MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  5.5 அப்பூதி அடிகள் நாயனார் புராணம் (1788 - 1832 )


  திருச்சிற்றம்பலம்

  1788 தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர்
  ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார்
  ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே
  காண் தகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார் 5.5.1
  1789 களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்
  வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ள
  அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும்
  உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார் 5.5.2
  1790 வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர்
  அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால்
  படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள
  முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் 5.5.3
  1791 பொருப்பரையன் மடப் பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின்
  திருப் பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கு அரசர்
  ஒருப் படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும்
  விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் 5.5.4
  1792 அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் அருள் உடையார்
  உளம் அனைய தண் அளித்தாய் உறுவேனில் பரிவு அகற்றிக்
  குளம் நிறைந்த நீர்த் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்
  வளம் மருவும் நிழல் தரு தண்ணீர்ப் பந்தர் வந்து அணைந்தார் 5.5.5
  1793 வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப்
  பந்தர் உடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்து அருளிச்
  சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசெனும் பேர்
  சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார் 5.5.6
  1794 இப் பந்தர் இப் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு
  அப் பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால்
  செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார்
  தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் 5.5.7
  1795 என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று
  நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத்
  துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண்
  சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் 5.5.8
  1796 அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார்
  தங்கும் மனைக் கடைத் தலை முன் சார்வாக உள் இருந்த
  திங்களூர் மறைத் தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார்
  நங்கள் பிரான் தமர் ஒருவர் எனக் கேட்டு நண்ணினார் 5.5.9
  1797 கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம்
  அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார்
  முடிவில் தவம் செய்தேன் கொல் முன்பு ஒழியும் கருணை புரி
  வடிவுடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் 5.5.10
  1798 ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்துள் இறைஞ்சி
  வருகின்றோம் வழிக் கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம்
  தருகின்ற நிழல் தண்ணீர்ப் பந்தரும் கண்ட அத் தகைமை
  புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் எனப் புகல்வார் 5.5.11
  1799 ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த
  ஈறில் தண்ணீர்ப் பந்தரில் நும் பேர் எழுதாதே
  வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல்
  கூறும் என எதிர் மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார் 5.5.12
  1800 நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய்
  நன்று அருளிச் செய்து இலீர் நாணில் அமண் பதகர் உடன்
  ஒன்றிய மன்னவன் சூட்சி திருத் தொண்டின் உறைப் பாலே
  வென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் 5.5.13
  1801 நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத் தொண்டாலே
  இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளியச்
  செம்மை புரி திருநாவுக்கரசர் திருப் பெயர் எழுத
  வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி 5.5.14
  1802 பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை
  அங்கணர் தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே
  மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர்
  எங்கு உறைவீர் நீர் தாம் யார் இயம்பும் என இயம்பினார் 5.5.15
  1803 திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர்
  பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையின் நின்றேற
  அருளும் பெரும் சூலையினால் ஆட் கொள்ள அடைந்து உய்ந்த
  தெருளும் உணர்வு இல்லாத சிறுமை யேன் யான் என்றார் 5.5.16
  1804 அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாம்
  கர கமலம் மிசை குவியக் கண் அருவி பொழிந்து இழிய
  உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலியத்
  தரையின் மிசை வீழ்ந்தவர் தம் சரண கமலம் பூண்டார் 5.5.17
  1805 மற்றவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருள
  அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு மறையோர்
  முற்றவும் களி கூற முன் நின்று கூத்தாடி
  உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் 5.5.18
  1806 மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே
  ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
  ஆண்ட அரசு எழுந்து அருளும் ஓகை உரைத்து ஆர்வம் உறப்
  பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீளப் புறப்பட்டார் 5.5.19
  1807 மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர்
  அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதல் உடன்
  முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும்
  புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் 5.5.20
  1808 ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின் உடன்
  வாசம் நிறை திரு நீற்றுக் காப்பு ஏந்தி மனம் தழைப்பத்
  தேசம் உய்ய வந்த வரைத் திரு அமுது செய்விக்கும்
  நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் 5.5.21
  1809 செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி
  எய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்று
  மை திகழ் மிடற்றினான் தன் அருளினால் வந்தது என்றே
  உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் 5.5.22
  1810 தூய நல் கறிகள் ஆன அறுவகைச் சுவையால் ஆக்கி
  ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருளத் தங்கள்
  சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கு அரசை வாழை
  மேய பொன் குருத்துக் கொண்டுவா என விரைந்து விட்டார் 5.5.23
  1811 நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன் என்று
  ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்குப் பெரிய வாழை
  மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று
  அல்லல் உற்று அழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற்று அன்றே 5.5.24
  1812 கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்ற
  பை அரா உதறி வீழ்த்துப் பதைப்பு உடன் பாந்தாள் பற்றும்
  வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக்
  கொய்த இக் குருத்தைச் சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் 5.5.25
  1813 பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த
  வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும்
  அரும் தவர் அமுது செய்யத் தாழ்க்க யான் அறையேன் என்று
  திருந்திய கருத்தினோடும் செழுமனை சென்று புக்கான் 5.5.26
  1814 எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம்
  தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து
  விரியுரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான்
  பரி கலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படி மேல் வீழ்ந்தான் 5.5.27
  1815 தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும்
  உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி
  விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று
  துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார் 5.5.28
  1816 பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயினுள் பெய்து மூடிப்
  புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே
  அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று
  விறல் உடைத் தொண்டனார் பால் விருப்பொடு விரைந்து வந்தார் 5.5.29
  1817 கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்கின்றது என்றே
  அடிசிலும் கறியும் எல்லாம் அழகு உற அணைய வைத்துப்
  படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம்
  குடி முழுதும் உய்யக் கொள்வீர் என்று அவர் கூறக் கேட்டு 5.5.30
  1818 அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர்
  திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலம் திருத்தும் முன்னர்
  இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும்
  பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் 5.5.31
  1819 ஆதி நான்மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கிக்
  காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே
  மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை
  யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் 5.5.32
  1820 அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர்
  செவ்விய திரு உள்ளத்து ஓர் தடு மாற்றம் சேர நோக்கி
  இவ் உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால்
  மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி 5.5.33
  1821 பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ
  வருவது என்று உரையார் ஏனும் மாதவர் வினவ வாய்மை
  தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து
  பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே 5.5.34
  1822 நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம்
  யாவர் இத் தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே
  ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம்
  பா இசைப் பதிகம் பாடிப் பணி விடம் பாற்று வித்தார் 5.5.35
  1823 தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும்
  மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்று
  சேவுகைத்தவர் ஆட் கொண்ட திருநாவுக்கரசர் செய்ய
  பூவடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே 5.5.36
  1824 பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்
  நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற அப் பயந்தார் தாங்கள்
  அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்குச்
  சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் 5.5.37
  1825 ஆங்கவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூட
  ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற
  பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர் தாமும்
  தாங்கிய மகிழ்ச்சி யோடும் தகுவன சமைத்துச் சார்வார் 5.5.38
  1826 புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித்
  திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி
  நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்
  மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார் 5.5.39
  1827 திருந்திய வாச நல் நீர் அளித்திட திருக்கை நீவும்
  பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைகள் உடனே நோக்கி
  அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன
  விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் 5.5.40
  1828 மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செய்யச்
  சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்கக்
  கொந்து அவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும்
  அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே 5.5.41
  1829 மா தவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்து
  காதல் நண்பு அளித்துப் பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை
  மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர்
  நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ்ப் பதிகம் செய்வார் 5.5.42
  1830 அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்ற
  மெய்ப் பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொல் மாலை வேய்ந்த
  இப் பூதி பெற்ற நல்லோர் எல்லை இல் அன்பால் என்றும்
  செப்பு ஊதியம் கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் 5.5.43
  1831 இவ் வகை அரசின் நாமம் ஏத்தி எப் பொருளும் நாளும்
  அவ்வரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும்
  செவ்விய நெறியது ஆகத் திருத் தில்லை மன்றுள் ஆடும்
  நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே 5.5.44
  1832 மான் மறிக் கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற
  மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றிப்
  கான் மலர்க் கமல வாவிக் கழனி சூழ் சாத்த மங்கை
  நான் மறை நீல நக்கர் திருத் தொழில் நவிலல் உற்றேன் 5.5.45

  திருச்சிற்றம்பலம்


Goto Main book