MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  8.6 கலிய நாயனார் புராணம் (4022 - 4038 )


  திருச்சிற்றம்பலம்

  4022 பேருலகில் ஓங்கு புகழ்ப் பெரும் தொண்டை நன்னாட்டு
  நீருலவும் சடைக் கற்றை நிருத்தர் திருப்பதியாகும்
  காருலவும் மலர்ச் சோலைக் கன்னிமதில் புடை சூழ்ந்து
  தேருலவு நெடு வீதி சிறந்த திருஒற்றியூர் 8.6.1
  4023 பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண்
  வேடம் உடையவர் பொருள் போல் ஆகாசவெளி மறைக்கும்
  ஆடு கொடி மணி நெடுமாளிகை நிரைகள் அலை கமுகின்
  காடனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் 8.6.2
  4024 பன்னு திருப்பதிக இசைப் பாட்டு ஓவா மண்டபங்கள்
  அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு
  பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி
  செம் நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திருமடங்கள் 8.6.3
  4025 கெழு மலர் மாதவி புன்னை கிளைஞாழல் தளை அவிழும்
  கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை
  முழு மணமே முந் நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும்
  செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு 8.6.4
  4026 எயிலணையும் முகில் முழக்கும் எறிதிரை வேலையின் முழக்கும்
  பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியாப் பதி அதனுள்
  வெயில் அணி பல் மணி முதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும்
  தயில வினைத் தொழில் மரபில் சக்கரப் பாடி தெருவு 8.6.5
  4027 அக்குலத்தின் செய்தவத்தால் அவனி மிசை அவதரித்தார்
  மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார்
  தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலை நின்றார்
  முக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத் தொண்டின் நெறி முயல்வார் 8.6.6
  4028 எல்லையில் பல் கோடி தனத்து இறைவராய் இப்படித்தாம்
  செல்வ நெறிப் பயன் அறிந்து திருஒற்றியூர் அமர்ந்த
  கொல்லை மழவிடையார் தம் கோயிலின் உள்ளும் புறம்பும்
  அல்லும் நெடும் பகலும் இடும் திருவிளக்கின் அணி விளைத்தார் 8.6.7
  4029 எண்ணில் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வரப்
  புண்ணிய மெய்த் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே
  உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினைச் செயல் ஓவி
  மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்தாக 8.6.8
  4030 திருமலி செல்வத்துழனி தேய்ந்து அழிந்த பின்னையுந்தம்
  பெருமை நிலைத் திருப் பணியில் பேராத பேராளர்
  வருமரபில் உள்ளோர் பால் எண்ணெய் மாறிக் கொணர்ந்து
  தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் 8.6.9
  4031 வளம் உடையார் பால் எண்ணெய் கொடுபோய் மாறிக் கூலி
  கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாறத்
  தளருமனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும்
  களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் 8.6.10
  4032 செக்கு நிறை எள் ஆட்டிப் பதம் அறிந்து தில தயிலம்
  பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும்
  தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை
  மிக்க திரு விளக்கு இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார் 8.6.11
  4033 அப் பணியால் வரும் பேறு அவ் வினைஞர் பலர் உளராய்
  எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே
  ஒப்பில் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்ட அதன் பின்
  செப்பருஞ் சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார் 8.6.12
  4034 மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக் கொண்டு வள நகரில்
  தனம் அளிப்பார் தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி
  சின விடையார் திருக் கோயில் திரு விளக்குப் பணிமுட்டக்
  கன வினும் முன்பு அறியாதார் கை அறவால் எய்தினார் 8.6.13
  4035 பணி கொள்ளும் படம் பக்க நாயகர்தம் கோயிலினுள்
  அணி கொள்ளும் திருவிளக்குப் பணிமாறும் அமையத்தில்
  மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் எனத்
  துணிவுள்ளங் கொள நினைந்து அவ் வினை முடிக்கத் தொடங்குவார் 8.6.14
  4036 திரு விளக்குத் திரி இட்டு அங்கு அகல் பரப்பிச் செயல் நிரம்ப
  ஒருவிய எண் ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடுநிறைக்கக்
  கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார்
  பெருகு திருக் கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி 8.6.15
  4037 மற்றவர் தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்து அருள
  உற்றவூறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல்
  பற்றிய அஞ்சலியினர் ஆய் நின்றவரைப் பரமர் தாம்
  பொற்புடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள் புரிந்தார் 8.6.16
  4038 தேவர் பிரான் திருவிளக்குச் செயல் முட்ட மிடறு அரிந்து
  மே வரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில்
  யாவர் எனாது அரன் அடியார் தமை இகழ்ந்து பேசினரை
  நாவரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் 8.6.17
  திருச்சிற்றம்பலம்


Goto Main book