MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  5.7 நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் (1871 -1903 )


  திருச்சிற்றம்பலம்

  1871 வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச்
  செய்ய கமலத் தடம் பணையும் செழும் நீர்த் தடமும் புடை உடைத்தாய்
  பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழ் அதனால்
  எய்தும் பெருமை எண் திசையும் ஏறூர் ஏமப் பேர் ஊரால் 5.7.1
  1872 மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு
  வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள்
  சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும்பூகம்
  காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழுநீர்ச் செய் 5.7.2
  1873 பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது படச் செய்ய
  துணர் மென் கமலம் இடை இடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன
  புணர் வெண் புரி நூலவர் வேள்விக் களத்தில் புனைந்த வேதிகை மேல்
  மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீமானுமால் 5.7.3
  1874 பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவ நெறி
  ஒருமை நெறி வாழ் அந்தணர் தம் ஓங்கு குலத்தினுள் வந்தார்
  இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப் பெற்ற தவத்து
  அருமை புரிவார் நமி நந்தி அடிகள் என்பார் ஆயினார் 5.7.4
  1875 வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத் தகுவார்
  தூய்மைத் திரு நீற்று அடைவே மெய்ப் பொருள் என்று அறியும் துணிவினார்
  சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை
  யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் 5.7.5
  1876 அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல்
  வெவ்வூறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணி உறுதல்
  எவ்வூதியமும் எனக் கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும்
  தெவ்வூர் எரித்த வரைச்சிலையார் திருப் பாதங்கள் வணங்கினார் 5.7.6
  1877 செம் பொன் புற்றின் மாணிக்கச் செழும் சோதியை நேர் தொழுஞ் சீலம்
  தம் பற்றாக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து
  அம் பொன் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கோர் அரன் நெறியின்
  நம்பர்க்கு இடமாம் கோயிலின் உட்புக்கு வணங்க நண்ணினார் 5.7.7
  1878 நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல் உடன்
  அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால்
  பண்ணுந் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்
  எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் 5.7.8
  1879 எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும்
  செழுந்தண் பதியின் இடை அப்பால் செல்லில் செல்லும் பொழுது என்ன
  ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும்
  அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் 5.7.9
  1880 கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும்
  நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல்
  செய்யும் என்று திருத் தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே
  பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார் 5.7.10
  1881 அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே
  பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த
  முருகு விரியும் மலர்க் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி
  உருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில் 5.7.11
  1882 வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற
  இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
  அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
  சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால் 5.7.12
  1883 சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்
  நன்னீர் பொய்கை நடுப்புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி
  அந்நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள்
  முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் 5.7.13
  1884 சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
  ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி
  ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன்
  நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய 5.7.14
  1885 நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரியக்
  குறையும் தகளிகலுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து
  மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
  உறையும் பதியின் அவ்விரவே அணைவார் பணி உற்று ஒருப்பட்டார் 5.7.15
  1886 இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல்
  விரவி நியமத் தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்துப்
  பரவி அமுது செய்து அருளிப் பள்ளி கொண்டு புலர் காலை
  அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் 5.7.16
  1887 வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம் கொண்டு
  சிந்தை மகிழப் பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள்
  முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார்
  அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் 5.7.17
  1888 பண்டு போலப் பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுகத்
  தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வில் அமண்
  குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியதால்
  அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் 5.7.18
  1889 நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப்
  பூத நாதர் புற்றிடங் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம்
  நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரி அணையின்
  மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம விதி விளங்க 5.7.19
  1890 வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம்
  என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு
  ஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும்
  நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் 5.7.20
  1891 இன்ன பரிசு திருப் பணிகள் பலவும் செய்தே ஏழ் உலகும்
  மன்னும் பெருமைத் திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார்
  அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும்
  நன்மை பெருக நமி நந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய 5.7.21
  1892 தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள் எழுந்து அருள
  யாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக் குலத்தில் உள்ளோரும்
  மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம்
  காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார் 5.7.22
  1893 பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும் கோயில் புகத்
  தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே
  இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து
  முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழ்கின்றார் 5.7.23
  1894 திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும் கடன் முறையால்
  அங்கி தனை வேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீர் என அவர்க்குத்
  தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண
  எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று 5.7.24
  1895 ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து
  வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும் அதற்கு நீ
  சீத நன்னீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் எனச் செப்பக்
  காதலால் மனையார் தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் 5.7.25
  1896 ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில்
  ஏயும் அசைவின் அயர்வாலோ? அறியோம் இறையும் தாழாதே
  மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து
  தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின் கண் 5.7.26
  1897 மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள் தாம்
  மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி
  ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
  ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார் 5.7.27
  1898 ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது
  ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்த படியே வழிபட்டு
  மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு
  நாதனார் தம் திருவாரூர் புகுத எதிர் அந் நகர் காண்பார் 5.7.28
  1899 தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்
  மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால்
  மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்த
  கைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து கள்஢சிறந்தார் 5.7.29
  1900 படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர் பால்
  அடியேன் பிழையைப் பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால்
  குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து
  நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார் 5.7.30
  1901 நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவே
  வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால்
  ஏறு சிறப்பின் மணிப் புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்
  பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார் 5.7.31
  1902 இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச் செய்து
  நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச்
  சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர்
  மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் 5.7.32
  1903 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
  நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம் படையின்
  பூட்டார் மார்பில் சிறிய மறைப் புதல்வன் தன்னைப் புக்கு ஒளியூர்த்
  தட்டா மரையின் மடுவின் கண் தனி மா முதலை வாய் நின்றும்
  மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே

  திருச்சிற்றம்பலம்

  திருநின்ற சருக்கம் முற்றிற்று.
  சருக்கம் 5-க்குத் திருவிருத்தம் – 1903

Goto Main book