MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
  என்ற பெரிய புராணம் /இரண்டாம் காண்டம்
  சருக்கம் 8 (பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் )

  8.1 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் (3939 - 3941)
  8.2 புகழ்ச் சோழ நாயனார் புராணம் (3942 .- 3982 )
  8.3 நரசிங்க முனையரைய நாயனார் புராணம் (3983 - 3991)
  8.4 அதிபத்த நாயனார் புராணம் (3992 - 4011 )
  8.5 கலிக்கம்ப நாயனார் புராணம் (4012 - 4021 )
  8.6 கலிய நாயனார் புராணம் (4022 - 4038 )
  8.7 சத்தி நாயனார் புராணம் (4039 - 4044)
  8.8 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் (4045- 4054)

  8. 1 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் (3939 - 3941)


  திருச்சிற்றம்பலம்

  3939 செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்
  மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்
  மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்
  பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் 8.1.1
  3940 பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால்
  சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற
  பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்
  மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள் 8.1.2
  3941 ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம்
  தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார்
  ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த
  பூம் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் 8.1.3
  திருச்சிற்றம்பலம்

  8.2 புகழ்ச் சோழ நாயனார் புராணம் (3942 .- 3982 )


  திருச்சிற்றம்பலம்

  3942 குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி
  நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்
  மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர்
  உலகில் வளர் அணிக்கெல்லாம் உள்ளும் உறையூராம் உறையூர் 8.2.1
  3943 அளவில் பெரும் புகழ் நகரம் அதனில் அணிமணி விளக்கும்
  இள வெயிலின் சுடர்படலை இரவு ஒழிய எறிப்பனவாய்க்
  கிளர் ஒளி சேர் நெடு வானப் பேர் ஆற்றுக் கொடு கெழுவும்
  வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் 8.2.2
  3944 நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த
  போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய்
  மாக நிறைந்திட மலிந்த வரம்பில் பல பொருள் பிறங்கும்
  ஆகரம் ஒத்து அளவில் ஆவண வீதிகள் எல்லாம் 8.2.3
  3945 பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும்
  போர் முக வெம் கறை அடியும் புடையினம் என்று அடையவரும்
  சோர் மழையின் விடு மதத்துச் சுடரு நெடுமின் ஓடைக்
  கார் முகிலும் பல தெரியா களிற்று நிரைகள் எல்லாம் 8.2.4
  3946 படுமணியும் பரிச் செருக்கும் ஒலி கிளரப் பயில் புரவி
  நெடு நிரை முன் புல்லுண் வாய் நீர்த் தரங்க நுரை நிவப்ப
  விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால்
  தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் 8.2.5
  3947 துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும் திருவும்
  விளைத்த அமுதும் தருவும் விழுமணியும் கொடுபோத
  உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பரூர்
  வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலரக் கிடங்கு 8.2.6
  3948 கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர்ச் சோலை
  தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி
  வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர்க்கணை ஒண்
  பார் ஏறும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர் அரிதால் 8.2.7
  3949 அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார்
  மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும்
  சென்னி நீடு அனபாயன் திருக்குலத்து வழி முதல்வோர்
  பொன்னி நதிப் புரவலனார் புகழ் சோழர் எனப் பொலிவார் 8.2.8
  3950 ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்து
  பருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப
  திருமலர்த்தும் பேருலகும் செங்கோலின் முறை நிற்ப
  அருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் 8.2.9
  3951 பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம்
  நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக்
  குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி
  முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார் 8.2.10
  3952 அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்று இருந்து
  கொங்கரொடு குட புலத்துக் கோ மன்னர் திறை கொணரத்
  தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில்
  மங்கல நாள் அரசு உரிமைச் சுற்றம் உடன் வந்து அணைந்தார் 8.2.11
  3953 வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ்
  இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி
  சிந்தை களி கூர்ந்து அரனார் மகிழ் திரு ஆன்நிலைக் கோயில்
  முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் 8.2.12
  3954 மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின் மணிபுனை பொன்
  கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த
  ஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் பரி துலைக் கனகம்
  நீளிடைவில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் 8.2.13
  3955 திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத் தொழில் அருளி
  முறை புரியும் தனித் திகரி முறைநில்லா முரண் அரசர்
  உறை அரணம் உளவாகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு
  நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் 8.2.14
  3956 சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம்
  அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும்
  கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என
  வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார் 8.2.15
  3957 விளங்கு திரு மதிக் குடைக்கீழ் வீற்று இருந்து பார் அளிக்கும்
  துளங்கொளி நீள் முடியார்க்குத் தொன் முறைமை நெறி அமைச்சர்
  அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என
  உளம் கொள்ளும் வகை உரைப்ப உறுவியப் பால் முறுவலிப்பார் 8.2.16
  3958 ஆங்கவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்தாக
  ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப
  ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ படை எழுந்த
  பாங்கரணம் துகளாகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார் 8.2.17
  3959 அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து
  கடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல் செல்வார்
  படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக
  மிடல் உடை நால் கருவியுற வெஞ்சமரம் மிக விளைத்தார் 8.2.18
  3960 வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற
  அளவில் அரண் அக்குறும்பில் அதிகர் கோன் அடல் படையும்
  உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக்
  கிளர் கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தனவால் < 8.2.19
  3961 கயமொடு கயம் எதிர் குத்தின
  அயமுடன் அயமுனை முட்டின
  வயவரும் வயவரும் உற்றனர்
  வியனமர் வியல் இடம் மிக்கதே 8.2.20
  3962 மலையொடு மலைகள் மலைந்தென
  அலை மத அருவி கொழிப்பொடு
  சிலையினர் விசையின் மிசைத் தெரு
  கொலை மதக் கரிகொலை உற்றவே 8.2.21
  3963 சூறை மாருதம் ஒத்து எதிர்
  ஏறு பாய் பரி வித்தகர்
  வேறு வேறு தலைப் பெய்து
  சீறி ஆவி செகுத்தனர் 8.2.22
  3964 மண்டு போரின் மலைப்பவர்
  துண்டம் ஆயிட உற்று எதிர்
  கண்டர் ஆவி கழித்தனர்
  உண்ட சோறு கழிக்கவே 8.2.23
  3965 வீடினார் உடலில் பொழி
  நீடுவார் குருதிப் புனல்
  ஓடும் யாறென ஒத்தது
  கோடு போல்வ பிணக் குவை 8.2.24
  3966 வானிலாவு கருங்கொடி
  மேனிலாவு பருந்து இனம்
  ஏனை நீள் கழுகின் குலம்
  ஆன ஊணொடு எழுந்தவே 8.2.25
  3967 வரிவில் கதை சக்கரம் உற்கரம் வாள்
  சுரிகைப் படை சத்திகழுக் கடைவேல்
  எரி முத்தலை கப்பணமெற் பயில் கோல்
  முரி உற்றன உற்றன மொய்க் களமே 8.2.26
  3968 வடிவேல் அதிகன் படைமாள வரைக்
  கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக்
  கொடி மா மதில் நீடு குறும் பொறையூர்
  முடி நேரியனார் படை முற்றியதே 8.2.27
  3969 முற்றும் பொரு சேனை முனை தலையில்
  கற்றிண் புரிசைப் பதி கட்டு அழியப்
  பற்றும் துறை நொச்சிப் பரிந்து உடையச்
  சுற்றும் படை வீரர் துணித்தனரே 8.2.28
  3970 மாறுற்ற விறல் படை வாள் அதிகன்
  நூறுற்ற பெரும்படை நூழில் படப்
  பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு
  ஏறுற்றனன் ஓடி இருஞ் சுரமே 8.2.29
  3971 அதிகன் படை போர் பொருதற்றதலை
  பொதியின் குவை எண்ணில போயின பின்
  நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா
  எதிரும் கரி பற்றினர் எண்ணிலரே 8.2.30
  3972 அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம்
  இரணத் தொழில் விட்டு எயில் சூழ் கருவூர்
  முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள்
  தரணித் தலைவன் கழல் சார் உறவே 8.2.31
  3973 மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய்
  முன் வந்த கரும் தலை மொய் குவைதான்
  மின்னும் சுடர் மா முடிவேல் வளவன்
  தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர் 8.2.32
  3974 மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார்
  எண்ணில் பெருகும் தலை யாவையினும்
  நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் அடுக்
  கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே 8.2.33
  3975 கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது
  கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த
  திண்டிறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளி
  புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார் 8.2.34
  3976 முரசுடைத்திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி
  உரை சிறக்கும் புகழ்வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல்
  திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்துயான்
  அரசு அளித்தபடி சால அழகி! தென அழிந்து அயர்வார் 8.2.35
  3977 தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் சடை முடையார்
  நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவரானார்
  சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும்
  பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார் 8.2.36
  3978 என்று அருளிச் செய்து அருளி இதற்கு இசையும் படி துணிவார்
  நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து
  மன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழி நிற்ப
  வென்றி முடி என் குமரன்தனைப் புனைவீர் என விதித்தார் 8.2.37
  3979 அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அதற்றிக்
  கை மாற்றும் செயல்தாமே கடனாற்றும் கருத்து உடையார்
  செம்மார்க்கம் தலை நின்று செந்தீ முன் வளர்ப்பித்துப்
  பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை கோலத்தினில் பொலிந்தார் 8.2.38
  3980 கண்ட சடைச் சிரத்தினையோர் கனகமணி கலத்து ஏந்தி
  கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார்
  அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி
  மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் 8.2.39
  3981 புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழிய
  மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப
  செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின்
  அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் 8.2.40
  3982 முரசங் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்
  பிரசம் கொள் நறுந்தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப்
  பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி
  நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் 8.2.41
  திருச்சிற்றம்பலம்

  8.3 நரசிங்க முனையரைய நாயனார் புராணம் (3983 .- 3991 )


  திருச்சிற்றம்பலம்

  3983 கோடாத நெறி விளக்கும் குலமரபின் அரசு அளித்து
  மாடாக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார்
  தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி
  நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர் 8.3.1
  3984 இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த்
  தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகல
  மும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டுபுரி
  அம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேரு என அடைவார் 8.3.2
  3985 சின விடையார் கோயில் தொறுந் திருச் செல்வம் பெருக்குநெறி
  யனஇடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து
  மனவிடை ஆமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு
  கனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார் 8.3.3
  3986 ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும்
  வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி
  நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன்
  நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் 8.3.4
  3987 ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில்
  மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில்
  மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்த
  ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் 8.3.5
  3988 மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்குள்ளார்
  உற்ற இகழ்ச்சியராகி ஒதுங்குவார் தமைக் கண்டு
  கொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்தப்
  பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார் 8.3.6
  3989 சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை
  ஞாலம் இகழ்ந்த அருநரகம் நண்ணாமல் எண்ணுவார்
  பாலணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்து
  மேலவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார் 8.3.7
  3990 இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும்
  செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப்
  பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சோர்ந்து
  மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் 8.3.8
  3991 விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலை
  உடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித்
  தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும்
  கடனாகை அதிபத்தர் கடனாகைக் கவின் உரைப்பாம் 8.3.9
  திருச்சிற்றம்பலம்

  8.4 அதிபத்த நாயனார் புராணம் (3992.- 4011 )


  திருச்சிற்றம்பலம்

  3992 மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின்
  தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப்
  பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல்
  நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம் 8.4.1
  3993 தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த
  தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ்
  காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த
  மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு 8.4.2
  3994 பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து
  திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும்
  தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல்
  கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் 8.4.3
  3995 நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த
  பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக்
  கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும்
  ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர் 8.4.4
  3996 அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில்
  பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர்
  மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த
  தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி 8.4.5
  3997 புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை
  அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல்
  வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
  கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் 8.4.6
  3998 உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த
  கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல்
  அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து
  மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும் 8.4.7
  3999 வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும்
  விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும்
  தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும்
  அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய 8.4.8
  4000 அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து
  மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார்
  புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும்
  வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர் 8.4.9
  4001 ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள்
  ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப்
  பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும்
  ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார் 8.4.10
  4002 முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து
  பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும்
  நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர்
  விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால் 8.4.11
  4003 வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
  ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால்
  ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
  மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் 8.4.12
  4004 மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம்
  தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும்
  பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று
  மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் 8.4.13
  4005 சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து
  கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச்
  சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே
  ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் 8.4.14
  4006 ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத்
  தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால்
  மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்
  பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார் 8.4.15
  4007 வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற
  ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத்
  தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப்
  பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் 8.4.16
  4008 என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர்
  பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால்
  ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும்
  சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார் 8.4.17
  4009 அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில்
  புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த
  இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல்
  முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ 8.4.18
  4010 பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
  அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை
  நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து
  அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார் 8.4.19
  4011 தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு
  மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி
  மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும்
  செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் 8.4.20
  திருச்சிற்றம்பலம்

  8.5 கலிக்கம்ப நாயனார் புராணம் (4012 - 4021 )


  திருச்சிற்றம்பலம்

  4012 உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனைத்
  தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வனரும் தன்மையதாய்
  வரும் மஞ்சு உறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில்
  பெருமை உலகு பெற விளங்கும் மேல் பால் பெண்ணாகட மூதூர் 8.5.1
  4013 மற்றப் பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்
  கற்றைச் சடையார் கழற்காதலுடனே வளர்ந்த கருத்து உடையார்
  அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
  பற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்று இல்லார் 8.5.2
  4014 ஆன அன்பர் தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய
  மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால்
  தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே
  ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் 8.5.3
  4015 அன்ன வகையால் திருத்தொண்டு புரியுநாளில் அங்கு ஒரு நாள்
  மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர் தமை எல்லாம்
  தொன்மை முறையே அமுது செயத் தொடங்கு விப்பார் அவர் தம்மை
  முன்னர் அழைத்துத் திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் 8.5.4
  4016 திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும்
  பொருந்து சுவையில் கறி அமுதும் புனிதத் தண்ணீர் உடன் மற்றும்
  அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீர் அளிக்க 4016-3
  விரும்பு கணவர் பெருந்தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின் கண் 8.5.5
  4017 முன்பு தமக்குப் பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய்
  என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும்
  அன்பர் உடனே திருவேடம் தாங்கி அணைந்தார் ஒருவர் தாம்
  பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெரும் தகையார் 8.5.6
  4018 கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல்
  செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர்
  மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர்
  மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துள் கருதுவார் 8.5.7
  4019 வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலை
  குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு
  மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை
  தறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார் 8.5.8
  4020 விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து
  துளக்கில் சிந்தை உடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார்
  அளப்பில் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று
  களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள்நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் 8.5.9
  4021 ஓத மலிநீர் விடம் உண்டார் அடியார் என்றுணரா
  மாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கி
  பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த
  காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம் 8.5.10
  திருச்சிற்றம்பலம்

  8.6 கலிய நாயனார் புராணம் (4022 - 4038 )


  திருச்சிற்றம்பலம்

  4022 பேருலகில் ஓங்கு புகழ்ப் பெரும் தொண்டை நன்னாட்டு
  நீருலவும் சடைக் கற்றை நிருத்தர் திருப்பதியாகும்
  காருலவும் மலர்ச் சோலைக் கன்னிமதில் புடை சூழ்ந்து
  தேருலவு நெடு வீதி சிறந்த திருஒற்றியூர் 8.6.1
  4023 பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண்
  வேடம் உடையவர் பொருள் போல் ஆகாசவெளி மறைக்கும்
  ஆடு கொடி மணி நெடுமாளிகை நிரைகள் அலை கமுகின்
  காடனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் 8.6.2
  4024 பன்னு திருப்பதிக இசைப் பாட்டு ஓவா மண்டபங்கள்
  அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு
  பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி
  செம் நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திருமடங்கள் 8.6.3
  4025 கெழு மலர் மாதவி புன்னை கிளைஞாழல் தளை அவிழும்
  கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை
  முழு மணமே முந் நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும்
  செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு 8.6.4
  4026 எயிலணையும் முகில் முழக்கும் எறிதிரை வேலையின் முழக்கும்
  பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியாப் பதி அதனுள்
  வெயில் அணி பல் மணி முதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும்
  தயில வினைத் தொழில் மரபில் சக்கரப் பாடி தெருவு 8.6.5
  4027 அக்குலத்தின் செய்தவத்தால் அவனி மிசை அவதரித்தார்
  மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார்
  தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலை நின்றார்
  முக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத் தொண்டின் நெறி முயல்வார் 8.6.6
  4028 எல்லையில் பல் கோடி தனத்து இறைவராய் இப்படித்தாம்
  செல்வ நெறிப் பயன் அறிந்து திருஒற்றியூர் அமர்ந்த
  கொல்லை மழவிடையார் தம் கோயிலின் உள்ளும் புறம்பும்
  அல்லும் நெடும் பகலும் இடும் திருவிளக்கின் அணி விளைத்தார் 8.6.7
  4029 எண்ணில் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வரப்
  புண்ணிய மெய்த் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே
  உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினைச் செயல் ஓவி
  மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்தாக 8.6.8
  4030 திருமலி செல்வத்துழனி தேய்ந்து அழிந்த பின்னையுந்தம்
  பெருமை நிலைத் திருப் பணியில் பேராத பேராளர்
  வருமரபில் உள்ளோர் பால் எண்ணெய் மாறிக் கொணர்ந்து
  தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் 8.6.9
  4031 வளம் உடையார் பால் எண்ணெய் கொடுபோய் மாறிக் கூலி
  கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாறத்
  தளருமனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும்
  களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் 8.6.10
  4032 செக்கு நிறை எள் ஆட்டிப் பதம் அறிந்து தில தயிலம்
  பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும்
  தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை
  மிக்க திரு விளக்கு இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார் 8.6.11
  4033 அப் பணியால் வரும் பேறு அவ் வினைஞர் பலர் உளராய்
  எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே
  ஒப்பில் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்ட அதன் பின்
  செப்பருஞ் சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார் 8.6.12
  4034 மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக் கொண்டு வள நகரில்
  தனம் அளிப்பார் தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி
  சின விடையார் திருக் கோயில் திரு விளக்குப் பணிமுட்டக்
  கன வினும் முன்பு அறியாதார் கை அறவால் எய்தினார் 8.6.13
  4035 பணி கொள்ளும் படம் பக்க நாயகர்தம் கோயிலினுள்
  அணி கொள்ளும் திருவிளக்குப் பணிமாறும் அமையத்தில்
  மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் எனத்
  துணிவுள்ளங் கொள நினைந்து அவ் வினை முடிக்கத் தொடங்குவார் 8.6.14
  4036 திரு விளக்குத் திரி இட்டு அங்கு அகல் பரப்பிச் செயல் நிரம்ப
  ஒருவிய எண் ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடுநிறைக்கக்
  கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார்
  பெருகு திருக் கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி 8.6.15
  4037 மற்றவர் தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்து அருள
  உற்றவூறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல்
  பற்றிய அஞ்சலியினர் ஆய் நின்றவரைப் பரமர் தாம்
  பொற்புடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள் புரிந்தார் 8.6.16
  4038 தேவர் பிரான் திருவிளக்குச் செயல் முட்ட மிடறு அரிந்து
  மே வரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில்
  யாவர் எனாது அரன் அடியார் தமை இகழ்ந்து பேசினரை
  நாவரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் 8.6.17
  திருச்சிற்றம்பலம்

  8.7 சத்தி நாயனார் புராணம் (4039- 4045 )


  திருச்சிற்றம்பலம்

  4039 களமர் கட்ட கமலம் பொழிந்த தேன்
  குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை
  அளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டிய
  வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர் 8.7.1
  4040 வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம்
  பெரும் சிறப்புப் பெறப் பிறப்பு எய்தினார்
  விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
  அரும் சிலம்பு அணி சேவடிக்காள் செய்வார் 8.7.2
  4041 அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை
  இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை
  வைத்த நாவை வலித்து அரி சத்தியால்
  சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார் 8.7.3
  4042 தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
  வாங்க வாங்கும் தண்டு ஆயத்தினால் வலித்து
  தாங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்
  ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர் 8.7.4
  4043 அன்னதாகிய ஆண்மைத் திருப்பணி
  மன்னு பேருலகத்தில் வலி உடன்
  பண்னெடும் பெருநாள் பரிவால் செய்து
  சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர் 8.7.5
  4044 ஐயம் இன்றி அரிய திருப்பணி
  மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர்
  வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார்
  செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர் 8.7.6
  4045 நாயனார் தொண்டரை நலம் கூறலார்
  சாய நாவரி சத்தியார் தாள் பணிந்து
  ஆய மா தவத்து ஐயடிகள் எனும்
  தூய காடவர் தம் திறம் சொல்லுவாம் 8.7.7
  திருச்சிற்றம்பலம்

  8.8 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் (4046- 4054 )


  திருச்சிற்றம்பலம்

  4046 வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி
  வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச்
  செய்ய சடையார் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார்
  ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் 8.8.1
  4047 திருமலியும் புகழ் விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும்
  பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துப்
  தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன்
  அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் 8.8.2
  4048 மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம்
  பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் அரசாட்சி
  இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழச்சி
  நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் 8.8.3
  4049 தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண்
  அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்களான எலாம்
  கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த
  வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் 8.8.4
  4050 பெருத்தெழு காதலினால் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த்
  திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை
  நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார்
  விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் 8.8.5
  4051 அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி
  இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச்
  செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே
  எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார் 8.8.6
  4052 இந்நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி
  பன்னெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ்
  மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார்
  கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார் 8.8.7
  4053 பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த
  ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக்
  கையணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய
  செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் 8.8.8
  4054 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
  உளத்தில் ஒரு துளக்கம் இலேம் உலகு உய்ய இருண்ட திருக்
  களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு
  வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெரும் திருவாரூர்க்
  குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் 8.8.9
  திருச்சிற்றம்பலம்

  பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் முற்றிற்று.