6.6 சோமாசி மாற நாயனார் புராணம் (3630 - 3634)
திருச்சிற்றம்பலம்
3630 சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால்
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் 6.6.1
3631 யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம்
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன
ஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால்
வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார் 6.6.2
3632 எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை
நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார் 6.6.3
3633 சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி
ஆரம் திகழ் மார்பின் அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால்
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் 6.6.4
3634 துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார் 6.6.5
3635 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர்
துணையும் தாமும் பிரியாதார் தோழத்தம் பிரானாரை
இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென்பணை தோள் எய்துவிக்க
அணையும் ஒருவர் சரணமே அரணமாக அடைந்தோமே 6.6.6
திருச்சிற்றம்பலம்
வம்பறா வரிவண்டு சருக்கம் முற்றிற்று.