5.1.345
  1612 மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும்
  சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி
  அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத்
  தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் 5.1.346
  1613 சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து
  தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால்
  பேணிதிருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம்
  காணுமது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார் 5.1.347
  1614 அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப்
  பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்போடு போதுவார்
  துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின்
  செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திருப் பருப்பதம் எய்தினார் 5.1.348
  1615 மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள்
  கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல்
  ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும்
  தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் 5.1.349
  1616 அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச்
  செம்மல் வெண் கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்
  எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர்
  கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் 5.1.350
  1617 கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்
  திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும்
  பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்படப் பொற்பினால்
  வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார் 5.1.351
  1618 அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று
  எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய்
  மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல்
  பங்கயப் பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார் 5.1.352
  1619 அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும்
  மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்
  பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய்
  மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார் 5.1.353
  1620 மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால்
  போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச்
  சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர்
  ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார் 5.1.354
  1621 ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன்
  தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால்
  வாய நாக மணிப் பணங் கொள் விளக்கு எடுத்தன வந்து
  தோய வானவராயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார் 5.1.355
  1622 வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து
  எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன
  பொங்கழற்று எறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும் பகல்
  செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார் 5.1.356
  1623 இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம் எய்துவார்
  பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும்
  மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ
  தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் 5.1.357
  1624 கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின்
  மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட
  மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்த முயங்கியே
  மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் 5.1.358
  1625 மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட
  நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடு
  ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெடச்
  சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் 5.1.359
  1626 அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச்
  செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால்
  மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்
  தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார் 5.1.360
  1627 அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்
  மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த
  நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார்
  பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால் 5.1.361
  1628 வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று
  நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார்
  சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
  இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார் 5.1.362
  1629 மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்
  தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ
  ஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப்
  பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர் 5.1.363
  1630 வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலை
  அண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன்
  கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்
  கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற 5.1.364
  1631 கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு
  பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ
  அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால்
  வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி 5.1.365
  1632 மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும்
  தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல
  ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால்
  மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார் 5.1.366
  1633 ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறிய
  நீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால்
  ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத்
  தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் 5.1.367
  1634 அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே
  விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே
  கண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம்
  நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார் 5.1.368
  1635 தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்
  எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை
  முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை
  பழுதில் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார் 5.1.369
  1636 ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி
  வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி
  ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப்
  பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால் 5.1.370
  1637 ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார்
  போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி
  மாதோர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவி
  மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப 5.1.371
  1638 வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி
  உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார்
  எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண்
  பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் 5.1.372
  1639 மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு
  உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார்
  அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன
  புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் 5.1.373
  1640 பொன் மலைக் கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில்
  தன்மை ஆம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்
  பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
  மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் 5.1.374
  1641 காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப்
  பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர்
  பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத்
  தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க 5.1.375
  1642 தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர்
  மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக்
  காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும்
  தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப 5.1.376
  1643 கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள்
  மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க
  எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்சப்
  பொங்கியங்களால் பூத வேதாளங்கள் போற்ற 5.1.377
  1644 அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர்
  சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப
  முந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே
  நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக 5.1.378
  1645 வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும்
  தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம்
  கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த
  வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் 5.1.379
  1646 கண்ட ஆனந்தக் கடவினைக் கண்களால் முகந்து
  கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய
  அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்
  தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார் 5.1.380
  1647 முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா
  அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப்
  பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள்
  இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர் 5.1.381
  1648 ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலை
  மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித்
  தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம்
  சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ 5.1.382
  1649 ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர்
  மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச்
  செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து
  வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து 5.1.383
  1650 மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்
  கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
  வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
  காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார் 5.1.384
  1651 கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக்
  கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின்
  மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
  அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர் 5.1.385
  1652 நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக
  மாடுயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப்
  பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித்
  தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார் 5.1.386
  1653 சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச்
  சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு
  நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க
  ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர் உறும் தன்மையர் ஆனார் 5.1.387
  1654 திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப்
  பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று
  விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப
  இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி 5.1.388
  1655 அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று
  பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
  தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத்
  திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் 5.1.389
  1656 பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும்
  அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும்
  செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு
  எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் 5.1.390
  1657 பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக்
  கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத்
  தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு
  மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் 5.1.391
  1658 தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி
  வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு
  வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப்
  பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் 5.1.392
  1659 சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு
  மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து
  கண் பெருகுங் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால்
  எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார் 5.1.393
  1660 காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார்
  சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி
  வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத்
  தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார் 5.1.394
  1661 வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி
  அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின்
  சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச்
  சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து இலரால் 5.1.395
  1662 திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு
  அருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என
  உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும்
  பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார் 5.1.396
  1663 பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே
  உள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க
  வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத்
  துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் 5.1.397
  1664 கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச்
  செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்
  மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள்
  தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார் 5.1.398
  1665 வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால்
  புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில்
  எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர்
  சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் 5.1.399
  1666 பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும்
  நண்புடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர்
  எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர்
  மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் 5.1.400
  1671 பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில்
  அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு
  உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப்
  புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் 5.1.401
  1672 ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும்
  பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க்
  காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம்
  தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார் 5.1.402
  1673 சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள்
  அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
  முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு
  வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் 5.1.403
  1674 எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி
  மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச்
  செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்
  கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார் 5.1.404
  1675 சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின்
  சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே
  பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று
  ஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார் 5.1.405
  1676 திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல்
  தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான
  பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து
  மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் 5.1.406
  1677 கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள்
  நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி
  வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
  பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார் 5.1.407
  1678 தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த
  மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த
  பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி
  துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர் 5.1.408
  1679 தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து
  மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால்
  பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி
  நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார் 5.1.409
  1680 அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப்
  பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி
  செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம்
  எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் 5.1.410
  1681 தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி
  வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும்
  ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள்
  தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார் 5.1.411
  1682 தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப்
  பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து
  வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே
  பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார் 5.1.412
  1683 பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி
  நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில்
  கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன்
  வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார் 5.1.413
  1684 நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும்
  மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும்
  கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும்
  துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார் 5.1.414
  1685 ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும்
  பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும்
  நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்
  பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார் 5.1.415
  1686 அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர்
  நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்
  தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்
  பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார் 5.1.416
  1687 செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும்
  உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க
  எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி
  வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார் 5.1.417
  1688 புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
  சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த
  நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால்
  வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் 5.1.418
  1689 வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து
  தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை
  கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப்
  பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார் 5.1.419
  1690 கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய
  உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப்
  பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர
  அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார் 5.1.420
  1691 ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார்
  கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க
  ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக
  நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் 5.1.421
  1692 இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய
  அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும்
  மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம்
  சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் 5.1.422
  1693 இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி
  உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்
  அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று
  பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார் 5.1.423
  1694 மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக்
  காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும்
  பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்க
  யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் 5.1.424
  1695 இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த
  மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர்
  மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும்
  அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் 5.1.425
  1696 மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால்
  தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன்
  என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற
  முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் 5.1.426
  1697 மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப்
  புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று
  நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி
  அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் 5.1.427
  1698 வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின்
  மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்
  யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி
  தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் 5.1.428
  1699 அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப்
  படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன்
  கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார்
  முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் 5.1.429

  திருச்சிற்றம்பலம்


Goto Main book