MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    8.4 அதிபத்த நாயனார் புராணம் (3992.- 4011 )


    திருச்சிற்றம்பலம்

    3992 மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின்
    தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப்
    பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல்
    நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம் 8.4.1
    3993 தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த
    தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ்
    காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த
    மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு 8.4.2
    3994 பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து
    திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும்
    தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல்
    கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் 8.4.3
    3995 நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த
    பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக்
    கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும்
    ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர் 8.4.4
    3996 அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில்
    பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர்
    மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த
    தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி 8.4.5
    3997 புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை
    அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல்
    வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
    கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் 8.4.6
    3998 உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த
    கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல்
    அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து
    மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும் 8.4.7
    3999 வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும்
    விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும்
    தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும்
    அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய 8.4.8
    4000 அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து
    மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார்
    புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும்
    வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர் 8.4.9
    4001 ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள்
    ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப்
    பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும்
    ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார் 8.4.10
    4002 முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து
    பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும்
    நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர்
    விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால் 8.4.11
    4003 வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
    ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால்
    ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
    மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் 8.4.12
    4004 மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம்
    தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும்
    பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று
    மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் 8.4.13
    4005 சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து
    கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச்
    சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே
    ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் 8.4.14
    4006 ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத்
    தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால்
    மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்
    பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார் 8.4.15
    4007 வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற
    ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத்
    தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப்
    பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் 8.4.16
    4008 என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர்
    பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால்
    ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும்
    சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார் 8.4.17
    4009 அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில்
    புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த
    இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல்
    முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ 8.4.18
    4010 பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
    அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை
    நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து
    அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார் 8.4.19
    4011 தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு
    மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி
    மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும்
    செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் 8.4.20
    திருச்சிற்றம்பலம்


Goto Main book