MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    5.3 பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் (1711 -1721 )


    திருச்சிற்றம்பலம்

    1711 சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகஞ்சூழ்புடைத்தாய்
    வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி
    நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து
    மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை 5.3.1
    1712 அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார்
    சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள்
    இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று
    முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் 5.3.2
    1713 தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக்
    கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார்
    வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும்
    புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார் 5.3.3
    1714 இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின்
    மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார்
    சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து
    நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார் 5.3.4
    1715 மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள்
    கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப் பாட்டில்
    செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ்
    உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் 5.3.5
    1716 நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
    ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின்
    மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்
    கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார் 5.3.6
    1717 இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம்
    பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து
    மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர்
    சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார் 5.3.7
    1718 அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணைவுறுவார்
    செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே
    மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு
    நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார் 5.3.8
    1719 மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர்
    நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து
    கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று
    எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் 5.3.9
    1720 நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு
    காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு
    ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப
    மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் 5.3.10
    1721 பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக்
    கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி
    மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும்
    குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம் 5.3.11

    திருச்சிற்றம்பலம்


Goto Main book