9.4 வாயிலார் நாயனார் புராணம் (4079 - )
திருச்சிற்றம்பலம்
4079 சொல் விளங்கு சீர்த் தொண்டைநல் நாட்டின் இடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெரும் குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயிலா புரி 9.4.1
4080 நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத்
தேடும் அப்பெரும் சேம வைப்பாம் என
ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி
மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால் 9.4.2
4081 காலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்து
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும்
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா
சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம் 9.4.3
4082 தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத்
துவள் பதாகை நுழைந்து அணை தூமதி
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி
உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால் 9.4.4
4083 வீதி எங்கும் விழா அணிக் காளையர்
தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர்
ஓதி எங்கும் ஒழியா அணிநிதி
பூதி எங்கும் புனை மணிமாடங்கள் 9.4.5
4084 மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல
நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னும் தபோதனர் 9.4.6
4085 வாயிலார் என நீடிய மாக்குடித்
தூய மா மரபின் முதல் தோன்றியே
நயனார் திருத்தொண்டின் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார் 9.4.7
4086 மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி
உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் 9.4.8
4087 அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும்
நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே
திகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப்
புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார் 9.4.9
4088 நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால்
பேராத நெறி பெற்ற பெருந் தகையார் தமைப்போற்றிச்
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் 9.4.10
திருச்சிற்றம்பலம்