MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    6.3 திரு மூல நாயனார் புராணம் (3564 - 3591)


    திருச்சிற்றம்பலம்

    3564 அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில்
    முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி
    இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும்
    நந்தி திருவருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர் 6.3.1
    3565 மற்றவர் தாம் அணி மாதி வரும் சித்தி பெற்று உடையார்
    கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால்
    உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு
    நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் 6.3.2
    3566 மன்னு திருக் கேதாரம் வழி பட்டு மா முனிவர்
    பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித்
    துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கை
    அன்ன மலி அகன் துறை நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார் 6.3.3
    3567 கங்கை நீர்த் துறை ஆடிக் கருத்துறை நீள் கடல் ஏற்றும்
    அங்கணர் தாம் மகிழ்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி
    மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி
    திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் 6.3.4
    3568 நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி
    ஆடு திரு அரங்கான ஆலவனம் தொழுது ஏத்தித்
    தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து
    மாடுயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் 6.3.5
    3569 நற்பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க்
    கற்புரிசைத் திருவதிகை கலந்து இறைஞ்சிக் கறை கண்டர்
    அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப்
    பொற்பதியாம் பெரும் பற்ற புலியூர் வந்து அணைந்தார் 6.3.6
    3570 எவ்வுலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச்
    செவ்விய அன்புற வணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து
    வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்தக் கூத்தை
    அவ்வியல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் 6.3.7
    3571 தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய்
    அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
    விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
    கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் 6.3.8
    3572 காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி
    ஆவின் அரும் கன்று உறையும் ஆவடு தண் துறை அணைந்து
    சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து
    மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் 6.3.9
    3573 அந்நிலைமைத் தானத்தை அகலாத ஒருகருத்து
    முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப்
    பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள்
    பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார் 6.3.10
    3574 அந்தணர்தம் சாத்தனூர் ஆமேய்பார் குடித் தோன்றி
    முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயருடையான்
    வந்து தனி மேய் கின்றான் வினைமாள வாழ்நாளை
    வெந்தொழில் கூற்றுவன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான் 6.3.11
    3575 மற்றவன் தன் உடம்பினை அக்கோக் குலங்கள் வந்து அணைந்து
    சுற்றி மிகக் கதறுன சுழல்வன மோப்பனவாக
    நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ
    உற்றதுயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் 6.3.12
    3576 இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று
    அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும்
    தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற
    பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார் 6.3.13
    3577 பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எலாம்
    நாத் தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து
    வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின்
    நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேந்தனவால் 6.3.14
    3578 ஆவின் நிரை மகிழ்வுறக் கண்ட அளிகூர்ந்த அருளினராய்
    மேவியவை மேய் விடத்துப் பின் சென்று மேய்ந்தவை தாம்
    காவிரி முன் துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏறப்
    பூவிரி தண் புறவின் நிழல் இனிதாகப் புறங்காத்தார் 6.3.15
    3579 வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை மலை அணையச்
    சைவ நெறி மெய் உணந்தோர் ஆன் இனங்கள் தாமே முன்
    பைய நடப்பன கன்றை நினைந்து படர் வன வாகி
    வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்தப் பின் போனார் 6.3.16
    3580 போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை தோறும் புகநின்றார்
    மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று
    ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள்
    ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய்தீண்ட அதற்கு இசையார் 6.3.17
    3581 அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள்
    தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் எனத்தளர
    இங்கு உனக்கு என்னுடன் அணை ஒன்று இல்லை என எதிர்மறுத்துப்
    பொங்கு தவத்தோர் ஆங்கோர் பொது மடத்தின் உட்புகுந்தார் 6.3.18
    3582 இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம்
    சொல் ஆடாது இருந்தவர் பால் அணையாது துயிலாதாள்
    பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப
    நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் 6.3.19
    3583 பித்து உற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று
    சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில்
    வைத்த கருத்தினர் ஆகி வரம்பில் பெருமையில் இருந்தார்
    இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார் 6.3.20
    3584 பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார் போல்
    முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள்
    சுற்றம் இயல் பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி
    மற்றவளும் மையலுற மருங்குள்ளார் கொண்டு அகன்றார் 6.3.21
    3585 இந் நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள்
    வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த
    முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச்
    சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் 6.3.22
    3586 தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை
    மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக்
    கண்ணிய அத்திரு அருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
    எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் 6.3.23
    3587 சுற்றிய அக் குலத்துள்ளார் தொடர்ந்தார்கு தொடர்வு இன்மை
    முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின்
    பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்துப் பெருகு ஆர்வச்
    செற்றம் முதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் துறை சேர்ந்தார் 6.3.24
    3588 ஆவடு தண் துறை அணைந்து அங்கு அரும் பொருளை உறவணங்கி
    மேவுவார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த்
    தேவிருக்கை அமர்ந்து அருளிச் சிவயோகம் தலை நின்று
    பூவலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்து இருந்தார் 6.3.25
    3589 ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோய் உய்ய
    ஞானம் முதல் நான்கு மலர் நல் திரு மந்திர மாலை
    பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம் பொருளாம்
    ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான் என எடுத்து 6.3.26
    3590 முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி
    மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து
    சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை
    தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார் 6.3.27
    3591 நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை யெலாம்
    மலர்ந்த மொழித் திருமூலத் தேவர் மலர்க் கழல் வணங்கி
    அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட
    தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம் 6.3.28
    திருச்சிற்றம்பலம்


Goto Main book