MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  7.4 கழற்றி அறிவார் நாயனார் புராணம் (3748 - 3922)


  திருச்சிற்றம்பலம்

  3748 மாவீற்று இருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டுப்
  பா வீற்றிருந்த பல்புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி தான்
  சேவீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர் குலக்
  கோவீற்று இருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர் 7.4.1
  3749 காலை எழும் பல் கலையின் ஒலி களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி
  சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரகச் செருக்கால் சுலவும் ஒலி
  பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி
  வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினதால் 7.4.2
  3750 மிக்க செல்வம் மனைகள் தொறும் விளையும் இன்பம் விளங்குவன
  பக்கம் நெருங்கும் சாலை தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன
  தக்க அணி கொள் மாடங்கள் தொறும் சைவ மேன்மை சாற்றுவன
  தொக்க வளங்கள் இடங்கள் தொறும் அடங்க நிதியம் துவன்றுவன 7.4.3
  3751 வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற
  சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ்
  சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான்
  கோதை அரசர் மகோதை எனக் குலவும் பெயரும் உடைத்துலகில். 7.4.4
  3752 முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர் அதன் கண் முறை மரபின்
  அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவத் திறம் தழைப்பத்
  திருகு சின வெம் களியானைச் சேரர் குலமும் உலகும் செய்
  பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக் கோதையர் 7.4.5
  3753 திருமா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால்
  வருமா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர் மாரி
  தருமா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப்
  பெருமா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால் 7.4.6
  3754 மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால்
  கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணூம் கருத்தினராய்
  உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார்
  தெள் நீர் முடியார் திரு வஞ்சைக் களத்தில் திருத்தொண்டே புரிவார் 7.4.7
  3755 உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார்
  புலரி எழுந்து புனல் மூழ்கிப் புனித வெண் நீற்றினும் மூழ்கி
  நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து
  மலரும் முகையும் கொணர்ந்து மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து 7.4.8
  3756 திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு
  வரும் அன்புடன் இன்பு உறச் சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள்
  பெருமை பிறங்கச் செய்து அமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும்
  ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப் பணிந்தே ஒழுகும் நாள் 7.4.9
  3757 நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால் வரையின் கொடிமதில் சூழ்
  சீரின் மலிந்த திரு நகரம் அதனில் செங்கோல் பொறையன் எனும்
  காரின் மலிந்த கெடை நிழல் மேல் கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த்
  தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்துத் தவம் சார்ந்தான் 7.4.10
  3758 வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின்
  சிந்தை மதி நூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி
  முந்தை மரபில் முதல்வர் திருத் தொண்டு முயல்வார் முதற்று ஆக
  இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர் பால் எய்தினார் 7.4.11
  3759 எய்தி அவர் தம் எதிரில் இறைஞ்சி இருந்தண் சாரல் மலை நாட்டுச்
  செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு
  மைதீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது எனப்
  பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண் 7.4.12
  3760 இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார்
  அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல்
  என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் எனப் புக்கு
  முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் 7.4.13
  3761 மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும்
  யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு இல்லாத்
  தாவில் விறலும் தண்டாத கொடையும் படை வாகனமும் முதல் ஆம்
  காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார் 7.4.14
  3762 ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சிப் புறம் போந்து அரசு அளித்தல்
  ஊனம் ஆகும் திருத் தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே
  மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும்
  மான அமைச்சர் தாள் பணிந்து அவ் விணைமேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் 7.4.15
  3762 உரிமை நாளில் ஒரை நலன் எய்த மிக்க உபகரணம்
  பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து
  இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ்
  தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற் அறிவார் தாம் 7.4.16
  3764 தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன் தாழ்ந்து எழுந்து
  கும்ப யானை மேல் கொண்டு கொற்றக் குடையும் சாமரையும்
  நம்பும் உரிமை யவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம் கொள்வார்
  மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வரக் கண்டார் 7.4.17
  3765 மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால்
  உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே
  இழையிற் சிறந்த ஓடை நுதல் யானைக் கழுத்தின் நின்று இழிந்து
  விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கை தொழுதார் 7.4.18
  3766 சேரர் பெருமான் தொழக் கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி
  யார் என்று அடியேனைக் கொண்டது அடி வண்ணான் எனச்
  சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின்
  வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் 7.4.19
  3767 மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம்
  சென்னி மிசை அஞ்சலி செய்து போற்றச் சினமால் களிறு ஏறி
  மின்னு மணிப் பூண் கொடி மாட வீதி மூதூர் வலம் கொண்டு
  பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய 7.4.20
  3768 யானை மிசை நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின் கண்
  மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக் குடை நிழற்றப்
  பானல் விழியார் சாமரை முன் பணி மாறப்பன் மலர் தூவி
  மான அரசர் போற்றிட வீற்று இருந்தார் மன்னர் பெருமானார் 7.4.21
  3769 உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியர் உடன் கூட
  நிலவு பெரு முக் கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி
  அலகில் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து
  மலரும் திரு நீற்று ஒளிவளர மறைகள் வளர மண் அளிப்பார் 7.4.22
  3770 நீடும் உரிமைப் பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும்
  தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லைச் திருச்சிற்றம் பலத்துள்
  ஆடும் கழலே எனத் தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம்
  கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குலப் பெருமாள் 7.4.23
  3771 வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமம் சாந்தம் மணித் தூபம்
  தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும்
  ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும்
  பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொன் பார் சிலம்பின் ஒலி அளித்தார் 7.4.24
  3772 நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார்
  இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால்
  செம் பொன் மழையாம் எனப் பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி
  உம்பர் போற்றத் தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் 7.4.25
  3773 இன்ன வண்ணம் இவர் ஓழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு
  மன்னும் மதுரைத் திரு வால வாயில் இறைவர் வரும் அன்பால்
  பன்னும் இசைப் பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு
  நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள் புரிவார் 7.4.26
  3774 இரவு கனவில் எழுந்து அருளி என்பால் அன்பால் எப்பொழுதும்
  பரவும் சேரன் தனக்கு உனக்குப் பைம் பொன் பட்டு ஆடை
  விரவு கதிர் செய் நவ மணிப் பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றித்
  தர நம் ஓலைத் தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று 7.4.27
  3775 அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள் செய்த பெருமை யாலே
  எதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று
  மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக்
  கதிர் ஒளி விரிந்த தோட்டு திருமுகம் கொடுத்தார் காண 7.4.28
  3776 சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேல் கொண்டு பத்திரனார்
  அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தித்
  துங்கப் பரிசை கொடுங் கோளூர் தன்னில் புகுந்து துன்னு கொடி
  மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் 7.4.29
  3777 கேட்ட பொழுதே கை தலைமேல் கொண்டு கிளர்ந்த பேரன்பால்
  நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி
  ஓட்டத் தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன்
  பாட்டின் தலைமைப் பணனார் பாதம் பலகால் பணிகின்றார் 7.4.30
  3778 அடியேன் பொருளாத் திருமுகம் கொண்டு அணைந்தது என்ன அவர் தாமும்
  கொடிசேர் விடையார் திருமுகம் கைக்கொடுத்து வணங்கக் கொற்றவனார்
  முடிமேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறிப் பொழி கண்ணீர்
  பொடியார் மார்பில் பரந்து விழப் புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் 7.4.31
  3779 பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது படி எடுக்க
  உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி
  விரிபொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமைச் சுற்றம் எலாம்
  பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள் செய்வார் 7.4.32
  3780 தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப்
  பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம்
  அம்கண் ஒன்றும் ஒழியாமை அடையக் கண்டு புறப்பட்டுத்
  தங்கும் பொதிசெய் தாளின்மேல் சமைய ஏற்றிக் கெணரும் என 7.4.33
  3781 சேரர் பெருமான் அருள் செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள்
  சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும்
  சீர் கொள் நிதியும் எண்ணிறந்த எல்லாம் பொதி செய்தாளின் மேல்
  பாரில் நெருங்க மிசை ஏற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள் 7.4.34
  3782 பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு
  நிரந்த தனங்கள் வேறு வேறு நிரைத்துக் கட்டி மற்று இவையும்
  உரம் தங்கிய வெம் கரிபரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும்
  புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் 7.4.35
  3783 பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார்
  காணக் கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்துப்
  பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் ஆணை
  அரசும் அரசு உறுப்பும் கைக் கொண்டு அருளும் என இறைஞ்ச 7.4.36
  3784 இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர்
  நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே
  உறை மும்மதத்துக் களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோ ர்
  பிறை வெண் கோட்டுக் களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர் 7.4.37
  3785 பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின்
  கண்கள் பொழிந்த காதல் நீர் வழியக் கையால் தொழுது அணைய
  நண்பு சிறக்கும் அவர் தம்மை நகரின் புறத்து விடை கொண்டு
  திண் பொன் புரிசைத் திரு மதுரை புக்கார் திருந்தும் இசைப் பாணர் 7.4.38
  3786 வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகிக்
  கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும்
  பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி
  மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்று இருந்தார் 7.4.39
  3787 அளவில் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின்
  உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக்
  களவு கொலைகள் முதலான கடிந்து கழற்றிற்று அறிவார் தாம்
  வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள் 7.4.40
  3788 வானக் கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டுத்
  தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள்
  தேன் அக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல்
  மானப் பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி 7.4.41
  3789 பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது எனப் பொரும்
  ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று
  தேகின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட
  ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார் 7.4.42
  3790 ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கைமலர்
  கூடத் தலைமேல் குவித்து அருளிக் கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து
  நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறை முன்
  தேடற்கு அரியாய் திருஅருள் திரு அருள் முன் செய்யது ஒழிந்தது என் என்றார் 7.4.43
  3791 என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர் நின்று அருளாது எழும் ஒலியால்
  மன்றின் இடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன்
  ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால்
  நின்று கேட்டு வரத் தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார் 7.4.44
  3792 என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று
  பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி
  தன் நேர் இல்லா வன் தொண்டர் தமையும் காண்பான் என விரும்பி
  நல் நீர் நாட்டுக் செல நயந்தார் நாமச் சேரர் கோமானார் 7.4.45
  3793 பொன்னார் மௌலிச் சேரலன் ஆர் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி
  நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற
  மின்னார் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர்
  அந் நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் 7.4.46
  3794 இட்ட நல்நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக் களத்து
  மட்டுவிரிபூம் கொன்றையினார் தம்மை வலம் கொண்டு இறைஞ்சிப் போய்
  பட்டநுதல் வெம் களியாணை பிடர்மேல் கொண்டு பனி மதியம்
  தொட்ட கொடிமாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் 7.4.47
  3795 யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன
  மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற
  சேனைவீரர் புடைபரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த
  கானம் அடைய உடன் படர்வன போலும் காட்சி மேவினதால் 7.4.48
  3796 புரவித் திரள்கள் ஆ யோகப் பொலிவின் அசைவில் போதுவன
  அரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேல் மேல் அடர்வன போல்
  விரவிப் பரந்து சென்றனவால் மிசையும் அவலும் ஒன்றாக
  நிரவிப் பரந்த நெடும் சேனை நேமி நெளியச் சென்றனவால் 7.4.49
  3797 அந் நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி
  மினார் மணிப்பூண் மன்னவன் ஆர் வேண்டுவாரை உடன்கொண்டு
  கொனார் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி
  பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டு இடைப் போவார் 7.4.50
  3798 சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக்
  குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறை அறுப்பத்
  துன்று முரம்பும் கான் ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து
  வென்றி விடையார் இடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார் 7.4.51
  3799 பொருவில் பொன்னித் திருநதியின் கரை வந்து எய்திப் புனித நீர்
  மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வடபால் கரை ஏறித்
  திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற
  உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் 7.4.52
  3800 வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
  அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர் வணங்கிச்
  சந்த விரைப் பூந்திருவீதி இறைஞ்சித் தலைமேல் கரம் முகிழ்ப்பச்
  சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் 7.4.53
  3801 நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி
  மலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து மாளிகை வலம் கொண்டு
  உலகு விளக்கும் திருப் பேர் அம்பலத்தை வணங்கி உள் அணைந்தார்
  அலகில் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் 7.4.54
  3802 அளவில் இன்பப் பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட
  உளமும் புலனும் ஒருவழிச் சென்று உருகப் போற்றி உய்கின்றார்
  களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து
  வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் 7.4.55
  3803 ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால்
  சீரார் வண்ணப் பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப்
  பாரா தரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார் பருவ மழை பொழியும்
  காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழற்றிவார் தாம் 7.4.56
  3804 தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ் சொல் மாலை கேட்பிக்க
  உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச்
  செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின்
  இம்பர் நீட எழுந்த ஒலிதாமும் எதிரே கேட்பித்தார் 7.4.57
  3805 ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவில் இன்ப ஆனந்தம்
  கூடப் பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்
  நீடப் பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து
  மாடத் திரு மாளிகை வீதி வணங்கிப் புறத்து வைகினார் 7.4.58
  3806 பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம் பொன் அம்பலத்துள்
  அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை
  விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திருப்படிக்கீழ்
  இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அந் நாளில் 7.4.59
  3807 ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளித் தாழ்ந்த படி தமக்குக்
  கூடும் பரிசால் முன்பு அருளிச் செய்த நாவலூர்க் கோவை
  நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல்
  தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார் 7.4.60
  3808 அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சிப்
  பிறவி இலாத திருவடியைப் பெருகும் உள்ளத்தினில் பெற்று
  செறியும் ஞானப் போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி
  மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் 7.4.61
  3809 வழியில் குழியில் செழுவயலின் மதகின் மலர் வாவிகளின் மடுச்
  சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறி
  வழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உகக்
  கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ளக் கழனி ஆரூர் கண் உற்றார் 7.4.62
  3810 நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடி
  அம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா
  பைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில்
  தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார் 7.4.63
  3811 வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவரூர் எய்த
  அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச்
  சிந்தை மகிழ எதிர் கொண்டு சென்று கிடந்தார் சேரலனார்
  சந்தம் விரைத்தார் வன்தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் 7.4.64
  3812 முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தே
  அன்பு பெருகத் தழுவ விரைந்து ஆர்வத்தொடு தழுவ
  இன்ப வெள்ளத்து இடை நீந்தி ஏற மாட்டாதவர் போல்
  என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் 7.4.65
  3813 ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவில் மகிழ்வு எய்த
  மானச் சேரர் பெருமானார் தாமும் வன்தொண்டரும் கலந்த
  பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும்
  மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியதால் 7.4.66
  3814 ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து
  மருவ இனியார் பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால்
  பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு பரமர் தாள் பணியத்
  தெருவு நீங்கிக் கோயிலினுள் புகுந்தார் சேரமான் தோழர் 7.4.67
  3815 சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சித் திருமாளிகை வலம் கொண்டு
  ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக
  நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே
  என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார் 7.4.68
  3816 தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வப் பெருமாள் கழல் வணங்கி
  மூவர் தமக்கு முதல் ஆகும் அவரைத் திருமும் மணிக் கோவை
  நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்
  தாவில் பெருமைச் சேரல் அனார் தம்பிரானார் தாம் கொண்டார் 7.4.69
  3817 அங்கண் அருள் பெற்று எழுவாரைக் கொண்டு புறம் போந்து ஆரூரர்
  நங்கை பரவையார் திருமாளிகையில் நண்ண நன்னுதலார்
  பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும்
  எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர் கொண்டார் 7.4.70
  3818 சோதி மணி மாளிகையின் கண் சுடரும் பசும் பொன் கால் அமளி
  மீது பெருமாள் தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்பக்
  கோதில் குணத்துப் பரவையார் கொழுநர்க்கும் தோழர்க்கும்
  நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார் 7.4.71
  3819 தாண்டும் புரவிச் சேரர் குலப் பெருமாள் தமக்குத் திரு அமுது
  தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
  வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துக் கறியும் போனகமும்
  ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார் 7.4.72
  3820 அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும் படியாக
  விரவிப் பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன்பின்
  புரசைக் களிற்றுச் சேரலன் ஆர் புடை சூழ்ந்து அவரோடு அமுது செயப்
  பரவைப் பிறந்த திருவனைய பரவையார் வந்து அறிவித்தார் 7.4.73
  3821 சேரர் பெருமான் எழுந்து அருளி அமுத செய்யச் செய்தவத்தால்
  தாரின் மலிபூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி எனப்
  பாரின் மலிசீர் வன்தொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள்
  ஏரின் விளங்கத் திருத்திக்கால் இரண்டில் படியாய் ஏற்றுதலும் 7.4.74
  3822 ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள
  வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெரு உறலும்
  நீண்ட தடக்கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள
  ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார் 7.4.75
  3823 ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்துப் பரவையார்
  மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள்
  தக்க வகையால் அறுசுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்தத்
  ஒக்க மகிழ்ச்சி களி சிறப்பத் தூய விருந்தின் கடன் முடித்தார் 7.4.76
  3824 பனிநீர் விரவு சந்தனத்தின் பசுங்கர்ப்பூர விரைக் கலவை
  வனிதை அவர்கள் சமைத்து எடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும்
  புனித நறும் பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொன்கொடியார்
  இனிய பஞ்ச வாசம் உடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார் 7.4.77
  3825 ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளித்
  தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுது அணிந்து
  மேய விருப்பின் உடன் இருப்பக் கழறிற்றறிவார் மெய்த்தொண்டின்
  சேய நீர்மை அடைந்தார் ஆய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் 7.4.78
  3826 மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவிக்
  கலை நாள் பெருகு மதி முகத்துப் பரவையார் தம் கணவனார்
  சிலை நாட்டிய வெல் கொடியாரைச் சேரத் தந்தார் எனக் கங்கை
  அலை நாள் கொன்றை முடிச் சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் 7.4.79
  3827 செல்வத் திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த
  வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதி விடங்கப் பெருமானை
  மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து
  சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார் 7.4.80
  3828 இவ்வாறு ஒழுகும் நாளின் கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்
  மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கிச்
  செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத் திருமா மதுரை முதலான
  மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார் 7.4.81
  3829 சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
  வாரம் பெருகத் தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த
  வீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்குச்
  சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செலத் துணிந்தார் 7.4.82
  3830 இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர்
  ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி
  மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பில் பணிகள் வாகனங்கள்
  பொருவில் பண்டாரங் கொண்டு போதுவார்கள் உடன் போத 7.4.83
  3831 சேவித்து அணையும் பரிசனங்கள் சூழத் திருவாரூர் இறைஞ்சிக்
  காவில் பயிலும் புறம்பு அணையைக் கடந்து போந்து கீழ்வேளூர்
  மேவிப் பரமர் கழல் வணங்கிப் போந்து வேலைக் கழிக் கானல்
  பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார் 7.4.84
  3832 திருக்காரோணச் சிவக் கொழுந்தைச் சென்று பணிந்து சிந்தையினை
  உருக்கார்வச் செம்தமிழ் மாலை சாத்திச் சில நாள் உறைந்து போய்
  பெருக்கார் உலவு சடைமுடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி
  அருள் காரணர் தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர் 7.4.85
  3833 முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி
  செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும் புகலிச் சிவக் கன்றும்
  அந்நேர் திறக்க அடைக்க எனப்பாடும் திருவாயிலை அணைந்து
  நன்னீர் பொழியும் விழியினர் ஆய் நாயன் மாரை நினைந்து இறைஞ்சி 7.4.86
  3834 நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியை
  இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழைப் பழித்து என்னும்
  அறைந்த பதிகத் தமிழ் மாலை நம்பி சாத்த அருள் சேரர்
  சிறந்த அந்தாதியில் சிறப்பித்து அனவே ஓதித் திளைத்து எழுந்தார் 7.4.87
  3835 எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெரும் தொண்டரும் சில நாள்
  செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து தென்பால் திரைக் கடல் நஞ்சு
  அழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி இறைஞ்சி அவிர் மதியக்
  கொழுந்து வளர் செம் கடைக் குழகர் கோடிக் கோயில் குறுகினார் 7.4.88
  3836 கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
  நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்
  வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப்
  பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார் 7.4.89
  3837 அங்கு வைகிப் பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார்
  தங்கும் இடங்கள் வணங்கிப் போய் பாண்டி நாடுதனைச் சார்ந்து
  திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும்
  மங்குல் தவழும் மணிமாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் 7.4.90
  3838 சேரமான் தோழரும் அச் சேரர் பிரானும் பணிப்பூண்
  ஆரமார் மார்பரை ஆலவாயினில் வணங்க
  வாரமா வந்து அணைய வழுதியார் மனக்காதல்
  கூர மாநகர் கோடித்து எதிர் கொண்டு கொடு புக்கார் 7.4.91
  3839 தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே
  தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார்
  அன்னவர்கள் உடன் கூட அனைய அவரும் கூடி
  மன்னு திரு ஆலவாய் மணிக் கோயில் வந்து அணைந்தார் 7.4.92
  3840 திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சடையார் கோயில் வலம்
  வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன்தொண்டர் வழித்தொண்டு
  தருவாரைப் போற்றி இசைத்துத் தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ்
  பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் 7.4.93
  3841 படியேறு புகழ்ச் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து
  அடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை
  முடிவேது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாறக்
  கடியேறு கொன்றையார் முன் பரவிக் களி கூர்ந்தார் 7.4.94
  3842 செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரர் உடன்
  நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால்
  உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும்
  பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார் 7.4.95
  3843 உளம் மகிழக் கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன்
  கிளர் ஒளிப் பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி
  வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு
  அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார் 7.4.96
  3844 அந் நாளில் மதுரை நகர் மருங்கரனார் அமர் பதிகள்
  பொன்னாரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போதச்
  செந்நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்று இறைஞ்சிச்
  சொன்மாலைகளும் சாத்தித் தொழத் திருப்பூவணத்தை அணைந்தார் 7.4.97
  3845 நீடு திருப் பூவணத்துக் அணித்தாக நேர் செல்ல
  மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அப் பதிகாட்டத்
  தேடு மறைக்கு அரியாரைத் திருவுடையார் என்று எடுத்துப்
  பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார் 7.4.98
  3846 சென்று திருப் பூவணத்துத் தேவர் பிரான் மகிழ் கோயில்
  முன்றில் வலம் கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து
  நின்று பரவிப்பாடி நேர் நீக்கி உடன் பணிந்த
  வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார் 7.4.99
  3847 அப்பதியில் அமர்ந்து இறைஞ்சிச் சில நாளில் ஆரூரர்
  முப்பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி
  மெய்ப் பரிவில் திருவால வாயுடையார் விரை மலர்த்தாள்
  எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார் 7.4.100
  3848 செஞ்சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம்
  நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே
  எஞ்சலிலாக் காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து
  மஞ்சணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார் 7.4.101
  3849 பரமர் திருப்பரம் குன்றில் சென்று பார்த்திபர் ஓடும்
  புரம் எரித்தார் கோயில் வலம் கொண்டு புகுந்து உள் இறைஞ்சிச்
  சிரமலிமாலைச் சடையார் திருவடிக்கீழ் ஆட்செய்யும்
  அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார் 7.4.102
  3850 கோத்திட்டை என்று எடுத்துக் கோதில் திருப்பதிக இசை
  மூர்த்தியார் தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே
  ஏத்திய வண் தமிழ் மாலை இன் இசைப் பாடிப் பரவி
  சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில் 7.4.103
  3851 இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து
  முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி
  மறை முந் நூல் மணி மார்பின் வன்தொண்டர் தமைப் பணிந்தார்
  நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார் 7.4.104
  3852 அந் நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சமலை
  நன்னாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்து அருள
  மின்னாட்டும் பல் மணிப்பூண் வேந்தர் இருவரும் மீள்வார்
  தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார் தமை விடுத்தார் 7.4.105
  3853 இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதற் பின் எழுந்து அருளும்
  பொருவருஞ் சீர் வன்தொண்டர் புகழ்ச் சேரர் உடன் புனிதர்
  மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலைச்சாரல்
  குருமணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார் 7.4.106
  3854 குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கிச்
  சொல்தாம மலர் புனைந்து குறும் பலாத் தொழுது இப்பால்
  முற்றா வெண்மதி முடியார் பதிபணிந்து மூவெயில்கள்
  செற்றார் மன்னிய செல்வத் திருநெல் வேலியை அணைந்தார் 7.4.107
  3855 நெல்வேலி நீற்று அழகர் தமைப் பணிந்து பாடி நிகழ்
  பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார்
  வில்வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றிப் பின்
  செல் வேத முதல்வரமர் திரு இராமேச்சரத்து 7.4.108
  3856 மன்னும் இராமேச்சரத்து மாமணியை முன் வணங்கிப்
  பன்னும் தமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பு அணிந்த
  சென்னியர் மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம் சார்ந்த
  சொல்மலர் மாலைகள் சாத்தித் தூரத்தே தொழுது அமர்ந்தார் 7.4.109
  3857 திரு இராமேச்சரத்துச் செழும் பவளச் சுடர்க் கொழுந்தைப்
  பரிவினால் தொழுது அகன்று பரமர் பிற பணிந்து
  பெருவிமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல்
  மருவினார் வன்தொண்டர் மலை வேந்தருடன் கூட 7.4.110
  3858 திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலைச் சிலையாரைக்
  கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல் விடத்தின்
  இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்ப்
  பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் 7.4.111
  3859 அங்கணரைப் பணிந்து உறையும் ஆரூரர்க்கு அவ்வூரில்
  கங்குல் இடைக் கனவின் கண் காளையாந் திருவடிவால்
  செங்கையினில் பொன் செண்டும் திருமுடியில் சுழியம் உடன்
  எங்கும் இலாத் திருவேடம் என்புருக முன்காட்டி 7.4.112
  3860 கானப் பேர் யாம் இருப்பது எனக் கழறி கங்கை எனும் 3860-1
  வானப் பேராறும் உலவும் மா முடியார் தாம் அகல
  ஞானப் பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன்
  ஏனப் பேரெயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் 7.4.113
  3861 கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப்
  புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய்
  அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர்
  தொண்டர் அடித் தொழலும் எனும் சொல் பதிகத் தொடை புனைவார் 7.4.114
  3862 காளையார் தமைக் கண்டு தொழப் பெறுவது என் என்று
  தாளை நாளும் பரவத் தருவார் பால் சார்கின்றார்
  ஆளை நீள் இடைக் காண அஞ்சிய நீர் நாய் அயலே
  வாளைபாய் நுழைப் பழன முனைப்பாடி வள நாடார் 7.4.115
  3863 மன்னு திருக்கானப் பேர் வளம் பதியில் வந்து எய்தி
  சென்னி வளர்மதி அணிந்தார் செழுங் கோயில் வலம் கொண்டு
  முன்னிறைஞ்சி உள்ளணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து
  பன்னு செழுந்தமிழ் மாலை பாடினார் பரவினார் 7.4.116
  3864 ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச்
  சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளிக்
  காராரும் மலர்ச்சோலைக் கானப் பேர் கடந்து அணைந்தார்
  போரானேற்றார் கயிலைப் பொருப்பர் திருப்புனவாயில் 7.4.117
  3865 புனல் வாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு
  மனம் ஆர்வம் உறச் சித்த நீ நினை என்னொடு என்றே
  வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில்
  சினயானை உரித்து அணிந்தார் திருப்பாதம் தொழுது இருந்தார் 7.4.118
  3866 திருப்புன வாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும்
  விருப்புடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார்
  பொருப்பினொடு கானகன்று புனல் பொன்னி நாடு அணைந்து
  பருப்பத வார் சிலையார் தம் பாம்பு அணிமா நகர் தன்னில் 7.4.119
  3867 பாதாள ஈச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும் 3867-1
  வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன்
  சூதாரும் துணை முலையார் மணிவாய்க்குத் தோற்று இரவு
  சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார் 7.4.120
  3868 திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தர் உடன்
  வருவாரைத் திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ளத்
  தரும் காதலுடன் வணங்கித் தம் பெருமான் கோயிலினுள்
  பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெறப் புகுந்தார் 7.4.121
  3869 வாச மலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலம் கொண்டு
  நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி
  ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால்
  பாச வினைத் தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார் 7.4.122
  3870 பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த
  விரவு பேர் அலங்கார விழுச் செல்வம் மிகப் பெருக
  வரவு எதிர் கொண்டு அடிவணங்க வன் தொண்டர் மலைநாட்டுப்
  புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார் 7.4.123
  3871 பரவியே பரவையார் பரிவு உடனே பணிந்து ஏத்தி
  விரவிய போனகங்கறிகள் விதம் பலவாகச் சமைத்துப்
  பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்துத்
  திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார் 7.4.124
  3872 மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து
  தங்கி இனிது அமர் கின்றார் தம்பிரான் கோயிலினுள்
  பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து
  நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் 7.4.125
  3873 நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி
  விலக்கரும் போர்த் தகர்ப் பாய்ச் சல் கண்டு அருளி வென்றி பெற
  மலைக்கு நெடு முள் கணைக்கால் வாரணப் போர் மகிழ்ந்து அருளி
  அலைக்கும் அறப் பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் 7.4.126
  3874 விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்லக்
  கரவில் ஈகைக் கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டுப்
  பரவையார் தம் கொழுநனார் தம்மைப் பணிந்து கொண்டு அணை
  இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்து அருள 7.4.127
  3875 நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்து அருளத்
  திங்கள் முடியார் திரு அருளைப் பரவிச் சேரமான் பெருமாள்
  எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளிப்
  பொங்கும் முயற்சி இருவரும் போய்ப் புக்கார் புனிதர் பூங்கோயில் 7.4.128
  3876 தம்பிரானைத் தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய
  நம்பி ஆருரரும் சேரர் நன்னாட்டு அரசனார் ஆய
  பைம் பொன் மணி நீள் முடிக் கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன்
  செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல் பால் செல்கின்றார் 7.4.129
  3877 பொன் பரப்பி மணிவரன்றி புனல் பரக்கும் காவேரித்
  தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி
  மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர்
  அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் 7.4.130
  3878 வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள்
  உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக்
  கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித்
  தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் 7.4.131
  3879 ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூர் தமை நோக்கி
  செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார்
  மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி
  நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன 7.4.132
  3880 ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் 3880-1
  வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப
  நீறு விளங்கும் திருமேனி நிறுத்தர் பாதம் பணிந்தன்பின்
  ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார் 7.4.133
  3881 பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்
  அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று
  விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
  நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும் 7.4.134
  3882 மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில்
  கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
  ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என
  நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட 7.4.135
  3883 விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன
  நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப்
  பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி
  கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார் 7.4.136
  3884 நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்
  செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி
  உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து
  தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் 7.4.137
  3885 செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான்
  எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில்
  தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று
  பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் 7.4.138
  3886 அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றித் திளைத்து இறைஞ்சித்
  தங்கள் பெருமான் திரு அருளால் தாழ்ந்து மீண்டும் தடம்பொன்னித்
  பொங்கு நதியின் முன் வந்த படியே நடுவு போந்து ஏறத்
  துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடரப் பெருகியதால் 7.4.139
  3887 ஆய செயலின் அதிசயத்தைக் கண்ட கரையில் ஐயாறு
  மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்பால் போய்த்
  தூய மதிவாழ் சடையார் தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்திச்
  சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரர் உடன் 7.4.140
  3888 கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட்டு எல்லையுற
  நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர்
  அங்கண் உடனே அணை எழுந்து அருளா நின்றார் எனும் விருப்பால்
  எங்கும் அந் நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர் 7.4.141
  3889 பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூவனங்கள்
  வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகைக்கார்
  நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன
  வீதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ 7.4.142
  3890 திசைகள் தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
  குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம்
  மிசை கொள் பண்ணும் பிடிவெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு
  அசைவில் இன்பப் பெருவெள்ளத்து அமர்ந்து கொடுங் கோளூர் அணைந்தார் 7.4.143
  3891 கொடுங்கோ ளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து
  தொடுங்கோபுரங்கள் மாளிகைகள் குளிர் குளிர் சாலைகள் தெற்றி
  நெடுங்கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணித் தாமம் கமுக
  விடுங்கோதைப் பூந் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து 7.4.144
  3892 நகர மாந்தர் எதிர் கொள்ள நண்ணி எண்ணில் அரங்கு தொறும்
  மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார்
  சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக் களத்து
  நிகரில் தொண்டர் தமைக் கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார் 7.4.145
  3893 இறைவர் கோயில் மணி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு
  நிறையும் காதல் உடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர்
  முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்துப்
  பிறை கொள் முடியார் தமைப்பாடி பரவிப் பெருமாளுடன் தொழுதார் 7.4.146
  3894 தொழுது தினைத்துப் புறம் போந்து தோன்றப் பண்ணும் பிடிமேற்பார்
  முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றிப் பின்பு தாம் ஏறிப்
  பழுதில் மணிச் சாமரை வீசிப் பைம்பொன் மணி மாளிகையில் வரும்
  பொழுது மறுகில் இருபுடையும் மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார் 7.4.147
  3895 நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார்
  எல்லை இல்லாத் தவம் முன்பு என் செய்தோம் இவரைத் தொழ என்பார்
  செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார்
  சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலைப் பாரீர் எனத் தொழுவார் 7.4.148
  3896 பூவும் பொரியும் பொன் துகளும் பணிவார் பொருவில் இவர்
  மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் என வியப்பார்
  பாவும் துதிகள் எம் மருங்கும் பயில வந்து மாளிகையின்
  மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார் 7.4.149
  3897 கழறிற்றறியுந் திருவடியும் கலை நாவலர் தம் பெருமானாம்
  முழவில் பொலியும் திரு நெடுந்தோள் முனைவர் தம்மை உடன் கொண்டு
  விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை
  நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தித் தாமும் நேர் நின்று 7.4.150
  3898 செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த
  அம்பொன் பாதம் தாம் விளக்கி அருளப் புகலும் ஆரூரர்
  தம்பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருளத் தரணியில் வீழ்ந்து
  எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என 7.4.151
  3899 பெருமாள் வேண்ட எதிர் மறுக்க மாட்டார் அன்பில் பெரும் தகையார்
  திருமா நெடுந்தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார்
  அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன்பின்
  ஒருமா மதிவெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் 7.4.152
  3900 சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி
  ஆரம் நறுமென் கலவை மான் மதச் சாந்து ஆடை அணிமணிப் பூண்
  ஈர விரை மென்மலர்ப் பணிகள் இனைய முதலாயின வருக்கம்
  சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிகத் தமக்கு ஆக்கி 7.4.153
  3901 பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில்
  நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம் தொறும் நிகழ
  மாடு விரைப்பூந்தருமணஞ்செய் ஆராமங்கள் வைகுவித்துக்
  கூட முனைப் பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார் 7.4.154
  3902 செண்டாடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்றுப் பெரும் சிறப்பும்
  வண்டாடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும்
  தண்டாமும் மத கும்பத் தட மலைப்போர் சல மற்போர்
  கண்டாரா விருப்பு எய்தக் காவலனார் காதல் செய்நாள் 7.4.155
  3903 நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும்
  தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய்
  ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும்
  மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார் 7.4.156
  3904 திருவாரூர் தனை நினைந்து சென்று தொழுவேன் என்று
  மரு ஆர்வத் தொண்டர் உடன் வழி கொண்டு செல்பொழுதில்
  ஒருவா நண் புள்ளுருக உடன் எழுந்து கை தொழுது
  பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார் 7.4.157
  3905 வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய்
  இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன
  ஒன்றுநீர் வருந்தாதே உமது பதியின் கண் இருந்து
  அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார் 7.4.158
  3906 ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர்
  பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலர்
  தேரூரும் நெடும் வீதித் திருவாரூர்க்கு எழுந்து அருள
  நேரூரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார் 7.4.159
  3907 மன்னவனார் அது மொழிய வன்தொண்டர் எதிர் மொழிவார்
  என்னுயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர்ப் பெருமானை
  வன்னெஞ்சக் கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார்
  இன்னருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச 7.4.160
  3908 மற்றவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள் தமை அழைத்து
  பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன்புகுந்த
  நற்பெரும் பண்டார நானா வருக்கம் ஆன வெலாம்
  பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவரப் பண்ணும் என 7.4.161
  3909 ஆங்கவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள்
  ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணிப்பூண் துகில் வருக்கம்
  ஞாங்கர் நிறை விரையுறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்பத்
  தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலியக் கொண்டு அணைந்தார் 7.4.162
  3910 மற்றவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின்
  முற்படவே செலவு இட்டு முனைப்பாடித் திருநாடார்
  பொற் பதங்கள் பணிந்து அவரைத் தொழுது எடுத்துப் புணை அலங்கல்
  வெற்புயர் தோள் உறத் தழுவி விடை அளித்தார் வன்தொண்டர் 7.4.163
  3911 ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று
  காரூரும் மலைநாடு கடந்து அருளிக் கல் சுரமும்
  நீரூரும் கான் யாரும் நெடும் கானும் பலகழிய
  சீரூரும் திருமுருன் பூண்டி வழிச்செல்கின்றார் 7.4.164
  3912 திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின் கண்
  பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பதலால்
  ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்
  பெருகருளால் தாம் கொடுக்கப் பெறுவதற்கோ அது அறியோம் 7.4.165
  3913 வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய் சென்று
  வன்தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள
  அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவப் படையாய்ச்
  சென்று அவர் தாம் வரும் வழியில் இருபாலும் செயிர்த்து எழுந்து 7.4.166
  3914 வில் வாங்கி அலகம்பு விசை நாணில் சந்தித்துக்
  கொல்வோம் இங்கு இட்டுப்போம் எனக் கோபத்தால் குத்தி
  எல்லையில் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி
  அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார் 7.4.167
  3915 ஆரூரர் தம்பால் அவ்வேடுவர் சென்று அணையாதே
  நீரூருஞ் செஞ்சடையார் அருளினால் நீங்க அவர்
  சேரூராம் திருமுருகன் பூண்டியினில் சென்று எய்திப்
  போரூரு மழவிடையார் கோயிலை நாடிப் புக்கார் 7.4.168
  3916 அங்கணர் தம் கோயிலினை அஞ்சலி கூப்பித் தொழுது
  மங்குலுற நீண்ட திருவாயிலினை வந்து இறைஞ்சிப்
  பொங்கு விருப்புடன் புக்கு வலம் கொண்டு புனித நதி
  திங்கள் முடிக்கு அணிந்தவர் தம் திருமுன்பு சென்று அணைந்தார் 7.4.169
  3917 உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம்
  மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார்
  வெருவுறவேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்கு
  அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம் 7.4.170
  3918 பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால்
  வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண்ணெருங்க
  நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி
  ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக் கொண்டார் 7.4.171
  3919 கைக்கொண்டு கொடுபோம் அக் கைவினைஞர் தமை ஏவி
  மைக் கொண்ட மிடற்றாரை வணங்கிப்போய்க் கொங்கு அன்று
  மெய்க் கொண்ட காலினால் விரைந்து ஏகி மென் கரும்பும்
  செய்க் கொண்ட சாலியுஞ்சூழ் திருவாரூர் சென்று அணைந்தார் 7.4.172
  3920 நாவலர் மன்னவர் அருளால் விடை கொண்ட நரபதியார்
  ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர் தமை நினைந்து
  மாவலரும் சோலை மா கோதையினில் மன்னிமலைப்
  பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார் 7.4.173
  3921 இந் நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன்தொண்டர்
  பொன்னி வளநாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து
  மன்னு திருக் கயிலை யினில் மத வரைமேல் எழுந்து அருள
  முன்னர் வயப்பரி உகைக்கும் திருத்தொழில் பின்மொழிகின்றாம் 7.4.174
  3922 மலை மலிந்த திருநாட்டு மன்னவனார் மா கடல் போல்
  சிலை மலிந்த கொடித் தானைச் சேரலனார் கழல் போற்றி
  நிலை மலிந்த மணிமாடம் நீள் மறுகு நான் மறை சூழ்
  கலை மலிந்த புகழ்க் காழிக் கணநாதர் திறம் உரைப்பாம் 7.4.175
  திருச்சிற்றம்பலம்


Goto Main book