MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7.1 சாக்கிய நாயனார் புராணம் (3636 - 3653)


    திருச்சிற்றம்பலம்

    3636 அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய்
    மறு சமயச் சாக்கியர்தம் வடிவினால் வரும் தொண்டர்
    உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து
    மறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் 7.1.1
    3637 தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவுடைய
    வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து
    கேளாகிப் பல் உயிர்க்கும் அருள் உடையார் ஆய்க் கெழுமி
    நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் 7.1.2
    3638 அந் நாளில் எயில் காஞ்சி அணிநகரம் சென்று அடைந்து
    நல்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடுவார்
    முன்னாகச் சாக்கியர் தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து
    மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார் 7.1.3
    3639 அந் நிலைமைச் சாக்கியர்தம் அரும் கலை நூல் ஓதி அது
    தன்னிலையும் புறச் சமயச் சார்வுகளும் பொருள் அல்ல
    என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறில் சிவ
    நன்னெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் 7.1.4
    3640 செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்
    மெய் வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே
    இவ்வியல்பு சைவநெறி அல்ல வற்றுக்கு இல்லை என
    உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் 7.1.5
    3641 எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
    மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே
    துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம்
    தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார் 7.1.6
    3642 எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார்
    பொல்லா வேடச் சாக்கியரே ஆகிப் புல்லர் ஆகுவார்
    அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன
    வல்லார் இவர் அவ் வேடத்தை மாற்றாது அன்பின் வழிநிற்பார் 7.1.7
    3643 காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
    நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
    நாணாது நேடியமால் நான் முகனும் காண நடுச்
    சேணாரும் தழல் பிழம்பாய்த் தோன்றிது தெளிந்தாராய் 7.1.8
    3644 நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து
    மாடோ ர் வெள் இடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம்
    நீடோ டு களியுவகை நிலைமை வரச் செயல் அறியார்
    பாடோ ர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார் 7.1.9
    3645 அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால்
    மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரிசெயலினால்
    இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே
    நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார் 7.1.10
    3646 அன்றுபோய் பிற்றைநாள் அந்நியதிக்கு அனையுங்கால்
    கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்புஅதனை
    நின்றுணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே
    என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் 7.1.11
    3647 தொடங்கிய நாள் அருளிய அத்தொழில் ஒழியா வழிதொடரும்
    கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவராடைப்
    படம் புனை வேடம் தவிரார் பசுபதியார் தம் செயலே
    அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மாதவர்தாம் 7.1.12
    3648 இந் நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய
    முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில்
    துன்னிய மெய் அன்புடனே எழுந்தவினை தூயவர்க்கு
    மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால் 7.1.13
    3649 கல்லாலே எறிந்த அதுவும் அன்பான படி காணில்
    வில்வேடர் செருப்பு அடியும் திருமுடியில் மேவிற்றால்
    நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை
    அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலராமால் 7.1.14
    3650 அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார்
    எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து
    பொங்கியது ஓர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு
    வெங்கர்஢யின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார் 7.1.15
    3651 கொண்டதொரு கல்எடுத்துக் குறிகூடும் வகை எறிய
    உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கை ஓடும்
    கண்டருளும் கண்நுதலார் கருணை பொழிதிருநோக்கால்
    தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவி ஓடும் தோன்றினார் 7.1.16
    3652 மழ விடைமேல் எழுந்து அருளி வந்த ஒரு செயலாலே
    கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி
    விழ அருள் நோக்கு அளித்து அருளிமிக்க சிவலோகத்தில்
    பழ அடிமைப் பாங்கு அருளிப் பரமர் எழுந்து அருளினார் 7.1.17
    3653 ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்ற
    கோதில் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும்
    சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தான் சூடித்
    தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி 7.1.18


Goto Main book