8.5 கலிக்கம்ப நாயனார் புராணம் (4012 - 4021 )
திருச்சிற்றம்பலம்
4012 உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனைத்
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வனரும் தன்மையதாய்
வரும் மஞ்சு உறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில்
பெருமை உலகு பெற விளங்கும் மேல் பால் பெண்ணாகட மூதூர் 8.5.1
4013 மற்றப் பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்
கற்றைச் சடையார் கழற்காதலுடனே வளர்ந்த கருத்து உடையார்
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்று இல்லார் 8.5.2
4014 ஆன அன்பர் தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால்
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் 8.5.3
4015 அன்ன வகையால் திருத்தொண்டு புரியுநாளில் அங்கு ஒரு நாள்
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர் தமை எல்லாம்
தொன்மை முறையே அமுது செயத் தொடங்கு விப்பார் அவர் தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் 8.5.4
4016 திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறி அமுதும் புனிதத் தண்ணீர் உடன் மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீர் அளிக்க 4016-3
விரும்பு கணவர் பெருந்தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின் கண் 8.5.5
4017 முன்பு தமக்குப் பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய்
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும்
அன்பர் உடனே திருவேடம் தாங்கி அணைந்தார் ஒருவர் தாம்
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெரும் தகையார் 8.5.6
4018 கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல்
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர்
மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துள் கருதுவார் 8.5.7
4019 வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலை
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை
தறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார் 8.5.8
4020 விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து
துளக்கில் சிந்தை உடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள்நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் 8.5.9
4021 ஓத மலிநீர் விடம் உண்டார் அடியார் என்றுணரா
மாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கி
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த
காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம் 8.5.10
திருச்சிற்றம்பலம்