MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    6.4 தண்டியடிகள் புராணம் (3592 - 3617)


    திருச்சிற்றம்பலம்

    3592 தண்டி அடிகள் திரு ஆரூர் பிறக்கும் பெருமைத் தவம் உடையார்
    அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொன் கழல் மனத்துக்
    கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும்
    கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் 6.4.1
    3593 காணும் கண்ணால் காண்பது மெய்த் தொண்டே ஆன கருத்து உடையார்
    பேணும் செல்வத் திருவாரூர்ப் பெருமான் அடிகள் திரு அடிக்கே
    பூணும் அன்பினால் பரவிப் போற்றும் நிலைமை புரிந்து அமரர்
    சேணும் அறிய அரியதிருத் தொண்டில் செறியச் சிறந்து உள்ளார் 6.4.2
    3594 பூவார் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயில்
    தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாரய் செம்மை புரி
    நாவால் இன்பம் உறும் காதல் நமச்சிவாய நற்பதமே
    ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில் 6.4.3
    3595 செம் கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு
    எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால்
    அங்கு அந்நிலைமை தனைத் தண்டி அடிகள் அறிந்தே ஆதரவால்
    இங்கு நான் இக் குளம் பெருகக் கல்ல வேண்டும் என்று எழுந்தார் 6.4.4
    3596 குழி வாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக் குலையின்
    இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடை தடவி
    வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப் போய்
    ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்தஞ்சுடன் உய்ப்பார் 6.4.5
    3597 நண்ணிநாளும் நல்தொண்டர் நயந்த விருப்பால் மிகப் பெருகி
    அண்ணல் தீர்த்தக் குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி
    எண்ணித் தண்டி அடிகள் பால் எய்தி முன் நின்று இயம்புவார்
    மண்ணைக் கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் 6.4.6
    3598 மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம்
    தேசு பெருகும் திருத் தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள்
    பூசு நீறு சாந்தம் எனப் புனைந்த பிரானுக்கு ஆன பணி
    ஆசிலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் 6.4.7
    3599 அந்தம் இல்லா அறிவு உடையார் உரைப்பக் கேட்ட அறிவு இல்லார்
    சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன
    மந்த உணர்வும் விழிக்குருடும் கேளாச் செவியும் மற்று உமக்கே
    இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் 6.4.8
    3600 வில்லால் எயில் மூன்று எரித்தபிரான் விரையார் கமலச் சேவடிகள்
    அல்லால் வேறுகாணேன் யான் அதுநீர் அறிதற்கார் என்பார்
    நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு
    எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் 6.4.9
    3601 அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல்
    பெருகும் இவ்வூரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று
    கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கிக் கருத்தின் வழித்
    தருகைக்கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் 6.4.10
    3602 வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டி அடிகள்தாம்
    மைகொள் கண்டர் பூங்கோயில் மணிவாயிலின் முன் வந்து இறைஞ்சி
    ஐயனே இன்று அமணர்கள் தாம் என்னை அவமானம் செய்ய
    நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு எனவீழ்ந்தார் 6.4.11
    3603 பழுது தீர்ப்பார் திருத் தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து
    தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப் பெறாது
    அழுது கங்குல் அவர் துயிலக் கனவில் அகில லோகங்கள்
    முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளிச் செய்கின்றார் 6.4.12
    3604 நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழித் தந்த
    வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய்
    அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி அவ்விரவே
    துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார் 6.4.13
    3605 தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட அமணர் தரியாராய்
    மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான் அவன்பால் நீ மேவிக்
    கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளித்
    தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்து அருளினார் அத்தொழில் உவப்பார் 6.4.14
    3606 வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்பப்
    பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப் போற்றிப் புலரத் தொண்டர்பால்
    சார்ந்து புகுந்த படி விளம்பத்தம் பிரானார் அருள் நினைந்தே
    ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் 6.4.15
    3607 மன்ன! கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்லத்
    துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லிப்
    பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்ததறிகள் அவை வாங்கி
    என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டைப் பறித்தார் என்று இயம்பி 6.4.16
    3608 அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு
    எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன
    இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இதுமேல்
    வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் 6.4.17
    3609 அருகர் தம்மை அரசனும் அங்கு அழைத்துக் கேட்க அதற்கு இசைந்தார்
    மருவும் தொண்டர் முன்போக மன்னன் பின்போய் மலர்வாவி
    அருகு நின்று விறல் தண்டி அடிகள் தம்மை முகம் நோக்கிப்
    பெருகுந் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் எனப் பெரியோர் 6.4.18
    3610 ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று
    வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார்
    ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்செழுத்தை
    வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணிநீர் மூழ்கினார் 6.4.19
    3611 தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார்
    பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி
    இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு
    பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் 6.4.20
    3612 தண்டி யடிகள் தம்முடனே ஒட்டிக் கெட்ட சமண் குண்டர்
    அண்டர் போற்றும் திருவாரூர் நின்றும் அகன்று போய்க் கழியக்
    கண்ட அமணர் தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என
    மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி 6.4.21
    3613 குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை- என உரைப்பார்
    வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோ ம் என்பாமதி-கெட்டீர்
    அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார்-அரசனுக்கு
    பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர்-பறிதலையார் 6.4.22
    3614 பீலி தடவிக் காணாது பெயர்வார் நின்று பேதுறுவார்
    காலினோடு கை முறியக் கல் மேல் இடறி வீழ்வார்கள்
    சால நெருங்கி எதிர் எதிரே தம்மில் தாமே முட்டிடுவார்
    மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார் 6.4.23
    3615 அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம்
    சொன்ன வண்ணமே அவரை ஓடத் தொடர்ந்து துரந்து அதன்பின்
    பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளம் சூழ் கரைபடுத்து
    மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடிபணிந்தான் 6.4.24
    3616 மன்னன் வணங்கிப் போயின பின் மாலும் அயனும் அறியாத
    பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே
    உன்னும் மனத்தால் அஞ்சு எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே
    மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார் 6.4.25
    3617 கண்ணின் மணிகள் அவை இன்றிக் கயிறு தடவி குளம்தொட்ட
    எணில் பெருமைத் திருத் தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி
    விண்ணில் வாழ்வார் தாம் வேண்டப் புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர்
    உள் நிலாவும் புகழ்த் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் 6.4.26
    திருச்சிற்றம்பலம்


Goto Main book